Sep 16, 2017

நதிகள் குழாய்கள் அல்ல

நதிகளை இணைப்பது பற்றிய பேச்சை எங்கும் காணமுடிகிறது. நதிகளை இணைத்தால் இந்தியாவை காப்பாற்றிவிடலாம், விவசாயத்தை காப்பாற்றிவிடலாம் என பலரும் பேசுவதை காண முடிகிறது. நகரத்தில் வாழும் படித்த மனிதர்கள் முதல் கிராமங்களில் வாழும் ஏழை விவசாயிகள் வரை எல்லோரும் இதில் உடன்படுகிறார்கள். பிரதமருக்கும் இது அவசியமானதாக இருக்கிறது. நதிகளை பற்றிய புரிதல் இல்லாததும், நதிகள் மனிதர்களுக்கு மட்டுமே என்ற சுயலமான எண்ணமுமே இதற்கு காரணம். உண்மையில் நதிகளை இணைக்க வேண்டும் என்று சொல்லும் பலருக்கும், அதில் இருக்கும் தவறுகள் புரிவதில்லை. இதை பற்றிய விவதாம் கூட இங்கு இன்னமும் தொடங்கவில்லை. 



நதிகள் வெறும் தண்ணீரை எடுத்துச் செல்லும் குழாய்கள் இல்லை. நதிகளுக்கு என்று ஒரு உயிர்ச்சூழல் இருக்கிறது. இது ஒவ்வொரு நதிக்கும் மாறுபடுகிறது. நதிகளில் வாழும் எண்ணற்ற உயிரினங்களை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். சிறிய நுண்ணுயிரிகள் முதல் மீன்கள், பறவைகள், பாலூட்டிகள், இரு வாழ்விகள், ஊர்வன என நதிகளிலும் நதிகளை சார்ந்தும் வாழும் உயிர்கள் ஏராளம். நதிகளை இணைத்தால் இவற்றின் வாழும் சூழம் மாறுபடும். அவை அழிவிற்குச் செல்லும்.

இந்திய சுதந்திரத்திற்கு பிறகு அணைகளை கட்டிய போது, அது தண்ணீர் பிரச்சனையின் நிரந்தரத் தீர்வாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்று நடப்பது என்ன? அணைகள் எல்லாம் என்னவாகின? ஏன் அவை நமக்கு போதுமானதாக இல்லை ? அணைகளை கட்டிய பிறகு ஆறுகளின் ஓட்டத்தை மனிதனே முடிவு செய்தான். ஆறுகள் வறண்டன. பல்லாயிரம் வருடங்களாக நதிகளில் வாழ்ந்த உயிர்கள் வாழ முடியாமல் போனது. அணைகளை கட்டும் போதே பெரிய பரப்பிலான காடுகள் அழிந்தன.

நதிகளை இணைக்கும் போது இந்த சேதாரம் இன்னும் கூடுதலாக இருக்கும். பெரிய பரப்பிலான காடுகள் அழியும். நதிகளை இணைக்க மிகப்பெரிய இயந்திரங்களை காடுகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டியதாக இருக்கும். அது கூடுதல் அச்சுறுத்தலை விலகுகளுக்கு உருவாக்கும். விலங்கு மனித மோதல் அதிகரிக்கும். இறுதியில் விலங்குகள் விரட்டி அடிக்கப்பட்டு சாலைகளில் அடிபட்டு சாகும் அல்லது கொல்லப்படும். மேலும் மனிதர்கள் இடம்பெயர வேண்டியிருக்கும். மக்கள் தங்கள் ஊர்களில் இருந்து வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் உருவாகும்.

காடுகளை அழித்து நதிகளை இணைத்து என்ன பயன் பெறப்போகிறோம் ? காடுகள் அழிந்தால் மழை குறையும். மழை குறைந்தால் ஆறுகளில் நீர் வரத்து குறையும். இணைத்த நதிகளை பிறகு எங்கே தேடுவது?

ரஜினிகாந்த், சிவகுமார் முதல் மன்சூர் அலிகான் வரை எல்லாரும் நதிகளை இணைக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். அவர்களின் எண்ணம் நல்லதாகக் கூட இருக்கலாம். ஆனால் திரை நட்சத்திரங்கள் பேசுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்கள் சூழலியல் அறிஞர்கள் சொல்வதை காது கொடுத்ததும் கேட்பதில்லை. நதிகளை இணைத்தால் ஏற்படும் சூழல் கேடுகள் ஒரு புறம் என்றால், மறுபுறம் இது மிகப்பெரிய அரசியல் பிரச்சனையாக மாறும். மாநிலங்களுக்கு இடையே மோதல் போக்குகளை அதிகரிக்கும்.

