பழனிக்கும் திருப்பூருக்கும்
திருநெல்வேலிக்கும்
இமயம் கடந்து
வலசை வரும்
பட்டை தலை வாத்துகள்
பன்முகத்தன்மை கொண்ட
இந்திய நிலங்களின் நீளத்தை
தன் நிழலால் அளந்துவிடுகின்றன.
பழனிக்கும் திருப்பூருக்கும்
திருநெல்வேலிக்கும்
இமயம் கடந்து
வலசை வரும்
பட்டை தலை வாத்துகள்
பன்முகத்தன்மை கொண்ட
இந்திய நிலங்களின் நீளத்தை
தன் நிழலால் அளந்துவிடுகின்றன.
மலைத்தொடரின் சாலையோரம்
மாஞ்சிட்டுகள் விளையாட
அதிர வரும் பேருந்து
எழுப்புமந்த ஒலிமாசால்
திகிலுற்ற சிட்டுகள்
திசைமாறி பறந்துவிட
பெண்சிட்டை தேடுமொறு
ஆண்சிட்டின் கண்களில் தெரிகிறது
காதலும்
தொலைந்துபோன காடும்...
யானையை அதிகம் நேசிக்கும் நண்பர் ஜி.சிவகுமார் அவர்களின் சிறுகதை தொகுப்பு "வெம்பு கரி". மிக அருமையான சிறுகதைகளை தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கிறார். சிறுகதைகளின் களம் பழனியை சுற்றியே இருப்பதால் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது. மிக எளிமையான நடை. மிக நுட்பமான அவதானிப்புகளை வார்தைகளாக்கி அருமையான கதைகளை எழுதியிருக்கிறார். ஒவ்வொரு சாமானிய மனிதனின் எண்ணத்தில் இருந்து எழுதியிருப்பதே கூடுதல் சிறப்பு.
ஜன்னல் ஓரம் பேருந்தில் இடம் தேடும் ஒருவனை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்குவதிலும், பேருந்திலிருந்து பொறுப்பற்று குப்பைகளை தூக்கி எரியும் ஒருவனை எச்சரிப்பதிலும் என எல்லா கதைகளிலும் சிறப்பான எழுத்துக்களை கதையின் சுவாரசியம் குறையாமல் கூட்டிச் செல்கிறார். பெரும்பாலான கதைகளில் நகைச்சுவை மிக இயல்பாக வருகிறது.
யானையை அவர் வர்ணிக்கும் இடங்கள் அத்தனை அற்புதமாக இருக்கிறது. யானைக்கும் கதாபாத்திரத்துக்கும் நடக்கும் உரையாடல் இது வரை யாரும் யோசிக்காதது. யானையின் சின்ன சின்ன அசைவுகளையும் நுட்பமாக கவனித்து, எழுத்தில் கொண்டுவந்திருப்பது தனிச் சிறப்பு.
கதைகள் ஏற்படுத்தும் தாக்கமே இந்த நூலின் வெற்றியாக பார்க்கிறேன். நிச்சயம் சிறுகதை வாசகர்கள் எல்லோராலும் வாசிக்கப் படவேண்டிய நூல். பழனியில் இப்படி ஒரு எழுத்தாளர் இருப்பது உள்ளூர் மக்கள் அதிகம் பேருக்கு தெரியாது. நிச்சயம் இவர் எழுத்துக்கள் பலரையும் சென்றடைய வேண்டும். மேலும் பல நூல்களை சிவகுமார் அவர்கள் எழுத வேண்டுமென வாழ்த்துகிறேன்.
புல்லாங்குழல்களைச் சுவைக்கும் யானை
உருமறையாய் முட்டையிட்டு
வாழிடத்தில் வட்டமிட்டு
எதிரிகள் பக்கம் வந்தால்
குரலெழுப்பி திசைமாற்றும்
வல்லமையும் கொண்டதனால்
அரளிப்பூ ஆள்காட்டி
கூடு கட்ட தேவையில்லை...
பாலை நிலப்பரப்பை
பயனற்ற நிலமென்று
பனையெல்லாம் வெட்டி
வீட்டுமனையாக்கி
பல்லுயிர்ச்சூழலை சிதைத்ததனால்
வாழிடமின்றி
அலையும் அப்பறவைகளின் பெயர்
பனங்காடை.
அடர்ந்த புதரிலிருந்து
சீரான இடைவெளியில்
அதிரும்படி குரலெழுப்பும்
செண்பகம்,
தாழப் பறந்து தரையிரங்கும்
விமானம் போல
சாலையின் குறுக்கே பறந்து
மீண்டும் புதருக்குள் ஒளிந்துகொள்கிறது.
செந்தாமரை பூத்த குளத்தில்
நுண்ணிய நீர்த்தாவரங்களின் நடுவே
நீந்தி வரும் குள்ளத்தாரா
தண்ணீரில் பிரதிபலிக்கும்
மேகத்தின் பிம்பங்களை
சிறகோடு அணைத்துக்கொண்டபின்
மரக்கிளையில் அமர்ந்து
சிறகுகளை விரித்து சிலிர்க்கையில்
பொழிகிறது மழை.
