May 28, 2011

வாரணம் ஆயிரம்; வழி செய்வோம்

யானைகளை அழிவில் இருந்து காப்பாற்ற மத்திய அரசு புதிய முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறது. உலகில் யானைகள் அதிகம் வாழும் எட்டு நாடுகளை சேர்ந்த வனத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட மாநாடு டெல்லியில் நடைபெற்றது. ஆசிய மற்றும் ஆப்ரிக்க யானைகள், சுமார் ஐம்பது தேசங்களில் வாழ்கின்றன.போட்ஸ்வானா, காங்கோ, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, கென்யா, தான்சானியா, மற்றும் தாய்லாந்து நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், யானைகளின் பாதுகாப்பை அதிகரிக்கவும், அவற்றை அழிவில் இருந்து காக்கவும் செய்ய வேண்டிய முயற்சிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் இந்த நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மூன்று முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.

  • வேட்டைகளை தடுப்பதற்கும், சட்ட விரோதமாக யானையின் உடல் பாகங்களை கடத்தப்படுவதை தடுப்பதற்காகவும் தகவல் பரிமாற்றங்களை இந்த நாடுகள் மேற்கொள்ளும். மனிதர்களுக்கும் யானைகளுக்கும் ஆன சிக்கல்களை களைவதற்காக உள்ளூர் அமைப்புகள் உருவாக்கப்படும்.

  • யானைகளின் எண்ணிக்கையை கண்காணிக்க புதிய அறிவியல் முறைகள் பின்பற்றப்படும்.

  • தொலைநோக்கு அடிப்படையில், விழிப்புணர்வு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

ஐம்பது சதவீதம் ஆசிய யானைகள் இந்தியாவில் மட்டுமே வாழும் சூழ்நிலையின் அவை சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் ஆராயப்பட்டது. வெவ்வேறு இயற்கை சூழ்நிலையில் வாழும் இந்த யானைகள், சாலை மற்றும் ரயில் திட்டங்களின் காரணமாக நிறைய சிக்கல்களை சந்திக்கின்றன. இதனால் அவற்றின் வசிப்பிடங்கள் பிரச்சனைக்கு உள்ளாகின்றன.


1992 -ல் தொடங்கப்பட்ட யானைகள் செயல்திட்டம் (Project Elephant), யானைகள் வாழும் மாநிலங்களுக்கு, யானைகளின் வாழும் வனப்பகுதியை பாதுகாக்கவும், யானைகளை அழிவில் இருந்து காப்பாற்றவும் நிதி உதவி அளிக்கிறது. தற்போது, புலிகளுக்கு செயல்படும் தேசிய ஆணையத்தை (National Tiger Conservation Authority) போல, யானைகளுக்கும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது (National Elephant Conservation Authority).


உணவுக்காகவும், தண்ணீர் தேவைக்காகவும் யானைகள் வனங்களை விட்டு வெளியேறுவதும் அவற்றை மக்கள் விரட்டுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. யானைகள் தேசிய ஆணையம் இந்த பிரச்சனைக்கு நிச்சயம் தீர்வு காண வேண்டிய அவசியத்தில் உள்ளது. இல்லையேல் "யானைகள் அட்டகாசம்" என்ற செய்தி தொடர்ந்து ஒளிபரப்பாகும். உண்மையில் யார் அட்டகாசம் செய்வது? யானைகளா? இல்லை மனிதர்களா?


May 20, 2011

குறும்படம் : பிடாரன்


எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் கதை வசனத்தில் உருவான குறும்படம் : பிடாரன். நிச்சயம் பார்க்க வேண்டிய குறும்படம்.

