Dec 4, 2016

தமிழ் சினிமாவில் காட்டுயிர்


எல்லா பிரச்சனைகளுக்கும் சினிமாவையும் நடிகர்களையும் உள்ளே இழுப்பது அவசியம் இல்லைதான். ஆனால் அந்த சினிமா தவறான தகவல்களை தரும் போது விமர்சனம் செய்வது அவசியமாகிறது. காட்டுயிர்கள் விஷயத்தில் தமிழ் சினிமா இதுவரை எதையுமே உருப்படியாக செய்யவில்லை என்பது தான் உண்மை. மாறாக, அது தவறான தகவல்களை தொடர்ந்து தந்து கொண்டே இருக்கிறது. பாம்பு பால் குடிக்கும் என்பதில் தொடங்கி புலியை கொடூர விலங்காக சித்தரித்தது வரை காட்டுயிர் மீதான அறிவியல் பார்வையிலிருந்து முற்றிலும் விலகி மக்களிடம் அறியாமையை ஏற்படுத்தி வருகிறது. 

சிவாஜி திரைப்படத்தில் ரஜினி "சிங்கம் சிங்கிளாத்தான் வரும்" என சொன்னதும், சிங்கம் படத்தில், "பாத்ததெல்லாம் திங்கற ஓநாய் இல்ல" என சூர்யா சொல்வதும் காட்டுயிர் மீதான அடிப்படை புரிதலும், அக்கறையும் தமிழ் சினிமாவுக்கு இன்னமும் இல்லை என்பதற்கான உதாரணங்கள். வெறும் அடுக்கு மொழி வசனங்களுக்காக காட்டுயிர் மீதான குழப்பத்தை மக்கள் மனதில் தொடந்து தமிழ் சினிமா உண்டாக்கி வருகிறது. "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" திரைப்படத்தில் சத்யராஜை வேட்டைக்காரனாக காட்டியிருப்பதோடு, அது ஏதோ வீரத்தனம் என காட்சிப்படுத்துவதும் காட்டுயிர்களை கேலிப்பொருளாக்குகிறது. "இது நாடு அல்ல, புலிகள் வாழும் காடு" என ரெட் திரைப்படத்தில் வைரமுத்து எழுதிய பாடலின் பொருள் என்ன? புலியை கொடூரமான விலங்கு என எச்சிரிக்கிறாரா? கும்கி திரைப்படத்தில் காட்டு யானையை ஒரு கொடூரவிலங்கு போலவே சித்தரித்தது கொடுமையின் உச்சம். படத்தின் இறுதி வரை இது தொடர்ந்துகொண்டே இருக்கும்.

சமீபத்தில் வெளியான திரைப்படங்களின் ஒரு சில வசனங்களும் காட்சிமைப்புகளும் குறைந்தபட்ச நம்பிக்கையை தருகின்றன. கபாலி திரைப்படத்தில் வரும் வசனம் அர்த்தம் நிறைந்தது. "பறவையின் குணம் பறப்பது தான், அதை பறக்க விடு" என்பது ஆறுதலாக இருந்தது. கூடுதலாக அடுத்த காட்சியிலேயே வில்லனாக காட்டப்படும் ஒருவன் "ஓராங்குட்டான்" (Orangutan) குரங்குகளை விலைபேசிக் கொண்டிருப்பான். தென் கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா மற்றும்  இந்தோனேசியாவை பூர்வீகமாக கொண்ட இவை தற்போது அழியும் நிலையில் உள்ளன. இதற்கு முன்பு  சினிமாவில் ஓராங்குட்டான் பற்றியெல்லாம் பேசியதாக தெரியவில்லை. இருப்பினும் இன்னும் கூடுதலாக இது போன்ற காட்சி அமைப்புகள் அவசியம். புதுச்சேரியில் ரஜினியை வில்லன் ஆட்கள் கொல்ல வரும் போது பின்னணி இசையை நிறுத்திவிட்டு, ஆள்காட்டிக் குருவியின் ஒலியை சேர்த்து நேர்த்தி. இது யாருடைய எண்ணம் எனத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

பாபநாசம் திரைப்படத்தில் வரும் ஒரு வசனமும் முக்கியமானது. "யான போற பாதையில வாழ போட்டா அது திங்காம என்ன பண்ணும்?" என்ற வசனத்தின் மூலம், யானையின் வழித்தடம் ஆக்கிரமிக்கப்படுவதை சொல்வார் கமல். இது போன்ற மிகச் சில காட்சிகளை தாண்டி தமிழ் சினிமாவில் காட்டுயிர் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்படவில்லை. 

தமிழ் வில்லன்கள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக போதைப் பொருள் கடத்துபவர்களாகவே உள்ளனர். உலக அளவில் போதைப்பொருட்களுக்கு அடுத்ததாக, சட்ட விரோதமாக கடத்தப்படுவது விலங்குகளின் உறுப்புகள் தான். ஆனால் அது குறித்து இதுவரை தமிழ் சினிமா காட்டியிருப்பதாக தெரியவில்லை. புலியின் தோல், யானை தந்தம், காண்டாமிருகத்தின் கொம்பு என சட்ட விரோதமமாக பல காட்டுயிர்கள் கொல்லப்பட்டு அதன் உடல் பாகங்கள் கடத்தப்படுகின்றன. தமிழ் சினிமாவின் ஹீரோக்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு போலீஸ் அதிகரிகளாகவே வருவார்கள்? ஒரு நேர்மையான திறமையான வனத்துறை அதிகாரிகள் எல்லாம் திரைக்கதையில் இருப்பதில்லை ஏன் ?

சிங்கம், புலி, சிறுத்தை, கழுகு, குருவி, குள்ளநரிக்கூட்டம், உடும்பன், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மைனா, பாயும் புலி, வேங்கை என காட்டுயிர் பேர்களைக் கொண்டு பல திரைப்படங்கள் வந்தாலும், இதுவரை எந்த திரைப்படமாவது சூழலில் அவற்றின் அவசியம் குறித்து பேசியிருக்கிறதா? காட்டுயிரின் அவசியம் குறித்தோ, சூழலின் முக்கியத்துவம் குறித்தோ பேசாத திரைப்படங்கள், தலைப்புக்கு மட்டும் அவற்றை பயன்படுத்துவது நியாயமா? 