செக்கச்சிவந்த வெட்சிப்பூக்களில்
ஒவ்வொரு துளி தேனையும்
நிதானமாக பருகும்
ஊர்த் தேன்சிட்டு,
அவ்வப்போது கண்ணாடியில்
பார்த்துக்கொள்ளும்
அதன் தேன் சிந்தும் அலகு
அழகு.
கலையாத மேகங்கள்
உருமாறிச் செல்வது போல்
கடலலைகள் எப்பொழுதும்
உயர்ந்தெழுந்து தவழ்வது போல்
ஓராயிரம் சோளக்குருவிகள்
ஒருங்கிணைந்து ஆடும் நடனம்
இயற்கையின் அற்புதம்
இன்றுவரை அதிசயம்.
பறவையினங்களை
அவதானித்துக் கொண்டிருந்த
மாலை வேளையில்
நான் கவனிக்கத் தவறிய புள்ளி ஆந்தை
என்னை முன்பே பார்த்துவிட்டதை
காலம் தாழ்த்தியே உணர்ந்து கொண்டேன்.
நான் பார்த்ததும் பார்காததுபோல
தலையை மட்டும் திருப்பிக்கொண்ட
புள்ளி ஆந்தை
என்னைப் போலவே புன்னைகைத்துக் கொண்டிருக்கலாம்.
பட்டுப்போன பனைதானே
வெட்டிவிடலாம் என்றெண்ணி
இயந்திரத்தின் துணைகொண்டு
அடியோடு சாய்த்துவிட,
பனைமரப் பொந்துகளில்
வாழ்ந்துவந்த பைங்கிளிகள்
கூடடைய திரும்புகையில்
எழுப்புமந்த கீச்சொலியை
மொழிபெயர்க்க தேவையில்லை
சிற்றலையாடும் குளக்கரையில்
அந்தியின் மிச்சம் படர்ந்திருக்க
நித்திரை கொள்ள புள்ளினங்கள்
கருவை மரங்களை அடைந்திருக்க
நிச்சயம் கரைவரும் மீனினங்கள்
அறியாதிருக்க
அசையாதிருக்கும்
வக்கா..!!
COP 26 - Glascow மாநாட்டில் பிரதமர் மோடி 2070-ஆம் ஆண்டில் NET ZERO இலக்கை இந்தியா எட்டும் என அறிவித்திருக்கிறார். மேலும் வளரும் நாடுகளுக்கு, வளர்ந்த நாடுகள் 1 Trillion $ அளவிற்கு பொருளாதார உதவிகள் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
வளரும் நாடு என்ற பெயரில் நாம் இந்த பருவ நிலை பிறழ்விலிருந்து (Climate Change) தப்பிக்க நினைத்தால் அது இந்த தேசத்தின் தற்கொலைக்குச் சமம். United Nations Framework Convention on Climate Change ஆய்வறிக்கையின்படி புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரிக்கு மேல் போய்விடக்கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கிறது. 2050க்குள் NET ZERO என்ற இலக்கை எல்லா நாடுகளும் அடைந்ததாக வேண்டிய அவசர சூழலில் நாம் இருக்கிறோம். இப்படியான இக்கட்டான தருணத்தில் நாம் இன்னும் கால அவகாசம் கேட்பது எந்த வகையில் நியாயம்? இந்தியா போன்ற நாடுகள் மற்ற வளரும் நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டாமா? இது போல காலம் தாழ்த்துவது மற்ற நாடுகளின் செயல்பாடுகளையும் நீர்த்துப் போகச் செய்யாதா?
மேலும் இது போன்று மிக முக்கியாமான பிரச்சனைகளை விவாதிக்கும் இடத்தில பிரதமர் ஆங்கிலத்தில் பேசியிருக்கலாமே? காலத்தை இதற்கு மேல் வீணடிப்பதில் எந்த நியாயமும் இல்லை. புதிப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு (Renewable Energy) மாற வேண்டிய அவசர நிலையில் நாம் இருக்கிறோம். புதை படிவ எரிமங்களை (Fossil Fuels) நாம் விரைந்து கைவிட வேண்டும். நம்முடைய கொண்டாட்டங்களுக்கும் கேளிக்கைகளுக்கும் சூழலை மாசுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு அரசும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
கரோனா பொதுமுடக்க காலத்திலும் கார்பன் வெளியேற்றத்தில் குறையேதும்மில்லை. அப்படியானால் இன்னும் வேகமாக நாம் இந்த புவியின் சூழலை அழிவை நோக்கி நகர்த்திச் செல்கிறோம். இந்த சூழ்நிலையில் நம்மிடம் இருக்கும் இயற்கை வளத்தை பாதுகாப்பதும், நீடித்த நிலைத்த வளர்ச்சியும் மட்டுமே நம் எதிர்காலத்தை பாதுகாக்கும். பிரதமர் வாயை திறந்தாலே எதிர்வினையாற்றும் எதிர் கட்சிகள் இந்த விஷயத்தில் விமர்சனம் செய்யாதிருப்பது ஏன்? பிரதமரின் பேச்சை ஆதரிக்கிறார்களா? பருவ நிலை பிறழ்வு என்பது அவர்களுக்கு முக்கியமான பிரச்னையாக இல்லையா?