திரு.அருண் பிரசாத் சிறப்பாக இயக்கியிருக்கிறார்

May 19, 2011

மிளா (Sambar Deer)

தெற்கு ஆசியாவின் பல்வேறு நாடுகளிலும் பரவி இருக்கும் மான் மிளா. நம்முடைய வனப் பகுதியில் வாழும் மான்களிலேயே அதிக உயரமும் பருமனும் கொண்ட மான்கள் மிளா மான்கள் தான். சுமார் 300 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கின்றன. புள்ளி மான்களை போன்று பெரிய குழுக்காளாக இவை வாழ்வதில்லை.ஆண் மான்களுக்கு பெரிய கொம்புகளும், பெண் மான்கள் கொம்புகள் இல்லாமலும் இருக்கும். வனப்பகுதிகளில் தண்ணீர் அதிகம் இருக்கும் பகுதிகளில் இவற்றை பார்க்க முடியும். மிளா பெரும்பாலும் ஒரு குட்டி மட்டுமே ஈனுகிறது. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இதனை அழியு வாய்ப்புள்ள இனம் என்று அறிவித்துள்ளது. சமயங்களில் வனங்களை விட்டு வெளியேறி கிராமங்களுக்குள் வந்து விடுவதுண்டு. தமிழ் நாட்டில் மேற்கு பகுதியை ஒட்டிய வனங்களில் இவை வாழ்கின்றன.கர்நாடகாவின் பெரும்பாலான தேசிய பூங்காக்களில் இவை காணப்படுகின்றன. புலிகள் தன் உணவின் தேவையை பெரிதாக தேர்ந்தடுப்ப்பதால் இவை புலிகளால் வேட்டையாடப்படுகின்றன.புலிகள் இவற்றை மறைந்திருந்தே தாக்குகின்றன. இவற்றின் கொம்புகள் புலியை பதம் பார்த்துவிடக் கூடும். எனவே மற்ற மான்களை துரத்துவது போல இவற்றை துரத்தி தாக்குவதை விடவும் மறைந்திருந்தே கொல்கின்றன.


நாகர்ஹோலே மற்றும் பிலிகிரி ரங்கம் பெட்டா வனப் பகுதிகளில் இவற்றை அதிகம் பார்த்திருக்கிறேன். நீரோடைகளில் காத்திருந்தால் இவை தென்படக் கூடும். ஓடுவதற்கு முன்பு நம்மை நன்கு உற்று பார்த்துவிட்டுத் தான் ஓடத் தொடங்கும்.
May 18, 2011

(திருக்குறள்) Thirukkural about Biodiversity

மார்ச் மாத "பூ உலகு" இதழை வாசித்தபோது, திரு.தியடோர் பாஸ்கரன் அவர்கள், தன்னுடைய கட்டுரையில் ஒரு திருக்குறளை குறிப்பிட்டிருந்தார்.


பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. 


 
இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் இயற்கை சமநிலைக்கு அவசியமானது என்பதை இந்த குறள் வலியுறுத்துகிறது. வள்ளுவர் குறிப்பிட்டிருப்பது பல்லுயிரியம். இந்த உலகம் படைக்கப்பட்டது மனிதர்களுக்கு மட்டுமல்ல. எல்லா உயிர்களுக்கும் இங்கு பங்கு உண்டு.


ஒவ்வொரு உயிரியும் ஒன்றையொன்று சார்ந்தே வாழ்கிறது. எப்படி பகிர்ந்து உண்ண வேண்டும் என்பதை இயற்கை எல்லா உயிரினங்களுக்கும் சொல்லி வைத்திருக்கிறது. அதை எல்லா உயிரினங்களும் இயல்பாகவே பின்பற்றுகின்றன. ஒரு புலி தன் உணவின் தேவைகேற்ப தன் எல்லையை நிர்ணயிக்கிறது. தன் எல்லையை விரிவு படுத்தி ஒட்டு மொத்த வனத்தையும் தன் கைக்குள் வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. எல்லா உயிர்களும் தனித்தோ, குழுவாகவோ எல்லைகளை தன் உணவு சார்ந்து நிர்ணயிக்கிறது.


