Feb 28, 2011

பேரினம் Panthera : காணொளி இணைப்பு

சமீப நாட்களில் நான் பார்த்த மிகச்சிறந்த காணொளி இணைப்பு இதுவாகத்தான் இருக்கும். Panthera பேரினத்தின் விலங்குகளை அனைவருக்கும் பிடிக்கும் விதமாக கோர்த்திருப்பதுடன், பின்னணி இசையிலும் மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்கள். ஹிமான்ஷுவின் இந்த காணோளியை ஒவ்வொருவரும் காண வேண்டும் என்பதே என் விருப்பம். அழிவில் இருந்து இவற்றை மீட்பது பற்றிய ஒவ்வொரு தனி மனிதனின் சிந்தனையும் செயல்பாடுகளும் மிகப்பெரிய மற்றதை உருவாக்க வேண்டும்.


குறைந்தபட்சம் நன்றாக செயல்படும் அதிகாரிகளுக்கு பாராட்டு கடிதங்கள் எழுத வேண்டும். இணையத்தின் மூலமாக அவர்களுடைய முகவரிகளை தேடி, உங்கள் கைப்பட ஒரு கடிதம் எழுதி பாராட்டுங்கள். நம்முடைய பாராட்டும் ஆதரவும் மட்டுமே வனத் துறை அதிகாரிகளை நேர்மையுடனும், சிறப்புடனும் செயல்படவைக்கும். இதை செய்வதால் மாற்றம் ஏற்படுமா என சந்தேகிக்க வேண்டாம். நான் ஏற்கனவே செய்து வருகிறேன். நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். மாற்றம் நிச்சயம்.

Feb 27, 2011

இருவாச்சிகளுக்கு புதிய சிக்கல்

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கேரள மாநிலத்திற்கு உட்பட்ட அழகிய வனம் அதிரபில்லி மற்றும் வளச்சல். கேரள அரசு புதிதாக திட்டமிட்டிருக்கும் அணை மின் நிலையம் தொடங்கப்பட்டால் இந்த அழகிய வனம் மட்டுமல்ல, அதில் வாழ்ந்துவரும் மிகவும் அரிதான அழகான இருவாச்சி பறவைகளை நாம் இழக்க வேண்டியது வரும். சுற்றுச் சூழல் ஆர்வலர் திரு.மாதவ் அவர்கள் மார்ச் மாதம் இறுதிக்குள் சமர்பிக்கபோகும் அறிக்கையை பொறுத்தே எதுவும் நடக்கும். ஏற்கனவே இந்த இருவாச்சி பறவைகளின்  எண்ணிக்கை குறைந்து வருவதோடு பார்ப்பதற்கே அரிதாகிவிட்டது. பசுமை மாறா மழை காடுகளில் வசிக்கும் இந்த அற்புத பறவை கேரளாவில் வேறு எங்கும் கிடையாது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி வரும் 57 இருவாச்சி பறவைகள் மட்டுமே இந்த வனப் பகுதியில் மிச்சம் உள்ளது.

எத்தனை எத்தனை பிரச்சனைகளோ ஏதும் அறியா உயிர்களுக்கு.
அத்தனைக்கும் குரல் கொடுப்போம் அழகிய வனம் படைப்போம்.

Feb 26, 2011

பருவ நிலை மாறுகிறது


BASIC நாடுகளான பிரேசில், தென் ஆப்ரிக்கா, இந்தியா மற்றும் சீனா ஆகியவற்றுக்கு இடையிலான பருவ நிலை மாற்றம் குறித்த கலந்துரையாடல் மாநாடு இன்றும் நாளையும் டெல்லியில் நடக்கிறது. இந்த முறை இந்த கலந்துரையாடல் இந்தியாவில் நடப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. காலநிலை மாற்றம் பற்றி ஆக்கப்பூர்வமான மற்றும் நேர்மையான நிகழ்ச்சியாக இது நடைபெற வேண்டும். ஓவ்வொரு நாடும் காலநிலை மாற்றத்திற்கு மற்ற நாடுகளை கை காட்டாமல், ஒவ்வொருவரும் தன் பங்கை உணர்ந்து செயல்பட வேண்டிய காட்டயத்தில் உள்ளோம் என்பதை உணர வேண்டும்.

