Sep 17, 2014

அமைதி..!! அமைதி..!! அமைதி..!!


தொழிற்சாலை கழிவுகள், ஞெகிழிக் கழிவுகள், வாகனப் புகை, மருந்துக் கழிவுகள், பூச்சிக்கொல்லிரசாயன கழிவுகள் போல நம் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் பல்வேறு மாசுகளுக்கு சற்றும் குறைவில்லாத மற்றுமொரு மிகப்பெரிய சூழல் சீர்கேடு Noise Pollution எனப்படும் ஒலி மாசு.
நம் ஒவ்வொருவரும் சந்திக்கும் அன்றாட பிரச்சனைகளில் முக்கியமானதாக மாறி வருகிறது ஒலி மாசு. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இந்த அனுபவம் இருக்கும். இருப்பினும் சத்தம் இல்லாமல் கடந்து விடுகிறோம் இந்த சத்தங்களை. நீங்கள் சிக்னலில் காத்துக் கொண்டிருபீர்கள். உங்களுக்கு பின்னால் நிற்கும் வாகனம் முப்பது வினாடிகள் மீதம் இருக்கும் போதே ஹாரன் ஒலியை எழுப்புவார்கள். எரிச்சலூட்டும் இந்த ஒலியை நாம் ஒவ்வொரு நாளும் அனுபவிக்கிறோம். தேவையற்ற நேரங்களில் எழுப்பப்படும் இந்த ஒலி ஒரு வித மனச் சோர்வை ஏற்படுத்துகிறது.

நீங்கள் இரு சக்கர வாகனத்தில் செல்பவராக இருந்தால் உங்களை அச்சமூட்டும் படி செல்லும் பேருந்துகளை நிச்சயம் எதிர் கொள்ள வேண்டியதாக இருக்கும். ஒலி எழுப்பியபடியே உங்கள் அருகில் உரசிச் செல்லும் லாரிகளும் பேருந்துகளும் ஒவ்வொரு நாளும் சாலைகளில் உங்களை நிலை குலைய வைக்கும் நோக்கில் ஓட்டப்படுகின்றன.
கோவில் திருவிழாக்களில் எழுப்பப்படும் ஒலி அந்த பகுதியில் வாழும் மொத்த மக்களையும் துன்புறுத்துகிறது. சாலைகளில் காட்டப்படும் ஒலிப் பெருக்கிகள் நம் காதுகளை கிழிக்கிறது. ஆடி மாதத்தில் இந்த நீங்கள் நிச்சயம் அனுபவித்திருப்பீர்கள். 


குடியிருப்பு பகுதிகளில் அமைந்திருக்கும் தொழிற்சாலைகளும் ஒலி மாசுக்கு முக்கிய காரணம். விழா காலங்களிலும் தீபாவளி பண்டிகையின் போதும் பயன்படுத்தப்படும் பட்டாசுகளும் வரைமுறைகளை மீறியே இருக்கின்றன.


மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் ஒலி மாசுபடுவதற்கு  நிறைய காரணங்கள் இருக்கின்றன. நம் கலாசாரத்தோடு கலந்துவிட்ட சில காரணங்கள் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. சாலை விதிகளை முறையாக பின்பற்றாத சமூகமாக இருப்பதும் முக்கிய காரணம். ஒருவருட காலம் நான் சுவிட்சர்லாந்தில் இருந்திருக்கிறேன். மூன்று முறை மட்டுமே வாகனங்களின்  ஒலிப்பான் பயன்படுத்தி நான் கேட்டிருக்கிறேன். சாலை விதிகளை எல்லோரும் முறையாக பின்பற்றும் போது ஒலி எழுப்புவது அவசியமற்றதாகிறது. வாகனம் ஓட்டுபவர்களுக்கும் பயணம் செய்பவர்களுக்கும் இது அலுப்பை ஏற்படுத்துவதில்லை. மாறாக உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. சுவிட்சர்லாந்தில் ஜூரிச் நகர மக்கள் ஒன்று சேர்ந்து எழுப்பிய குரலின் விளைவாக அங்கு இரவு நேரங்களில் விமானம் இயக்கப்படுவதில்லை. உலகம் முழுவதும் அமைதி ஒரே வடிவத்தில் தான் இருக்கிறது. அதை தக்கவைக்கிறோமா அல்லது சீர்குலைக்கிறோமா என்பது நம் கையில் தான் உள்ளது.


