தொடக்கத்தின் தொடக்கமே

இனி நல்லவர்கள் அரசியலுக்கு வர முடியாது, நேர்மையாக இருந்தால் பிழைக்க முடியாது,  ஊழல் என்பது ஒழிக்கவே முடியாத ஒன்று, காந்தியம் என்பது முற்றிலும் செத்துப்போய் விட்டது, இப்படி பேசிக்கொண்டிருந்தவர்கள் அத்தனை பேரும், அன்னா ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டத்தின் வெற்றிக்குப்பிறகு, தொண்டைக்குழியில் எச்சிலை விழுங்குகிறார்கள்.



ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை விதை விருட்சமாகி வேர் விட்டு அறுபத்தி மூன்று ஆண்டுகளாக நிலைபெற்றுவிட்ட போதிலும், இப்போது விதைக்கப்பட்டிருக்கும்  இந்த விதை, ஊழலுக்கு எதிரானது என்பதே இதன் சிறப்பு. கடந்த ஐந்து நாட்களாக கூடிய கூட்டம் அத்தனையும் தானாக சேர்ந்த கூட்டம். யாருக்கும் பணம் கொடுக்கப்படவில்லை, பிரியாணி கொடுக்கப்படவில்லை, மாறாக இந்த கூட்டம், பட்டினி கிடக்க கிளம்பிய கூட்டம். இந்த போராட்டத்தின் பலமே பட்டினிதான். லோக்பால் சட்ட மசோதாவை விரைந்து வரைவு செய்து வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், அமல் படுத்தினால் மட்டுமே, ஒரு நல்ல மாற்றத்தின் அடையாளமாக எடுத்துக்கொள்ளப்படும்.



பெண்கள் இட ஒதிக்கீடு மசோதாவை கிடப்பில் போட்டது போல, இதையும் செய்து விடக்கூடாது. கிடப்பில் போட்டால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க யாரும் தயாராக இல்லை. மீண்டும் ஒரு போராட்டத்தை மத்திய அரசு எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும். எனவே விரைந்து நிறைவேற்றினால், அது அரசுக்கு நன்மதிப்பையாவது பெற்றுத் தரும். தமிழ் தொலைக்காட்சிகள் இந்த செய்தியை முடக்கப்பார்த்தும் எந்த பயனுமில்லை. கோவையில் கூடிய மக்கள் கூட்டமே இதற்கு சாட்சி.



"ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அன்றே கலந்து கொண்டு, எதாவது முயற்சி செய்திருந்தால், இன்று நாங்கள் பட்டினி கிடக்கும் நிலை வந்திருக்காது" என்று நம் அடுத்த தலைமுறை கேள்வி கேட்க்காதிருக்க வேண்டுமெனில், நாம் வீதிகளில் இறங்கிப் போராடத்தான் வேண்டும். இந்த போராட்டம், தொடக்கத்தின் தொடக்கமே. தொடர்ந்து குரல் கொடுத்தால் நிச்சயம் மாற்றங்களை கொண்டு வரமுடியும். குரல் கொடுப்போம் நண்பர்களே... இன்னும் ஆட்டம் பாக்கியிருக்கிறது.


 படங்கள் நன்றி: தினமலர்




Post a Comment

1 Comments

  1. சமுதாயத்தில் நல்ல்வர்கள் நிற்யபேர் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் வெளீய வருவதில்லை

    ReplyDelete