உண்மையில் புவி வெப்பமாதல் மிகப்பெரிய சிக்கலான பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில், அரசின் செயல்பாடுகளை விட, மக்களின் செயல்பாடுகள் அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட. ஒவ்வொரு தனி மனிதனும், சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு துணை புரிய வேண்டும். என்ன செய்ய போகிறீர்கள்?

Feb 25, 2011

மீண்டும் சிவிங்கப்புலிகள்

Project Cheeta என்ற திட்டத்தின் மூலமாக இந்தியாவில் மீண்டும் சிவிங்கப்புலிககளை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது. இந்தியாவில் இருந்த ஆசிய சிவிங்கப்புலிகள் வேட்டைகளின் மூலமாக முழுவதுமாக அழித்து ஒழிக்கப்பட்ட நிலையில் தற்போது தென் ஆப்ரிக்காவில் இருந்து சிவிங்கப்புலிகளை (ஆப்ரிக்க சிவிங்கப்புலிகள்) இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட வனப் பகுதிகளில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய என்ற இந்த அழகிய நிலம் ஒரு காலத்தில் எத்தனையோ விலங்குகளுக்கு சொந்தமாக இருந்தது. உலகின் வேறு எந்த நாடுகளுக்கும் இல்லாத பெருமை இந்தியாவுக்கு இருந்தது. சிங்கம், புலி, சிவிங்கப்புலிகள் மற்றும் சிறுத்தை புலி இந்த நான்கு விலங்குகளும் இந்தியா என்ற ஒரே தேசத்தில் வாழ்ந்தன.

புலிகளின் நிலை பற்றி நன்கு அறிவீர்கள்.
சிங்கங்கள் (ஆசிய சிங்கங்கள்) குஜராத்தின் கிர் காடுகளில் மட்டுமே வாழ்கின்றன.
சிறுத்தை புலி (Leopard) இந்தியா முழுக்க பரவி இருக்கும் போதிலும், அவையும் நிறைய அச்சுறுத்தலை சந்திக்கவே செய்கின்றன.
சிவிங்கப்புலிகள்(Cheeta) இன்று இந்தியாவின் எந்த வனப் பகுதியிலும் ஒன்று கூட மிச்சம் இல்லை.

மத்திய அரசு சிவிங்கப்புலிகளின் வாழ்வதற்கான தகுந்த வனம் எதுவாக இருக்கும் என்பதை பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு தேர்ந்தெடுத்துள்ளது. சிவிங்கப்புலிகளின் இரை உணவு எங்கு சரியானபடி கிடைக்கும் மற்றும் சிவிங்கப்புலிகள் வாழ்வுக்கு தேவையான இட வசதிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த வனப் பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ பல்பூர் வன விலங்கு சரணாலயம்
ராஜஸ்தானில் உள்ள ஷாகர்ஹ் வனப்பகுதி
மத்திய பிரதேசத்தில் உள்ள நௌராதேஹி வனவிலங்கு சரணாலயம்

இந்த மூன்று வனப்பகுதிகளும்சிவிங்கப்புலிகளுக்கு ஏற்புடையதாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இயற்கை சமநிலையை உறுதி செய்வதில் ஊண் உண்ணிகளுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. எனவே சிவிங்கப்புலிகளை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவருவது மிகவும் வரவேற்கத்தக்க செய்தி. அதே சமயம் இந்த திட்டத்திற்கு மாநில அரசுகளும் முழு ஒத்துழைப்பு தர வேண்டியுள்ளது. நாம் இழந்த ஒன்று மீண்டும் நமக்கு கிடைக்கும் போது, ஒரு திருவிழா மக்கள் இதை கொண்டாடும் மனப்பக்குவம் வரவேண்டும். தற்போது கூட நாம் வரவழைப்பது ஆப்ரிக்க சிவிங்கப்புலிகளே. ஆசிய சிவிங்கப்புலிகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் ஈரானில் இன்றும் மிச்சம் இருக்கிறது. அவற்றையும் இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும். இந்தியாவிற்கு கொண்டு வந்தால் அவற்றின் எண்ணிக்கையும் மேன்படும். ஆசிய சிறுத்தைகளை அழிவில் இருந்து காப்பாற்றி விட முடியும்.