Oct 30, 2016

கோவையில் யானைகள் இரு(ற)ந்தன - கவிதை
வலசை தொலைத்த பேருயிர் ஒன்று 
வயிற்றில் குட்டியோடு
சாலையின் நடுவே நிற்கிறது.

ஒலிப்பான்களின் இரைச்சலில் மிரட்சியுற்று 
ஓடி வரும் பேருயிர் பின்னர் 
ரயில் பாதையில் நடக்கிறது.

இதற்கு முன் பார்த்திராத ரயிலை 
எதிர்கொண்டு நகர்கையில் புரிந்து கொள்ளவியலா 
மனதுடன் தப்பித்து ஓடுகிறது.

சீமைக் கருவேலக் காட்டில் 
உணவின்றி நீரின்றி அலைந்து பின்  
மின்வேலியில் மோதி திக்கற்று நிற்கிறது.

பசித்த வயிறோடு வயலுக்குள் நுழைந்த போது 
கொழுத்தி எறியப்பட்ட பட்டாசு 
அதன் நெற்றியில் பட்டு வெடிக்கிறது.

ஊருக்கு வெளியில் இருக்கும் குப்பை மேட்டில்
உணவை தேடத் தொடங்கியது பேருயிர்.

ஞெகிழிப் பைகளை உணவென்று நினைத்து விழுங்கும் பேருயிர் 
வயிற்றில் இருக்கும் குட்டிக்கு விஷத்தை 
ஊட்டிக் கொண்டிருந்தது..

தொலைவில் நின்று பேசிக்கொண்டார்கள்
"சரியான திருட்டு யானை"
நல்ல வேலையாக அது குட்டியின் காதுகளில் 
ஒரு போதும் விழப் போவதில்லை...Oct 28, 2016

Butterflies of Kabini


Oct 15, 2016

கொடைக்கானலில் ஸ்கை வாக் அவசியமா?

ஒரு நாட்டின் பெருமையை உணர்த்துவதில் சுற்றுலாத் துறைக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஏற்கனவே இருக்கும் சுற்றுலாத் தளங்களே குப்பைக் கூளங்களாக மாறி இருக்கும் போது, ஒரு புதிய திட்டத்தின் மூலம் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது? சுற்றுலா என்ற பெயரில் காடுகள் தொடர்ந்து நாசமாக்கப்படும் நிலையில் புதிதாக வரும் திட்டங்களால் காடுகள் முற்றிலுமாக காணாமல் போய்விடாதா? கொடைக்கானலில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் வெளியில் இருந்து வருபவர்கள் குப்பைகளை கொட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பழனி மலைத் தொடரில்ர இருக்கும் பல்வேறு கிராமங்களிலும் இன்றும் பிளாஸ்டிக் பைகள் உபயோகத்தில் தான் இருக்கிறது.வழியில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி உணவு உண்பதும், அதன் மிச்சத்தை தூக்கி எறிவதும், கூடவே கொண்டு வந்த "Use and throw" பொருட்களையும் வீசி எறிந்துவிட்டுச் செல்லும் சுற்றுலாப் பயணிகளை என்றைக்காவது கண்காணித்து அறிவுரை வழங்குகிறதா சுற்றுலாத் துறை? குரங்குகளுக்கு உணவு கொடுத்து அதன் இயல்பை கெடுத்தது தான் மிச்சம்.தற்போது வெளியிடபட்டிருகும் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. Dolphin Nose என்ற பகுதியில் Sky Walk வருமானால் காட்டிற்கு அது அச்சுறுத்தலாக அமையும் என்பது மட்டும் நிச்சயம் உண்மை. தனியார் நிறுவன உதவியுடன் இங்கே இதை அமைப்பதன் மூலம் யாருக்கு லாபம்? Dolphin Nose என்ற பகுதிக்கு நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகையை முதலில் இங்கே கட்டுப்படுத்த வேண்டும். மிகவும் குறுகலான சாலையில் பயணம் செய்து அந்த இடத்தை அடையலாம்.

சமீபத்தில் பறவைகளை காண அந்த பகுதிக்கு சென்று மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பினேன். அங்கே உருவாகியிருக்கும் ஏராளமான கடைகளும் குடியுருப்புகளும் அந்த பகுதியை முற்றிலும் அசுத்தமாக்கியிருந்தன. வழி எங்கும் பிளாஸ்டிக் குப்பைகள். மிச்சமான உணவுப் பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. இது போதாதென்று ஒலிப்பெருக்கியில் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது. இயற்கை சூழல் ஏற்கனவே இங்கே சிதைந்து கொண்டிருக்கும் நிலையில், Sky Walk வந்தால் என்னவாகும் என நினைத்துப் பாருங்கள்.

சுற்றுலா என்பதே இன்பமானதாகவும் அறிவை வளர்க்கும் விஷயமாகவும் இருக்க வேண்டும். அதிலும் காடுகளுக்குள் சுற்றுலா என்பது காட்டை பற்றிய அறிதல் கொண்டதாக இருக்க வேண்டாமா? Eco- Tourism என்பது மருந்துக் கூட இல்லையென்றால், அதை ஏன் செயல்படுத்த வேண்டும் ? குணா திரைப்படம் வந்த பிறகு "Guna Cave" என்ற சுற்றுலாத் தளம் உருவானது. ஆனால் அதன் விளைவு என்ன? சாலை விரிவாக்கம், போக்குவரத்து நெரிசல், குப்பை மேடு அவ்வளவுதான். உண்மையில் அந்த இடத்தின் பெயர் Devils Kitchen Shola என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டது. நதிகளை உருவாக்கும் சோலைக்காடுகளில் இதுவும் ஒன்று. அது சிதைந்து போவதுதான் சுற்றுலாத் துறையால் நடந்த மிச்சம்.

