பூ - பெண் - பெலிந்தா - புலி

1953 ல் பிறந்த பெலிந்தா ரைட் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை இந்தியாவில் தான் செலவிட்டு வருகிறார். இந்திய மக்களுக்காக அல்ல. இந்தியாவில் வாழும் புலிகளுக்காக.இவருடைய தாயார் அன்னே ரைட் புலிகள் பாதுகாப்புக்காக போராடியவர். இவருடைய தந்தை இங்கிலாந்தில் வாழும் இந்தியர்களின் நலனுக்காக போராடியவர். இவர்களுடைய அரவணைப்பில் வளர்ந்த பெலிந்தா, சிறு வயது முதலே புலிகளின் மீதான பிரியத்தை வளர்த்துக்கொண்டார்.


இவருடைய தாயார், 1973 ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் திருமதி.இந்திரா காந்தி அவர்கள் கொண்டுவந்த ப்ராஜெக்ட் டைகர் திட்டத்தில் இணைந்து செயலாற்றியவர். தொடர்ந்து 23 ஆண்டுகள், இந்த பணியில் ஈடுபட்டவர், இந்தியா மற்றும் இங்கிலாந்து அரசுகளின் விருதுகளை வென்றவர். பெலிந்தாவின் தந்தை ராபர்ட் அவர்களும் மக்கள் நலனுக்காக போராடியவர். இவரும் சர்வதேச விருதுகளை வென்றவர். எனவே பெலிந்தாவிற்கு வனத்தின் மேல் ஒரு ஈடுபாடு இருந்து வந்தது. இந்தியாவின் வனம் மற்றும் வன உயிரினங்கள் பாதுகாப்புக்காக தொடர்ந்து போராடிவரும், பெலிந்தா, Wildlife Protection society of India -ன் தலைமை இயக்குனராக பணியாற்றி வருகிறார். பீகாரில் உள்ள புலிகள் காப்பகங்களில் வளர்ந்த இவர், சிறு வயதிலேயே புலிகளை புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உள்ளவராக விளங்கினார். BBC மற்றும் National Geographic channel க்காக இவர் புலிகள் பற்றிய ஆவணப் படங்களையும் தயாரித்துள்ளார். இவர் இயக்கிய Land of the Tiger என்ற படத்திற்காக Emmy Award மற்றும் பதினான்கு சர்வதேச விருதுகளையும் இவர் வென்றுள்ளார்.


Wildlife Protection society of India (http://www.wpsi-india.org) என்ற அமைப்பை தொடங்கி, இந்தியாவில் புலிகள் வேட்டையை தடுப்பதற்க்காக போராடிவருகிறார். 2003 ஆம் ஆண்டு இவரின் பெற்றோர்கள் வென்ற விருதான Officer of the Order of the British Empire என்ற உயரிய விருதை இவரும் வென்றார்.


வாழ்நாள் முழுவதும் புலிகளுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டு வாழும் இவர், புலிகளின் அன்னை அல்லவா? பெண்களை பூக்களோடு ஒப்பிடும் கவிஞர்கள், பெலிந்தாவை புலியோடு மட்டுமே ஒப்பிட முடியும்.
Post a Comment

0 Comments