ஒரு விசித்திரப் பறவை பிடிபட்டது என்ற செய்தியை எப்போதாவது வாசித்திருப்பீர்கள். அவ்வப்போது செய்தித் தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் சொல்லப்படும் இந்த செய்தியில் கூடவே சில தகவல்களையும் சேர்த்தே சொல்வார்கள். இந்த விசித்திரப் பறவை ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த ஆந்தை என்பார்கள். குரங்கு முகம் கொண்ட இந்த பறவையை கிராம மக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்துச் சென்றதாகவும், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதாகவும் சொல்லக் கேட்டிருக்கலாம். சமீபத்தில் ஒரு செய்தித் தாள் இது ஆப்ரிக்க ஆந்தை என்று செய்தி வெளியிட்டது. இப்படி அறிவியலுக்கு புறம்பான பொய்யான செய்திகளை தொடர்ந்து வெளியிடும் காரணம் தான் யோசிக்கவைக்கிறது.
Photographer : Mr.Om Prakash |
கூகை
கூகை எனப்படும் இந்த ஆந்தைகள் வெளிநாட்டுப்பறவை அல்ல. இவை இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் காணப்படுகின்றன. இந்த பறவை பற்றி சங்க இலக்கியக் குறிப்புகள் உள்ளன. நாம் பலரும் அறிந்த திருக்குறளும் உண்டு.
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது
இரவு நேரங்களில் ஆறு எலிகள் வரை வேட்டையாடி விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்பவை இந்த ஆந்தைகள். இந்தியாவிலேயே முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் இப்பறவைகளை, அதிக மனித நடமாட்டம் இல்லாத கட்டிடங்களில் கூட பார்க்க முடியும்.
முதல் முறையாக இந்தப் பறவையை, நான் பெங்களூரு கப்பன் பூங்காவில் ஒரு சூழலியல் விவாதம் நடந்து கொண்டிருந்த போது பார்த்தேன். அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து பழனியில் கிரிவலப்பாதையில் பார்த்தேன். அண்டார்டிக்கா தவிர்த்து உலகின் எல்லாக் கண்டங்களிலும் காணப்படும் இந்தப் பறவையை "வெளிநாடு" என முத்திரை குத்தி தமிழ் நாட்டில் செய்தி வெளியிடுவது அறிவியலுக்கு முரணானது. இஸ்ரேல் நாட்டில் இந்தப் பறவைக்காக செயற்கையாக கூடுகள் அமைத்து, விவசாயிகள் எலிகளை கட்டுப்படுத்துகிறார்கள்.
எது வெளிநாட்டுப்பறவை ?
ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரும் பறவைகளை பற்றி செய்திகளில் சொல்லப்படும் போது வெளிநாட்டுப் பறவைகள் அங்கே வந்து கூடு கட்டுவதாக சேர்த்தே சொல்லப்படுகிறது. வடதுருவத்தில் இருந்து தென் துருவம் நோக்கி பறவைகள் குளிர் காலங்களில் வலசை வருவது உண்மைதான். ஆனால் அவை இங்கே கூடு கட்டுவதில்லை. கோடை காலங்களில் அவை வட துருவத்தில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்கின்றன. எனவே வேடந்தாங்கலில் கூடு கட்டும் பறவைகள் வெளிநாட்டுப் பறவைகள் அல்ல.
சுவிட்சர்லாந்தில் கிராமங்களில் கூட செங்கல் நாரைகளின் கூடுகளை உயரமான மரங்களிலோ கோபுரங்களிலோ பார்க்க முடியும். அவை குளிர் காலங்களில் தென் துருவம் நோக்கி வலசை வருகின்றன. ஆனால் அவை வலசை வரும் காலங்களில் கூடு கட்டுவதில்லை. எனவே நம்மை பொறுத்தவரை அவை வெளிநாட்டுப்பறவை மட்டுமே. நம்முடைய ஊர்களில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யும் பறவைகளை வெளிநாட்டுப் பறவைகள் என்று சொல்வது தவறு.
ஏன் தவறான செய்திகள் வெளியிடப்படுகின்றன ?
வாசகர்களின் கவனத்தை கவர்வதற்காக "வெளிநாடு" என்ற சொல் பயன்படுத்தப்படலாம்.
தவறு இருந்தாலும் எந்தப் பறவையும் வந்து கேள்வி கேட்கப்போவதில்லை.
எல்லா செய்திகளும் போக, கூடுதலாக இடம் இருந்தால் அந்தப் பக்கத்தை நிரபிக் கொள்ள உதவலாம்.
காட்டுயிர்கள் அறிவியல் எல்லைக்குள் வராது என்ற எண்ணமாகவும் இருக்கலாம்.
எப்படியிருந்தாலும் நாம் உண்ணும் உணவிற்கும் கூகைக்கும் தொடர்பு உண்டு. அந்த வகையில் நம் கண்ணில் அடிக்கடி தென்படவில்லை என்றாலும், கூகையும் மண்புழுவைப் போல நாம் அறிந்து கொள்ள வேண்டிய உயிரினம். ஏனெனில், கூகை நமது மண்ணின் பறவை.
"ஆஸ்திரேலியா ஆந்தை" என Google-ல் தேடிப்பாருங்கள். எத்தனை செய்திகள் தவறாக வெளியிடப்பட்டுள்ளன என்பது தெரியும். எனவே தான் மீண்டும் சொல்கிறேன். கூகை நமது மண்ணின் பறவை
-பா.சதீஸ் முத்து கோபால்
14 Comments
Excellent write up! Thank you so much for bringing out the truth. People are still not aware of so many things like these..
ReplyDeleteThanks Raj..!!
DeleteGood one Anna..Thanks for letting us know..👍
ReplyDeleteThank you :)
DeleteSuper sir
ReplyDeleteThank you sir 🙏
Deleteதரமான கட்டுரை
ReplyDeleteநன்றி
Deleteதவறு இருந்தாலும் எந்தப் பறவையும் வந்து கேள்வி கேட்கப்போவதில்லை.
ReplyDeleteExactly
Yes
DeleteVery informative..
ReplyDeleteThank you 😊
DeleteArumaiyana pathivu Anna!! Very informative!! Vazhthukkal!!
ReplyDeleteThanks Mohan
Delete