Pine Forest என ஒரு சுற்றுலா தளத்தை உருவாக்கி இருக்கிறார்கள். பைன் மரமே ஒரு அயல் தாவரம் தான். ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று காடுகளில் பெருமளவு பரவி காட்டின் ஆரோக்யத்தை சீரழிக்கிறது. இதன் விளைவாக காட்டு மாடுகள் அதன் வாழிடத்தை இழந்து உணவை இழந்து நகருக்குள் சுற்றி அலைகிறது. அது பற்றி சுற்றுலாப் பயணிகளுக்கு எடுத்துரைக்கப்படுகிறதா?இவ்வளவு சீரழிவுக்குப் பிறகும் பாடம் கற்காமல் மேலும் காட்டை நாசமாக்கும் முயற்சியை மட்டுமே செய்வது யாருடைய லாபத்திற்காக? அடுத்த தலைமுறைக்கு தண்ணீர் தேவை. அதற்கு காடுகள் தான் அவசியமே ஒழிய Sky Walk அல்ல.
Oct 2, 2016

காந்தி விரும்பியது இதைத்தான்...!!

பழனி நகரின் வையாபுரிக் குளத்தை சுத்தம் செய்து தூர்வாரி பாதுகாக்கும் முயற்சியில் நண்பர்கள் களம் இறங்கிய போது பெரிய ஆதரவு எல்லாம் உருவாகவில்லை. சிலர் கேட்டுக் கொண்டார்கள். சிலர் பொருளதவி செய்தார்கள். சிலர் இது முடியாத காரியம் என்றார்கள். நகரின் நடுவில் இருக்கும் ஒரு குளத்தை எப்படி சுத்தம் செய்வது என்று சந்தேகம் எழுப்பினார்கள். மக்களை ஒருங்கிணைத்து அரசின் அனுமதியை பெற்று குளத்தின் ஒரு பகுதியில் மட்டும் வேலை தொடங்குவதற்கே பெரிய போராட்டமாக இருந்தது என்பது களத்தில் இறங்கி வேலை செய்தவர்களுக்கு நன்றாக தெரியும்.
எல்லாவற்றையும் கடந்து ஓரளவுக்கு மக்கள் ஆதரவோடு பணிகள் தொடங்கப்ட்டுவிட்டன. யார் என்ன உதவி செய்தார்கள் என பட்டியலிடுவது சுலபமில்லை. ஒவ்வொருவர் செய்த உதவியும் மகத்தானது. சிலர் பொருளுதவி செய்தார்கள். சிலர் குளத்தில் இறங்கி குப்பை அள்ளினார்கள். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்தார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, மாணவர்கள் முதல் மருத்துவர்கள் வரை பலரையும் இந்தப் பணி எல்லோரையும் ஒரு இயக்கமாக ஈர்த்துக் கொண்டது.இரவும் பகலும் குளம் பற்றிய சிந்தனையோடு உழைத்துக் கொண்டிருப்பவர்களை அறிவேன். நகரின் நடுவில் இருக்கும் ஒரு குளத்தை சுத்தம் செய்வது என்பது சுலபமான காரியமில்லை என்பது உண்மை தான். ஆனால் குளத்தை சுற்றித் தான் நகரம் அமைந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வையாபுரி குளம் பாதுகாக்கப்பட்டால் நிலத்தடி நீர் மட்டம் நன்றாக உயரும். அழகான இயற்கை சூழல் உருவாகும். தற்போது அமைக்கப்ப்டிருக்கும் மண் திட்டுகள் தீவுகள் போலாகும். அங்கே பறவைகள் தங்க இடம் அமையும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும். மற்ற குளங்களையும் பாதுகாக்க வேண்டும் என்கிற எண்ணம் உருவாகும். அடுத்து வரும் தலைமுறைக்கு நீராதாரமாக விளங்கும்.

ஆனால் இந்த குளத்தை சுத்தம் செய்வதிலும் பாதுகாப்பதிலும் எண்ணற்ற சவால்கள் உள்ளன. குளத்திற்குள் சாக்கடை நீர் நேரடியாக கலக்காமல் இருக்க வேண்டும். சாக்கடை நீரோடு சேர்ந்து வரும் மற்ற பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட வேண்டும். ஆக்கிரமிப்புகள் எதுவும் நடக்காமல் பாதுகாக்க வேண்டும். குப்பைகள் வந்து கொட்டப்படாமல் இருக்க வேண்டும். நகரின் மையத்தில் இருக்கும் ஒரு குளத்தில் இது சாத்தியாமா என்றால், மக்கள் நினைத்தால் நிச்சயம் சாத்தியம் தான். சமீபத்தில் பழனி சென்றிருந்த போது குளத்திற்கு  நேரடியாக சென்று பார்த்தேன். குளத்தில் குப்பைகள் அகற்றப்பட்ட போதும், மண்ணோடு பிளாஸ்டிக் குப்பைகள் இறுக்கிப் போயிருந்ததை பார்க்க முடிந்தது. குளத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் பார்த்தால், தற்போது இருக்கும் குளத்தில் முதல் மூன்று அடிகளுக்கு பிளாஸ்டிக் குப்பைகளோடு மண் இறுக்கிப் போயிருப்பதை பார்க்க முடியும். இந்த முதல் மூன்று அடியை மண்ணோடு அப்புறப்படுத்த வேண்டும் அல்லது பிளாஸ்டிக் குப்பைகளை மட்டும் பிரித்தெடுக்க வேண்டும். ஆனால் இது சுலபமான காரியம் அல்ல. எதிர் வரும் பருவ மழைக்குள் இதை தொடங்குவது சாத்தியமா எனது தெரியவில்லை. தற்போது குளத்தை சுற்றிலும் வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி நிறைவடைந்தால் ஆக்கிரப்பமிப்புகளும் அசுத்தப்படுத்துவதும் கட்டுப்படுத்தப்படும்.