நதிகளை இணைப்பதற்கு பல்லாயிரம் கோடி மக்களின் வரிப்பணத்தை வீணாக செலவு செய்யவேண்டும். பிறகு வழக்கம்போல இதிலும் ஊழல் நடக்கும். இந்த திட்டங்கள் யாவுமே, நாட்டை பின்னோக்கி இட்டுச் செல்லும் என்பது புரிகிறதா? நதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள முடியாத நம்மால், குளங்களையும் ஏரிகளையும் பாதுகாக்க முடியாத நம்மால் நதிகளை இணைத்து மட்டுமே சாதித்து விடுவோமா? 

நதிகளுக்கு உயிர் கிடையாது. ஆனால் நதிகள் உயிர்ப்போடு இருப்பது அவசியம். இந்தியாவில் ஓடும் நதிகளில் முக்கியமான நதிகளை இரண்டாக பிரிக்கலாம். மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் நதிகள் மற்றும் இமயமலைத் தொடரில் உருவாகும் நதிகள். இமயமலையில் உருவாகும் நதிகள் பெரும்பாலும் பனி உருகியே உருவாகிறது. ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் நதிகள் முற்றிலும் வேறானவை.

மேற்குத் தொடர்ச்சி மலையில் பொழியும் தென் மேற்கு பருவமழை அந்த மலைத் தொடரின் உச்சியில் உள்ள சோலைக்காடுகளால் சேமிக்கப்படுகிறது. சோலைக்காடுகளில் உள்ள புல்வெளிகளால் இந்த மழை நீர் உறிஞ்சப்பட்டு பஞ்சில் உள்ள நீர் போல சேமிக்கப்படும். பிறகு இந்த நீரானது மெல்ல மெல்ல வெளிவரும். இதுவே ஓடைகளாகவும் அவை இணைந்து நதிகளாகவும் மாறும். கோடை காலங்களிலும் இப்படி சேமிக்கப்படும் நீர் வெளிவந்து கொண்டே இருக்கும். எனவே ஆற்றில் எப்போதும் நீரோட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த சுழற்சியால் தான் பல்வேறு உயிரினங்களும் தென்னிந்தியாவில் பரிணாம வளர்ச்சி பெற்று வாழ்ந்து வந்தன. மனிதனும் இதனால் பயனடைந்து வாழ்ந்து வந்தான். எனவே மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் நதிகளுக்கென்று ஒரு தனித் தன்மை உண்டு. ஒவ்வொரு நதிகளிலும் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்கின்றன. காவிரியில் வாழும் மீன்கள் எல்லாம் கங்கையில் வாழ்வதில்லை. 

நதி நீர் வீணாக கடலில் கலக்கிறது என்பதை பலமுறை செய்திகளில் கேட்டிருக்கிறோம். இங்கே "வீண்" என்று சொல்லப்படுவது சரிதானா? நதி நீர் கடலில் கலப்பது என்பது இயற்கை சுழற்சியின் ஒரு பகுதி. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இது நடந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு நதியும் தனக்கென அமைத்திட்ட பாதைகள் ஒரு நாளில் உருவானதல்ல. பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கையால் தகவமைத்துக் கொள்ளப்பட்டது. இதை மாற்றுவது எப்படி சரியாகும்?

சரி தண்ணீர் பிரச்சனையை பிறகு எப்படி தான் தீர்த்துக் கொள்வது என்றால், ஏற்கனவே நம்மிடம் இருக்கும் நீர் வளங்களை பாதுகாத்தால் போதுமானது. மேலும் காடுகளை அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும். இயற்கையின் மீது மனித இடையூறுகள் இல்லாமல் பார்த்துக்கொண்டால் போதுமானது. அது தன்னைத்தானே சரி செய்து கொண்டு, வேண்டியதை கொடுக்கும். கங்கையில் ஆயிரம் ஆயிரம் கோடி செலவு செய்து தூய்மைபடுத்தி என்ன பயன்? குப்பை கொட்டுவதை இந்த அரசால் தடுக்க முடியாதா?

நதிகளில் கழிவுகள் கலப்பதை முற்றிலுமாக நிறுத்துங்கள். இரண்டே  பருவமழையில் நதி தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொண்டு பொங்கி எழும் அழகை பாருங்கள். இதை செய்ய அரசுக்கும் மக்களுக்கும் மனம் இருதால் போதும். பல்லாயிரம் கோடி பணமோ மிஸ்டு காலோ தேவையில்லை. 


*பூவுலகு இணையத்தில் வெளியான கட்டுரை.


Aug 1, 2017

அப்படிச் சிரிக்காதீர்கள்


முன்பு போல செங்கால் நாரைகள்
வலசை வருவதில்லை
ஏரிகள் தொலைந்து போனது காரணமாக இருக்கலாம்.

அத்திமரக்காட்டில் திரியும் இருவாச்சிகளை
பார்ப்பதும் கூட
ஆலங்கட்டி மழை போலாகிவிட்டது

பட்டுப்போன பனை மரப் பொந்துகளில் இருந்த 
ஆந்தைகளை எந்த பனங்காட்டில் தேடுவது ?