உலகின் அழகிய நிலத்தில் பிள்ளைகளாக பிறந்து விட்டு, இதை கூட நம்மால் செய்து காட்ட முடியாதா என்ன?

Feb 20, 2011

சிட்டுக் குருவிகள் தினம், இணைந்திருங்கள் நண்பர்களே..!!!

கருப்பொருள் : சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு
நாள்: 20.03.2011
நேரம்: 10:00 AM to 17:00PM
இடம்: அக்ஷ்யா பள்ளி உள்அரங்கம், பழனி
அமைப்பு: Palani Hills Conservation Council (http://www.palnihills.org/)

சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதற்க்கான காரணங்கள் பற்றியும், சிட்டுக்குருவிகளை அழிவிலிருந்து பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். நிகழ்ச்சிக்கு முதல் நாள் (19.03.2011) பழனி மற்றும் சுற்று வட்டார கிராம மக்களை நேரடியாக சந்தித்து, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அழைத்துவரவும், பிரசுரங்களை விநியோகிக்கவும் தன்னார்வலர்கள் தேவை.

நிகழ்ச்சி நடைபெறும் அதே நாள் (20.03.2011), மற்ற ஊர்களிலும் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை நீங்களே மேற்கொள்ளலாம். பிரசுரத்தை மின்னஞ்சல் மூலமாக முன்னரே அனுப்பி வைக்கிறேன். அதன் நகல்களை உங்கள் ஊரின் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விநியோகித்து, விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். பழனியில் நேரடியாக வந்து தன்னர்வலரகவும் பங்கேற்க்கலம். மேலும் விவரங்களுக்கு என்னுடைய வலைப்பூவில் இணைந்திருங்கள். (http://ivansatheesh.blogspot.com/)

Feb 19, 2011

குரல் கொடுப்போம்

புலிகளை காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணம் எல்லா மனிதர்களுக்கும் இருக்கிறது. கல்லூரிகளில் பேசும்போது மாணவர்களின் ஆர்வத்தை புரிந்துகொள்ள முடிகிறது. எப்படியும் புலிகளை காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது.ஆனால்  நாம் எடுக்கும் முயற்சிகளில் தான் தேக்கம். இந்த தேக்கம் நீங்கினால், நல்ல காலம் புலிகளுக்கும் மட்டுமல்ல, மனிதர்களுக்கும்.இந்திரா காந்தியில் முயற்சியால் 70 களில் அழிவில் இருந்த புலிகள் மீண்டன. தற்போது அதையும் விட துரிதமான நடவடிக்கையும், மக்கள் சக்தியும் தேவைப்படுகிறது. தொடர்ந்து குரல் கொடுப்போம். எங்கே நல்லது நடந்தாலும் பாராட்டுங்கள். திறமையான அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி வாழ்த்துங்கள். அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு சிறு வயது முதலே இயற்கையின் மீதான பிணைப்பை உண்டாக்குங்கள்.

சிட்டுக்குருவிகளை அழிவில் இருந்து காப்பாற்றுவதற்காக வரும் மார்ச் 20 அன்று பழனியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடைபெறுகிறது. இணைந்திருங்கள். அது தொடர்பான விவரங்களை தெரியப்படுத்துகிறேன். யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்.நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையோடு குரல் கொடுங்கள். மாற்றங்கள் மாறாதது எனில், அதை மாற்றுவதில் என்ன தவறு?

Feb 18, 2011

சூடிய பூ சூடற்க : திரு.நாஞ்சில் நாடன்

திரு.நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதிய சிறுகதை தொகுப்பு வாசித்தேன். சில கதைகள் கட்டுரை போலத்தான் இருக்கிறது. கதையென்று நினைத்துப் பார்த்தல் கதையாக தோன்றும். ஒரு வகையில் இது வித்தை போலத்தானோ எனத் தோன்றுகிறது. கதையின் கருப்பொருள் பற்றிய செய்திகளை அவ்வப்போது பட்டியலிடுகிறார். இந்த பட்டியல் இரண்டு செய்திகளை புரிய வைக்கிறது. ஒன்று, நாம் பார்த்தும் கவனிக்காமல் போன பாதையில் இத்தனையும் இருந்தது என எடுத்துச் சொல்கிறது. மற்றொன்று திரு.நாஞ்சில் நாடன் அவர்களுக்கு இருக்கும் விஷய ஞானம். அறிவு சார்ந்த பல செய்திகளை சிறுகதையில் புகுத்தியிருக்கிறார். எதையெல்லாம் இவர் பட்டியலிடுகிறார் என்று எழுதினால் அதுவே பெரிய பட்டியலாகிவிடும்.

