Apr 30, 2011

சிட்டுக்குருவி... சிட்டுக்குருவி... சேதி தெரியுமா!

இயற்கைக்கு என்றும் துணை நிற்கும் பசுமை விகடன், இயற்கை விவசாயம் குறித்த புரிதலை இன்றைய தலைமுறைக்கு சரியாக எடுத்துச் செல்லும் பசுமை விகடன், சிட்டு குருவிகள் தினம் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது .


இரா.வினோத்
 
சுற்றுச்சூழல்


சிட்டுக்குருவி... நம்மில் பெரும்பாலானவர்களின் உயிரோடும்... உணர்வோடும் உறவாடிய ஒரு ஜீவன் என்றால்... அதில் அதிசயம் ஏதுமில்லை! ஆம்... சின்னஞ்சிறு வயதில் சிட்டுக்குருவிகளோடு விளையாடாதவர்கள் மிகக் குறைவே! அதன் முட்டைகளைத் தேடிப்பிடித்து கையில் வைத்து விளையாடுவது, அதன் குஞ்சுகளை ஆசையோடு வருடிக் கொடுப்பது, சிறகடித்து விர்ரென்று பறக்கும் அந்த அழகை ரசிப்பது... என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
இத்தகைய அனுபவம்தான், இலக்கியம், சினிமா என்று எல்லா இடங்களிலும் சிட்டுக்குருவியை ஆசை ஆசையாகப் பதிவு செய்து வைத்திருக்கிறது. ஆனால், இதெல்லாம் எதிர்கால தலைமுறைக்கு கொஞ்சம் கூட கிடைக்காமல் போய்விடக்கூடிய ஆபத்து துரத்திக்கொண்டே இருப்பதுதான் கொடுமை!
''மைனா, பருந்து, ஆந்தை... என அழிந்து வரும் பறவைகளின் பட்டியலில் சிட்டுக்குருவியும் சமீபகாலமாக சேர்ந்திருக்கிறது. யாருக்கும் சிறு தீங்கும் இழைக்காத அந்த சின்னஞ்சிறிய ஜீவன், ஏதேதோ காரணங்களுக்காக வேட்டையாடப்படுவது காலகாலமாக நடக்கிறது. ஆனால், அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக, சமீப வருடங்களில் அவை அழிவின் விளிம்புக்கே துரத்தப்பட்டிருப்பதுதான் பெருங்கொடுமை!'' என்று நடுங்கும் குரலில் எச்சரிக்கின்றனர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்!
இத்தகைய நிலையில், சிட்டுக்குருவிகளைப் பற்றிய விழிப்பு உணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தும் நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 20ம் தேதியை 'சிட்டுக்குருவிகள் தினம்’ என்று கொண்டாடி வருகின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து வரும் இயற்கை ஆர்வலரான சதீஸ்முத்துகோபால், பழனிமலை பாதுகாப்பு இயக்கத்தோடு இணைந்து, பழனியில் உள்ள அக்ஷயா பள்ளிக்கூடத்தில் கடந்த மாதம் சிட்டுக்குருவிகள் தினத்தைக் கொண்டாடினர்.
அதில், 'சிட்டுக்குருவி’ என்ற குறும்படத்தைத் திரையிட்டு, குருவிகள் பற்றிய பல விஷயங்கள் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. குருவிக் கூடுகளையும் மாணவர்களுக்கு வழங்கினார்கள்.
 
அது பற்றிப் பேசிய, சதீஸ்முத்துகோபால், ''ஒரு காலத்தில் வீட்டு முற்றங்களிலெல்லாம் அமர்ந்து உறவு பாராட்டி வந்த சிட்டுக்குருவிகளை இன்று பார்ப்பதே அதிசயமாக இருக்கிறது. அந்த ஜீவன் அழிந்து கொண்டிருக்கிறது என்பதைக்கூட நாம் உணராமல் இருப்பதுதான் வேதனையின் உச்சம். பாரம்பர்ய விவசாய முறைகளை விட்டொழித்து ரசாயனத்தைப் பயன்படுத்துவதுதான் இவற்றின் அழிவுக்கு முக்கியக் காரணம். ரசாயனத்தின் எச்சம் மிஞ்சிய தானியங்களை உண்ணும்போது அதன் வீரியத்தை அந்த சின்னஞ்சிறு ஜீவனால் தாங்க முடியாமல் மடிந்து போகின்றன. அலைபேசிக் கோபுரங்களின் கதிர் வீச்சு, வாகனங்களின் ஒலி, பட்டாசுச் சத்தம் என்று அந்தக் குருவிகளின் அழிவுக்குக் காரணமான விஷயங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்'' என்றவர்,
''வீடுகளில் உயரமான இடங்களில் சின்னச்சின்ன சட்டிகளை வைத்து, அதில் கம்பையும், சிறிது நீரையும் ஊற்றி வைத்தால்... சிட்டுக்குருவிகள் தேடி வந்து உண்ணத் தொடங்கும். அதேபோல செம்பருத்தி, மல்லிகை போன்ற செடிகளை வளர்த்தால், அவற்றில் குருவிகள் கூடுகட்டிக் கொள்ளும். முடிந்தளவுக்கு விவசாயத்தில் ரசாயனப் பயன்பாட்டைக் குறைக்க முன்வர வேண்டும்'' என்று அவற்றைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளையும் சொன்னார்.
நிறைவாக, ''பெங்களூருவில் ஒவ்வொரு வருடமும் சிட்டுக்குருவிகள் தினத்தன்று, குருவிகளைப் பாதுகாக்கும் எண்ணம் மக்களுக்கும் வரவேண்டும் என்பதற்காக, விலங்குகள் ஆணையம் மூலமாக, குருவிக் கூடுகளை இலவசமாக அரசாங்கம் வழங்கி வருகிறது. அதுபோல தமிழக அரசும் கூடுகளை வழங்கி, குருவிகளைக் காப்பாற்றும் எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்'' என்ற கோரிக்கையையும் வைத்தார் சதீஸ்முத்துகோபால்.


நன்றி : பசுமை விகடன் 



Apr 29, 2011

வல்லூறு, வானம்பாடி மற்றும் பலர்

கடந்த சில தினங்களுக்கு முன்பு, பறவைகள் ஆர்வலர் திரு.தியோடர்  பாஸ்கரன் அவர்களை அவருடைய இல்லத்தில் சந்தித்தேன். அவர் வீட்டுக்கு அருகிலேயே பறவைகளை வேடிக்கை பார்ப்பதற்காக சென்றோம். வானம்பாடியை எனக்கு அவர் தான் முதன் முதலில் அறிமுகப்படுத்தினார். நாங்கள் அந்த பறவையின் அருகில் சென்று நின்ற போதும், அந்த பறவை அங்கிருந்து நகர்ந்து போகமால் இருந்தது. அந்த பறவை எங்களை அறிந்த போதும், நாங்கள் இன்னும் அந்த பறவையை பார்க்கவில்லை என்று நினைத்துக்கொண்டு, அது பறந்து போகமாமல் இருப்பதாக சொன்னார், திரு.பாஸ்கரன் அவர்கள்.



கடந்த சில மாதங்களாகவே பழனியில் நான் ஒரு பறவையை அடிக்கடி பார்ப்பதுண்டு. என்னுடைய இரு கண் நோக்கி மூலமாக அந்த பறவையை கவனித்து வந்தேன். ஆனால் எனக்கு அதன் பெயர் தெரியாது. திரு.பாஸ்கரன் அவர்களை சந்தித்த போது, அந்த பறவை எப்படி இருந்தது என்று அவருக்கு சொன்னேன். "பார்ப்பதற்கு புறாவை விட சற்றே பெரியதாக இருக்கும். அதன் அலகு பருந்துக்கு உள்ளது போல இருக்கிறது. அதன் மார்பு மற்றும் வயிற்று பகுதியில், புள்ளிகள் போல தென்படுகிறது. கழுதை திருப்புவது கழுகு போன்று உள்ளது. தென்னை மரங்களில் அமர்ந்திருக்கிறது." ஒரே வார்த்தையில் பதில் சொன்னார், அதன் பெயர் வல்லூறு. வல்லூறு என்ற வார்த்தை பரிச்சயமாக இருந்தாலும் இதன் பெயர் தான் வல்லூறு என்பதை தெரிந்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.






பருந்துகளில் கூட இரண்டு முக்கியாமான வகைகள் உண்டு. நாம் அன்றாடம் பார்க்கும் அவற்றில் ஒன்று ஊர் பருந்து. மற்றொன்று செம்பருந்து. ஊர் பருந்து பெரும்பாலும் வேட்டையாடுவதில்லை. இறந்து கிடக்கும் ஏதேனும் உயிரினத்தை தின்று துப்புரவு செய்கிறது. எளிதில் காணக் கிடைக்கும் இது கருப்பு நிறத்தில் இருக்கும். உயரமாக பறந்து கொண்டிருக்கும். செம்பருந்தின் கழுத்து வெள்ளையாக இருக்கும். இவை வேட்டையாடி உண்ணும் விருப்பமுள்ளவை. இந்த தகவலையும் அவரே சொன்னார்.