மேலும் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கும் மண் மேடுகள் மேல் மரக்கன்றுகள் நடப்பட்ட வேண்டும். மழைக்கு பிறகு குளத்தில் தண்ணீர் வந்த பிறகு இந்த மண் மேடுகள் தீவுகள் போலாகும். அங்கே மரங்கள் வளர்க்கலாம். பறவைகளுக்கு அது இடமாக மாறும். இந்த பணி இத்தோடு நிறைவடைந்து விடாது. அடுத்த ஆண்டும் தொடரப்பட வேண்டும். அதற்கு பொருளாதார உதவியும் மக்களின் நேரடியான பங்களிப்பும் அவசியம். அப்போதுதான் இந்த பயணம் வெற்றியடையும். ஒரு குளத்தை சுத்தம் செய்வதை விட முக்கியம் அது அசுத்தமாகாமல் பாதுகாக்க வேண்டும்.இந்த பணியை பழனியை சுற்றியுள்ள மற்ற குளங்களிலும் செய்ய வேண்டும். அதற்கு அரசின் ஆதரவும் பொது மக்களின் ஆதரவும் அவசியம்.ஒரு சில முயற்சிகளை மக்களே ஒருங்கிணைந்து செய்யும் போது அது மிகப் பெரிய வெற்றியடைகிறது. சுத்தமான இந்தியாவைத் தான் காந்தி விரும்பினர். ஆனால் இன்றளவும் நமக்கு அது சாத்தியமில்லாமல் இருக்கிறது. வளர்ச்சி என்பது மிகப்பெரிய கட்டிடங்களில் இல்லை. சுத்தமான சுகாதரமான கிராமங்களையும் நகரங்களையும் கொண்டது. சூழலை பாதிக்காதது. மக்கள் நினைத்தால் பழனி வையாபுரி குளம் தமிழ் நாட்டிற்கே ஒரு முன்னுதாரணமாக மாறும். என்னவாகும் என்பது காலத்தின் கையிலும் மக்களின் கையிலும் இருக்கிறது.

Jun 19, 2016

அழிவை நோக்கி இன்னும் வேகமாக....

2012 -ஆண்டு  ராஜஸ்தான்  மாநிலம் பரத்பூரில் பறவைகளை  காணச் சென்றிருந்தோம். அப்போது  நான் அதற்கு முன்பு பார்த்திராத ஒரு விலங்கை பார்த்து மிகவும் மகிழ்ச்சியுற்றேன். ஏனென்றால் அவை தென்னிந்தியாவில் இல்லை.  இந்த விலங்கின் பெயர் நீலான் (Nilgai). தற்போது இந்த விலங்கை கொல்வதற்கு தான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அதற்கு சொல்லப்படும்  காரணம், இந்த விலங்குகள் பயிர்களை நாசம் செய்கின்றன என்பதே. ஒரு புறம் காடுகள் தனியாரிடம் கொடுக்கப்பட்டு சூறையாடப்படுகின்றன. மறுபுறம் விலங்குகளை கொல்ல அனுமதி கொடுப்பது என்ன நியாயம்? மேலும் காட்டுப்பன்றிகளையும் குரங்குகளையும் கொல்லவும் அரசு அனுமதி அளிக்கிறது.சிக்கல் என்னவென்றால்  ஏற்கனவே இருக்கும் வனப்பாதுகாப்பு  சட்டமே விலங்குகளை பாதுகாக்க போதுமானதாக இல்லை. தொடர்ந்து வேட்டைகள் நடந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் அரசே அனுமதி அளித்தால் நிலைமை என்னவாகும்?

மேலும் இவ்வாறு கொல்லப்படும்  விலங்குகள் உண்மையில் பயிர்கள் நாசம் செய்யப்பட்டதால் தான் கொல்லப்படுகின்றனவா என்பதை எப்படி நிரூபிக்க முடியும்? காடுகளுக்குள் இருக்கும் இந்த விலங்குகளும் கொல்லப்படாதா ?

இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட நீலான் இன மான்கள் கொல்லப்ட்டுவிட்டன. தொடர்ந்து கொல்லப்படுவதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது.

வெளிமான்களை வேட்டையாடிய சல்மான் கானுக்கு  பல ஆண்டுகளுக்கு பிறகும் தண்டனை கிடைக்கவில்லை. காடுகளில் வாழிடம் இழந்து வேளாண் நிலங்களுக்குள் புகுந்த காரணத்திற்காக ஒரு உயிரினத்திற்கு மரண தண்டனை கிடைக்கிறது. மனிதனும் இயற்கையின் ஒரு அங்கம் மட்டுமே என்பதை எப்போது இந்த அரசாங்கம் உணரப் போகிறது ?Apr 30, 2016

பூமிக்கு கிளைகள் இல்லை [22-ஏப்ரல் பூமி தினம்]

நாம் கடைகளில் சென்று வாங்கும் எந்த ஒரு பொருளும் ஏதோ ஒரு வகையில் இயற்கையில் இருந்தே பெறப்படுகிறது. பொருட்களை வாங்குவதற்கு பணம் மட்டுமே போதுமானது என்ற பொதுபுத்திக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். பெரும்பாலான பொருட்கள் அதன் பயன்பாடு தீர்ந்த பிறகு குப்பையாகவே போய் சேர்க்கிறது. குப்பைகளை பிரித்து அவற்றை மறுசுழற்சி செய்யும் முயற்சியில் இந்தியா இன்னும் முதல் அடி கூட எடுத்து வைக்கவில்லை. ஞெகிழிப் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத சூழலில், அவற்றை குறைத்துக் கொள்ள மக்களும் அரசும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். சில வருடங்களுக்கு முன்பு வரை கடைகளுக்கு செல்லும் போது பை எடுத்துச் செல்வது வழக்கமாக இருந்தது. மேலும் கடையில் என்ன வாங்க வேண்டும் என்பதை ஒரு சீட்டில் எழுதி எடுத்துக் கொண்டு செல்லும் பழக்கமும் இருந்தது. ஆனால் இன்று கடைகளுக்கு செல்லும் போது கை வீசிக் கொண்டு செல்லும் மக்கள், தான் வாங்க நினைத்த பொருட்களை விடவும் கூடுதலான பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். கூடுதலான நுகர்வு பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்துவதோடு, தேவைக்கு அதிகமாக வாங்கும் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படவும் விலைவாசி உயரவும் வாய்ப்பாக அமைகிறது. மேலும் பொருட்களை அள்ளிப்போட்டுக் கொண்டு வர பயன்படுத்தும் ஞெகிழிப் பைகள் அப்படியே குப்பையாக போய் சேர்க்கிறது. 