இது போன்ற பல்வேறு காரணங்களால் நம் சமூகம் அமைதியை இழந்து அல்லல்படுகிறது. கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். எந்த விதமான ஒலி மாசும் இல்லாத சென்னை நகரம் எவ்வளவு அற்புதமாக இருக்கும். ஒலிப்பெருக்கிகள் இல்லாத, ஒலிப்பான்கள் இல்லாத சாலையில் பயணம் செய்யும் போது எவ்வளவு உற்சாகமாக இருக்கும்? ஒலி மாசை தடுக்க நம்மிடேயே சட்டங்கள் உள்ள போதும் வழக்கம் போல அது பின்பற்றப்படுவதில்லை.


சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஒலி மாசுக்கான பல்வேறு காரணிகளை ஆராய்ந்து மத்திய அரசு அவற்றை கட்டுக்குள் கொண்டு வர சட்டங்கள் இயற்றியுள்ளது.


ஒலி மாசுக்கான முக்கிய காரணிகளான ஜெனரேட்டர், பட்டாசு மற்றும் வாகனங்கள் ஆகியவற்றின் ஒலி அளவு கட்டுக்குள் இருப்பதற்கான வரம்பு வகுக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களின் ஒலி 80 டெசிபலுக்கு மேல் இருக்கக்கூடாது. அதே போல கனரக வாகனங்களின் ஒலிப்பான்கள் 91 டெசிபலுக்கு மேல் இருக்கக்கூடாது. மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் நீதிமன்றங்கள் இருக்கும் இடங்களில் 100 மீ தூரத்திற்கு ஒலிப்பான்கள் பயன்படுத்துவதும், ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதும், பட்டாசு வெடிப்பதும் தடை செய்யப்பட்டுள்ள போதிலும் நடைமுறையில் பின்பற்றப்படுவதில்லை. தேவையற்ற நேரங்களிலும் ஒலிப்பான்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அதுவும் வரம்பு மீறிய அளவிலேயே பயன்படுத்தப்படுகிறது.


தொழிற்சாலை இருக்கும் பகுதிகளில் பகல் நேரங்களில் 75 டெசிபல் அளவுக்கு அதிகமாகவும், இரவு நேரங்களில் 70 டெசிபலுக்கு அதிகமாகவும் இருக்ககூடாது. திறந்த வெளிகளில் இரவு 9 மணிக்கு மேல் காலை 6 மணி வரை ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது என்று சுற்றுச் சூழல் அமைச்சகம் அறிவித்திருக்கிறது.


ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதற்கு விதிகளை வகுத்துள்ளது போலவே பட்டாசுகளுக்கும் விதிமுறைகளை வகுத்துள்ளது மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம். ஒரு பட்டாசு வெடிக்கும் போது அது வெடிக்கும் இடத்தில் இருந்து 5 மீட்டர் தூரத்துக்கு மேல் உள்ள இடங்களில் கேட்கும் ஒலியானது 90 டெசிபலுக்கும் குறைவானதாக இருக்க வேண்டும். 90 டெசிபலுக்கும் அதிகமான ஒலி எழுப்பும் பட்டாசுகளை தயாரிக்கவும் வெடிக்கவும் அரசு தடை விதிக்கிறது. இரவு 9 மணிக்கு மேல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சர வெடிகள் வெடிக்கவும் தடைவிதித்துள்ளது அரசு. ஆனால் நடைமுறையில் இவை யாவும் பின்பற்றப்படுவதில்லை.


ஒலி மாசை கட்டுப்படுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மும்பையில் அவாஜ் (Awaaz) என்ற அமைப்பு செயல்படுகிறது. தீபாவளிப் பண்டிகையின் போது பட்டாசுகளின் ஒலியையும், விநாயகர் சதூர்த்தி ஊர்வலங்களின் போது ஒலிப்பெருக்கிகளின் ஒலியையும் அளவிட்டு அறிக்கை தயாரித்திருக்கிறது இந்த அமைப்பு. தமிழ் நாட்டிலும் இது போன்ற தன்னார்வு அமைப்புகள் மக்களிடேயே விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வர வேண்டும். போக்குவரத்து காவல் துறையும் ஏற்கனவே இருக்கும் சட்டங்களை முறையாக நடை முறைபடுத்த வேண்டும். இன்ஜின் ஒலியை மாற்றி அமைத்து உறுமும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது. சாலைகளில் செல்லும் எல்லோரையும் அச்சுறுத்தும் இது போன்ற செயல்களுக்கு விரைவில் அரசு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். காடுகளுக்குள் பயணம் செய்யும் வாகனங்களில் கூட பாடல்களை அலற விட்டபடி செல்லும் போக்கை என்னவென்று சொல்வது?