சிறிது நேரம் பேசியதில் இருந்தே அவர் என்னை ஆச்சர்யப்படவைத்தார்.


Apr 28, 2011

சுற்றித் திரியட்டும் சிங்கங்கள்

ஆசியாவின் எல்லா பகுதிகளில் இருந்தும் அழிந்துவிட்ட ஆசிய சிங்கங்கள் தற்சமயம் குஜராத்தின் கிர் காடுகளில் மட்டுமே வாழ்கிறது. சுமார் 1400 ச.கி.மீ பரப்பளவுள்ள இந்த தேசிய வன விலங்கு பூங்காவில், சிங்கங்கள் மட்டும் அல்லாது சிறுத்தை புலி, கழுதை புலி, மற்றும் பல விலங்குகள், பறவை இனங்கள் வாழ்கின்றன.



குஜராத் அரசின் சிறப்பான நடவடிக்கைகளால் சிங்கங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. ஆனால் அவற்றிற்கு போதுமான இடம் இல்லாத சூழ்நிலை உள்ளது. சமீபத்திய கணக்கெடுப்பின் முடிவில் 411 சிங்கங்கள் கிர் காடுகளில் உள்ளதாக தெரிகிறது. குழுக்களாக வாழும் சிங்கங்கள் தங்கள் குழுவுக்கென்று ஒரு பகுதியை தேர்ந்தெடுத்து வாழும். இடப்பற்றாக்குறை காரணமாக சில சமயம் அவை காடுகளை விட்டு வெளியேறி அருகிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்து விடுவதுண்டு. எனவே, சிங்கங்கள் சிலவற்றை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாகவே எழுந்துள்ளது.



மத்திய பிரதேச மாநிலத்தில், ஏற்கனவே சிங்கங்கள் வாழ்ந்து அழிந்து போன பகுதியான பல்பூர்-குனோ வனப்பகுதிக்கு சில சிங்கங்களை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் குஜாரத் முதல்வர் நரேந்திர மோடி, இதற்கு ஒப்புக்கொள்ள மறுப்பதால் அவற்றை இடம் மாற்றுவதில் சிக்கல் உருவாகியுள்ளது. ஒரு வனம் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டுமானால், அவற்றில் சில ஊன் உண்ணிகள் தலைமையாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் விலங்குகள் தொடர்ந்து அந்த வனப்பகுதியில் வாழ முடியும் என்றால். அந்த வனம் எல்லா உயிரினங்களுக்கும் ஏற்புடையதாக விளங்கும், எனவே வனமும் அழியாமல் பாதுகாக்கப்படும்.



தென் ஆப்ரிக்காவில் இருந்து சிறுத்தைகளை கொண்டுவர முடியும் என்றால், பக்கத்துக்கு மாநிலத்தில் இருந்து சிங்கங்களை கொண்டு வர முடியாதா? கடந்த பத்து ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் இந்த விஷயம், இன்று  வரை காலம் தாழ்த்தப்பட்டு முடிவு காணப்பட முடியாத சூழ்நிலையில் உள்ளது.  சிங்கங்களை இடமாற்றம் செய்வதில் உறுதியாக இருக்கிறார் மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வன அமைச்சர் திரு.ஜெய் ராம் ரமேஷ். மோடி ஒத்துழைத்தல், மத்திய பிரதேசத்தில் சிங்கங்கள் சுற்றித் திரியும்.



Apr 27, 2011

ஒரு குறள் : உலகச் செய்தி (Thirukkural for India)

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்



இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக எழுதப்பட்ட குறள் அத்தனையும், இன்றும் ஏற்புடையதாக இருப்பது நாம் அறிந்ததே. அரசியல், அறநெறி, கல்வி, அன்பு, காதல் யாவும் பொருந்தும் என்பதை விட ஆச்சர்யம், சூழல் பற்றிய வள்ளுவரின் குறள். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு சுற்றுச் சூழல் நன்றாகத் தானே இருந்தது. அந்த சமயத்திலும் எப்படி வள்ளுவரால் காட்டின் பெருமையை எழுத முடிந்தது? அப்படியானால் காடுகள் அழிந்து போகும் என்பதை முன்னரே அறிந்திருந்தாரா?

நீரை கூட மணி நீர் என்கிறார். மணி நீரை இன்றைய சூழ்நிலையில் எங்காவது காண முடிகிறதா? காவிரியில் பார்க்க முடியுமா? நொய்யலில்? அப்படி ஒரு தெளிந்த நீர் அன்றைக்கு சாத்தியமாக தான் இருந்திருக்கும். அப்படி இருந்தும் அதை இழந்து விட கூடாது என்ற எண்ணம் வள்ளுவருக்கு இருந்திருக்கிறது. நாம் அதை இழந்தும், கவலை இன்றி இருக்கிறோம்.

மண்ணையும் மலையையும் பிரித்து சொன்னது என்ன மாதிரியான சிந்தனை? மண் வேளாண்மைக்கு எக்காலத்திலும் வேண்டும் என்பதால் பிரித்திருக்கலாம். மலைகள் இயற்கையின் மிகப்பெரிய கொடை. அன்றைய சூழ்நிலையில், மலை என்பது அதிகம் புழங்கப்படாத இடமாக இருந்திருக்கக் கூடும். இருப்பினும் மலையின் அவசியம் அறிந்து சொன்னது ஆச்சர்யம் தான்.

காடுகளை தொடர்ந்து இழந்து வந்த போதும், இத்தனை அறிவியல் வளர்ச்சிக்கு பிறகும் காட்டின் அவசியத்தையும், அதில் வாழும் பல்லுயிர்களை பற்றியும் முழுமையாக நம் சமுதாயம் அறிந்து கொள்ளவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, உலகின் பெரும்பாலான பகுதி காடுகளாக இருந்த போதும், அவற்றை இழந்து விடக் கூடாது என்ற வள்ளுவரின் எண்ணம், எவ்வளவு தொலை  நோக்கானது?

ஒரு தேசத்தின் ஆரோக்யத்திற்கு தேவையானவற்றை வள்ளுவர் சொன்னதை விடவும் ஆச்சர்யம், இன்றும் கூட அந்த தேவையை நாம் புரிந்து கொள்ளாமல் இருப்பது தான்.




Apr 26, 2011

பதினெட்டாம் நூற்றாண்டின் மழை : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்



 திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய, "பதினெட்டாம் நூற்றாண்டின் மழை" வாசித்தேன். 27 சிறுகதைகளின் தொகுப்பு. ஒவ்வொரு கதையும்  தனித்துவம் வாய்ந்ததே இந்த நூலின் சிறப்பாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது. கதையில் வரும் மனிதர்கள் யாவரும், கற்பனை பாத்திரங்கள் என்ற எண்ணத்தை உடைக்கும் அளவிற்கு, கதா பாத்திரங்கள் தன்னியல்பில் உலா வருகின்றன. நாம் எப்போதோ கடந்து போன மனிதர்களே கதையில் வருவது போன்ற உணர்வே ஒவ்வொரு கதையின் நகர்விலும் தொற்றிக்கொள்கிறது.

எல்லா கதைகளின் மையத்திலும் அவிழ்க்கப்படாத முடிச்சுகள் அப்படியே இருக்கின்றன. கதை அந்த முடிச்சை சுற்றியே பயணிக்கிறது. அவிழ்க்கப்படாத அந்த மர்மங்கள் தொடர்ந்து நம்மை கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.அந்த புதிர் தான் கதையை தாங்கி நிற்கவும், மனதை பாரம் கொள்ளவும் செய்கின்றன. ஒவ்வொரு கதையிலும் ஒரு தனிப்பட்ட பாத்திர படைப்பு, தனிப்பட்ட குணங்களோடு சுற்றி அலைகிறது. அந்த தனிப்பட்ட குணம் ஏன் ஏற்பட்டது? எதற்காக அந்த பாத்திர படைப்பு அந்த புள்ளியில் நின்று கொண்டே இருக்கிறது? என்ற பொதுவான கேள்விகள் கதையை மெல்ல நகர்த்துகிறது.

வேலய்யா நினைவுகளில் ஏன் பனை எரிகிறது? சித்ரலேகா ஏன் இத்தனை உடைகள் அணிகிறாள்? ருக்மணியின் அப்பா என்ன ஆனார்? சுகி எப்படி பிறப்பில் இருந்தே பறவைகளை அறிகிறாள்? புத்தன் ஏன் குளத்தில் இறங்கவே இல்லை? சொந்த ஊர் சென்றவள், ஏன் இரண்டு மணி நேரத்தில் திரும்பினாள்? நாவுக்கரசு எதற்காக தன்னை விற்றுக் கொள்கிறான்? தணிகையின் பார்வையில் ஏன் எல்லாமும் மறைந்து போகின்றன? - இப்படி ஒவ்வொரு கதையின் முடிவிலும் கேள்விகள் மிஞ்சி நிற்கின்றன. கதையின் சுவாரசியம் முழுவதும் இந்த விடையில்லாத கேள்விகளில் தான் புதைந்திருக்கிறது. அவரவர் விருப்பமான வழியில் அதற்கான விடைகளை அமைத்துக்கொள்ளலாம். ஆனால் அது அவ்வளவு சுலபம் அல்ல.