தேவையற்ற முறையில் நுகரப்படும் ஞெகிழி

இன்றும் இந்தியாவில் வீணாக்கப்படும் உணவுப் பொருட்கள் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அலட்சியம் என்றே நினைக்கிறன். விளம்பரங்களின் மீதான மோகமும், பொருட்களின் மீதான ஈர்ப்பும் மக்களை சந்தைக்குள் இழுத்துவிட்டு திண்டாட வைக்கிறது. இரண்டு லிட்டர் ரசாயன குளிர்பானத்தை வாங்கும் பலரும் அதை முழுவதுவமாக பருகவதில்லை. (பருகினால் அதனால் நன்மை ஒன்றுமில்லை என்பது வேறு விஷயம்). ஆனால் இதற்கான மூலப்பொருட்கள் யாவும் இயற்கையில் இருந்தே பெறப்படுகிறது. இந்த பானங்களை தயாரிக்க அதிகப்படியான நீர் தேவைப்படுகிறது. இவற்றை அடைத்து வைக்கத் தேவையான ஞெகிழி புட்டிகள் குப்பையாக சென்று சூழலை நாசமாக்குகிறது. இதற்கு பதிலாக நாம் இளநீரை பருகுவதாக எடுத்துக் கொண்டால், அவற்றை நிச்சயமாக புட்டிகளில் அடைத்து சேமிக்க மாட்டோம். தேவையின் போது மட்டுமே வாங்கிப் பருகுவோம். இளநீர் மட்டைகள் மக்கிப்போகும் அல்லது ஏதோ ஒரு வகையில் பயன்படும். நிச்சயம் சூழலுக்கு கேடாக அமையாது. கடைகளில் விற்கபடும் தண்ணீர் புட்டிகளாலும் இதே சூழல் சீர்கேடு மட்டுமே நடக்கிறது. உணவகத்துக்கு செல்லும் போது வீட்டில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்வது முடுயாத காரியமன்று. ஆனால் ஞெகிழிப் புட்டிகளை நோக்கியே நம் கைகள் நீள்கிறது. மீண்டும் அவை குப்பையாக சேர்க்கிறது. இந்த நுகர்வுக் கலாச்சாரம் தான் மிகவும் ஆபத்தானது. அடுத்த தலைமுறைக்கு தண்ணீர் கிடைக்காமல் போவதற்கு இந்த கலாசாரம் தான் அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கிறது. இணையதளத்தில் பொருட்களை வாங்குவதும், பல்பொருள் அங்காடியில் நடந்து கொண்டே பொருட்களை அள்ளிப்போடுவதும், நுகர்வை பொழுதுபோக்கு என்று பெருமைப்படும் மனோபாவமும், தேவைக்கு அதிகமாக பொருட்களை வாங்கிக்குவிப்பதும் இயற்கையின் மீதான தாக்கத்தை அதிகரித்துக் கொண்டே செல்லும். நுகர்வு என்பதே தவறு என்று சொல்லவில்லை. தேவைக்கு அதிகமான நுகர்வு நிச்சயம் தவறுதான். மேல்தட்டு மக்களின் கூடுதல் நுகர்வு சுற்றுச் சூழலை பாதிக்கிறது. இது அடித்தட்டு மக்களின் சுகாதாரத்தில் சிக்கலை ஏற்படுத்துகிறது.

வாழை இலை கூட பிளாஸ்டிக்கில் வந்துவிட்டது. கிணற்றிலும் ஆற்றிலும் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தோம். பிறகு குழாயில் தண்ணீர் பிடித்து அருந்தினோம். இப்போது புட்டிக்கு மாறி சூழலை சீரழிக்கிறோம். இவை எல்லாவற்றுக்கும் பின்னாலும் தண்ணீரை தனியார்மயமாக்கி அதில் லாபம் தேடும் பெரு நிறுவனங்களின் முதலாளித்துவம் இருக்கிறது. 

ஒரு வாழைப்பழம் வாங்கி அதை ஞெகிழிப் பைகளில் போட்டுக் கொண்டு செல்வதை விடவும், வாழைப்பழத்தை உண்டு உடலுக்கு வலு சேர்ப்பதோடு அதன் தோலை மக்கும் குப்பையில் போட்டு மண்ணுக்கு உரம் சேர்த்தால் நாம் இழப்பதற்கும் ஏதும் இல்லை. இந்த பூமிக்கும் பாரமில்லை. ஆனால் சந்தைப் பொருளாதாரம் பூமியை சுரண்டிக் கொண்டே இருக்கிறது. ஒரே ஒரு வாழைப்பழத்தை ஞெகிழியில் சுற்றி விற்கிறது. அதற்கு நம் எல்லோரையும் துணைக்கு அழைக்கிறது.


Mar 14, 2016

மார்ச் 20 : சிட்டுக்குருவிகள் தினம். என்ன செய்யலாம்?