ஆஸ்ட்ரிச் என்றால் என்னவென்று சொல்லும் சிறுமியிடம்
கானமயில் தெரியுமா எனக் கேட்கிறேன்.

பறவைகள் இல்லாத உலகத்தில் மனிதர்களால் வாழ முடியாது
என்று சொன்ன சலீம் அலியின் கூற்றை
மிகை எனச் சொல்லி சிரிக்கிறார்கள் நண்பர்கள்

மனிதர்கள் இல்லாது போன பின்பு
இதை யாரிடம் நிரூபிப்பது எனத் தெரியவில்லை




Jul 30, 2017

அற்றுப் போகும் பறவைகள்


நான் பார்க்க விரும்பும்

பறவைகளின் பட்டியலை தயாரிக்கிறேன்.

அவற்றில் சில அற்றுப் போனதாக அறிகிறேன்.

சில அச்சுறு நிலையில் இருப்பதாகவும்
சில அற்றுப்பெற்றிருக்கலாம் எனவும் 
அறிஞர்கள் சொல்கிறார்கள்.

நான் மீண்டும் ஒரு முறை என் விருப்பப் பட்டியலை
தயார் செய்கிறேன், அற்றுப் போன பறவைகளின்
பெயர்களை நீக்கி.

இம்முறையும் சொல்கிறார்கள் 
அவற்றுள் சில 
அற்றுப் போயினவென்று.

தோழர்களே,
நம்புங்கள். 
என் மீது
தவறேதும் இல்லை.




Jul 29, 2017

கனவில் வரும் பெரும்பூனை


கனவில் வரும் பெரும்பூனையை
படமெடுக்க முயல்கிறேன்.

பெரும்பூனையின் கூரிய பற்கள் என்னை 
சிறிதும் அச்சுறுத்தவில்லை.

நான் கனவில் இருக்கிறேன் என்பதனை
கனவிலேயே அறிவேன்.

பெரும்பூனைகள் கனவில் வருவது
புதிதல்ல எனக்கு.

மரத்தை கீறும் அதன் கூரிய நகங்களை
ரசிக்கிறேன்.

காயம் ஏதுமின்றி குட்டியை கவ்வும்
தாய்மையில் உறைகிறேன்.

கனவில் வரும் பெரும்பூனைகள் பெரும்பாலும்
புலியாகவோ அல்லது சிறுத்தையாகவோ இருக்கலாம்.

சில நேரங்களில் அது 
பொகையனாகவும் இருக்கலாம்.



மேலும் சில சூழலியல் கவிதைகள் :

Jul 2, 2017

காட்டுப்பன்றிகளை கொல்வது தான் தீர்வா?


காட்டுப்பன்றிகளை கொல்வதற்கு தமிழக அரசு எடுக்கும் முயற்சிகள் அதிர்ச்சி அளிக்கிறது. விளை நிலங்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்வதாக கூறி, விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு இந்த முடிவை எடுக்கிறது. வேளாண் நிலங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்தால் கொன்றுவிடலாம் என்றால், காடுகளுக்குள் புகுந்து வேட்டையாடுபவர்களுக்கு என்ன தண்டனை?

வேளாண் நிலங்கள் என்று சொல்வது காடுகளுக்கு வெளியே இருக்கும் நிலங்கள் மட்டுமல்ல. காடுகளுக்கு நடுவே இருக்கும் நிலங்களையும் சேர்த்து தான். காடுகளுக்கு நடுவில் இருக்கும் வேளாண் நிலங்களில் வன விலங்குகள் வருவதை எப்படி தடுக்க முடியும்? வந்தால் கொன்றுவிடுவது ஒன்றுதான் தீர்வா?





ஒவ்வொரு காட்டுயிரும் இந்த உலகத்தில் சூழலை சம நிலையில் வைக்க, ஏதோ ஒரு வகையில் காரணமாக அமைகின்றன. காட்டுப்பன்றிகளும் அப்படித்தான். காட்டுப்பன்றிகளை கொல்வது, காடுகளின் அழிவை நாமே தீர்மானிப்பது போலாகும். புலி, சிறுத்தை மற்றும் செந்நாய்களுக்கு காட்டுப்பன்றிகள் முக்கியமான இரை விலங்கு. காட்டுப்பன்றிகளை கொன்றால் இந்த விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படும்.

நீலகிரியில் ஊருக்குள் வந்ததாக புலிகள் சுட்டுக்கொல்லபட்டன. அவை ஊருக்குள் வருவதற்கான முக்கிய காரணமே இரை விலங்குகள் இல்லாததுதான். வால்பாறையிலும், திருநெல்வேலி மாவட்டத்திலும் சிறுத்தைகள் ஊருக்குள் வருவது எதனால்? காட்டுப்பன்றிகளை கொன்றால் இரை விலங்குகளின் உணவில் தட்டுப்பாடு ஏற்பட்டு சிறுத்தைகள் ஊருக்குள் வருவது அதிகரிக்காதா?