என்னை அதிகம் கவர்ந்த கதை "இந்த ஊரிலும் பறவைகள் இருக்கின்றன". சுகிக்கு நன்றாக பேச தெரியும் என்பதும், அவளுடைய எண்ணங்கள் பறவைகளின் அலகுகளை போல கூர்மையானது எனவும் அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவள் எப்போதும் பேச மறுக்கிறாள். அவளுடைய உலகில் பறவைகள் மட்டுமே இருக்கின்றன. மாநகரங்களின் இயந்திர வாழ்க்கையில் பறவைகளை முற்றிலும் மறந்து போன பலருக்கும், இந்த கதை ஆச்சர்யம் நிறைந்ததாக இருக்கலாம். உண்மையில் இன்றும் நகரங்களில் பறவைகள் எப்படியோ தங்களை நிலை நிறுத்திக் கொள்கின்றன. மாநகரம் என்பது மனிதர்கள் வாழ தகுந்த சூழ்நிலை என்பதை பறவைகள் மூலமாக அடையாளம் கண்டு கொள்ளலாம். பிறக்கும் போதே பறவைகளின் மீதான ஈர்ப்பு எப்படி சுகிக்கு விதைக்கப்பட்டது என்பதே மிகப்பெரிய கேள்வி. அப்படியே இருந்தாலும் ஏன் பேச மறுக்க வேண்டும்? இல்லை அப்படி இருப்பது தான் இயல்பா? அப்படியானால் மற்றவர்கள் இயல்புக்கு முரணானவர்களா?

நிஜத்தில் இந்த கதைகளில் வரும் யாவரும் வாழ்ந்து கொண்டிருப்பார்களா? கற்பனையும் உண்மையும் ஒரே புள்ளியில் சந்திக்க இயலுமா? அப்படியானால் கதை உண்மையாகுமா அல்லது அவர்களது வாழ்க்கை கதை போல மாறிவிடுமா? ஒருவேளை, இந்த கதைகளில் வரும் யாரேனும், இந்த கதையை படிக்க நேர்ந்தால், அந்த விடை தெரியாத முடிச்சுகள் அவிழத் தொடங்கும்.


உலகை எந்த அளவுக்கு கூர்மையாக பார்த்து உள்வாங்கி, நினைவில் வைத்திருக்கிறார் என்பது, எஸ்.ரா அவர்களின் ஒவ்வொரு வரிகளிலும் தெரிகிறது. எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெள்ளக் கட்டியை போல உலகை தன் இருப்பிடத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்து விட அவர் முயன்றதன் விளைவு, இந்த புத்தகத்தை வாங்கி படிப்பவர்கள் அத்தனை பேருக்கும் அந்த வெள்ளக் கட்டியின் சுவையை காட்டி விடுகிறார். இந்த சிறப்பே எஸ்.ரா அவர்களின் எழுத்துக்களை தொடர்ந்து  படிக்க வைக்கிறது என நினைக்கிறேன். 


பதினெட்டாம் நூற்றாண்டின் மழை

அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது

இந்திய வானம்

காண் என்றது இயற்கை


Apr 24, 2011

புலிகள் காப்பகங்கள் : இந்தியா

இந்தியாவில் தற்சமயம் செயல்பட்டுவரும் புலிகள் காப்பகங்கள்


Name of the Tiger Reserves in Tiger range states with year of creation and area
SNo.
Year of Creation
Name of Tiger Reserve
State
Total area of the Core/Critical Tiger Habitat (In Sq. Kms.)
1
1973-74 Bandipur Karnataka 872.24
2
1973-74 Corbett Uttarakhand 821.99
1973-74 Kanha Madhya Pradesh 917.43
4
1973-74 Manas Assam 840.04
5
1973-74 Melghat Maharashtra 1500.49
6
1973-74  Palamau Jharkhand 414.08
7
1973-74 Ranthambhore Rajasthan 1113.364
8
1973-74 Similipal Orissa 1194.74
9
1973-74 Sunderbans West Bengal 1699.62
10
1978-79 Periyar Kerala 881.00
11
1978-79 Sariska Rajasthan 681.1124
12
1982-83 Buxa West Bengal 390.5813
13
1982-83 Indravati Chhattisgarh 1258.37
14
1982-83 Nagarjunsagar Andhra Pradesh 2527.00
15
1982.83 Namdapha Arunachal Pradesh 1807.82
16
1987-88 Dudhwa Uttar Pradesh 1093.79*
17
1988-89 Kalakad-Mundanthurai Tamil Nadu 895.00
18
1989-90 Valmiki Bihar 840.00*
19
1992-93 Pench Madhya Pradesh 411.33
20
1993-94 Tadoba Andheri Maharashtra 625.82
21
1993-94 Bandhavgarh Madhya Pradesh 716.903
22
1994-95 Panna Madhya Pradesh 576.13
23
1994-95 Dampa Mizoram 500.00
24
1998-99 Bhadra Karnataka 492.46
25
1998-99 Pench Maharashtra 257.26
26
1999-2000 Pakke Arunachal Pradesh 683.45
27
1999-2000 Nameri Assam 200.00
28
1999-2000 Satpura Madhya Pradesh 1339.264
29
2008-09 Anamalai Tamil Nadu 958.00
30
2008-09 Udanti-Sitanadi Chhattisgarh 851.09
31
2008-09 Satkosia Orissa 523.61
32
2008-09 Kaziranga Assam 625.58
33
2008-09 Achanakmar Chhattisgarh 626.195
34
2008-09 Dandeli-Anshi Karnataka 814.884
35
2008-09 Sanjay-Dubri Madhya Pradesh 831.25*
36
2008-09 Mudumalai Tamil Nadu 321.00
37
2008-09 Nagarhole Karnataka 643.35
38
2008-09 Parambikulam Kerala 390.89
39
2009-10 Sahyadri Maharashtra Notification Awaited
Total
32137.14

நன்றி:  http://projecttiger.nic.in/

Apr 23, 2011

பறவைகள் சரணாலயங்கள் : தமிழ் நாடு

நம் வாழ்விடங்களை சுற்றி எப்போதும் பறவைகள் வாழ்ந்துகொண்டிருந்தலும் பெரும்பாலும் அவை கவனிக்கப்படுவதில்லை. இன்றும் கூட மாநகரங்களில் பறவைகள் தங்கள் இருப்பை பெரிய சிரமங்களுக்கிடேயே நிலை நிறுத்தி வருகின்றன. கிராமங்களில் தென்படும் பறவை இனங்கள் யாவும் மாநகரங்களில் தென்படுவதில்லை. இருப்பினும், நிறைய மரங்கள் வளர்ப்பதன் மூலமாகவும், அவை குடிப்பதற்கு தண்ணீர் வைப்பதன் மூலமாகவும், ஒலி மாசு குறைக்கபடுவதன் மூலமாகவும் அவற்றின் எண்ணிக்கையை பெருக்கவும், நகரங்களுக்குள் வந்து போகவும் செய்ய முடியும்.



தமிழ் நாட்டில் பல மாவட்டங்களில் பறவைகள் சரணாலயங்கள் செயல்படுகின்றன.

அவற்றில் சில:

புலிகாட் ஏரி பறவைகள் சரணாலயம் : திருவள்ளூர் மாவட்டம்
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் : காஞ்சிபுரம் மாவட்டம்
கரிகில்லி பறவைகள் சரணாலயம் : காஞ்சிபுரம் மாவட்டம்
கரைவேட்டி பறவைகள் சரணாலயம் : பெரம்பலூர் மாவட்டம்
உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் : திருவாரூர் மாவட்டம்
வடுவூர் பறவைகள் சரணாலயம் : திருவாரூர் மாவட்டம்
சிற்றங்குடி பறவைகள் சரணாலயம் : ராமநாதபுரம் மாவட்டம்
கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் : திருநெல்வேலி மாவட்டம்
வெள்ளோடு பறவைகள் சரணாலயம் : ஈரோடு மாவட்டம்
மேல்செல்வநூர் - கீல்செல்வநூர் பறவைகள் சரணாலயம் : ராமநாதபுரம் மாவட்டம்
கஞ்சிரன்குலம் பறவைகள் சரணாலயம் : ராமநாதபுரம் மாவட்டம்
வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் : சிவகங்கை மாவட்டம்







இது தவிர, இன்னும் முறையாக அறிவிக்கப்படாத, பல்வேறு இடங்களில் வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி செல்வதுண்டு. பெரும்பாலும் ஏரிகளையோ அல்லது குளங்களையோ தேர்ந்தடுக்கும் பறவைகளுக்கு, பாதிப்பு ஏற்ப்படாத வண்ணம், பார்த்துக்கொள்வதில், அந்த கிராம மக்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில் பட்டாசு வெடிக்காத கிராம மக்கள் தான் அதிகம் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

Apr 22, 2011

சிறுத்தை புலிகள் : சிக்கல் அவிழ்கிறது : பகுதி 3

சிறுத்தை புலிகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை களைத்து சிறுத்தை புலிகளை அழிவில் இருந்து காக்கவும், மனிதர்கள் இழப்புகளை சந்திக்காமல் இருக்கவும், மத்திய அரசு ஒரு சில வழிமுறைகளை கையாளும் படி அறிக்கை வெளியிட்டுள்ளது.