கும்பமுனி என்னும் கதா பத்திரத்தின் மூலமாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதுகிறார், சிறுகதை என்ற போர்வையில். ஒரு சிலருக்காவது உறைத்திருக்குமோ என்னவோ? சீப்பு இலவசமாக கிடைத்தாலும், முண்டியடித்துக்கொண்டு வாங்க செல்பவர்கள் என்று மக்களை குறை சொல்லும் இடத்தில், இவரின் பாரபட்சமற்ற எழுத்துக்கள், சாட்டையடி கொடுக்கிறது.

மேலதிகாரிக்கு குப்பை தொட்டியில் பிஸ்கட் எடுத்துக்கொடுப்பதும், கேட்பாரற்று இருக்கும் தியாகி எம்.ஜி.இராமச்சந்திரன் சிலையை கருப்பொருள் ஆக்கியிருப்பதும், மனதை பிசைகிறது.

காடுகளில் இருக்கும் மரங்களை பற்றி எழுதும்போது குறிப்பிடுகிறார்: "இறைவன் உறையும் பெரு மரத்தண்டுகள்". இந்த புத்தகத்தில் என்னை அதிகம் கவர்ந்த வரிகள் இவை தான். இதற்காகவே சாகித்ய அகாதமி கொடுக்கலாம்.

Feb 17, 2011

பசுமை தேடும் பாலைவனம் : திரு.தேன்மொழியன்


நண்பரும் கவிஞரும் ஆன திரு.தேன்மொழியன் எழுதிய "பசுமை தேடும் பாலைவனம்" என்ற புத்தகத்தை படித்தால் யாரும் அதை முதல் புத்தகம் என்று சொல்லி விட முடியாது. மரபுக் கவிதைகளில் விளையாடி இருக்கிறார். சந்தமும் எதுகை மோனையுமாய் அழகு தமிழில் அற்புதமாய் வடித்திருக்கிறார். குடும்ப உறவுகள், ஈழம், தமிழ் என பல்வேறு தளங்களில் எழுதியிருக்கிறார். கலாச்சாரம், பண்பாடு, தாலாட்டு, வேளாண்மை என கிராமியம் தெறிக்கும் இவரின் பக்கங்களை புரட்டும் நகரத்துக்கு காற்றுக்கும் மண் வாசனை தொற்றிக்கொள்ளும். கல்வியின் முக்கியத்துவத்தை தாலாட்டு மூலமாக ஒரு தாய் தன் குழந்தையிடம் பாடுவது போல எழுதியிருக்கும் பாடல் இதுவரை எங்கும் கேட்டிராத புதிய வகை தாலாட்டு.

Feb 16, 2011

நேர் நேர் தேமா : திரு.கோபிநாத்

திரு.கோபிநாத் எழுதிய "நேர் நேர் தேமா" என்ற புத்தகம் படித்தேன். கோபிநாத் சந்தித்த பிரபலங்கள் அளித்த பேட்டியின் தொகுப்பு. பெரும்பாலான பேட்டிகள் நாம் தொலைக்கட்சியில் பார்த்தவை என்றாலும், புத்தகத்தில் படிப்பது சுவராஸ்யமானதுதான். பல்வேறு துறை சார்ந்த மனிதர்களின் பேட்டிகளை தொகுத்திருப்பது சிறப்பு. சுஜாதாவின் பேட்டி இல்லாதது ஒன்றுதான் குறை.

Feb 14, 2011

நாம் ஏன் புலிகளை கொண்டாட வேண்டும்?

புலிகள் பாதுகாப்பு பற்றி எப்போது எங்கே பேசினாலும் பொதுவாக வருகிற கேள்விகள் இரண்டு.