கொடைக்கானல், ஊட்டி என மலைபகுதிகளுக்கு சுற்றுலா வருபவர்கள் சாலை ஓரங்களில் மது அருந்திவிட்டு அங்கேயே கண்ணாடி பாட்டில்களை உடைத்துவிட்டு செல்கிறார்களே, அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படுகிறது ?

கவனக்குறைவோடு தூக்கி எறியப்படும் சிகரட் துண்டுகளால், காடுகள் தீப்பற்றி எரிகிறதே. அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படுகிறது?

காடுகளுக்குள் வேகமாக வாகனம் ஒட்டி செல்பவர்களால், குரங்குகளும் மான்களும் வாகனங்களில் அடிப்பட்டு உயிர் இழக்கிறதே. அவர்களுக்கு என்ன  தண்டனை?

சாலை ஓரங்களில் உண்டு விட்டு, தூக்கி எறியப்படும் மிச்ச உணவுகளால் சூழல் சீரழிவதும், ஞெகிழி பைகளை தூக்கி எறிவதால் அவற்றை உண்டு காட்டுயிர்கள் உயிரழப்பதும் தொடர்கிறதே. அவர்களுக்கு என்ன தண்டனை?

காடுகளுக்குள் விதிமுறை மீறி கட்டிடம் கட்டுபவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படுகிறது ?

காடுகளை எவ்வளவு நாசம் செய்தாலும் மனிதர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை. காட்டுயிர்கள் விளை நிலங்களுக்குள் வந்தால் மரண தண்டனையா?

ஒருவேளை காட்டுப்பன்றிகளுக்கும் ஓட்டுரிமை இருந்து, அவற்றுக்கும் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டளிக்கும் புத்தி இருந்தால், அவையும் கொல்லப்படாது இல்லையா?



Jun 5, 2017

நீங்கள் கடந்து போன பாதையில் என்ன நடக்கிறது ?

கோடை விடுமுறையில் சுற்றுலா என்றாலே அது பெரும்பாலும் மலைப்பகுதிளாகத்தான் இருக்கிறது. கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு, மூனாறு, வால்பாறை என செல்லும் நாம், நம் கடந்து போன பாதையில் என்ன நடக்கிறது என்பதை அறிவதும் அவசியம் இல்லையா? சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் இது போன்ற வனப்பகுதிக்குள் செல்வதால் என்னென்ன சிக்கல்கள் ஏற்படுகின்றன, இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதையும் யோசிக்க வேண்டும்.

ஞெகிழிப் பைகள் 

சுற்றுலாப் பயணிகளால் தூக்கி எறியப்படும் ஞெகிழிப் பைகள் காடு முழுவதும் கொட்டிக்கிடக்கிறது. அடர்ந்த வனப்பகுதிக்குள் கூட ஞெகிழிப் பைகளை காண முடிகிறது. ஞெகிழிப் பைகளால் மண் வளம் கெடுவதோடு அவற்றை உண்டு யானைகள் உள்ளிட்ட விலங்குகள் தொடர்ந்து இறக்கின்றன.






பலியாகும் உயிர்கள்

வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் விலங்குகள் கணக்கில் அடங்காதவை. பாம்புகள், தவளைகள் உள்ளிட்ட ஊர்வன மற்றும் இருவாழ்விகள் இதனால் அதிக அளவில் இரவு நேரங்களில்  உயிர் இழக்கின்றன. சாலை ஓரங்களில் நடந்து சென்றால் ஏராளமான பறவைகள் அடிபட்டு உயிர் இழந்திருப்பது தெரியும். குரங்குகள், மான்கள் மட்டுமல்லாது, சிறுத்தைகள், புலிகள் யானைகள் கூட சாலைகளில் அடிபட்டு உயிர் இழப்பது தொடர்ந்து நடக்கிறது.



காட்டுத்தீ


கவனக்குறைவோடு எந்த அக்கறையும் இல்லாமல் தூக்கி எரியும் சிகரட் துண்டுகள் காட்டையே எரிக்கின்றது.

ஒலிப்பான்கள்

கட்டுப்பாடின்றி பயன்படுத்தப்படும் அதிக டெசிபல் ஒலிப்பான்கள் காட்டின் அமைதியான சூழலை குலைக்கிறது. இது காட்டில் வாழும் உயிர்களுக்கு இடையூறாக இருக்கிறது.

உணவுக் குப்பைகள்

சாலை ஓரங்களில் அமர்ந்து உண்டுவிட்டு தூக்கி எறியப்படும் உணவுப் பொருட்களாலும், வன விலங்குகளுக்கு நேரடியாக உணவு தருவதன் மூலமாகவும், காட்டுயிர்கள் பாதிக்கப்படுகின்றன. காடுகளில் உணவை பெற வேண்டிய காட்டுயிர்கள் மனிதர்களால் தூக்கி எறியப்படும் இந்த உணவுகளை உண்டு சூழலில் அதன் பங்கை செய்ய முடியாமல் போகிறது. சில நேரங்களில் வாகனங்களில் அடிபட்டு உயிர் இழக்கவும் நேரிடுகிறது.



