இப்படிக்கு மரம் - திரு.கோவை சதாசிவம்

திரு.கோவை சதாசிவம் அவர்கள் எழுதியிருக்கும், ஒரு அற்புதமான புத்தகம் "இப்படிக்கு மரம்". மன்னிக்கவும், புத்தகமல்ல. கடிதம். 

வேறொரு மனிதனின் மனநிலையில் இருந்து எழுதுவது என்பதே சுலபமானது அல்ல. ஒருவருடைய வாழ்கையை முற்றிலும் புரிந்து கொண்டால் மட்டுமே அது முடியும். ஆனால் பேச்சின் வழியாக, தகவலைகளை திரட்டினால் அது  சாத்தியப்படும். 

ஆனால், ஒரு மரத்தின் மனநிலையில் இருந்து எழுதுவது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. மரங்களின் மீதான காதல் மட்டுமே அதற்கு போதுமானதும் அல்ல. மரங்களின் மீதான நேசிப்பையும் தாண்டி, அதன் அறிவியலை புரிந்து கொண்டால் மட்டுமே அது சாத்தியம். 



முழுக்க முழுக்க அறிவியல் தகவல்களோடு, ஒரு மரத்தின் வாயிலாக மனிதர்களிடம் பேசும் ஒரு அரிய பொக்கிஷமே இந்த நூல். ஒரு அரசு மரம் (அரைசு மரம் என்பதே சரி, என்பது நூலில் இருக்கும் விளக்கம்) சூழலுக்கு எப்படி முக்கிய பங்காற்றுகிறது என்பதை விளக்கியிருக்கும் விதம் அருமை. குறிப்பாக, அத்திக்குளவி, பறவை, அரைசுமரம் இவை மூன்றுக்கும் ஆன தொடர்பு, அவை ஒவ்வொன்றும் எப்படி ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றன என விளக்கியிருப்பது, குழந்தைகளும் புரிந்து கொள்ளக்கூடியது.

"மரங்களின் கிளைகளை வெட்டும்போது நகங்களைப் போல் வெட்டுங்கள் விரல்களை போல் வெட்டாதீர்கள்...!" என்ற வரிகள் மனதை விட்டு என்றுமே அகலாது. வளர்ச்சி என்ற பெயரில் மரங்களுக்கு எதிராக நாம் செய்துகொண்டிருக்கும் அறமற்ற செயல்களை உரக்கப் பேசுகிறது. 

"மரங்களின் வேர்கள் நுழைய முடியாத பகுதிகளுக்குப் பரவி மணிச்சத்து, சுண்ணாம்பு சத்து, கந்தகம், துத்தநாகம் போன்றவற்றை மண்ணிலிருந்து பிரித்தெடுத்து மரங்களுக்குத் தருபவை  பூஞ்சைகள் என்றால் மிகையில்லை!" என்ற விளக்கமும், மரங்களின் வாழ்வியல் எவற்றையெல்லாம் சார்ந்துருக்கிறது என்ற செய்தியும், சூழலியிலை சேதப்படுத்தாமல் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை பேசுகிறது. 

மூட நம்பிக்கையின் பெயரால், மரங்கள் எவ்வாறு துன்புறுத்தப்படுகின்றன என்ற தெளிவான விளக்கத்தின் மூலமாக, மரங்களின் வலியை தன் எழுத்துகளின் வழியே நமக்குள் கடத்துகிறார் ஆசிரியர். நமது மண்ணின் மரங்களை நாம் பாதுகாக்க வேண்டுமென்றால், அதனை புரிந்து கொள்ள வேண்டியதும், மிகவும் அவசியம். அதற்கு இந்த நூலை நிச்சயம் துணைபுரியும். 

இந்த நூலை இணையதளத்தில் வாங்க முடியும் : இப்படிக்கு மரம்

Post a Comment

0 Comments