இது போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படும் ஒலி மனிதர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. கேட்கும் திறம் குறைய வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம் உருவாகவும் வழி வகுக்கிறது. மனிதர்களுக்கு மட்டும்  அல்லது பறவைகளுக்கும் இது மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது. பறவைகள் இனப்பெருக்க காலங்களில் ஒலி எழுப்பி தன்னுடைய இருப்பை தெரியப்படுத்தும். மேலும் விலங்குகள் வேட்டைகளின் போது ஒலி எழுப்பி தகவல்களை பரிமாறிக்கொள்ளும். அதிகப்படியான ஒலி, இவற்றின் தகவல் பரிமாற்றத்தில் இடையூறை ஏற்ப்படுத்துவதால் அவை அழிவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் பட்டாசு வெடிப்பதன் மூலமாகவும், வாகனங்களில் ஒலிப்பான்களை அதிக அளவில் பயன்படுத்துவதன் மூலமாகவும் பறவைகளும், விலங்குகளும் அதிக அதிர்ச்சிக்கு உள்ளாகின்றன. வயதானவர்கள், குழந்தைகள் இதனால் பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றனர்.


முடிந்தவரை ஒவ்வொருவரும் ஒலி மாசுபடாமல் இருக்க சின்ன சின்ன பங்களிப்பை செய்தாலே சுற்றுச் சூழலை பெரிய அளவில் மாசுபடாமல் காப்பாற்ற முடியும். முக்கியமாக பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமையும். அதிமாகி வரும் இரைச்சலால் சிட்டுக் குருவிகளின் கீச்சொலிகள் கூட நம் காதுகளில் விழுவதில்லை. பறவைகள் வாழ தகுதியற்ற நகரங்களை உருவாக்கி என்ன சாதிக்க போகிறோம்? குருவிகள் நிராகரித்த நகரங்களில், நாம் வாழ்வதில் நமக்கு என்ன பெருமை இருக்கப் போகிறது? இரைச்சலை சகித்துக் கொண்டு துன்புறுவதை விட, இரைச்சல் ஏற்படுத்துவதை தவிர்த்து அமைதிக்கு வழிவகுப்போம்.


Aug 15, 2014

பழனியில் ஏன் மழை பெய்வதில்லை?

கடந்த மூன்று ஆண்டுகளாக பழனியில் மழை இல்லாதது குறித்து எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள். தமிழ் நாட்டில் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்த போதிலும் பழனியில் மழை இல்லை என்பது உண்மையே. பழனியில் இருக்கும் வையாபுரி குளம் முற்றிலுமாக வறண்டுபோய் விட்டது. பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. தென்னை மரங்கள் பலவும் அழிந்து கொண்டிருக்கின்றன. பழனி இப்படி ஒரு வறட்சியை சந்திக்க என்ன காரணம்? நான் வானிலை நிபுணர் இல்லை. ஆனால் ஒரு சூழல் ஆர்வலர் என்ற முறையில் என் தனிப்பட்ட கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.பழனி மலைத் தொடர்ச்சிக்கு மேற்கே அமராவதி வரை பெய்யும் தென் மேற்கு பருவ மழை பழனி மலைத் தொடர்ச்சியில் பெய்வதில்லை. வட கிழக்கு பருவ மழையும் பொய்த்துப் போய் விடுகிறது. என்னை பொறுத்தவரையில் சூழலில் ஏற்படும் மாற்றங்களே இதற்கு காரணம் என தோன்றுகிறது. பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் ஏராளமான மரங்கள் கருகி இருப்பதை பார்க்க முடிகிறது. காட்டுத்தீ நம் காடுகளை பெரிது நாசம் செய்கிறது. இதற்கு காரணம் மனிதர்களே. மலை பகுதிகளில் புதிது புதிதாக கட்டிடங்கள் முளைக்கிறது. சாலை ஓரங்களில் பிளாஸ்டிக் குப்பைகளாக கிடக்கிறது. மது அருந்திய குவளைளில் குரங்குகள் உணவு தேடுகின்றன. கொடைக்கானல் நகரிலேயே குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. வெள்ளி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் வடிந்து கொண்டிருக்கிறது. காடுகள் சேதம் அடைவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. நம்மால் காட்டை நாசம் செய்ய முடியுமெனில், இயற்கை நமக்கு வேறு என்ன செய்யும்?