நான் எப்போது பள்ளிகளில் பேசச் சென்றாலும் மாணவர்களிடம் ஒரு முக்கியமான கேள்வியை கேட்பேன். கடைசியாக நீங்கள் எப்போது சிட்டுக் குருவிகளை பார்த்தீர்கள் எனக் கேட்பேன். ஒரு சிலர் நினைவில் இருக்கும் பதிலை சொல்வார்கள். ஒரு சிலருக்கு எப்போது பார்த்தோம் என்பதே மறந்து போயிருக்கும். அதே போல உங்களுக்கு தெரிந்த பறவைகளின் பெயரைச் சொல்லுங்கள் எனக் கேட்டால் பெரும்பாலான மாணவர்கள் சிட்டுக் குருவியை குறிப்பிடுவார்கள். மனிதர்களுக்கு மிக நெருக்கமான பறவைகளில் ஒன்று சிட்டுக் குருவிகள். ஆனால் இந்த சிட்டுக் குருவிகள் அழிந்து வருவது பற்றிய செய்திகளைத்தான் நாம் சமீபத்தில் படிக்கிறோம். அவை ஏன் அழிந்து வருகின்றன எனத் தெரியுமா? அவற்றை எப்படி காப்பாற்றுவது? அதனால் என்ன பயன் எனத் தெரியுமா?
சிட்டுக்குருவிகள் அழிய முக்கிய காரணம் அது வாழ்வதற்கான சூழல் இல்லாமல் போய்விட்டது. முன்பெல்லாம் கூரை வீடுகளும் ஓட்டு வீடுகளும் நிறைய இருந்தன. சிட்டுக் குருவிகள் அங்கேயே கூட்டை அமைத்து முட்டையிட்டு வாழ்ந்தன. ஆனால் இன்று அவற்றால் கூடு அமைக்க முடியவில்லை. வேளாண்மையில் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லிகள் சிட்டுக் குருவிகளை அதிகமாக பாதித்தன. எனவே சிட்டுக் குருவிகள் அழியத்தொடங்கின.

ஆனால் இப்போதும் நம்மால் சிட்டுக் குருவிகளை மிக சுலபமாக காப்பாற்ற முடியும். படத்தில் உள்ளது போல சிட்டுக் குருவிகளுக்கு கூடுகள் அமைத்து தரலாம். சிறிய மண் சட்டியோ அல்லது அட்டை பெட்டியோ கூட போதுமானது. ஆனால் மழையில் நனைந்துவிடாதபடி இருக்க வேண்டும். மேலும் அணில்களால் நெருங்க முடியாதபடி அமைத்து விட்டால் போதுமானது. மேலும், நாட்டுக் கம்பு மாதிரியான சிறிய தானியங்களை உணவாக வைக்கலாம். சில நேரங்களில் அவை அந்த கூட்டை தெரிந்து கொண்டு அங்கே தங்குவதற்கு ஆறு மாதங்கள் கூட ஆகலாம். முதலில் அவை நீங்கள் வைக்கும் தானியங்களை தேடி வரும். பின்பு தினசரி வந்து பழகும். பிறகு உங்கள் வீட்டின் அருகிலேயே சுற்றிக் கொண்டிருக்கும். முட்டையிடும் காலத்தில் நீங்கள் வைத்த சட்டியிலோ அல்லது அட்டை பெட்டியிலோ முட்டை வைக்கலாமா என வந்து சோதித்து பார்க்கும். பிறகு தங்கத் தொடங்கும். ஒரு முறை தங்கி பழகிவிட்டால் மீண்டும் மீண்டும் வரும். மற்ற குருவிகளும் இதை பார்த்து அங்கேயே கூடு அமைக்கும்.


சிட்டுக்குருவிகளின் முக்கியமான உணவே புழுக்களும் பூச்சிகளும் தான். இந்த புழுக்களும் பூச்சிகளும் அவற்றுக்கு எப்படி கிடைக்கும்? செடிகளில், மரங்களில், மாடு குதிரை போன்ற விலங்குகளின் சாணத்தில் இருந்து தான் கிடைக்கும். குதிரை வண்டிகள் மறைந்து ஆட்டோக்கள் வந்த பிறகு குதிரைகளின் பயன்பாடு குறைந்துவிட்டது. நம்முடைய பாரம்பரிய நாட்டு மாடுகள் மறையத் தொடங்கிவ்ட்டன. மேலும் நம் வீடுகளில் வளர்க்கும் செடிகள் யாவும் அழகுக்கான குரோட்டன்ஸ் செடிகளாக மாறிவிட்டன. இந்த செடிகளில் புழுக்கள் வருவதேயில்லை. கிட்டதட்ட அவை பிளாஸ்டிக் செடிகள் போலத் தான் இருக்கின்றன. இப்படியான சூழலில் சிட்டுக்குருவிகளுக்கு எப்படி உணவு கிடைக்கும்.

நம்முடைய நாட்டுச் செடி கொடிகளை வீடுகளை சுற்றி நடலாம். மல்லிகை கொடியில் பூக்கும் பூக்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பயன்படும். அதில் உள்ள பூச்சிகளை சிட்டுக்குருவிகள் உண்டு வாழும். மேலும் இந்த கொடிகளில் சின்னான் குருவிகள் கூடு கட்டி வாழும். அவரை, புடலை போன்ற கொடிகளில் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை பெறலாம். அதில் உள்ள பூச்சிகள் குருவிகளுக்கு உணவாகும். இது மாதிரியான நாட்டுச் செடிகள் நமக்கும் பறவைகளுக்கும் சேர்ந்து பயன்படும். பூச்சிகளை குருவிகள் தின்பதால் நாம் பூச்சிக் கொல்லி ரசாயனங்கள் தெளிக்க வேண்டியதில்லை. எனவே சுத்தமான சுகாதரமான காய்களை நம் வீட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும். சிட்டுக்குருவியால் நமக்கு எவ்வளவு பயன்கள் பாருங்கள்.இது போலவே ஒவ்வொரு பறவையும் நமக்கு ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து உதவி செய்கின்றன. ஆனால் நாம் அவற்றுக்கு உதவியாக இருக்கிறோமா? உதவி செய்யவில்லை என்றாலும் பரவயில்லை. தொல்லை செய்யாமலாவது இருக்கிறோமா? மரங்கள் வெட்டப்படுவதும் நீர் நிலைகள் மாசுபடுவதும் பறவைகளை எப்படியெல்லாம் பாதிக்கின்றன. இப்போதும் சில சிறுவர்கள் உண்டி வில் மூலமாக பறவைகளை குறி வைத்து அடித்துக் கொல்வதை பார்க்க முடிகிறது. இது தவறு அல்லவா? தீபாவளியின் போது பட்டாசு வெடித்து ஆனந்தப்படுகிறோம். பறவைகளால் பட்டாசு சத்தத்தை தாங்கிக் கொள்ள முடியுமா? நம்முடைய பல செயல்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ பறவைகளை பாதிக்கின்றன. இவற்றிலிருந்து பறவைகளை எப்படி காப்பாற்றப்போகிறோம்?
Mar 12, 2016