மனிதன் தன் எல்லைகளை வளர்த்துக் கொண்டே போகிறான்.வனத்தையும் வன வாழ் உயிர்களையும் துன்புறுத்துகிறான். இதையெல்லாம் வள்ளுவனால் எப்படி முன்கூட்டியே உணர்ந்து உபதேசிக்க முடிந்தது என்பது புரியவில்லை. வள்ளுவன் விஞ்ஞானியோ என்று கூட தோன்றுகிறது.
May 17, 2011

கேளையாடு (Muntjac)

கேளையாடு என்ற சொல்லே இதை ஒரு வகை ஆடு என நினைக்கத் தோன்றும். ஆனால் இது ஒரு வகை மான். தெற்காசியாவின் பெரும்பாலான இடங்களில் பரவி காணப்படும் இவை, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதை ஒட்டிய வனப் பகுதிகளிலும் காணப்படுகிறது. இவை எழுப்பும் ஒலி நாய் குரைப்பதை போன்று உள்ளதால் இது ஆங்கிலத்தில் Barking Deer (Muntjac) என அழைக்கப்படுகிறது. புள்ளி மான்களை போல கூட்டமாக வாழாது. இவை பெரும்பாலும் தனித்தே வாழ்கிறது.


 ஆபத்து நேரங்களில் இவற்றின் ஒலி தனித் தன்மையுடன் இருக்கும். அதன் மூலம் மற்ற மான்களுக்கு இது ஆபத்தை உணர்த்தும். பலமுறை வனப் பகுதிகளில் இந்த மானை நேரடியாக பார்த்திருக்கிறேன். நொடியில் ஓடி மறைந்துவிடும். பிறந்து இரண்டு ஆண்டுகளில் இனப்பெருக்கம் செய்யும். ஆண் மான்களுக்கு சிறிய கொம்புகள் உண்டு.வேட்டையின் காரணமாக இவை அச்சுறுத்தலை சந்திக்கின்றன.சுமார் 12000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த மான்கள் வாழ்ந்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அளவில் சிறியதாக இருப்பதால் சிறுத்தை புலிகளுக்கு ஏற்ற உணவாக இது இருக்கிறது. அடர்ந்த வனப் பகுதிகளில் இயற்கை சமநிலைக்கு முக்கிய காரணியாக இவை விளங்குகின்றன.

1925-ஆம் ஆண்டு இங்கிலாத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, இவை தற்போது அதிக அளவில் ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளிலும் உலவுகின்றன. 
May 14, 2011

காணாமல் போகும் நீர் நாய்கள்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி இருந்த நீர் நாய்கள் இன்று அரிதாகிவிட்டன. நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை கொண்ட இந்த நீர் நாய்கள் பல்வேறு  சீதோசன நிலைகளிலும் வாழக் கூடியது.


சுமார் 10 ஆண்டுகள் வரை வாழும் இவை, பிறந்து இரண்டு ஆண்டு முதல் குட்டி போடத் துவங்கும். பிறந்து இரண்டு மாதம் தொடங்கி நீரில் நீந்துகிறது. பெரும்பாலும் மீன்களையே உண்டு வாழும். இது தவிர தவளை, நண்டு போன்றவற்றையும் உணவாக எடுத்துக் கொள்கிறது. உலகம் முழுவதும் பல்வேறு வகையான நீர் நாய்கள் வாழ்கின்றன. குறிப்பாக கடலில் வாழும் நீர் நாய்கள் பசிபிக் பெருங்கடலில் அதிகமாக காணப்படுகின்றன.

நீர் நிலைகளின் தரத்தை அங்கு வாழும் நீர் நாய்களை வைத்து தெரிந்து கொள்ளலாம். நீர் நாய்கள் வாழாத இடம் இயற்கை சுழற்சியில் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிபடுத்திக்கொள்ளலாம். 


அதிகப்படியான மீன் பிடிப்புகளால் இவை பாதிப்புக்கு உள்ளாகின்றன. மேலும் இவற்றின் தோல்களுக்காக அதிக அளவில் வேட்டையாடப்படுகின்றன. 2000 -ல் மட்டும் சுமார் 326 நீர் நாய்களின் தோல்கள் வட இந்தியாவில் கைப்பற்றப்பட்டன. இவற்றை வேட்டைகளில் இருந்து பாதுகாத்தால் நம் ஊரை சுற்றி இருக்கும் குளம், ஏரிகளில் கூட இவை விளையாடுவதைக் காண முடியும். மிகவும் எளிமையாக பாதுகாக்கப்படக் கூடிய உயிரினங்களைக்கூட நாம் இழந்து வருகிறோம்.
May 6, 2011