முதலாவது: புலிகளை எதற்காக பாதுகாக்க வேண்டும்? (நேரடி பயன்பாட்டிற்கு உதவாத எதையும் அக்கறை கொள்வதில்லை என்ற முடிவில் ஒரு கூட்டம் அலைகிறது)

இரண்டாவது: புலிகள் பாதுகாப்பிற்கு தனி மனிதனின் பங்கு என்ன?

முதலாவது கேள்விக்கான விடை: புலிகளை தவிர்த்து காடுகளை பாதுகாக்க இயலாது. புலிகள் இல்லாத காடுகள், அதன் ஆரோக்கியமான தன்மையை இழந்துவிட்டது, அல்லது இயற்கை சுழற்சியில் இருந்து விடுபட்ட காடுகளில் புலிகள் வாழாது. புலிகள் இன்றி காடுகளும், காடுகள் இன்றி மழையும், மழை இன்றி வேளாண்மையும், வேளாண்மையின்றி உணவும், உணவின்றி நாமும் வாழ்தல் இயலாது. நம் உணவுக்கும் காட்டில் வாழும் புலிகளுக்கும் தொடர்பு உண்டு. எனவே நம் சுயனலத்திற்காவது புலிகளை காப்பாற்ற வேண்டும். புலிகளை காப்பாற்றிவிட்டால், காடுகளையும் காட்டில் வாழும் மற்ற விலங்குகளையும், உணவு சங்கிலியையும் காப்பாற்றியதாகிவிடும். இயற்கையை நேசிப்பவர்களுக்கு முதலாவுது கேள்வியே எழாது.

இரண்டாவது கேள்விக்கான விடை:

புலிகளை பாதுகாக்க பத்து வழிகள்:

வழிமுறை ஒன்று: பாராட்டுதல்

குறைகளை மட்டுமே பேசிப்பழகிய நாம் நிறைகளை விட்டுவிடுகிறோம். இந்த தேசத்தில் சுற்றுச்சூழல் தொடர்பாக எந்த நல்ல விஷயங்கள் நடந்தாலும், அவற்றிற்கு காரணமானவர்களை பாராட்டி கடிதம் எழுதுங்கள். உதாரணத்திற்கு, ஒரு சிறுத்தை புலி வழிதவறி கிணற்றில் விழுந்து, அதை வன பாதுகாவலர்கள் காப்பாற்றி மீண்டும் வனப்பகுதியில் விட்டால், அந்த வன அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் பாராட்டுதல்களைத் தெரிவிக்கலாம், 50 பைசாவில். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனியாக வனத்துறைக்கான வலைத்தளம் உள்ளது. அதிலிருந்து தேவையான முகவரிகளைப் பெற முடியும்.

வழிமுறை இரண்டு: தகவல் பெறும் உரிமை

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலமாக வனம் சார்ந்த தேவையான தகவல்களைப் பெற முடியும். உதாரணத்திற்கு, ஒரு குறிப்பிட்ட வனவிலங்கு சரணாலயத்தில், இருக்கும் புலிகளின் எண்ணிக்கையைக் கேட்கலாம், எண்ணிக்கை கூடியிருக்கிறது, அல்லது குறைந்திருக்கிறதா, குறைந்திருந்தால் எப்படி குறைந்தது, வேட்டையாடப்பட்டதாக இருந்தால், எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இப்படி தொடர்ந்து கேள்விகள் கேட்பதன் மூலமாக, வனப்பகுதியில் நடைபெறும் தவறுகளைக் குறைக்க முடியும்.

வழிமுறை மூன்று: விழிப்புணர்வு

பொது மக்கள், சுற்றுலா பயணிகள், மலைத் கிராம மக்கள் என எல்லோருக்குமான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

வழிமுறை நான்கு: திரையிடுதல்

"புலிகளின் ரகசியங்கள்" போன்ற  திரைப்படத்தை பள்ளிகளில், கல்லூரிகளில் நேரடியாக சென்று திரையிடுதல். அதன் மூலமாக மாணவர்களிடம் நேரடியாக கலந்துரையாடுதல்.