பழனி நகரில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் குளத்தை மூடி கட்டப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. காட்டின் அழிவு மழையை குறைக்கிறது. கொடைக்கானல் செல்லும் சாலை, சுற்றுலாப் பயணிகள் தூக்கி எறிந்த குப்பைகளால் நிறைந்து காணப்படுகிறது. இயற்கைக்கு எதிராக செல்லும் மனிதனின் போக்கு கடுமையான விளைவுகளை உருவாக்கி வருகிறது. வையாபுரி குளத்தில் நீர் நிறைந்து இருக்கும் போது எப்படி அழகாக இருக்கும் என்பது பழனி மக்களுக்கு தெரியும். ஆனால் இன்று குளம் முற்றிலும் வறண்டு விட்டது. இயற்கையை முறையாக பாதுகாக்க தவறினால் இன்னும் கடுமையான விளைவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். வானத்தை பார்த்துக் கொண்டிருந்தால் மழை பெய்துவிடாது. இயற்கையை பாதுகாக்க நம்மால் இயன்றதை செய்வோம். இதை நான் எப்போதும் உரக்கச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. ஏனென்றால் வானிலை நிபுணர் இல்லை. 


Mar 21, 2014

பற்றி எரியும் காடு

ஜனவரி முதல் மே மாதம் வரையில் அவ்வப்போது சொல்லப்படும் செய்தி காட்டுத்தீ. இந்த காட்டுத்தீக்கு என்ன காரணம் என்பதை எந்த ஊடகமும் சொல்வதில்லை. சுற்றுலாப் பயணிகள் தூக்கி எரியும் சிகரெட் துண்டுகள் காய்ந்து போயிருக்கும் சருகுகளில் பட்டு எளிதில் தீப்பற்றிக் கொள்கிறது. கவனக் குறைவு காரணமாக யாராது தூக்கி எரியும் இந்த நெருப்புத் துண்டுகள் நம் வனத்தை ஒட்டு மொத்தமாக அழித்துவருகிறது. இதை பற்றி ஊடகங்கள் விளக்கமாக சொல்வதில்லை. "விலை உயர்ந்த மரங்கள்" எரிந்து நாசம் எனச் சொல்லி வனத்தை பணமாக மட்டுமே பார்க்கும் மனோபாவம் மாற வேண்டும். பழனி மலைத் தொடர்ச்சியில் தொடந்து காடு பற்றி  எரிந்து வருகிறது. 

ஆனால் ஊடகங்களில் வரும் செய்தியில் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தூக்கி எரியும் சிகரட் துண்டுகள் பற்றி வருவதில்லை. மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை வழங்க வேண்டிய ஊடகங்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றன "விலை உயர்ந்த மரங்கள்..........."


தினமலரில் வந்த செய்தி : "திடீரென மரங்கள் தீப்பற்றி எரிந்தது".

பழநி: கொடைக்கானல் மலைப்பகுதி சவரிக்காடு வனப்பகுதியில், ஏற்பட்ட காட்டுத் தீயால் மரங்கள் எரிந்தன.பழநி -கொடைக்கானல் ரோடு, சவரிக்காடு, வடகவுஞ்சி, மேல்பள்ளம் ஆகிய பகுதியில் தேக்கு, புங்கை,கொங்கு, வேட்கை, தைலமரங்கள் மற்றும் ஏராளமான மூலிகைச்செடிகள் உள்ளன. தொடர்ந்து மழை இல்லாததால், அதிகமான வெப்பம் காரணமாகவும், இப்பகுதிகளில் மரம், செடிகள் காய்ந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, சவரிக்காடு, வடகவுஞ்சி பகுதியில், திடீரென மரங்கள் தீப்பற்றி எரிந்தது. இதில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து சாம்பலானது.பழநி வனரேஞ்சர் கணேசன் கூறுகையில்,"போதிய மழையில்லாததால், வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. மேல்பள்ளம், வடகவுஞ்சி பகுதியில் தனியார் பட்டா நிலத்தில் தீ பற்றி மரங்கள் எரிந்தது. அவர்கள் அதை கட்டுப்படுத்திவிட்டனர். மேலும் வனப்பகுதியில் தீ ஏற்படாமல் இருப்பதற்கு, பாரஸ்டர் தலைமையில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. விலங்கினங்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை,” என்றார்.


Feb 11, 2014

நதியின் ஓவியம் எப்படி இருக்கும் ?


நதியை ஓவியமாக்கிட
கேட்டிருந்தார் ஆசிரியர்.

அவரவர் விருப்பம் போல
வரையத் தொடங்கின குழந்தைகள்.

