சுழலில் சிக்கும் நாள் வரும்

மிச்சமிருந்த புலிகளை
விரல்விட்டு எண்ணும்போதும்
பொறுத்திருக்கிறது காடு.

மலஜலம் நிறைந்த
மாநகரக் கழிவுகளோடு
காத்திருக்கிறது கடல்.

நச்சும் நாற்றம் கலந்து
அழுக்கேறிய புகையோடு
நிறைந்திருக்கிறது காற்று.

உடன் வளர்ந்த உயிரை
அடியோடு சாய்க்கும் போதும்
சலனமற்றிருக்கிறது மரம்.

சாயக் கழிவுகளை
கொட்டிக் கலந்த பின்னும்
பயணப்படுகிறது நதி.

மரங்களைத் தகர்த்துவிட்டு
மலைகளை குடைந்த பின்னும்
பெயகிறது மழை.

இயற்கையை நிர்வாணப்படுத்தி
வன்புணர்ச்சி செய்கிறான்,
போதை தலைக்கேறிய மனிதன்.




Post a Comment

0 Comments