வெளி மான் (Black Buck)

இன்றைய இந்தியாவில் வாழும் விலங்குகளில் மிகவும் வேகமாக ஓடும் திறன் மிக்கது வெளி மான் (Black Buck). ஆண் மான்கள் கரும்பழுப்பு நிறமாகவும், பெண் மான்கள் செம்பழுப்பு நிறமாகவும் காணப்படும். ஆண் மான்களுக்கு திருகு அமைப்பிலான கொம்புகள் உண்டு.அடர்ந்த காடுகளை விடவும், ஓரளவு சமவெளிப் பகுதிகளில் தான் இவை தங்களின் வாழ்விடங்களை அமைத்துக் கொண்டிருந்தன. இன்று இவற்றின் வாழ்நிலை தீவுகளை போலாகிவிட்டது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் வாழும் இவை தமிழ் நாட்டின் சில பகுதிகளிலும் வாழ்கின்றன.

தமிழ் நாட்டில் கோடியக்கரை, சத்தியமங்கலம் மற்றும் வல்ல நாடு ஆகிய வனவிலங்கு சரணலாயங்களில் வாழ்கின்றன. வல்ல நாடு வன விலங்கு சரணாலயம் இந்த மான்களுக்கு என்று உருவாக்கப்பட்டது. "வல்ல நாடு வெளி மான்கள் சரணாலயம்" தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் உள்ளது.சென்ற ஆண்டு, இங்கு நான் நேரடியாக சென்ற போது, அங்கிருந்த வனத் துறை அதிகாரிகளிடம் பேசினேன். தற்சமயம் வெறும் 20 மான்கள் மட்டுமே அங்கு உள்ளதாக சொன்னார். மான்கள் சரணாலயத்தில் இவ்வளவு குறைவான எண்ணிக்கையில் மான்கள் இருப்பது மிகவும் வேதனை. இந்த மான்கள் ஒரு சிறிய வனப் பகுதிக்குள் தஞ்சம் அடைந்துள்ளன.

கோடியக்கரைக்கும் வல்ல நாட்டுக்கும் மான்களால் இடம்பெயர முடியாது. இது போன்ற சமயங்களில், குறைந்தபட்சம் அருகில் உள்ள வேறு சில வனப் பகுதிகளுக்கு செல்லும்வகையில் பாதை (Corridor ) அமைக்கப்பட்டால் இவற்றின் எண்ணிக்கை பெருக வாய்ப்புள்ளது.சிங்கங்கள் அதிகம் வாழும் குஜராத்தின் கிர் காடுகளில் இவை அதிகம் வாழ்கின்றன. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் (IUCN) இது அச்சுறு நிலையை அண்மித்த இனம் ( Near Threatened) என்று அறிவித்துள்ளது.  சல்மான் கானால் வேட்டையாடப்பட்டது இந்த வகை மான்தான்.


May 5, 2011

பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் : பகுதி 3

IUCN - International Union for Conservation of Nature - பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம், உலகில் உள்ள எல்லா உயிரினங்களையும் முறையாக வகைப்படுத்துகிறது.

உலகில் வாழும் உயிரினங்களை மூன்று முக்கிய நிலைகளில் பிரிக்கிறது.

குறைந்த சூழ் இடர் ( At low risk)
இன அச்சுறுத்தல் ( Threatened)
இன அழிவு (Extinction)


"குறைந்த சூழ் இடர்" என்ற நிலையில் உள்ள உயிரினங்கள் மூன்றாக பிரிக்கப்படுகின்றன.

அ. காப்பு சார்ந்த இனம் (Conservation Dependent ) 
உதாரணம் : சிறுத்தை சுறா. (Leopard Shark) இவை முறையாக பாதுகாக்கப்படாவிட்டால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் அச்சுறுத்தல் பட்டியலில் சேர்ந்து விடும்.