ஓவியா வரைந்த நதி
காடுகளின் நடுவே சென்று கொண்டிருந்தது.

அணையிலிருந்து வெளிவரும் நதி ஒன்றை
வரைந்து கொண்டிருந்தான் கார்த்திகேயன்.

நகரங்களின் நடுவே சென்று கொண்டிருந்தது
நான்ஸி வரைந்த நதி.

பூங்குழலி சாக்கடை ஒன்றை
வரைந்து வைத்தாள்.

நதியின் மணல் பரப்பில்
லாரி செல்வது போல வரைந்தான் அமீர்.

நீண்ட நேரம் ஆகியும்
என்ன வரைவது என தெரியாமல்
யோசித்துக் கொண்டிருந்தாள்  யாழினி.

மேலும் சில சூழலியல் கவிதைகள் :

Jan 25, 2014

புலியின் உதிரம்..!!

நிறைய கேள்விகளையும் தாக்கத்தையும் ஏற்படுத்திவிட்டு உயிர் இழந்திருக்கிறது ஒரு புலி. புலி கொல்லப்பட்டதை வனத் துறை சாதனையாக நினைக்கிறது. மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்கிறார்கள். ஒரு ஆரோக்யமான காட்டின் அடையாளம் புலி. காடுகள் அழிக்கப்படும் போது கண்டுகொள்ளாத அரசாங்கமும் பொதுமக்களும், வாழிடம் இழந்த ஒரு புலியை கொன்றுவிட்டு அதை வெற்றியாக கருதுகிறார்கள்.புலி கொல்லப்பட்டது சரியா தவறா என்பதை விடவும் அது கொல்லப்பட ஏன் நிர்பந்திக்கப்பட்டது என்பதையும், அது ஏன் கட்டை விட்டு வெளியே வந்தது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். புலிகளின் வாழிடம் வேகமாக சரிந்து வருகிறது. அப்படியானால் ஆரோக்யமான காடுகளை நாம் இழந்து வருகிறோம் என்றே பொருள். காடுகளை இழந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை இன்னமும் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அதன் விளைவுகள் எல்லோருக்கும் தெரியும். ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளாக பருவ மழை சரியானபடி இல்லை. மழை வேண்டுமானால் காடுகள் வேண்டும். செழிப்பான காடுகளின் அடையாளமாக அங்கே புலிகளும் வேண்டும்.ஊடகங்கள் புலி கொல்லப்பட்டதை சொல்வதோடு நின்று விடுகிறது. அதன் வாழிடம் எப்படி சிதைகிறது என்பதை சொல்வதில்லை. காடுகளுக்குள் அணைகள் கட்டுவதும், சாலைகள் போடுவதும், கட்டிடங்கள் கட்டுவதையும் இன்னமும் நம் மக்கள், அரசின் சாதனைகளாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த எண்ணம் முதலில் மாற வேண்டும். எல்லா திசையிலிருந்தும் காடுகள் சுருங்கும் போது விலங்குகள் எங்கே செல்லும்? சாலையில் அடிபட்டு சாகின்றன. கிணற்றில் விழுந்து சாகின்றன. வேட்டையாடப்பட்டு கொல்லப்படுகின்றன. வேட்டு வைத்து விரட்டபடுகின்றன. அவை அனைத்தும் தன் வாழிடங்களை தொலைத்துவிட்டு அலைந்து கொண்டிருக்கின்றன. இதன் விளைவுதான் வனத்துறையே புலியை கொள்ளவேண்டிய சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. புலி கொல்லப்பட்டது கொண்டாட வேண்டிய விஷயம் அல்ல. நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். மனிதனின் சுரண்டலில் மெல்ல மெல்ல உயிர் இழந்து கொண்டிருக்கிறது இந்த மொத்த பூமியும். புலி உணவுக்காக மட்டுமே வேட்டையாடுகிறது. ஆனால் மனிதன் அப்படியல்ல. காடுகளுக்கும் சென்று குடித்துவிட்டு தூக்கி எரியும் ஒவ்வொரு மது பாட்டில்களிலும் எழுதப்பட்டிருக்கிறது மனிதனின் அழிவு.

Jan 18, 2014

பசுமை சந்திப்பு - காணொளி

04.05.2013 - அன்று சென்னையில் நடைபெற்ற பசுமை சந்திப்பு நிகழ்ச்சியின் முழு தொகுப்பையும் இங்கே பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழின் முக்கியமான சூழலியல் எழுத்தாளர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி மிகவும் முக்கியமானதாக அமைந்தது.