யாருடைய எலிகள் நாம்? - சமஸ்


நாம் வாசிக்கும் எல்லா புத்தகங்களும் நம் மனசாட்சியை கேள்வி கேட்பதில்லை. ஆனால் மிகவும் அபூர்வமாக இந்த புத்தகம் ஒவ்வொரு இந்திய குடிமகனையும் கேள்வி கேட்கிறது. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மட்டுமே தவறு செய்வதாக சித்தரிக்கப்படும் நம்முடைய சூழலில் இருந்துகொண்டு, இந்த புத்தகத்தை எழுதியதற்காகவே சமஸை வாழ்த்தலாம். இந்தியாவின், தமிழ்நாட்டின் பெரும்பாலான பிரச்சனைகளையும் கையில் எடுத்து விரிவாகவும் தெளிவாகவும் விவாதித்திருக்கிறார் சமஸ். பல கட்டுரைகளிலும் பிரச்சனைக்கான தீர்வை முன்வைத்த விதம் பாரட்டப்பட வேண்டிய ஒன்று. வரலாற்றிலிருந்து செய்திகளை எடுத்து நிகழ்காலத்தின் பிரச்சனைகளோடு ஒப்பிட்டு, எதிர்காலத்தின் தேவைக்கான தீர்வை முன்வைக்கிறது இந்த புத்தகம். காந்தியந்தின் உயிர்ப்பை, அறம் சார்ந்த அரசியலின் அவசியத்தை உங்கள் எழுத்துக்களில் உணர முடிகிறது சமஸ்.தவறு செய்வதை பெருமையாகவும், அதிலிருந்து தப்புவதை கௌரவமாகவும் நினைக்கும் அரசியவாதிகள் ஒரு பக்கம், அதை கொண்டாடும் தொண்டர்கள் ஒரு பக்கம், இது எதையும் கண்டும் காணதது போல இருக்கப் பழகி விட்ட மக்களையும் ஒரு தேசம் ஒருங்கே பெற்றிருப்பது எதிர்காலதிற்கு நல்லதல்ல. இந்த புத்தகம் மக்களுக்கான விழிப்புணர்வு. இதை வாசித்து அரசியல்வாதிகள் திருந்திவிடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஆனால் நிச்சயம் மக்களுடைய மாற்று சிந்தனைக்கு இந்த புத்தகம் வித்தாக அமையும் என்றே தோன்றுகிறது. கல்வி, மருத்துவம், வேளாண்மை, சுற்றுச் சூழல், வேலைவாய்ப்பு, உலகமயமாக்கல், வெளிநாட்டு உறவு, எல்லைப் பிரச்சனைகள், சர்வதேச சூழல், ஈழம், சாதி மதம் சார்ந்த பிரச்சனைகள், காடுகள் அழிக்கப்படுவது, வன விலங்குகள் வேட்டை, ஊடக அறம் என பல தளங்களிலும் புள்ளி விவரங்களோடு பேசும் இந்த நூல் காலத்திற்கும் நிலைத்து நிற்கும். 

இந்தியாவின் எல்லா முக்கியமான பிரச்சனைகளையும் விரிவாக விவாதிக்கும் சமஸ், தன்னுடைய கவலைகளை நேரடியாக வெளிப்படுத்தாமல் வாசகர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறார். பிரச்சனைகளையும் அதற்கு காரணமானவர்களையும் முன்வைத்து வாசகர்களின் முடிவுக்கே விட்டுவிடுவது வரவேற்புக்குரியது. இந்த தேசம் குறித்து ஒவ்வொரு தனி மனிதனுக்கும் எண்ணற்ற ஆசைகளும் கனவுகளும் உண்டு. இருப்பினும் ஒவ்வொரு தனி மனிதனும் அவனால் இயன்ற தவறுகளை செய்து விட்டு விரல் நீட்டிக் கொண்டே இருக்கிறான். இது ஆள்பவர்கள் முதல் சாதாரண குடிமகன் வரை எல்லோரிடமும் இருக்கிறது. அறம் சார்ந்த வாழ்வின் நிலைப்பாடுகள் ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடுகிறதோ என்று கூடத் தோன்றுகிறது. ஆனாலும் மனசாட்சி என்பது எல்லோருக்கும் ஒன்று தானே. சட்டமன்றம் கேட்காத கேள்விகளை, நாடாளுமன்றம் கேட்காத கேள்விகளை, நீதி மன்றம் கேட்காத கேள்விகளை, நம் மனசாட்சியாவது கேட்கட்டும். அதற்கு இந்த நூல் ஒரு திறவுகோலாக இருக்கட்டும்.  


Feb 20, 2016

புலிகளின் மரணம் காட்டின் மரணம்

ஒரு புலியின் மரணத்தை வெறும் செய்தியாக கடந்து போக முடியவில்லை. புலிகள் பல்லுயிர் சூழலின் முக்கிய அங்கம். பழனி மலைத் தொடரில் கிட்டத்தட்ட கடந்த ஐம்பது ஆண்டுகளாக புலிகள் இருந்ததாக முறையான பதிவுகள் இல்லை. புகைப்படங்கள் எடுக்கப்படவில்லை. தற்போது இங்கே புலிகள் வரத் தொடங்கியிருப்பது ஆரோக்கியமான செய்தி. ஆனால் தொடர்ந்து இரண்டு முறை புலிகள் கொல்லப்பட்டுள்ளன. தற்போது புலிக்கு விஷம் வைத்து கொன்றுவிட்டார்கள். ஒரு வளர்ப்பு குதிரையை புலி அடித்துக் கொன்றதை தொடர்ந்து, அந்த குதிரையின் உடலில் விஷத்தை வைத்துவிட்டார்கள். மீண்டும் அந்த குதிரையை உண்ண வந்த புலி குதிரையை தின்று இறந்துவிட்டது. 