 Leopard Shark

ஆ. அச்சுறு நிலையை அண்மித்த இனம் ( Near Threatened) 
உதாரணம் : வேங்கை புலி. (Jaguar) தென் அமெரிக்காவில், அமேசான் காடுகளில் அதிகம் வாழும் இவையும், வேட்டைகளை சந்திப்பதால் சிக்கலில் உள்ளன.

 Jaguar

 Gray Parrot
Striped Hyena

இ. தீவைப்புக் கவலை குறைந்த இனம் (Least Concern ) 
உதாரணம் : மயில். (Indian Peafowl) அழியும் வாய்ப்புகள் ஏதும் இல்லை. இருப்பினும் ரசாயன, பூச்சி கொல்லி மருந்துகளால் பாதிக்கப்படுவதுண்டு.


PeafowlMay 4, 2011

பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் : பகுதி 2

IUCN - International Union for Conservation of Nature - பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம், உலகில் உள்ள எல்லா உயிரினங்களையும் முறையாக வகைப்படுத்துகிறது.

உலகில் வாழும் உயிரினங்களை மூன்று முக்கிய நிலைகளில் பிரிக்கிறது.

குறைந்த சூழ் இடர் ( At low risk)
இன அச்சுறுத்தல் ( Threatened)
இன அழிவு (Extinction)


"இன அச்சுறுத்தல்" என்ற நிலையில் உள்ள உயிரினங்கள் மூன்றாக பிரிக்கப்படுகின்றன.

அ.மிக அருகிய இனம் ( Critically Endangered) 
உதாரணம் : அமுர் சிறுத்தை புலி. (Amur Leopard) தென் கொரியா, வட கொரியா மற்றும் சீனாவின் கிழக்கு பகுதியில், மிகவும் போராடிக்கொண்டிருக்கின்றன.

 Amur Leopard

 Iberian Lynx

 Baishan fir

ஆ. அருகிய இனம் ( Endangered) 
உதாரணம் : பனிச் சிறுத்தை. (Snow Leopard) இந்தியா, நேபாளம், சீனா மற்றும் சில நாடுகளில் வாழும் இவை சந்திக்கும் அச்சுறுத்தல் வேட்டை.  இமயமலையின் பனிச் சிகரங்களில் வாழும் இவை, உலகின் வேறு எந்த பணி பிரதேசங்களிலும் கிடையாது.

 
Giant Panda
  
Malayan Tapir
  Dhole


Asian Elephant


இ. அழிய வாய்ப்புள்ள இனம் (Vulnerable) 
உதாரணம் : இந்திய காண்டாமிருகங்கள். (Indian Rhinoceros)  வேட்டையின் காரணமாக முற்றிலும் அழியும் தருவாயில் இருந்து தற்போது ஓரளவிற்கு காப்பாற்றப்பட்டுள்ளது.


CheetahKomodo Dragon

May 3, 2011

பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் : பகுதி 1

IUCN - International Union for Conservation of Nature - பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம், உலகில் உள்ள எல்லா உயிரினங்களையும் முறையாக வகைப்படுத்துகிறது.

உலகில் வாழும் உயிரினங்களை மூன்று முக்கிய நிலைகளில் பிரிக்கிறது.

குறைந்த சூழ் இடர் (At low risk )
இன அச்சுறுத்தல் ( Threatened)
இன அழிவு (Extinction)

இவற்றில் "இன அழிவு" என்ற நிலையில் உள்ள உயிரினங்கள் இரண்டாக பிரிக்கப்படுகின்றன.

அ. அற்றுவிட்ட இனம் ( Extinct)
உலகில் இருந்து முற்றிலும் அழிந்து விட்ட உயிரினங்கள் இந்த பட்டியலில் வரும். உதாரணம் : ஜாவா புலிகள். (Java Tiger) இந்த இனம் முற்றிலும் அழிந்துவிட்டது. முக்கிய காரணம் வேட்டை. பருவநிலை மாற்றங்கள் காரணமாகவும், வனம் தொடர்ந்து அழிக்கப்படுவதாலும், இன்றைய சூழ்நிலையில், இயற்கை சமநிலைக்கு முக்கிய காரணியாக விளங்கும் பல உயிரினங்கள் அழிவை சந்திக்கின்றன.