Apr 21, 2011

சிறுத்தை புலிகள் : சிக்கல் அவிழ்கிறது : பகுதி 2


சிறுத்தை புலிகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை களைத்து சிறுத்தை புலிகளை அழிவில் இருந்து காக்கவும், மனிதர்கள் இழப்புகளை சந்திக்காமல் இருக்கவும், மத்திய அரசு ஒரு சில வழிமுறைகளை கையாளும் படி அறிக்கை வெளியிட்டுள்ளது.

 




Apr 20, 2011

சிறுத்தை புலிகள் : சிக்கல் அவிழ்கிறது : பகுதி 1

சமீப காலங்களில் சிறுத்தை புலிகள் ஊருக்குள் புகுந்து விடும் செய்தியையும், பின் அது யாரையேனும் தாக்கினால் பிறகு அவை கூண்டுகள் வைத்து பிடிக்கப்படுவத்தையும் அடிக்கடி பார்க்கிறோம். சிறுத்தை புலிகள் கிராமங்களுக்குள், புகுந்து இடையூறு செய்வதாக வெளியிடப்படும் செய்திகளில், மனிதர்கள் காடுகளில் நுழைந்து செய்யும் இடையூறுகள் எதுவும் சொல்லப்படுவதில்லை. பல சமயங்களில் இவை விஷம் வைத்து கொல்லப்படுகின்றன. சிறுத்தை புலிகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை களைத்து சிறுத்தை புலிகளை அழிவில் இருந்து காக்கவும், மனிதர்கள் இழப்புகளை சந்திக்காமல் இருக்கவும், மத்திய அரசு ஒரு சில வழிமுறைகளை கையாளும் படி அறிக்கை வெளியிட்டுள்ளது.






விழிப்புணர்வை ஏற்ப்படுத்துதல்:

சிறுத்தை புலிகள் தேயிலை தோட்டங்களில் அதிகமாக காணப்படுவதுண்டு.

மனிதர்களை தாக்க வேண்டும் என்ற என்ன இயல்பில் அதற்கு இல்லை, மாறாக மனிதர்களிடம் இருந்து விலகிச் செல்லவே விரும்புகின்றன.

தன்னை தற்காத்துக்கொள்ள, தாக்க முயற்சிக்கலாம்.

எப்போதாவது தென்படும், சிறுத்தை புலிகள், உடனடியாக பிடிக்கப்பட்டு காடுகளில் விடப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அவசியம் ஏதும் இல்லாமல், ஒரு சிறுத்தை புலியை பிடித்து காட்டுக்குள் விடுவதன் மூலம், அந்த பகுதியை மற்றுமொரு சிறுத்தை புலி ஆக்கிரமித்துக் கொள்ளும்.

கிராமப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம், பன்றிகளின்  எண்ணிக்கை குறையும். இதனால், சிறுத்தை புலிகள், ஊருக்குள் வருவதும் குறையும்.

கால்நடைகள் வளர்ப்பவர்கள், சிறுத்தை புலிகள் தாக்காத வண்ணம் பட்டிகளை அல்லது வேலிகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.





ஒருங்கிணைந்த செயல்பாடு

"முதன்மை குழு" மற்றும் "அவசரகால குழு" என்ற இரண்டு குழுக்களை உருவாக்குதல். சிறுத்தை புலிகள், மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் நுழைந்தாலோ அல்லது சேதம் ஏற்ப்படுத்திவிட்டாலோ முதலில் "முதன்மை குழு" அங்கு சென்று, கூட்டத்தை கட்டுப்படுத்தி, சிறுத்தை புலியை பாதுகாக்க வேண்டும். யாரையேனும் தாக்கியிருந்தால்  உடனடியாக அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கபப்ட வேண்டும்.

அதன் பிறகு "அவசரகால் குழு" உதவியோடு, சிறுத்தை புலி பத்திரமாக மீட்கப்பட வேண்டும். இதற்காக தேவையான மருந்துகள் மற்றும் உபகரணங்கள் யாவும் வழங்கப்படும். மேலும் ஒரு கால்நடை மருத்துவர் உடனிருப்பார். இவர்கள் அனைவருக்கும் தனியாக அடையாளம் காணும் வகையில் சீருடைகள் அணிந்திருப்பர்.


கூட்டத்தை கட்டுப்படுத்துதல்:

அளவுக்கு அதிகமான கூட்டம் மற்றும் அவர்கள் எழுப்பும் ஒலி, சிறுத்தை புலியை பயம் கொள்ள செய்து, அதை பத்திரமாக மீட்பதில், இடையூறுகளை ஏற்ப்படுத்தும். வன மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். அவசர கால ஊர்தி தயாராக இருக்க வேண்டும்.





பத்திரமாக மீட்டெடுத்தல்:

கிணற்றுக்குள் விழுந்தாலோ, அல்லது, கட்டிடங்களுக்குள் மறைந்திருந்தாலோ பத்திரமாக மீட்டெடுத்து, மீண்டும் வனப்பகுதியில் விட வேண்டும். அந்த சூழ்நிலையில் மனிதர்களின் இடையூறுகள் இல்லாமல் பத்திரமாக மீட்கப்பட வேண்டும். வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் பிடிபட்டால், இரவு நேரங்களில், விடுவிக்க வேண்டும்.


அணுகுமுறை:

பிடிபட்ட சிறுத்தை புலி, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட கூடாது. அவற்றின் உடலில் காயம் ஏற்ப்பட்டிருந்தால் மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். ஒரு மாத காலத்திற்கு கண்காணிப்பில் இருக்கும் சிறுத்தை புலி, மீண்டும் காட்டுக்குள் விட வேண்டியதில்லை. மாறாக அவை தொடர்ந்து பராமரிப்பில் இருக்க வேண்டும்.


விடுவித்தல்/இடம் மாற்றுதல்:

விடுவிக்கபப்டும் சிறுத்தை புலிகள் தொடர்ந்து கண்காணிக்க ரேடியோ காலர் முறையை பின்பற்றலாம். பெரும்பாலும், அவை தான் வாழ்ந்த இடத்தை தேடி கண்டுபிடித்துவிடும் ஆற்றல் உள்ளத்தால், அவற்றை வேறு இடங்களுக்கு மாற்றும் அவசியம் இல்லை.

மனிதர்களை கொன்று பின் பிடிபடும் சிறுத்தை புலிகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விட வேண்டியதில்லை. மாறாக அவை தொடர்ந்து பராமரிப்பில் வளரக்கப்பட வேண்டும். பிடிப்பட்ட சிறுத்தை புலிகளை இரும்பு கூண்டில் அடைக்கப்பட கூடாது. அவை fiber கூண்டில் அடைக்கப்பட வேண்டும்.





இழப்பீடு:

மனிதர்களுக்கு ஆபத்து நேர்ந்தால், இழப்பீட்டுத் தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு ஒரு வர காலத்திற்குள் வழங்கப்பட வேண்டும்.

தகவல் சேகரிப்பு:

சிறுத்தை புலிகள் மற்றும் மனிதர்களுக்கு இடையேயான முரண்பாடுகள் முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்.


Apr 19, 2011

ஏறுபுலி : வேங்கைகளில் வலிமையானது

ஆண் சிங்கத்திற்கும்  பெண் புலிக்கும் பிறந்த இந்த லைகர் தான், உலகின் மிகப்பெரிய பேந்தரா பேரினத்தின் உயிரினமாக கருதப்படுகிறது. இயற்கையில் சிங்கமும் புலியும் ஒரே மாதிரியான வனச் சூழ்நிலையில் வாழ்வது கிடையாது.



சிங்கம் வாழ்வதற்கு ஓரளவு சமவெளிப் பகுதியும், புலிகள் வாழ்வதற்கு அடர்ந்த காடுகளும் தேவைப்படுகிறது. ரஷ்யாவில் தொடங்கி இந்தியா வரை நீண்டு இருந்த புலிகளும், தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியா வரை நீண்டு இருந்த சிங்கங்களும், ஒரு வேளை இந்தியாவில் சந்தித்திருக்கலாம். இந்தியாவின் மிகப்பெரிய நிலப்பரப்பு அவற்றை தனித்து இயங்கச் செய்திருக்கிறது.