இது போல வளர்ப்பு விலங்குகள் காட்டு விலங்குகளால் கொல்லப்பட்டால் அதற்கு அரசாங்கம் நஷ்ட ஈடு கொடுக்கிறது. ஆனாலும் தொடர்ந்து இது போன்ற செயல்கள், காட்டுயிர்களின் அழிவுக்கு வழி வகுக்கின்றன. மேலும் காட்டுயிர் பாதுகாப்பு சட்டப்படி இது போன்று காட்டுயிர்களை விஷம் வைத்துக் கொன்றாலோ அல்லது வேட்டையாடினாலோ ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க நிச்சயம் வாய்ப்பு உண்டு. 

புலிகள் இல்லாத காடு அழிவை சந்திக்க நேரிடும். புலிகள் வாழ தகுதி இல்லாத காடுகள், அதை இரை விலங்குகளை இழந்திருக்கும். இரை விலங்குகளாலும் வாழ முடியாத காடு எப்படி காடாக இருக்க முடியும். எனவே அவை அழிவை நோக்கி செல்லும். இதன் தொடர்ச்சியாக ஆறுகள் வறண்டு போகும். ஆறுகள் காடுகளில் தானே உற்பத்தி ஆகிறது. காடுகளை பாதுகாப்பது வெறும் வனத் துறையின் வேலை அல்ல. அதற்க்கு போது மக்களின் ஒத்துழைப்பும் தேவை.கொடைக்கானல் அருகே தற்போது கொல்லப்பட்ட புலி, ஒரு மிகப்பெரிய இயற்கை அழிவு. தானாக அவை இடம்பெர்ய்ந்து மெல்ல மெல்ல இந்த பகுதியை தன் வாழிடமாக மாற்றிக் கொண்டிருக்கும். இப்போது புலியும் செத்துவிட்டது. அதன் முகவரியும் தொலைந்துவிட்டது. 


Jan 13, 2016

விருது..!!தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம், இந்த ஆண்டின் சிறந்த புத்தகங்களாக (2014-15) பத்து புத்தகங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அகநாழிகை பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட, நான் எழுதிய "யாருக்கானது பூமி" நூல், சிறந்த சுற்றுச் சூழல் நூலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. நான் பெரும் முதல் விருது இது. தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்திற்கும், தேர்வுக்குழு உறுப்பினர்கள் எஸ். ராமகிருஷ்ணன், ச.தமிழ்செல்வன், ப.திருமாவேலன் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த நூலை வெளியிட்ட அகநாழிகை பதிப்பகத்திற்கும், பொன் வாசுதேவன் அவர்களுக்கும், ஆதரவு அளித்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 

இந்த நூலை எனக்கு கிடைத்த ஓய்வு நேரங்களில் மட்டுமே எழுதினேன். இந்த நூலை எழுதி முடிக்க எனக்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆனது. காடுகளை நோக்கிய என் பயணங்களின் வாயிலாக, நான் பெற்ற அனுபவத்தின் மூலமாக, காட்டுயிர் பேணலின் அவசியத்தை வலியுறுத்தி இந்த நூலை கட்டுரை வடிவில் எழுதினேன். சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து எழுத வேண்டும் எனவும் செயல்பட வேண்டும் எனவும் இந்த விருது என்னை ஊக்கப்படுத்துகிறது. 

இந்த நூலை எழுதுவதற்கு உறுதுணையாக இருந்த என் குடும்பத்தினருடன் என் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன். இந்த நூலின் பெரும்பகுதியை என் திருமணதிற்கு பிறகு தான் எழுதினேன். இந்த நூலை எழுதுவதற்கு நான் எடுத்துக் கொண்ட நேரங்கள் என்னுடையது அல்ல. என் மனைவியுடையது. நன்றியால் நேரத்தை திருப்பித்தர முடியாது. எனவே, தொடர்ந்து எழுத, என்னை அனுமதித்த என் மனைவிக்கு இந்த விருதினை சமர்பிக்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட 10 புத்தகங்கள்:
----------------------------------------------------
1. சிறந்த கவிதை நூல்
அந்நிய நிலத்தின் பெண் - மனுஷ்யபுத்திரன்
உயிர்மை பதிப்பகம்
2. சிறந்த நாவல்
ஆங்காரம் - ஏக்நாத்
டிஸ்கவரி புக்ஸ் வெளியீடு
3. சிறந்த சிறுகதை நூல்
மரணத்தில் மிதக்கும் சொற்கள் - எஸ்.அர்ஷியா
புலம் வெளியீடு
4. சிறந்த கட்டுரைத் தொகுப்பு
நான் வடசென்னைக்காரன்- பாக்கியம் சங்கர்
பாவைமதி பதிப்பகம்
5. சிறந்த வரலாற்று நூல்
ஊரடங்கு உத்தரவு - பி என் எஸ் பாண்டியன்
6. சிறந்த மொழிபெயர்ப்பு நூல்
தமிழ்நாட்டு வரலாறு - பேரா.கே.ராஜய்யன்
மொழியாக்கம்: சா.தேவதாஸ்
எதிர் வெளியீடு
7. சிறந்த கல்வி நூல்
என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா - சா.மாடசாமி
புக்ஸ் பார் சில்ட்ரன் வெளியீடு
8. சிறந்த சுற்றுசூழல் நூல்
யாருக்கானது பூமி - சதீஸ் முத்து கோபால்
அகநாழிகை வெளியீடு
9. சிறந்த பெண்ணியம் நூல்
பேசாத பேச்செல்லாம் - ப்ரியா தம்பி
10. சிறந்த சிறுவர் இலக்கிய நூல்
யானை சவாரி - பாவண்ணன்
புக்ஸ் பார் சில்ட்ரன்
அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்....!!