இப்படி நாம் இழந்த விலங்குகள், பறவைகள், பூச்சிகள், இருவளவிகள், ஊர்வன, மீன் இனங்கள் ஏராளம். கடந்த நூறு ஆண்டுகளில் இழந்த உயிரினங்கள் மிகவும் அதிகம். அவற்றின் புகைப்படங்களும், ஓவியங்களும் மட்டுமே தற்போது மிச்சம்.

 Java Tiger

Mascarinus Parakeet

Quagga

ஆ. இயலிடத்தில் அற்று விட்ட இனம் ( Extinct in the Wild)

உலகில் உள்ள எந்த வனப் பகுதியிலும் இல்லாத, மனிதர்களின் பராமரிப்பில், மிருக காட்சி சாலைகளில் மட்டுமே இருக்கும் உயிரினங்கள். உதாரணம் : பார்பரி சிங்கம். (Barbary Lion) ஸ்லோவேனியாவின் மிருக காட்சி சாலையில் மட்டுமே உள்ளது. வனங்களில் இருந்து அழிந்துவிட காரணம் வேட்டை.

Barbary Lion


Scimitar Oryx


May 2, 2011

செய்திகள் வாசிப்பது நீங்கள்

செய்தி : 1

இந்தியாவின் மிகப் பெரிய புலிகள் சரணாலயங்களில் ஒன்றான ரந்தம்போர் புலிகள் சரணாலயம், அதிக அளவிலான சுற்றுலா பயணிகளை ஈர்த்து  வருகிறது. மிக எளிதில் புலிகளை நேரில் பார்த்துவிட முடியும். இந்த புலிகள் சரணாலயத்திற்குள் கட்டப்பட்டு வரும் அணைகள் மற்றும் நீர் தேக்கங்கள், வன விலங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக இருப்பதால் அவற்றை உடனே நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கன ரக வாகனங்களை வனத்துக்குள் ஓட்டி செல்வதாலும், அணை கட்டும் போது ஏற்படும் இடயூறுகளாலும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில், வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் படி, தற்சமயம் நடந்து கொண்டிருக்கும், கட்டுமான பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. மாநில அரசுகள், ஒரு திட்டத்தை கொண்டு வரும் போது, அது வன விலங்குகளை பாதிக்காத வண்ணம் செயல்படுத்த வேண்டும். புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இது போன்ற பணிகள் நடந்தால், நிச்சயம் அது விலங்குகளை பாதிக்கும் என்பதை உணர வேண்டும்.


செய்தி : 2

வனப் பகுதிகள் ஏற்கனவே தீவுகள் போல மாறிவிட்ட இன்றைய சூழ்நிலையில், விலங்குகள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்வது மிகவும் கடினமான காரியமாக மாறிவிட்டது. இனப்பெருக்க காலங்களிலோ, அல்லது பருவ மாற்றங்களின் போதோ, அல்லாது தண்ணீர், உணவு தேவைகளுக்காகவோ, புலிகள் இடம் மாறுவதுண்டு. வனங்களை இணைக்கும் சில பகுதிகள் மனிதர்களால் ஆக்கிரமிக்கப் படுவதால் அவை இடையூறின்றி வேறு வனப்பகுதிக்கு செல்வதில் சிக்கல் ஏற்ப்படுகிறது. இந்நிலையில் இது போன்ற பகுதிகளை பாதுகாப்பது முடியாது என்று, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய் ராம் ரமேஷ் கூறியுள்ளார். பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி எவ்வளவு முக்கியமோ அதே போல, விலங்குகள் செல்லும் பாதைகளும் பாதுகாக்கப் பட வேண்டும். அது முடியாது என்று அமைச்சரே கூறுவது, வேதனையான விஷயம்.
செய்தி : 3