தற்சமயம் இந்த லைகர் உருவானது, மனிதர்களின் பராமரிப்பில் இருக்கும் சிங்கத்திற்கும் புலிக்கும் பிறந்தது. சுமார் 410 கிலோ எடையும், 12 அடி நீளமும் கொண்ட இந்த லைகர், சிங்கம் - புலி இரண்டை விடவும், மிகப்பெரிய விலங்காக உள்ளது. அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில், மியாமியில் இந்த லைகர் பராமரிக்கப்பட்டு வருகிறது.



சுமார் கி.பி. 1700 முதல் லைகர் உலகில் இருந்து வருவதற்கான ஆதாரங்கள் உள்ளன. பார்ப்பதற்கு புலி போன்றும் இல்லாமல், சிங்கம் போன்றும் இல்லாமல் காணப்படும் இவற்றின் உடலில், செந்நிற அருங்கோன வடிவங்கள் (சிறுத்தை புலியின் உடலில் இருப்பது போன்ற) காணப்படுகின்றன.


Lion மற்றும் Tiger என்ற வார்த்தைகளின் முன்-பின் எழுத்துக்களை கொண்டு Liger உருவானது. எனவே தமிழில் இதற்கு சரியான பெயர் இருப்பதாக தெரியவில்லை. ஆண் சிங்கம் "ஏறு" என்று சங்க தமிழில் கூறப்படுகிறது. எனவே இந்த லைகரை "ஏறுபுலி" என்று அழைக்கலாம்.

இதே போன்று, ஆண் புலிக்கும் பெண் சிங்கத்திற்கும் பிறக்கும் விலங்கு டைகான் என்று அழைக்கப்படுகிறது.


Apr 12, 2011

சுழலில் சிக்கும் நாள் வரும்

மிச்சமிருந்த புலிகளை
விரல்விட்டு எண்ணும்போதும்
பொறுத்திருக்கிறது காடு.

மலஜலம் நிறைந்த
மாநகரக் கழிவுகளோடு
காத்திருக்கிறது கடல்.

நச்சும் நாற்றம் கலந்து
அழுக்கேறிய புகையோடு
நிறைந்திருக்கிறது காற்று.

உடன் வளர்ந்த உயிரை
அடியோடு சாய்க்கும் போதும்
சலனமற்றிருக்கிறது மரம்.

சாயக் கழிவுகளை
கொட்டிக் கலந்த பின்னும்
பயணப்படுகிறது நதி.

மரங்களைத் தகர்த்துவிட்டு
மலைகளை குடைந்த பின்னும்
பெயகிறது மழை.

இயற்கையை நிர்வாணப்படுத்தி
வன்புணர்ச்சி செய்கிறான்,
போதை தலைக்கேறிய மனிதன்.




Apr 11, 2011

எட்டி உதைப்போம்... உலகம் உருளட்டும் ...

கட்டுக்கடங்காத ஊழல் இன்று சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் பாதித்துள்ளது. எந்த தொழில் செய்பவராக இருந்தாலும், ஊழலில் தாக்கம் அவர்களை நேரடியாக பாதிக்கவே செய்கிறது. சமூகத்தில் உழைப்பவர்களையும் அரசியல்வாதிகளையும் ஒப்பிட்டு பாருங்கள்.


இன்றைய சமூகத்தில் அதிகம் பொருள் ஈட்டக்கூடியவனாக கருதப்படும் மென் பொறியாளர்கள் யாவரும், பணத்துக்காக தங்கள் ஊரை விட்டு , வெளி மாநிலங்களிலும், பெரு நகரங்களிலும், குடியிருக்க வேண்டியதாக இருக்கிறது. இவர்களின் வேலை பளு என்பது எல்லா நேரங்களிலும் இலகுவாக இருப்பதில்லை. விடுமுறை நாட்களிலும், வேலை செய்யும் நண்பர்கள் உண்டு. இரவு முழுக்க உறக்கம் கொள்ளாது, வேலை செய்பவர்கள் உண்டு. இப்படி உறக்கத்தை தொலைத்துவிட்டு, இவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் பாதியை, தன் வீட்டின் கடனுக்காகவே செலுத்த வேண்டியதாக இருக்கிறது. இருபது லட்சம் கடன் வாங்கி வீடு கட்டும் ஒருவன், அதை அடைக்க இருபது வருடங்கள் உழைக்கிறான். வங்கியில் கொடுக்கப்படும் கடன், இருபது அல்லது பதினைந்து வருடங்கள் கட்டப்படும் அளவுக்கு வரைமுறை படுத்தப்படுகிறது. இது போக ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் வருமானவரி செலுத்துபவனாகவும் இருக்கிறார்கள்.


 மென் பொருள் துறையில் மட்டும் இந்திய அரசாங்கத்துக்கு கிடைக்கும் வருமான வரி பல கோடிகளை தாண்டுகிறது. அரசுக்கு இவ்வளவு வருமானத்தை கொடுக்கும் இவர்களுக்கு என்று அரசாங்கம் எதுவும் செய்ய வேண்டியதில்லை. மாறாக சமூகத்தின் முன்னேற்றத்திற்கு, எதாவது செய்யலாம். ஆனால் வெறும் இலவசங்களை அள்ளி இறைத்து, அதிலும் ஊழல் செய்து, யாருடைய முன்னேற்றத்திற்கு, இந்த அரசியல்வாதிகள் பாடுபடுகிறார்கள்?


ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வரை தருகிற கட்சி, எவ்வளவு பணத்தை கொள்ளை அடித்து வைத்திருக்கிறது? இவர்கள் கையில் மீண்டும் ஆட்சி கிடைத்தால், எவ்வளவு பணத்தை இவர்கள் மறுபடியும் கொள்ளை அடிப்பார்கள்? ஆண்டுக்கணக்கில் உழைத்து வருமான வரி செலுத்துபவர்களின் பணத்தை கொள்ளை அடித்து, இவர்கள் சொந்த தேசத்து மக்களேயே பிச்சைக்காரர்கள் ஆக்குகிறார்கள்.


ஓட்டுக்கு பணம் வாங்கும் நிலைக்கு என்று வாக்காளன் தள்ளப்பட்டனோ, அப்போதே இவர்கள் விரட்டப்பட்டிருக்க வேண்டும். தன் வீட்டுக்கடனை அடைக்க எத்தனை இரவுகளை ஒரு மென் பொறியாளன் தொலைக்கிறான்? அந்த பணம் இந்த ஊழல்வாதிகள் கொள்ளை அடிக்கும் பணத்தில், ஒரு கொசுறு கூட கிடையாதே.. இன்று, அதிகம் வருமானம் ஈட்டும், மென் பொருள் துறை சார்ந்தவர்களின் நிலையே இப்படி என்றால், தினசரி சம்பளத்தை நம்பி இருப்பவர்களின் நிலை என்ன? இவர்களின் வாழ்வு எப்போது முன்னேற போகிறது?


எந்த வக்காளனாவது இவர்கள் முன்னால் வந்து, இலவசங்கள் வேண்டும் என்று கேட்டானா? இலவச திட்டங்களுக்கு செலவு செய்த பணத்தை, எவ்வளவோ நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தி இருக்கலாமே.. கொள்ளை அடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் வீடு வீடாக போய் கொடுத்து, ஓட்டு பொறுக்கிகளாக திரியும் இவர்கள், இந்த சமூகத்துக்காக உழைக்கப் போகிறார்களா? ஓட்டுக்காக பணம் கொடுக்க வந்த பலரை தற்போது பொதுமக்களே காவல் துறையில் ஒப்படைக்கிறார்கள். உண்மையில், இந்த மக்கள் தான் நாட்டுக்கு தேவை.


யாராவது பணம் கொடுத்தால், அவர்களை அப்பொழுதே, காவல் துறையில் கொண்டு போய் ஒப்படைக்க வேண்டும் என்ற எண்ணம் பொது மக்களுக்கு இருக்க வேண்டும். அரசியல் வியாபாரமாகி பல நாட்கள் ஆகிவிட்டன. தற்போது அந்த வியாபாரத்தில், மக்களையும் சேர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். எப்படி ஆனாலும் இந்த நிலை தொடர்ந்தால், மக்கள் மிகவும் வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள். தலைவலி என்று மருத்துவமனைக்கு போனால் கூட ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலை விரைவிலேயே வந்து விடும்.


