சோதிடந் தனையிகழ்

மகாகவி கடவுளுக்காக எழுதிய பாடல்களை நாம் அறிவோம். அதே மகாகவி ஆத்திசூடியில், எழுதுகிறார் "சோதிடந் தனையிகழ்". கடவுளையும், சோதிடத்தையும் பிரித்துப் பார்த்திருக்கிறார் என புரிந்து கொண்ட போது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். எனக்கு சோதிடத்தில் நம்பிக்கை கிடையாது. ஆனால் கடவுள் நம்பிக்கை உண்டு. சோதிடம் என்பது அடிப்படையில் நிறைய தவறுகளோடு உருவாக்கப்பட்ட தவறான சூத்திரங்களை கொண்ட தப்பு கணக்கு. சோதிடத்தில், சூரிய மையக் கொள்கை கிடையாது. புவி மையக் கொள்கை தான்.

அறிவியல் சூரியன் மையத்தில் இருப்பதாகவும், கோள்கள் பூமியை சுற்றி வருவதாகவும் சொல்கின்றன. ஆனால் சோதிடம் அதற்கு நேர் மாறானது. மேலும் சோதிடம் சொல்லும் கோள்களில் சூரியன் ஒன்றாக இருக்கிறது. ஆனால் சூரியன் ஒரு நட்சத்திரம் என்று அறிவியல் சொல்கிறது.

சோதிடம் சொல்லும் கோள்களில் சந்திரன் ஒன்று. சந்திரன் என்பது பூமியின் துணைக் கோள் என்று அறிவியல் சொல்கிறது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, பூமி தட்டையாக இருப்பதாக நம்பப்பட்டது. பூமியை சூரியன் சுற்றிவருவதாகவும் நம்பப்பட்டது. அதன் பிறகான அறிவியல் கண்டுபிடிப்புகளை உலகம் ஏற்றுக் கொண்டுவிட்டது.

நம் முன்னோர்கள் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிரபஞ்சத்தின் செயல்பாடுகளை கண்டுபிடித்துவிட்டனர். ஆனால் அது வளர்ச்சியடையாமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று விட்டது. இந்த கண்டுபிடிப்புகளை மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக கோள்களை கடவுளாக்கியிருக்க  வேண்டும், என்பது என்னுடைய கணிப்பு.
சோதிடத்தை அதிகம் நம்புகிறவர்கள், அது படிதான் வாழ்க்கை அமையுமென்றால் எதற்காக கடவுளை தொழ வேண்டும்? கடவுளிடம் வேண்டிக்கொண்டு  பின் எதற்காக சோதிடமும் பார்க்க வேண்டும்? சோதிடத்தின் மீதான நம்பிக்கை தேவையற்றதாகவே எனக்கு தோன்றுகிறது.

இந்த அட்சயதிருதியைக்கு வெண்மை நல்லதாம், பால், மல்லிகை, பிளாட்டினம் என்று அடுக்கிகொண்டே போகிறார்கள். வியாபாரம் செய்வதென்று ஆன பிறகு, தங்கத்துக்கு அட்சயதிருதியை போல, வெள்ளிக்கும், பிளாடினத்திர்க்கும், வைரதிற்கும் தனி தனி நாட்களை கண்டுபிடித்து வியாபாரம் செய்யலாமே.

சோதிடம் பற்றிய கருத்துக்கள் பலருக்கும் ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். என்ன செய்வது? பாரதியின் ஆத்திசூடியில் வரும் மற்றுமொரு வரியும் எனக்கு பிடித்தமானதாக இருக்கிறது "நேர்படப் பேசு".


Post a Comment

0 Comments