இந்தியாவில் தற்போது செயல்படும் 39 புலிகள் காப்பகனகள் அல்லாது, மேலும் 5 வனப் பகுதிகளை புலிகள் காப்பகங்களாக அறிவிக்க மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஆனால் இன்னும் முழுமையாக நடைமுறை படுத்தப்படவில்லை. அவை:

பிளிபித், உத்தர பிரதேஷ்
பிலிகிரி ரங்கன் பெட்டா, கர்நாடகா
சுனபெடா, ஒரிசா
ரடபணி, மத்திய பிரதேஷ்
முகுன்றா, ராஜஸ்தான்
May 1, 2011

சோதிடந் தனையிகழ்

மகாகவி கடவுளுக்காக எழுதிய பாடல்களை நாம் அறிவோம். அதே மகாகவி ஆத்திசூடியில், எழுதுகிறார் "சோதிடந் தனையிகழ்". கடவுளையும், சோதிடத்தையும் பிரித்துப் பார்த்திருக்கிறார் என புரிந்து கொண்ட போது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். எனக்கு சோதிடத்தில் நம்பிக்கை கிடையாது. ஆனால் கடவுள் நம்பிக்கை உண்டு. சோதிடம் என்பது அடிப்படையில் நிறைய தவறுகளோடு உருவாக்கப்பட்ட தவறான சூத்திரங்களை கொண்ட தப்பு கணக்கு. சோதிடத்தில், சூரிய மையக் கொள்கை கிடையாது. புவி மையக் கொள்கை தான்.

அறிவியல் சூரியன் மையத்தில் இருப்பதாகவும், கோள்கள் பூமியை சுற்றி வருவதாகவும் சொல்கின்றன. ஆனால் சோதிடம் அதற்கு நேர் மாறானது. மேலும் சோதிடம் சொல்லும் கோள்களில் சூரியன் ஒன்றாக இருக்கிறது. ஆனால் சூரியன் ஒரு நட்சத்திரம் என்று அறிவியல் சொல்கிறது.

சோதிடம் சொல்லும் கோள்களில் சந்திரன் ஒன்று. சந்திரன் என்பது பூமியின் துணைக் கோள் என்று அறிவியல் சொல்கிறது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, பூமி தட்டையாக இருப்பதாக நம்பப்பட்டது. பூமியை சூரியன் சுற்றிவருவதாகவும் நம்பப்பட்டது. அதன் பிறகான அறிவியல் கண்டுபிடிப்புகளை உலகம் ஏற்றுக் கொண்டுவிட்டது.

நம் முன்னோர்கள் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிரபஞ்சத்தின் செயல்பாடுகளை கண்டுபிடித்துவிட்டனர். ஆனால் அது வளர்ச்சியடையாமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று விட்டது. இந்த கண்டுபிடிப்புகளை மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக கோள்களை கடவுளாக்கியிருக்க  வேண்டும், என்பது என்னுடைய கணிப்பு.
சோதிடத்தை அதிகம் நம்புகிறவர்கள், அது படிதான் வாழ்க்கை அமையுமென்றால் எதற்காக கடவுளை தொழ வேண்டும்? கடவுளிடம் வேண்டிக்கொண்டு  பின் எதற்காக சோதிடமும் பார்க்க வேண்டும்? சோதிடத்தின் மீதான நம்பிக்கை தேவையற்றதாகவே எனக்கு தோன்றுகிறது.

இந்த அட்சயதிருதியைக்கு வெண்மை நல்லதாம், பால், மல்லிகை, பிளாட்டினம் என்று அடுக்கிகொண்டே போகிறார்கள். வியாபாரம் செய்வதென்று ஆன பிறகு, தங்கத்துக்கு அட்சயதிருதியை போல, வெள்ளிக்கும், பிளாடினத்திர்க்கும், வைரதிற்கும் தனி தனி நாட்களை கண்டுபிடித்து வியாபாரம் செய்யலாமே.

சோதிடம் பற்றிய கருத்துக்கள் பலருக்கும் ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். என்ன செய்வது? பாரதியின் ஆத்திசூடியில் வரும் மற்றுமொரு வரியும் எனக்கு பிடித்தமானதாக இருக்கிறது "நேர்படப் பேசு".