2G அலைக்கற்றை ஊழலில் அரசுக்கு ஏற்ப்பட்ட இழப்பை ஈடு செய்ய இந்தியாவில் இருக்கும் அத்தனை மென் பொறியாளர்களும், தொடர்ந்து எத்தனை வருடங்களுக்கு, உழைத்து வருமான வரி செலுத்த வேண்டும். ஒரு தனி மனிதனின் சுயநலத்துக்காக இந்த தேசம் முழுவதும் உள்ள மக்கள், உறக்கத்தை தொலைத்து, உழைக்க வேண்டுமா? எந்த தேசத்து மக்களாவது இதை அனுமதிப்பார்களா?


ஒரு குடும்ப சண்டைக்காக, மதுரையில் மூன்று உயிர்களை எரித்துக் கொன்றார்களே.. அதன் பிறகும் அவர்களேயே தேர்ந்தெடுக்க அந்த ஊர் மக்களால் எப்படி முடிகிறது? பணத்திற்க்காகவா? அப்படியானல் மூன்று பேரின் உயிரை குடித்ததற்கு இவர்களும் தானே காரணம்? சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை! மானம், வீரம் நிறைந்த மதுரை!! இன்றைக்கு எங்கே இருக்கிறது?


எந்த தேர்தல் அறிக்கையிலாவது, தமிழக அரசின் கடனை அடைக்கிறேன் அன்று யாரவது சொல்கிறார்களா? சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படும் என்று எவனாவது பிரச்சாரம் செய்கிறானா? இயற்கை வேளாண்மை பற்றி யாராவது பேசி கேட்டிருக்கிறீர்களா? மீண்டும் நம்மை சுரண்டி திங்க நம்மிடம் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அண்ணாவும் பெரியாரும் பேசித் திரிந்த வீதிகளில், இன்று வடிவேலுவும், செந்திலும், சிங்க முத்துவும் பேசித் திரிகிறார்கள்? யாருக்காக?


ஒரு நல்ல அரசியல் தலைமை கிடைக்கும் வரை இந்த கட்சிகள் அனைத்தையும் புறக்கணிப்பதை தவிர வேறு வழி இல்லை. அதே சமயம் ஓட்டுப் போடாமல் இருப்பதும் தவறு. சுயேட்சைகள் நல்லவர்களாக இருந்தால் அவர்களை ஆதரிக்கலாம். அப்படியும் யாரும் இல்லையென்றால்,  இன்றைய சூழ்நிலையில், நாம் இவர்களை புறக்கணிக்க நம்மிடம் இருக்கு ஒரே ஆயுதம் 49 O மட்டுமே.




Apr 10, 2011

ஓட்டளிப்போம்

இன்னும் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளன. தேர்தலில் நான் ஒருவன் போய் போடுகிற ஓட்டால், இந்த சமூகம் மாறிவிடுமா என்பதே நம் சமூகத்தின் பலரது கேள்வியாக இருக்கிறது. இன்றும் மக்களுக்கு முறையாக ஒட்டு உரிமை இல்லாத எத்தனையோ நாடுகள் உள்ளன. மக்கள் தங்கள் உரிமைக்காக போராடுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.


நமக்கு கிடைத்திருக்கும் இந்த அரிய வைப்பை பயன்படுத்தி சரியான தலைமையை தேர்ந்தடுக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை. நம் கடமையை நாம் சரியாக செய்திருந்தால், 72 வயதில், அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. இனிமேலாவது நம் கடமையை தொடர்ந்து செய்வோம். ஓட்டளிப்போம்.

உங்கள் ஊரில் யார் வேட்ப்பாளர்கள், என்ன சின்னத்தில் போட்டியிடுகிறார்கள் என்பதை தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

http://www.elections.tn.gov.in/Form7A2011.htm


Apr 9, 2011

தொடக்கத்தின் தொடக்கமே

இனி நல்லவர்கள் அரசியலுக்கு வர முடியாது, நேர்மையாக இருந்தால் பிழைக்க முடியாது,  ஊழல் என்பது ஒழிக்கவே முடியாத ஒன்று, காந்தியம் என்பது முற்றிலும் செத்துப்போய் விட்டது, இப்படி பேசிக்கொண்டிருந்தவர்கள் அத்தனை பேரும், அன்னா ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டத்தின் வெற்றிக்குப்பிறகு, தொண்டைக்குழியில் எச்சிலை விழுங்குகிறார்கள்.



ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை விதை விருட்சமாகி வேர் விட்டு அறுபத்தி மூன்று ஆண்டுகளாக நிலைபெற்றுவிட்ட போதிலும், இப்போது விதைக்கப்பட்டிருக்கும்  இந்த விதை, ஊழலுக்கு எதிரானது என்பதே இதன் சிறப்பு. கடந்த ஐந்து நாட்களாக கூடிய கூட்டம் அத்தனையும் தானாக சேர்ந்த கூட்டம். யாருக்கும் பணம் கொடுக்கப்படவில்லை, பிரியாணி கொடுக்கப்படவில்லை, மாறாக இந்த கூட்டம், பட்டினி கிடக்க கிளம்பிய கூட்டம். இந்த போராட்டத்தின் பலமே பட்டினிதான். லோக்பால் சட்ட மசோதாவை விரைந்து வரைவு செய்து வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், அமல் படுத்தினால் மட்டுமே, ஒரு நல்ல மாற்றத்தின் அடையாளமாக எடுத்துக்கொள்ளப்படும்.



பெண்கள் இட ஒதிக்கீடு மசோதாவை கிடப்பில் போட்டது போல, இதையும் செய்து விடக்கூடாது. கிடப்பில் போட்டால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க யாரும் தயாராக இல்லை. மீண்டும் ஒரு போராட்டத்தை மத்திய அரசு எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும். எனவே விரைந்து நிறைவேற்றினால், அது அரசுக்கு நன்மதிப்பையாவது பெற்றுத் தரும். தமிழ் தொலைக்காட்சிகள் இந்த செய்தியை முடக்கப்பார்த்தும் எந்த பயனுமில்லை. கோவையில் கூடிய மக்கள் கூட்டமே இதற்கு சாட்சி.



"ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அன்றே கலந்து கொண்டு, எதாவது முயற்சி செய்திருந்தால், இன்று நாங்கள் பட்டினி கிடக்கும் நிலை வந்திருக்காது" என்று நம் அடுத்த தலைமுறை கேள்வி கேட்க்காதிருக்க வேண்டுமெனில், நாம் வீதிகளில் இறங்கிப் போராடத்தான் வேண்டும். இந்த போராட்டம், தொடக்கத்தின் தொடக்கமே. தொடர்ந்து குரல் கொடுத்தால் நிச்சயம் மாற்றங்களை கொண்டு வரமுடியும். குரல் கொடுப்போம் நண்பர்களே... இன்னும் ஆட்டம் பாக்கியிருக்கிறது.


 படங்கள் நன்றி: தினமலர்




Apr 8, 2011

அண்ணா ஹசாரே - அப்துல் கலாம் : இணைவார்களா?

எகிப்திலும், லிபியாவிலும் நடந்த புரட்சிகளை பார்த்துக்கொண்டு உலகை காப்பாற்றப் போவதாக சொல்லிக் கொண்டு ஓடிவந்த அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும், இந்தியாவில் அண்ணா ஹசாரே தொடங்கியிருக்கும் அறப்போராட்டம் ஆச்சர்யங்கள் நிறைந்ததாகவே இருக்கும்.


 மூன்றே நாட்களில் ஒட்டு மொத்த தேசத்தையும் திரும்பி பார்க்க வைத்ததோடு இல்லாமல், மக்கள் அனைவரையும் ஒரே புள்ளியில் இணைத்திருக்கிறார் ஹசாரே. நாட்டின் பல்வேறு இடங்களிலும் நடக்கும் இந்த உண்ணாவிரத போராட்டம், சுதந்திர இந்தியாவில் நாம் பார்த்திராத ஒன்று.


மக்கள் கூட்டம் கூடிக் கொண்டே போகிறது. வட இந்திய ஊடகங்கள் இருபத்தி நான்கு மணி நேரமும் பேசிக்கொண்டே இருக்கின்றன. தமிழ் நாட்டில் இதை பற்றி பேச யாரும் தயாராக இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. நேரம். மத்திய அரசு அண்ணாவின் கோரிக்கைகளுக்கு பணிதாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அல்லது கட்டாயம் ஏற்படும் சூழ்நிலைக்கு தள்ளப்படும்.



அப்துல் கலாம் இதற்கு ஆதரவு கொடுத்தால் இன்னும் மிகப்பெரிய அறப்போராட்டமாக இது மாறக் கூடும். நான் அப்துல் கலாம் அவர்களை பங்கேற்க்கச் சொல்லி மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். நீங்களும் குரல் கொடுங்கள். சந்தர்ப்பங்கள் கிடைப்பது அரிது. பயன்படுத்திக்கொள்வோம்

Apr 7, 2011

யார் மிருகம் : சிறுத்தை புலியா? மனிதர்களா?