இது உலகளாவிய பிரச்சனை. இந்த புவியில் இப்படி ஒரு சிக்கலை உருவாக்கி எல்லா உயிரினங்களையும் பாதிப்புக்குள்ளாகியிருப்பது நாம் தான் . இதற்கான தீர்வுகளையும் நம்மால் உருவாக்க முடியும். நிலக்கரியை கைவிடுவது பற்றி அமெரிக்காவும் சீனாவும் வெளிப்படையாக அறிவிக்காத சூழலில் இந்தியா மட்டும் ஏன் நிறுக்கிக்கொள்ள வேண்டும் என்று புத்திசாலித்தனமாக சிலர் விவாதம் செய்வதும் நடக்கிறது. இப்படியே நாம் விவாதம் செய்து கொண்டிருந்தால் அடுத்த தலைமுறைக்கு செய்யும் தீங்கு வேறு இருக்காது.
சில ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளுடன் உரையாற்றிய பிரதமர் பருவ நிலை மாற்றம் என்ற ஒன்றே இல்லை என்றார். பருவ நிலை மாறவில்லை. நாம் தான் மாறியிருக்கிறோம் என்றார். தற்போது பிரதமரின் பேச்சில் மாற்றம் தெரிகிறது. அவர் பருவநிலை பிறழ்வை ஏற்றுக்கொண்டுவிட்டார் அல்லது அந்த சூழலுக்கு உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக வந்து சேர்ந்திருக்கிறார். இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டுமென்றால் வளர்ச்சி திட்டங்கள் தரமுள்ளதாக இருக்க வேண்டும். ஒரு சாலை அமைக்க மீண்டும் மீண்டும் மலைகளை உடைக்க முடியாது. ஊழல் இல்லாத தரமான சாலைகளை அமைத்தால் நாம் மீண்டும் மீண்டும் இயற்கையை அச்சுறுத்த வேண்டியதில்லை.
நுகர்வு கலாச்சாரத்திலிருந்து மக்களை விடுவிக்கும் நீடித்து நிலைக்கும் (Sustainable Development) வாழ்க்கை தரத்திற்கு மக்களை கொண்டு செல்ல அரசுகள் முன்வர வேண்டும். நெகிழி பைகளை தடை செய்யவே தயங்கும் அரசுகளை வைத்துக் கொண்டு எப்படி பருவ நிலை பிறழ்வை நாம் சமாளிக்க போகிறோம்? ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் புயலும், மேகவெடிப்பும், நிலச்சரிவுகளும், வெள்ளமும் வறட்சியும் நமக்கு நிறைய செய்திகளை சொல்லிக்கொண்டே வருகிறது. நாம் வீடியோக்களை ஷேர் செய்துவிட்டு கடந்துகொண்டே இருப்பது நல்லதல்ல. இந்த பூமி தோன்றி 24 மணி நேரம் ஆனதாக கணக்கில்கொண்டால், மனித இனம் தோன்றி வெறும் ஒரு நொடி மட்டுமே ஆகிறது. இந்த பூமி மனித இனத்திற்கு மட்டுமே சொந்தமானது அல்ல என்பது இயற்கைக்கு தெரியும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
கானுயிர்கள் ஆயிரம்
உண்டென்றாலும்
ஓரிடவாழ்விகள் தனிச்சிறப்பு.
பல்லுயிர்ச் சூழல்
பலவென்றாலும்
சோலைக்காடுகள் தனிச்சிறப்பு.
புள்ளினங்கள் ஆயிரம்
உண்டென்றாலும்
பூங்குருவிகள் தனிச்சிறப்பு.
சிறப்புகள் யாவும் அமையப்பெற்றும்
சோலைக்காட்டின்
சூழல் சிதைவால்
சிக்கலில் தவிக்கிறது
பழனி மலைப் பூங்குருவி
ஓரிடவாழ்வி - Endemic Species
சோலைக்காடு - Shola Forest
பல்லுயிர்ச் சூழல் - Bio-Diversity
புள்ளினங்கள் - Bird Species
பழனி மலை பூங்குருவி - Palani Laughing Thrush.
Laughing Thrush என்ற பறவை இனத்திற்கு சரியான தமிழ் பெயர் கிடைக்கவில்லை. பூங்குருவி என பயன்படுத்தி இருக்கிறேன். வேறு சரியான பெயர் இருந்தால் பின்னூட்டம் செய்யுங்கள். மாற்றிக் கொள்கிறேன்.