வழிமுறை ஐந்து: அறிவுரைகள்

புலிகள் பாதுகாப்பு தொடர்பான எண்ணங்களை, அதன் பணி தொடர்பான அலுவலர்களிடம் தெரியப்படுத்துதல். மத்திய மற்றும் மாநில அரசுகளின் வனத்துறை அமைச்சர்களுக்கு பரிந்துரை செய்தல்.

வழிமுறை ஆறு: கணக்கெடுப்பு

புலிகள் கணக்கெடுப்பிற்கு நவீன முறைகளைப் பயன்படுத்தி துல்லியமாக கணக்கெடுத்தல். சரியான இடைவேளையில் தொடர்ந்து கணக்கெடுத்து எண்ணிக்கையை உறுதி செய்ய வேண்டும். இதற்காக அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு உதவியாக இருத்தல்.

வழிமுறை ஏழு: சுற்றுலா

வனப்பகுதியில் சுற்றுலா செல்பவர்கள், நெகிழிக்கழிவுளைp போடதிருத்தல் வேண்டும். வாகனங்களில் செல்லும் போது பாடல்களை ஒலிபரப்பி அமைதியைக் கெடுக்காதிருத்தல் வேண்டும்.

வழிமுறை எட்டு: கல்வி

வனப்பாதுகாப்பு குறித்த அவசியத்தை ஆசிரியர்களும், பெற்றோர்களும் மாணவர்களுக்கு கற்பித்தல். அல்லது கற்பிக்க சொல்லி வலியுறுத்துதல்.

வழிமுறை ஒன்பது: தகவல்

புலிகளையோ அல்லது காட்டில் வாழும் மற்ற விலங்குகளையோ வேட்டையாடுபவர்கள் பற்றிய தகவல்களை உரிய அலுவலர்களிடம் தெரிவித்தல்.

வழிமுறை பத்து: காதல்

இயற்கையை காதல் செய்யுங்கள். இயற்கையிடம் அத்தனை பேரும் காதல் செய்ய தொடங்கிவிட்டால் இந்த ஒன்பது வழிமுறைக்கும் வேலை இருக்காது.

இந்த பத்து வழிமுறைகளில், குறைந்தது மூன்று வழிமுறைகளை மட்டுமாவது ஒவ்வாருவரும் பின்பற்ற தொடங்கினால், இங்கே எந்த உயிரினத்திற்கும் அழிவென்பதே இல்லை, மனிதர்களையும் சேர்த்து.

Feb 13, 2011

தபூ சங்கர் எழுதிய "கண் மையால் எழுதிய கவிதைகள்"

எப்போதாவது அரிதாகவே ஒரு சிறுகதையோ, கட்டுரையோ நம்மை மீண்டும் ஒரு முறை வாசிக்க வைக்கும். இந்த வாரம் ஆனந்த விகடனில் வெளியான தபூ சங்கர் எழுதிய "கண் மையால் எழுதிய கவிதைகள்" என்ற சிறுகதை என்னை அப்படி வாசிக்கச் செய்தது. தபூ சங்கரிடம் பிடித்த விஷயமே அவருடைய கதையில், எந்த கசப்புகளுக்கும் இடம் இருக்காது. இந்த சிறுகதையும் அப்படித்தான் இருந்தது. இதை படிக்கும்போதே புத்தகத்தில் இருந்து காதல் வழிந்து ஓடுகிறது.


காதல், தபூ சங்கரை எழுத செய்கிறதா அல்லது இவரது எழுத்து மூலமாக காதல் இன்றும் உயிர்ப்போடு இருகிறதா என தெரியவில்லை. இவரின் கதைகளில் மட்டும் தான் ரோஜா பேசுகிறது, நிலா பேசுகிறது, சமயங்களில் சாமியும் பேசுகிறது. ஆனால் எதையும் மறுப்பதற்கில்லை. இப்படியே இவர் எழுதிக்கொண்டிருந்தால் காதலிக்கு சொல்லப்படும் உவமை பொருள் யாவும் பேச தொடங்கிவிடும் என்று தான் தோன்றுகிறது.