மனிதர்கள் நுழையாதவரை காடுகள் நன்றாகத்தான் இருந்தது. சாலை ஓரங்களில் உடைந்து கிடக்கும் மது பாட்டில்களை பார்க்கும் போதெல்லாம், காடுகளின் எதிர்காலம் நொறுங்கிப்போவதை உணர முடிகிறது. 



Jun 4, 2017

ஜூன்- 5 : #சுற்றுச்சூழல் தினம்

ஜூன்- 5 : #சுற்றுச்சூழல் தினம்: உங்கள் அடுத்த தலைமுறைக்காக இந்த பூமியின் வாழ்நாளை நீட்டிக்க விரும்பினால், உங்களால் இயன்ற சிறு முயற்சிகளை செய்யலாம்.

#1 : மின்சிக்கனம், தண்ணீரை வீணாக்காமல் இருத்தல், எரிபொருள் சிக்கனம், உணவை வீணாக்காமல் இருத்தல் மற்றும் நுகர்வுக் கலாச்சாரத்தில் இருந்து விடுபடுதல் போன்றவற்றை ஒவ்வொருவரும் பின்பற்றினால் நம் அடுத்த தலைமுறைக்காக இந்த பூமியின் வாழ்நாளை இன்னும் சிறிது காலம் நீட்டிக்கலாம்.

#2 : பொது போக்குவரத்தை பயன்படுத்துதல். ஒரே இடத்திற்கு செல்பவர்கள் வாகனத்தை பகிர்ந்து கொள்ளுதல். சிக்னலில் காத்திருக்கும் போது வாகனத்தை நிறுத்தி இயக்காதிருத்தல்.

#3 : கடைக்குச் செல்லும்போது வீட்டில் இருந்து பை எடுத்துச் செல்லும் பழக்கம் பெரும்பாலானோரிடம் இல்லை. பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம். வீட்டில் இருந்தே பைகளை எடுத்துச் செல்வோம்.

#4 : வீட்டிலேயே மக்கும் பொருட்களை கொண்டு இயற்கை உரம் தயாரிப்பதும், அவற்றை பயன்படுத்தி செடிகள் வளர்ப்பதும் அவசியம். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களுக்கு முன்னுரிமை தருவது சூழலை காக்க மறைமுகமாக உதவும்.

#5 : செடி வளர்க்கும் ஆர்வத்தையும், பறவைகளை பார்க்கும் ஆர்வத்தையும் குழந்தைகளிடம் விதைத்தல். இயற்கையை நேசிக்கவும் அதை பாதுகாக்கவும் கற்றுக்கொடுத்தல்.

#6 : புதிதாக மரக்கன்றுகள் நடுவதைவிடவும் மிக முக்கியமானது இருக்கும் மரங்களை பாதுகாத்தல். நம்முடைய சுற்றுப்புறத்தில் இருக்கும் மரங்கள் வெட்டப்படும் போது கேள்வி எழுப்புதல் ஒவ்வொருவரின் கடமை.

#7 : பட்டாசு வெடிப்பதை தவிர்ப்பதன் மூலம், காற்று மாசுபடுவதை தவிர்க்கலாம். ஒலி மாசையும் (Noise Pollution) தவிர்க்கலாம். காகிதக் குப்பைகளையும் தவிர்க்கலாம்.

#8 : வாகனங்களில் செல்லும் போது தேவையற்ற முறையில் ஒலிப்பான்கள் (Horn) பயன்படுத்துவதை குறைக்கலாம். காற்று மாசுபடுவதை போலவே ஒலி மாசுவும் (Noise Pollution) ஆபத்தானது. மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடியது. சிக்னலில் பச்சை விளக்கிற்காக காத்திருக்கும் போது Horn பயன்படுத்துவது முட்டாள்தனம்.

#9 : உணவகங்களுக்கு செல்லும்போதும் பயணங்களின் போதும், தண்ணீரை வீட்டில் இருந்தே எடுத்துச் செல்லலாம். பிளாஸ்டிக் தண்ணீர் புட்டிகள் மண்ணில் விழுவது குறையும்.

#10 : குரோட்டன்ஸ் போன்ற அழகு (?) தாவரங்களுக்கு பதிலாக நாட்டுச்செடிகளை வீட்டில் வளர்க்கலாம். அவற்றில் இருக்கும் புழு பூச்சிகள் பறவைகளுக்கு உணவாகும். பூக்கள் வண்ணத்துப்பூச்சிகளை கவர்ந்திழுக்கும். .

Apr 2, 2017

Palani Hills - Nature and Wildlife - Photos

March 2017
















Feb 27, 2017

நாம் ஏன் யானைகளை நேசிக்கிறோம் ?