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி, தாம்தர் என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள், ஒரு சிறுத்தை புலியை உயிருடன் வைத்து எரித்திருக்கிறார்கள். முன்னதாக சிறுத்தை புலியை பிடித்து காட்டுக்குள் விடுவதற்காக, ஒரு கூண்டை தயார் செய்து, அந்த ஊர் அருகில், வனத் துறையினர் வைத்துள்ளனர். அவர்கள் எதிர்பார்த்தபடியே சிறுத்தை புலி கூண்டுக்குள் சிக்கியது.



கூண்டை எடுத்துக்கொண்டு வனத் துறை அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பும் போது, கிராமத்தை சேர்ந்தவர்கள், வனத் துறையினரை முற்றுகையிட்டு, கூண்டை கைப்பற்றி விட்டனர். அதன் பிறகு, கற்களை எரிந்து அந்த சிறுத்தை புலியை தாக்கத் தொடங்கிவிட்டனர். பிறகு மண்ணெண்ணெய் ஊற்றி கூண்டை பற்ற வைத்துவிட்டனர். சிறிது நேரத்தில், அந்த சிறுத்தைபுலி துடிதுடித்து உயிரைவிட்டது.



இத்தனைக்கும், அந்த சிறுத்தைபுலி யாரையும் தாக்கி கொன்றதில்லை. அதை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், இந்த சிறுத்தை புலி மனிதர்களை உணவாக கொண்டதில்லை எனவும் தெரிவித்துள்ளார்கள். இந்த சம்பவத்தால் பத்து பேரை கைது செய்திருக்கிறார்கள்.


கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். உண்மையில் யார் மிருகம்? சிறுத்தை புலியா? இல்லை மனிதர்களா?



Apr 6, 2011

பூ - பெண் - பெலிந்தா - புலி

1953 ல் பிறந்த பெலிந்தா ரைட் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை இந்தியாவில் தான் செலவிட்டு வருகிறார். இந்திய மக்களுக்காக அல்ல. இந்தியாவில் வாழும் புலிகளுக்காக.



இவருடைய தாயார் அன்னே ரைட் புலிகள் பாதுகாப்புக்காக போராடியவர். இவருடைய தந்தை இங்கிலாந்தில் வாழும் இந்தியர்களின் நலனுக்காக போராடியவர். இவர்களுடைய அரவணைப்பில் வளர்ந்த பெலிந்தா, சிறு வயது முதலே புலிகளின் மீதான பிரியத்தை வளர்த்துக்கொண்டார்.


இவருடைய தாயார், 1973 ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் திருமதி.இந்திரா காந்தி அவர்கள் கொண்டுவந்த ப்ராஜெக்ட் டைகர் திட்டத்தில் இணைந்து செயலாற்றியவர். தொடர்ந்து 23 ஆண்டுகள், இந்த பணியில் ஈடுபட்டவர், இந்தியா மற்றும் இங்கிலாந்து அரசுகளின் விருதுகளை வென்றவர். பெலிந்தாவின் தந்தை ராபர்ட் அவர்களும் மக்கள் நலனுக்காக போராடியவர். இவரும் சர்வதேச விருதுகளை வென்றவர். எனவே பெலிந்தாவிற்கு வனத்தின் மேல் ஒரு ஈடுபாடு இருந்து வந்தது. இந்தியாவின் வனம் மற்றும் வன உயிரினங்கள் பாதுகாப்புக்காக தொடர்ந்து போராடிவரும், பெலிந்தா, Wildlife Protection society of India -ன் தலைமை இயக்குனராக பணியாற்றி வருகிறார். 



பீகாரில் உள்ள புலிகள் காப்பகங்களில் வளர்ந்த இவர், சிறு வயதிலேயே புலிகளை புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உள்ளவராக விளங்கினார். BBC மற்றும் National Geographic channel க்காக இவர் புலிகள் பற்றிய ஆவணப் படங்களையும் தயாரித்துள்ளார். இவர் இயக்கிய Land of the Tiger என்ற படத்திற்காக Emmy Award மற்றும் பதினான்கு சர்வதேச விருதுகளையும் இவர் வென்றுள்ளார்.


Wildlife Protection society of India (http://www.wpsi-india.org) என்ற அமைப்பை தொடங்கி, இந்தியாவில் புலிகள் வேட்டையை தடுப்பதற்க்காக போராடிவருகிறார். 2003 ஆம் ஆண்டு இவரின் பெற்றோர்கள் வென்ற விருதான Officer of the Order of the British Empire என்ற உயரிய விருதை இவரும் வென்றார்.


வாழ்நாள் முழுவதும் புலிகளுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டு வாழும் இவர், புலிகளின் அன்னை அல்லவா? பெண்களை பூக்களோடு ஒப்பிடும் கவிஞர்கள், பெலிந்தாவை புலியோடு மட்டுமே ஒப்பிட முடியும்.




Apr 5, 2011

கூவம் என்ற அழகிய நதி

திருவள்ளூர் மாவட்டத்தில் உற்பத்தியாகி வங்கக் கடலில் கலக்கும் எழுபது கி.மீ நீளம் கொண்ட அழகிய நதி கூவம் என்று அழைக்கப்படுகிறது. கூவம் இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது, அழகை இழந்து, அழுக்கோடு மட்டும். ஒரு காலத்தில் இந்த நதியில் ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்தன. இந்த நதியில் படகுப் போக்குவரத்து நிகழ்ந்தது. நதியை ஒட்டி சிவாலயங்கள் இருந்தன.



சிறிய நதி என்றாலும் மிகவும் அழகான நதியாகவே இருந்திருக்கிறது கூவம். இன்றைய கூவம் மீன்களை இழந்திருக்கிறது, பறவைகளை இழந்திருக்கிறது, அதன் கரையோர பசுமையை இழந்திருக்கிறது, மனிதர்களின் கழிவுகளை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு தன்னுடைய வாழ்வை முடித்துக்கொண்டுவிட்டது. கூவம் தன்னுடைய ஜீவனை இழந்துவிட்ட பின்னரும் நாம், அது வாழ்ந்துவிட்டு போன பாதையையும், நாசம் செய்து கொண்டே இருக்கிறோம்.



கூவத்தை சுத்தம் செய்வதாக சொல்லிவிட்டு, பின் அதை மறந்துபோன தலைவர்களை நாமும் மறந்துபோவது நமக்கு புதிதல்ல. ஒரு நதி என்பது எத்தனை உயிர்களின் வாழ்வாதாரம்? இன்று நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பத்தை கொண்டு எத்தனை நதிகளை நம்மால் உருவாக்க முடியும்? நாம் இழந்துவிட்ட ஒரு நதியின் மீது தன் நாம் வாகனங்களை ஒட்டி செல்கிறோம். நம்மில் எத்தனை பேருக்கு இந்த நதியை உயிர்ப்பிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்...?




2004 ஆம் ஆண்டு, சென்னையை சுனாமி தாக்கியபோது கூவம் ஒரு வடிகாலாக செயல்பட்டு மிகப்பெரிய சேதத்தை தவிர்த்தது. இன்றைய கூவம் இப்படி மாறிப்போனதற்கு சென்ற தலைமுறை மக்களே காரணமாக இருக்கலாம். சென்னை வளர்ச்சியடைய தொடங்கியிருக்கும் போதே சரி செய்யப்பட்டிருக்க வேண்டும். போனது போகட்டும். இன்னும் 20 ஆண்டுகளில், அதே பாதையில் ஒரு அழகிய நதி ஓடுமாயின் அதற்கு நாமே காரணமாக இருந்தால் என்ன?



Apr 4, 2011

காண்டாமிருகங்களின் தாயகங்கள்

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் கொல்லப்பட்ட ஆப்ரிக்க காண்டாமிருகங்களின் மிருகங்களின் எண்ணிக்கை 800 க்கும் அதிகம். தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் கென்யா ஆகிய நாடுகளில் வேட்டையாடப்படும் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகம்.


 தென் ஆப்ரிக்காவில் மட்டும் கடந்த ஆண்டு 333 காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை வேட்டையால் உயிரைவிட்டவை சுமார் 70 .


இவற்றின் கொம்புகள் மருந்தாக பயன்படும் என்ற மூட நம்பிக்கை காரணமாக தென் கிழக்கு ஆசிய நாடுகள் இவற்றின் விற்பனை சந்தையாக உள்ளது. குறிப்பாக வியட்நாமிற்கு இவை அதிகமாக கடத்தப்படுகிறது. இதற்காக தென் ஆப்ரிக்காவில் இருந்து செயல்படும், வேட்டை தடுப்பு அமைப்புகள் வியட்நாமின் அதிகாரிகளுடன் செயல்படத் தொடங்கியிருக்கிறது. கடுமையான சட்டங்கள் அமலில் உள்ள போதும், இவற்றை வேட்டையில் இருந்து பாதுகாக்க ஆபரிக்க நாடுகள் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.


