Feb 27, 2017

நாம் ஏன் யானைகளை நேசிக்கிறோம் ?

ஒரு தேசத்தின் வளத்தை அந்த தேசத்தில் வாழும் உயிரினங்களை வைத்து அறிந்து கொள்ளலாம். இந்தியாவை போல பல்லுயிர் தன்மை கொண்ட ஒரு தேசத்தை காண்பது இயலாது. ஒவ்வொரு உயிரினமும் அது வாழ்வதற்கென்று ஒரு சூழல் வேண்டும். அந்த சூழலுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொண்டு பரிணாம வளர்ச்சி அடைந்து வாழும் எண்ணற்ற உயிரினங்கள் கொண்ட நாடு இந்தியா. ஒவ்வொரு உயிரினமும் சூழலை சமநிலையில் வைக்கவும் இயற்கையை காக்கவும் உதவி  புரிகின்றன. ஒவ்வொரு உயிருக்கும் சூழலை முறையாக கட்டமைப்பதில் ஒரு பங்கு உண்டு. இந்த கட்டமைப்பு தான், இன்று வரை இந்த உலகை இயக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை இந்த கட்டமைப்பு நல்ல நிலையில் இல்லை. மனிதனின் சுய தேவைகளுக்காக இந்த கட்டமைப்பு வேகமாக உடைக்கப்படுகிறது. 

உலகில் இரண்டு கண்டங்களில் மட்டுமே யானைகள் வாழ்கின்றன.  ஆசியாவை பொறுத்தவரை யானைகள் அதிகம் இருப்பது இந்தியாவில் தான். யானைகள் பொதுவாக ஒரே இடத்தில வாழ்வதில்லை. அவற்றுக்கென வலசை பாதை உண்டு. அந்த பாதையை தான் அவை தொடர்ந்து பயன்படுத்துகின்றன. தனது குட்டிகளுக்கும் போதிக்கிறது. தற்போதைய பிரச்சினையே இந்த வலசை பாதைகளை அது இழந்து வருவது தான். இந்த பாதைகள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்ப்டுமானால் யானைகள் உயிர் வாழ்வதே கேள்விக் குறியாகிவிடும். யானைகள் இல்லாமல் நம் காடுகள் கிடையாது. காடுகள் இல்லாமல் மழை கிடையாது. மழையின்றி வேளாண்மை கிடையாது.

ஈஷாவின் செயல்பாடுகள் யானைகளை நிச்சயம் பாதிக்கக்கூடியது. பல நேரங்களில் காடுகளை ஒட்டிய பகுதிகளில் நடைபெறும் அத்துமீறல்களே கூட விலங்குகளுக்கு பாதகமாக முடியும். முக்கியமாக ஒலி மாசு (NOISE POLLUTION). மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்படும் சத்தம் விலங்குகள் மற்றும் பறவைகள், தங்களிடையே தகவல் பரிமாற்றத்திற்கு உருவாக்கும் சத்தங்களை விட அதிகமாக இருப்பதால் அவை பாதிக்கின்றன. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். யானைகள் வந்து செல்லும் பாதையில் ட்ரம்ஸ் மணி தனது அதிரடி இசையை வெளிப்படுத்துகிறார். இதை யானைகள் விரும்புமா?  யானைகளுக்கு இது அவசியமா? ஈஷா மட்டுமே இங்கே பிரச்சனை இல்லை. ஈஷாவை போல எண்ணற்ற  நிறுவனங்கள் காடுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கின்றன. வலசை பாதை தொலைத்த யானைகள் வாகனங்களிலும் ரயில்களிலும் அடிபட்டு சாகின்றன. இதற்கெல்லாம் யார் காரணம்? என்ன தீர்வு? அரசின் நடவடிக்கைகள் என்ன? சென்ற ஆண்டு மட்டும் 86 யானைகள் தமிழகத்தில் இறந்துவிட்டன. இந்த ஆண்டும் இது தொடந்து கொண்டே இருக்கிறது. காடுகளுக்குள் போடப்படும் குப்பைகளை உண்ணும் யானைகள் மற்றும்  அணைகள் கட்டியதால் ஆற்றில் நீரோட்டம் இன்றி தேங்கி இருக்கும் நீரை புழுக்களோடு குடிக்கும் யானைகள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. மனிதர்களால் உண்டாக்கப்படும் காட்டுத்தீ, புதிய புதிய சாலைகள், மின் வேலிகள், அகழிகள், ஒலி மாசு, என பல காரணங்களால் யானைகள் துரத்தப்படுகின்றன.யானைகளின் பிரம்மாண்டத்தை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. யானைகளை பார்க்கும் போதெல்லாம் நமக்குள் ஒரு புத்துணர்ச்சி உருவாகிறதே ஏன்? இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக யானைகள் இருக்கின்றனவே எப்படி? யானைகளை இழப்பது, இயற்கையை இழப்பது போல் இல்லையா? பரிணாம வளர்ச்சியில் உருவான இந்தனை பெரிய உயிரினம் அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ இல்லை. நம்மூரில் இருக்கின்றன. பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம்முடையது இல்லையா? "யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்" என்பது மனித சுயநலத்தில் உண்டான பழமொழி. யானைகளை பணத்தால் மதிப்பிட முடியாது. யானைகளின் சாணத்தில் உள்ள உப்பை உறிஞ்சி வாழும் வண்ணத்துப்பூச்சிகள் மகரந்த சேர்கை செய்வதன் மூலம் புதிய பழங்களை உருவாக்குகின்றன. அந்த பழத்தை உண்ணும் யானை முளைப்பு தன்மை கொண்ட விதைகளை உருவாக்குகிறது. இதையெல்லாம் மனிதர்களால் செய்து கொண்டிருக்க முடியாது. இந்த பூமியில் மனிதர்களுக்கு வாழும் உரிமையை விட யானைகளுக்கு கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது. இதை நம் உணர மறுத்தால் இயற்கை உணர்த்தும்.
*யானைகளின் படங்களை பந்திபூர் மற்றும் நாகரஹோலே காடுகளில் எடுத்தேன். இது கீற்றில் வெளியான கட்டுரை.

6 comments:

  1. Migavum azhagana katturai matrum pugaipdangal arumai 😍🙌🏾 Thodarnthu ezhuthungal 😊

    ReplyDelete
  2. யானை நமது சூழல் காக்கும் உயிரினம் அதை காப்பது நமது தலையாய கடமை மட்டுமல்ல நாம் வாழ முதன்மை கடமை

    ReplyDelete

Follow