ஒரு தேசத்தின் வளத்தை அந்த தேசத்தில் வாழும் உயிரினங்களை வைத்து அறிந்து கொள்ளலாம். இந்தியாவை போல பல்லுயிர் தன்மை கொண்ட ஒரு தேசத்தை காண்பது இயலாது. ஒவ்வொரு உயிரினமும் அது வாழ்வதற்கென்று ஒரு சூழல் வேண்டும். அந்த சூழலுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொண்டு பரிணாம வளர்ச்சி அடைந்து வாழும் எண்ணற்ற உயிரினங்கள் கொண்ட நாடு இந்தியா. ஒவ்வொரு உயிரினமும் சூழலை சமநிலையில் வைக்கவும் இயற்கையை காக்கவும் உதவி  புரிகின்றன. ஒவ்வொரு உயிருக்கும் சூழலை முறையாக கட்டமைப்பதில் ஒரு பங்கு உண்டு. இந்த கட்டமைப்பு தான், இன்று வரை இந்த உலகை இயக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை இந்த கட்டமைப்பு நல்ல நிலையில் இல்லை. மனிதனின் சுய தேவைகளுக்காக இந்த கட்டமைப்பு வேகமாக உடைக்கப்படுகிறது. 

உலகில் இரண்டு கண்டங்களில் மட்டுமே யானைகள் வாழ்கின்றன.  ஆசியாவை பொறுத்தவரை யானைகள் அதிகம் இருப்பது இந்தியாவில் தான். யானைகள் பொதுவாக ஒரே இடத்தில வாழ்வதில்லை. அவற்றுக்கென வலசை பாதை உண்டு. அந்த பாதையை தான் அவை தொடர்ந்து பயன்படுத்துகின்றன. தனது குட்டிகளுக்கும் போதிக்கிறது. தற்போதைய பிரச்சினையே இந்த வலசை பாதைகளை அது இழந்து வருவது தான். இந்த பாதைகள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்ப்டுமானால் யானைகள் உயிர் வாழ்வதே கேள்விக் குறியாகிவிடும். யானைகள் இல்லாமல் நம் காடுகள் கிடையாது. காடுகள் இல்லாமல் மழை கிடையாது. மழையின்றி வேளாண்மை கிடையாது.

ஈஷாவின் செயல்பாடுகள் யானைகளை நிச்சயம் பாதிக்கக்கூடியது. பல நேரங்களில் காடுகளை ஒட்டிய பகுதிகளில் நடைபெறும் அத்துமீறல்களே கூட விலங்குகளுக்கு பாதகமாக முடியும். முக்கியமாக ஒலி மாசு (NOISE POLLUTION). மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்படும் சத்தம் விலங்குகள் மற்றும் பறவைகள், தங்களிடையே தகவல் பரிமாற்றத்திற்கு உருவாக்கும் சத்தங்களை விட அதிகமாக இருப்பதால் அவை பாதிக்கின்றன. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். யானைகள் வந்து செல்லும் பாதையில் ட்ரம்ஸ் மணி தனது அதிரடி இசையை வெளிப்படுத்துகிறார். இதை யானைகள் விரும்புமா?  யானைகளுக்கு இது அவசியமா? ஈஷா மட்டுமே இங்கே பிரச்சனை இல்லை. ஈஷாவை போல எண்ணற்ற  நிறுவனங்கள் காடுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கின்றன. வலசை பாதை தொலைத்த யானைகள் வாகனங்களிலும் ரயில்களிலும் அடிபட்டு சாகின்றன. இதற்கெல்லாம் யார் காரணம்? என்ன தீர்வு? அரசின் நடவடிக்கைகள் என்ன? சென்ற ஆண்டு மட்டும் 86 யானைகள் தமிழகத்தில் இறந்துவிட்டன. இந்த ஆண்டும் இது தொடந்து கொண்டே இருக்கிறது. காடுகளுக்குள் போடப்படும் குப்பைகளை உண்ணும் யானைகள் மற்றும்  அணைகள் கட்டியதால் ஆற்றில் நீரோட்டம் இன்றி தேங்கி இருக்கும் நீரை புழுக்களோடு குடிக்கும் யானைகள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. மனிதர்களால் உண்டாக்கப்படும் காட்டுத்தீ, புதிய புதிய சாலைகள், மின் வேலிகள், அகழிகள், ஒலி மாசு, என பல காரணங்களால் யானைகள் துரத்தப்படுகின்றன.



