May 6, 2011

வெளி மான் (Black Buck)

இன்றைய இந்தியாவில் வாழும் விலங்குகளில் மிகவும் வேகமாக ஓடும் திறன் மிக்கது வெளி மான் (Black Buck). ஆண் மான்கள் கரும்பழுப்பு நிறமாகவும், பெண் மான்கள் செம்பழுப்பு நிறமாகவும் காணப்படும். ஆண் மான்களுக்கு திருகு அமைப்பிலான கொம்புகள் உண்டு.



அடர்ந்த காடுகளை விடவும், ஓரளவு சமவெளிப் பகுதிகளில் தான் இவை தங்களின் வாழ்விடங்களை அமைத்துக் கொண்டிருந்தன. இன்று இவற்றின் வாழ்நிலை தீவுகளை போலாகிவிட்டது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் வாழும் இவை தமிழ் நாட்டின் சில பகுதிகளிலும் வாழ்கின்றன.

தமிழ் நாட்டில் கோடியக்கரை, சத்தியமங்கலம் மற்றும் வல்ல நாடு ஆகிய வனவிலங்கு சரணலாயங்களில் வாழ்கின்றன. வல்ல நாடு வன விலங்கு சரணாலயம் இந்த மான்களுக்கு என்று உருவாக்கப்பட்டது. "வல்ல நாடு வெளி மான்கள் சரணாலயம்" தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் உள்ளது.



சென்ற ஆண்டு, இங்கு நான் நேரடியாக சென்ற போது, அங்கிருந்த வனத் துறை அதிகாரிகளிடம் பேசினேன். தற்சமயம் வெறும் 20 மான்கள் மட்டுமே அங்கு உள்ளதாக சொன்னார். மான்கள் சரணாலயத்தில் இவ்வளவு குறைவான எண்ணிக்கையில் மான்கள் இருப்பது மிகவும் வேதனை. இந்த மான்கள் ஒரு சிறிய வனப் பகுதிக்குள் தஞ்சம் அடைந்துள்ளன.

கோடியக்கரைக்கும் வல்ல நாட்டுக்கும் மான்களால் இடம்பெயர முடியாது. இது போன்ற சமயங்களில், குறைந்தபட்சம் அருகில் உள்ள வேறு சில வனப் பகுதிகளுக்கு செல்லும்வகையில் பாதை (Corridor ) அமைக்கப்பட்டால் இவற்றின் எண்ணிக்கை பெருக வாய்ப்புள்ளது.



சிங்கங்கள் அதிகம் வாழும் குஜராத்தின் கிர் காடுகளில் இவை அதிகம் வாழ்கின்றன. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் (IUCN) இது அச்சுறு நிலையை அண்மித்த இனம் ( Near Threatened) என்று அறிவித்துள்ளது.  சல்மான் கானால் வேட்டையாடப்பட்டது இந்த வகை மான்தான்.


No comments:

Post a Comment

Would you like to follow ?