தென் ஆப்ரிக்காவில் காடுகள் தவிர்த்து தனியார் நிலங்களிலும் காண்டமிருகங்கள் வந்து போவதால், பொது மக்களின் ஒத்துழைப்பும், காவல் துறையின் நடவடிக்கைகளும் நிச்சயம் தேவைப்படுகிறது. இன்னும் சில நாடுகளில் பயிற்சி பெற்ற வேட்டைக்காரர்களால் கொல்லப்படும் காண்டமிருகங்களின் கொம்புகள், விருதுகளாக வழங்கப்படுகிறது.


 தன்னார்வு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுதல், கொல்லப்பட்ட விலங்குகளின் மரபணுக்களை ஆய்வு செய்தல், காவல் துறைக்கு அதிகப்படியான அதிகாரங்களை வழங்குதல் என தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், வேட்டைகளை தடுக்கப் போதுமானதாக இல்லை. இன்னும் அதிகப்படியான தண்டனைகள், தொடர் கண்காணிப்பு ஆகியவற்றை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன  காண்டாமிருகங்களின் தாயகங்கள்.

Apr 3, 2011

இன்னும் ஆட்டம் பாக்கியிருக்கிறது

மிகவும் அற்புதமான தருணங்களை நம் நினைவில் இருந்து அழித்தல் என்பது இயலாத காரியம். உலகின் அதிகமான இளைஞர்களை கொண்ட ஒரு தேசம் இந்தனை ஆண்டுகளாக காத்துக்கொண்டிருந்ததர்க்கு கிடைத்த இந்த பலன், இனி எத்தனை ஆண்டுகளானாலும் யாவர் மனதிலும் நிலைத்து நிற்கும்.

 
இனம், மொழி,மதம் யாவும் கடந்து 121 கோடி மக்களை ஒரே புள்ளியில் நிறுத்தி இந்த உலகம் அதிர குரல்கொடுக்க இந்தியா என்ற ஒரு தேசத்தாலும் , இந்தியன் என்ற ஒருவனாலும் மட்டுமே முடியும். ஒரு விளையாட்டு என்னையும், இதை இந்த உலகின் ஏதோ ஒரு தேசத்தில் இருந்து படித்துக்கொண்டிருக்கும் யாரோ ஒரு இந்தியனையும் கர்வப்பட செய்யும் எனில், இதுவே தலைசிறந்த விளையாட்டாக இருக்ககூடும். சமீப கால இந்திய வெற்றிகள் ஒவ்வொரு விளையாட்டிலும் மேன்படத் தான் செய்கிறது.


 இந்தியன் என்பதற்காக பெருமை கொள்வோம். இந்த தருணத்தில் வெளிப்படட்ட தேசத்தின் மகிழ்ச்சியும், ஒற்றுமையும், தேசத்தின் மீதான பற்றும் தொடர்ந்து எல்லோர் மனதிலும் நிலைத்து நிற்கும் எனில், இந்தியன் என்ற கர்வத்தோடு உலகின் எல்லா தெருக்களிலும் சுற்றித் திரியலாம். நிலைத்து நின்று ஆடலாம், இன்னும் ஆட்டம் பாக்கியிருக்கிறது.


Apr 2, 2011

கங்கை முதலைகள்

கங்கை மாதாவின் வாகனமாக கருதப்படும் கங்கை முதலைகள் (Gharial), தன் இருப்பை உறுதி செய்து கொள்வதில், மிகுந்த சிரமப்படுகின்றன. நண்ணீரில் வாழும் இந்த முதலைகள், ஆற்றின் அடி ஆழத்தில், வாழ்கின்றன. அவ்வப்போது தலை நீட்டி தன் இருப்பை மற்ற உயிரினங்களுக்கு அறிவித்துவிட்டு மீண்டும் உள்ளே சென்று விடும்.




சுமார் 60 முட்டைகள் இடும் இந்த முதலைகள், 90 நாட்களில் குஞ்சு பொறிக்கும்.  மீன்களை அதிகம் விரும்பி உண்ணும் இந்த முதலைகள், இந்திய துணை கண்டத்தின் பெரும்பாலான இடங்களில் பரவி இருந்தன. பாகிஸ்தான், பர்மா, பூடான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் இவை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன.

தற்சமயம் இவை இந்தியா மற்றும் நேபாளத்தில் தன்னுடைய வாழ்க்கைக்கு போராடிக் கொண்டிருக்கின்றன. கிர்வா மற்றும் சாம்பல் ஆறுகளில் வாழ்கின்றன. 2007 ஆம் ஆண்டு, நச்சு தன்மை ஆற்றில் கலந்து. அதன் விளைவாக பாதிப்புக்குள்ளான மீன்களை உணவாக உட்க்கொண்டதன் மூலம் சுமார் 100 முதலைகள் யமுனை ஆற்றில் இறந்து போயின. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம், இந்த முதலைகளை அரிய வகை உயிரினமாக அறிவித்து சிகப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.






ஆற்றில் எடுக்கப்படும் அதிகப்படியான மணல், புதிய அணை கட்டுகள், வேளாண் மற்றும் மேய்ச்சல் தொழில் காரணமாக இவை அதிகம் பாதிக்கப்படுகின்றன.

அதிகப்படியான மீன் பிடி தொழிலால், இவற்றின் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது.

மணலில் முட்டையிட்டு வைத்திருக்கும் போது, அவை சேதப்படுத்தப்படுவதால் புதிய முதலைகள் பிறப்பதில் சிக்கல் உருவாகிறது.

ஆற்றில் கலக்கப்படும் அதிகப்படியான தொழிற்சாலை கழிவுகள், மிகப்பெரிய இடையூறாக இருக்கிறது.

ஆற்றை தூய்மைபடுத்தினால் மட்டுமே இந்த முதலைகளை காப்பற்ற முடியும். இந்த முதலைகளுக்கு என்று சரணாலயங்கள் உருவாக்கப்பட்டு, மனிதர்களின் இடையூறுகளை தடை செய்ய வேண்டும்.





இந்த முதலைகளை காப்பாற்றி விட்டால், ஆறுகள் தூய்மையாகிவிட்டன என்று பொருள். ஆறுகள் தூய்மையாகிவிட்டால், நமக்கு ஏற்ப்படும் நன்மைகள் அனைவரும் அறிந்ததே. இந்த முதலைகள் வாழத் தகுதி இல்லாத ஆறுகள் யாவும், நமக்கும் தகுதி இல்லாத ஆறுகள் என்பதே இவை நமக்கு சொல்லும் பாடம்.





Apr 1, 2011

நெஞ்சம் மறப்பதில்லை

கனடாவில் வாழ்ந்துவரும் எழுத்தாளர் திரு.அ.முத்துலிங்கம் அவர்கள் சமீபத்தில் அவருடைய இணையதளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். என்னுடைய பதிவை படிக்கும் முன்னர், அவருடைய கட்டுரையை படித்தால் நலம்.

http://amuttu.com/index.php?view=pages&id=316

எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கு அப்பால், அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு புறா, நேற்று முழுவதும், தன் அலகுகளால் என் இதயத்தை கீறிக் கொண்டே இருந்தது. இந்த கட்டுரையை படித்த பிறகு, என்னையும் அறியாமல், என் மனது புறா நடந்து வந்த பாதையை வட்டமடித்துக் கொண்டே இருந்தது.

எதற்காக அந்த புறா அவ்வளவு தூரம் நடந்தே வந்தது? தன்னை வளர்த்தவரின் மேல் இருந்த அன்புக்காகவா? தன் சிறகுகளை இழந்த பிறகும் நடந்து போக எப்படி முடிவு செய்தது? புதிய இடம் பிடிக்கவில்லை என்றால் அருகிலேயே வேறு எங்காவது வாழ்ந்துவிட்டு போயிருக்கலாமே? அவ்வளவு தூரம் நடந்து வரும் போது, அதன் சிந்தனை என்னவாக இருந்திருக்கும்? வரும் வழியில் ஏதேனும், உணவு எடுத்துக்கொண்டிருக்குமா? தன் கால்களில் ரத்தம் வருவதை கூட அது உணரவில்லையா? எப்படியும் இலக்கை அடைய நினைத்து விட வேண்டும் என்ற அந்த மன உறுதி எவ்வளவு அற்புதமானது? காலையில் கதவு திறக்கப்படும் வரை வாசலில் காத்துக்கொண்டு நின்றிருந்ததா? தன்னை வளர்த்தவருக்கு என்ன சொல்ல நினைத்தது?

எத்தனையோ கேள்விகள் மீண்டும் மீண்டும் துன்புறுத்துகின்றன. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.

எத்தனையோ ஆயிரம் சித்திரவதைகளை செய்து ஜெர்மனியை ஆண்டு கொண்டிருந்த ஹிட்லரை காட்டிலும், அல்பிங்கா என்ற இந்த புறா ஆயிரம் மடங்கு மேலானது.

மன்னிக்கவும், அல்பிங்கா மேலானவர்.