யானைகளின் பிரம்மாண்டத்தை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. யானைகளை பார்க்கும் போதெல்லாம் நமக்குள் ஒரு புத்துணர்ச்சி உருவாகிறதே ஏன்? இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக யானைகள் இருக்கின்றனவே எப்படி? யானைகளை இழப்பது, இயற்கையை இழப்பது போல் இல்லையா? பரிணாம வளர்ச்சியில் உருவான இந்தனை பெரிய உயிரினம் அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ இல்லை. நம்மூரில் இருக்கின்றன. பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம்முடையது இல்லையா? "யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்" என்பது மனித சுயநலத்தில் உண்டான பழமொழி. யானைகளை பணத்தால் மதிப்பிட முடியாது. யானைகளின் சாணத்தில் உள்ள உப்பை உறிஞ்சி வாழும் வண்ணத்துப்பூச்சிகள் மகரந்த சேர்கை செய்வதன் மூலம் புதிய பழங்களை உருவாக்குகின்றன. அந்த பழத்தை உண்ணும் யானை முளைப்பு தன்மை கொண்ட விதைகளை உருவாக்குகிறது. இதையெல்லாம் மனிதர்களால் செய்து கொண்டிருக்க முடியாது. இந்த பூமியில் மனிதர்களுக்கு வாழும் உரிமையை விட யானைகளுக்கு கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது. இதை நம் உணர மறுத்தால் இயற்கை உணர்த்தும்.




*யானைகளின் படங்களை பந்திபூர் மற்றும் நாகரஹோலே காடுகளில் எடுத்தேன். இது கீற்றில் வெளியான கட்டுரை.

Feb 20, 2017

நதிகளை ஏன் இணைக்கக்கூடாது ?

நதி நீர் வீணாக கடலில் கலக்கிறது என்பதை பலமுறை செய்திகளில் கேட்டிருக்கிறோம். இங்கே "வீண்" என்று சொல்லப்படுவது சரிதானா? நதி நீர் கடலில் கலப்பது என்பது இயற்கை சுழற்சியின் ஒரு பகுதி. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இது நடந்து கொண்டே இருந்தது. கடந்த இரண்டு நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றங்களால் நதி என்பது தேக்கிவைக்க்பட வேண்டிய ஒன்று என நம் பொதுபுத்தியில் பொதிந்து போயிற்று. நதி என்பது மனித பயன்பாட்டுக்கு மட்டுமே என்ற சுயநலச் சிந்தனை நம் எல்லோருக்கும் மீண்டும் மீண்டும் ஊடகங்களால் போதிக்கபடுகிறது.

நதிகள் இணைப்பை பற்றி பேசும் முன்னர் நதிகளை பற்றிய புரிதல் நமக்கு அவசியம். நதிகளுக்கு உயிர் கிடையாது. ஆனால் நதிகள் உயிர்ப்போடு இருப்பது அவசியம். இந்தியாவில் ஓடும் நதிகளில் முக்கியமான நதிகளை இரண்டாக பிரிக்கலாம். மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் நதிகள் மற்றும் இமயமலைத் தொடரில் உருவாகும் நதிகள். இமயமலையில் உருவாகும் நதிகள் பெரும்பாலும் பனி உருகியே உருவாகிறது. ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் நதிகள் முற்றிலும் வேறானவை.

மேற்குத் தொடர்ச்சி மலையில் பொழியும் தென் மேற்கு பருவமழை அந்த மலைத் தொடரின் உச்சியில் உள்ள சோலைக்காடுகளால் சேமிக்கப்படுகிறது. சோலைக்காடுகளில் உள்ள புல்வெளிகளால் இந்த மழை நீர் உறிஞ்சப்பட்டு பஞ்சில் உள்ள நீர் போல சேமிக்கப்படும். பிறகு இந்த நீரானது மெல்ல மெல்ல வெளிவரும். இதுவே ஓடைகளாகவும் அவை இணைந்து நதிகளாகவும் மாறும். கோடை காலங்களிலும் இப்படி சேமிக்கப்படும் நீர் வெளிவந்து கொண்டே இருக்கும். எனவே ஆற்றில் எப்போதும் நீரோட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்த சுழற்சியால் தான் பல்வேறு உயிரினங்களும் தென்னிந்தியாவில் பரிணாம வளர்ச்சி பெற்று வாழ்ந்து வந்தன. மனிதனும் இதனால் பயனடைந்து வாழ்ந்து வந்தான். எனவே மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் நதிகளுக்கென்று ஒரு தனித் தன்மை உண்டு. ஒவ்வொரு நதிகளிலும் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்கின்றன. காவிரியில் வாழும் மீன்கள் எல்லாம் கங்கையில் வாழ்வதில்லை. 

முதலில் நம் சுய நலத்திற்காக அணைகளை கட்டினோம். நதிகளின் உயிரோட்டத்தை தடுத்து நிறுத்தினோம். காடுகளில் உள்ள நதிகள் கூட வறண்டு போனது. விலகினங்கள் யாவும் தேங்கிய நீரில் நீர் அருந்துகின்றன. இது நோய்களை ஏற்படுத்த வழிவகுக்கிறது. தமிழக காடுகளில் அதிக அளவு யானைகள் இறந்து போவது குறிப்பிடத்தக்கது. நதிகள் யாவும் வறண்டு போனது யாரால்? அளவுக்கு மீறி மணல் அள்ளப்படுவது யாரால்? நம்முடைய நீர் நிலைகளை யார் ஆக்கிரமித்தார்கள்? ஏரிகள் குளங்கள் எல்லாம் என்ன ஆயின? நம்மிடம் இருந்த இயற்கை வளங்களை தொலைத்துவிட்டு நதிகளை இணைப்பது யாருக்காக? நதிகளை இணைத்தால் சுற்றுச் சூழலில் மிக மோசமான விளைவுகள் ஏற்படும். 