Feb 12, 2011

மார்ச் 20, சிட்டுக்குருவிகள் தினம்வருகிற மார்ச் 20, உலக அளவில் சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது. அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை Palani Hills Conservarion Council மூலமாக ஏற்பாடு செய்ய திட்டமிட்டுருக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் தன்னார்வலராக பங்கேற்று செயல்பட விரும்புபவர்கள் மார்ச் 20ஆம் தேதியை இந்த நிகழ்ச்சிக்காக ஒதுக்கி வையுங்கள். மேலும் விவரங்களை விரைவில் தெரியப்படுத்துகிறேன். (http://www.palnihills.org/)

Feb 10, 2011

விழிப்புணர்வு முகாம் குறித்து தினமணி வெளியிட்டுள்ள செய்தி


இதுபோன்று இன்னும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடதப்படவேண்டியுள்ளது. இந்த பணியில் நான் ஒரு உறுப்பினர் மட்டுமே.

Feb 9, 2011

The way of the Tiger (Pictorial Edition) by Dr.Ullas Karanth

Dr.உல்லாஸ் காரந்த் எழுதிய The way of the Tiger என்ற புத்தகம் படித்து நீண்ட நாட்களான பின்னும், அந்த புத்தகம் குறித்த சிந்தனை தொடர்ந்து அவ்வப்போது மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. புலிகள் இன்றும் வனங்களில் உயிருடன் இருப்பதற்கு Dr. உல்லாஸ் காரந்தின் முயற்சிகள் பெருமளவு உதவி இருக்கிறது. புலிகள் கணக்கெடுப்பிற்காக Camera trapping என்ற முறையை முதல் முறையாக அறிமுக படுத்தியவரும் அவரே. தொடர்ந்து புலிகளின் பாதுகாப்புக்காக போராடிவரும் இவரின் முயற்சிகள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. ஆனால் புலிகள் பாதுகாப்புக்கு பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்பதையே அவரின் புத்தகம் தெளிவாக பேசுகிறது. புலிகள் இல்லாத உலகம் வாழ தகுதியற்றதாகிவிடும் என்பதை உரக்கச் சொல்கிறது.

Feb 8, 2011

எழுத்தாளர் திரு.ஞாநியுடன் கலந்துரையாடல்Little Flower English School.
(4th Floor auditorium),

# 47, 2nd Cross,

Sai baba Nagar,

Near Sunrise circle,

Sriramapuram,

Bengaluru 560 021.


நாள் : 10 /02 /11 வியாழன். 
நேரம்: மாலை 6 மணி

Feb 6, 2011

தியாகராஜா பொறியியல் கல்லூரி, மதுரை

புலிகள் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் நிகழ்சிக்காக நாளை, மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரியில் மாணவர்களை சந்திக்கிறேன்.

Feb 5, 2011

திரு.தமிழருவிமணியன் : சந்திப்பு

காந்திய மக்கள் இயக்கத் தலைவர் திரு.தமிழருவிமணியன் அவர்களை திண்டுக்கலில் சந்தித்து பேசினேன். கொள்கைக்காக எத்தனையோ பதவிகளை தூக்கி எறிந்த சுயநலமற்ற ஒரு மனிதரை சந்தித்து மனம் விட்டு பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது.

Feb 4, 2011

விழிப்புணர்வு பிரச்சாரம்

கொல்லேகால் மற்றும் சத்யமங்கலம் இடையிலான பிலிகிரிரங்கன் பெட்டா காடுகளுக்கு தனித் தனி குழுக்களாக சென்று திரும்பினோம். மொத்தம் ஏழு குழுக்களாக சென்று சுமார் 250 மலை கிராமங்களை சேர்ந்த மக்களிடமும் மற்றும் பள்ளி மாணவர்களிடமும் காட்டுத்தீ பரவாமல் இருக்க எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசி வந்தோம்.

மூன்று நாட்களில் ஒவ்வொரு குழுவும் முறையே 900 கி.மீ பயணம் செய்து மொத்தமாக 20000 பள்ளி மாணவர்களை சந்தித்து அவர்களிடம் பிரசுரங்களை விநியோகம் செய்தோம். பல்வேறு மலை கிராமங்களிலும் குழந்தைகளை சந்தித்து பேசி வந்தது மிகுந்த உற்சாகம் அளிக்கிறது.