Dec 31, 2020

புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஒரு கடினமான ஆண்டை கடந்துவிட்டோம். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து என் வலைப்பூவிற்கு ஆதரவு அளித்த வாசகர்கள் அனைவருக்கும் நன்றி. 

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தொடர்ந்து வாசிப்பதற்கு நன்றி. 2020-ஆம் ஆண்டில் எந்தெந்த நாடுகளில் இருந்து என் வலைப்பூ வாசிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள : 


வரும் ஜனவரி 2-ஆம் தேதி பழனி மலைத்  தொடரின் பல்லுயிரியம் குறித்து நேரலையில் பேசுகிறேன். கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

தேதி- 02/01/2021 மாலை- 7 to 8.30

Free Registration - www.shorturl.at/lyHL8

Google Meet-ல் நடைபெறும்.


Dec 2, 2020

பறவைகள் வரம்

போதி மரக்கிளையில் வந்தமரும் 
சிறு பறவையின் சிறகிலிருந்து 
உதிர்கிறது ஒரு இறகு .

விழிப்புற்ற புத்தனின் மனம் குளிர 
தேவைப்படுகிறது 
ஒரு பைனாக்குலர்.

பறவைகள் வரம்.
காத்திருத்தல் தவம்.


Nov 26, 2020

புயல்

புயல் ஓய்ந்த காலை பொழுதில் 

மாநகரத்துச் சாலையொன்றில் 

பறந்து செல்லும் 

வண்ணத்துப்பூச்சி 

நேரலையில் சொல்லாத 

செய்தியொன்றை 

சொல்லிச் செல்கிறது. 


Nov 21, 2020

யானை எழுதிய கவிதை

மலை முகட்டிலிருந்து காட்டினுள் 
தூக்கி எறியப்படும் 
கண்ணாடி பாட்டில் 
உடைந்து நொறுங்கும் சத்தம் 
அத்தனை இனிமையாக இருக்கிறது. 

இந்த பூமியில் வாழப்போகும் 
கடைசி மனிதனின் 
கதறலைப் போல. 




Nov 12, 2020

ஊதா தேன்சிட்டு [ Purple Sunbird]

பெருநகரத்தின் வீதியொன்றில்

மீதமிருக்கும் ஒற்றை மரத்தில் 

தனித்திருக்கிறது 

ஊதா நிறத் தேன் சிட்டு.


தீபாவளிக்கு பிறகான நாள் ஒன்றில் 

தனித்திருக்கிறது மரம்.


Oct 24, 2020

அமெரிக்க அதிபர் தேர்தல் - கவிதை

அமெரிக்க அரசனுக்கு 
பருவநிலை பிறழ்வு பற்றிய 
கவலை ஏதுமில்லை. 

பெருமழையோ புயலோ 
உருகும் பனியோ 
அதிசயம் இல்லை உங்களுக்கு. 

பொங்கும் கடலோ வெயிலோ 
காட்டுத்தீயோ
செய்தி மட்டுமே உங்களுக்கு.

தனிமனித நுகர்வில் 
உங்கள் தேசத்து மாநகரம் 
அதிசயங்களை நிகழ்த்துகிறது.

புரட்டிப்போட்ட பேரிடரால் 
மூன்றாம் தேசத்து மாநகரம் 
பசியால் துடிக்கிறது. 

நிலக்கரியை எரித்துக்கொண்டே 
நீங்கள் நியாயம் 
பேசுங்கள். 

மூழ்கும் சிறுதீவின் 
கடற்கரையில் 
அடைகாக்க இடம் தேடும் 
தாய் பறவைக்கு 
என்ன பதில் சொல்வீர்கள் 
அரசனே. 






Oct 4, 2020

நிலவை ரசித்த தடயங்கள் : கவிதை

நான் நிலவை ரசித்த தடயங்கள் 

ஏதுமற்ற போதும்,

சமதூர இடைவெளியில் 

பறந்து செல்லும் பறவைகள் 

பிறை வடிவை 

ஒத்திருந்ததால்,

அவை 

எனக்கும் நிலவுக்கும் ஆன 

இடைவெளியை 

நிரப்பி இருக்கக்கூடும்.



Oct 3, 2020

சிதறாத எழுத்துக்கள் : 10-ஆண்டுகள் நிறைவு

சிதறாத எழுத்துக்கள் நூல் வெளியாகி இன்றோடு 10-ஆண்டுகள் நிறைவடைகிறது. திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் என்னுடைய இந்த நூலை பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் வெளியிட்டார்.