படம் : சூழலியலாளர் - திரு.பிரவீன் குமார் 




சாதாரண குளங்களையும் குட்டைகளையும் நம்மால் பாதுகாக்க முடியாத போது நதிகளை இணைத்து என்ன செய்ய போகிறோம்? அண்டை மாநிலங்களை குறை சொல்லும் நாம் நம்முடைய நதிகளை என்ன செய்தோம்? காவிரியில் கலக்கும் துணை நதிகளான நொய்யல், பவானி, அமராவதி ஆகிய நதிகளின் இன்றைய நிலை என்ன ? மற்ற மாநிலங்களை குறை சொல்வது நமக்கு எளிதான வழி. நம்முடைய குறைகளை நாம் மறைத்துக் கொள்ள இது வசதியாக இருக்கிறது. ஆனால் இயற்கையும் காலமும் நமக்கு பதில் சொல்லும். அது கற்றுக் கொடுக்கபோகும் பாடம் வரலாற்றில் இருக்கும். 

*கீற்றில் வெளியான கட்டுரை.

Jan 28, 2017

விதிமுறைகளை பேச மறுக்கிறோமா?


ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் உச்சத்தில் இருந்தபோதும், ஜல்லிக்கட்டுக்கான தடைகள் நீக்கப்பட்ட போதும் கூட நாம் விளையாட்டின் விதிமுறைகள் குறித்து அதிகம் பேசவில்லை. தடை நீங்கிய பிறகு நடந்த சில ஜல்லிக்கட்டு காட்சிகளை பார்க்கும் போது அதிர்ச்சி அளிக்கிறது. என்ன காரணத்திற்காக ஜல்லிக்கட்டு தடை செய்யபட்டதோ அதே காரணத்திற்கு வலு சேர்க்கும் விதமாக இப்பொது காட்சிகள் அரங்கேறுகின்றன. மக்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தின் வெற்றி என்பது வெறும் தடையை நீக்கியதில் மட்டும் தேங்கிவிடக் கூடாது. அப்படி இருப்பின் இந்த போராட்டம் நீர்த்துப்போய்விடும். 





ஏற்கனவே நடந்த போட்டிகளில் சிலர் மரணம் அடைந்திருப்பதும் காவலர் ஒருவரே உயிர் நீத்ததும் போட்டிகளை முறைப்படுத்தாமல் நடத்தப்படுவதால் ஏற்படும் விளைவாகவே பார்க்க வேண்டியுள்ளது. அடுத்து நடக்க இருக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்சிகள் முறையாக நடத்தப்பட வேண்டும். ஜல்லிக்கட்டை விரும்பிய நாம் இந்த நிகழ்வுகளில் மௌனம் காத்தோம். இந்த மௌனம் நமக்கு சௌகரியமாக இருக்கலாம். ஆனால் அதுவே ஆபத்தாக முடியவும் வாய்ப்பிருக்கிறது. அடுத்து நடக்க இருக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்சிகள் முறையாக நடத்தப்பட வேண்டும். தடை செய்யப்படுவதற்கு முன்பு என்னென்ன விதிமுறைகள் வகுக்கப்பட்டதோ அந்த விதிமுறைகள் மீண்டும் பின்பற்றப்பட வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு சீருடை வழங்கப்பட வேண்டியதில் இருந்து, மாடுகளுக்கு செய்யப்படும் மருத்துவ பரிசோதனை வரை அனைத்தும் முறையாக விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். 





கலாசாரம் பண்பாடு சார்ந்து இந்த விளையாட்டை நாம் எப்படி புரிந்து கொண்டோமோ, காளை மாடுகளை அழிவில் இருந்து பாதுகாப்பது அவசியம் என்ற விழிப்புணர்வை எப்படி பெற்றோமோ, அது போலவே விளையாட்டின் விதிமுறைகளை பற்றி பேசுவதும், விவாதிப்பதும், நிறைவேற்றப்படுவதும் அவசியம் என நினைக்கிறேன். பல நூற்றாண்டுகள் தொன்மை கொண்ட ஒரு நிகழ்ச்சியை தொடந்து நடத்தப்பட வேண்டுமென்றால் அதை பற்றிய புரிதல் முழுமையாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம். மனித உயிர்கள் பலியாவதை தவிர்ப்பதும், காளைகள் துன்புறுத்தப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டியதும் அவசியம். அரசின் பங்கு இதில் எவ்வளவு முக்கியோமோ அது போலவே மக்களின் பங்கும் முக்கியம். இதை நாம் செய்யத் தவறினால், இதுவரை நாம் முன்னெடுத்த முயற்சிகள் அர்த்தமற்றதாகிவிடும்.