Mar 31, 2011

வேங்கை வர்ணங்கள்

மிகவும் அரிய வகை உயிரினமாக கருதப்படும் வெள்ளைப் புலிகள், உண்மையில் தனி இனம் கிடையாது. உலகில் சுமார் எட்டு வகையான புலிகள் வாழ்த்து வந்ததாக கூறப்படுகிறது. இவற்றில் தற்ச்சமயம் ஐந்து மட்டுமே காணப்படுகிறது. மற்ற இனங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன. எந்த வகை புலியாக இருந்தாலும், அவற்றின் நிறமிக்குறைபாடு காரணமாகவே அவை வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கின்றன. இந்தியாவின் பெரும்பாலான மிருகக் காட்சி சாலைகளில் காணப்படும் வெள்ளைப்புலிகள் யாவும் வங்கப் புலிகளே. அவை தனிப்பட்ட புலி இனம் கிடையாது.




இது போன்ற நிறக்குறைபாடு பெரும்பாலான விலங்குகளுக்கு ஏற்ப்படுவதுண்டு. எனவே அப்படி மாறுபட்ட நிறத் தோற்றத்தில் இருக்கும் யாவும் தனி ஒரு உயிரினமாக எடுத்துக் கொள்ள முடியாது. சென்ற ஆண்டு வனப் பகுதியில் விலங்குகள் கணக்கெடுப்புக்காக நான் சென்றிடுந்த போது வெள்ளை நிற புள்ளி மான் ஒன்ற நேரடியாகவே பார்த்து அதிசயித்தேன்.


நிறக்குறைபாடு காரணாமாக இருந்தாலும், இவை நிச்சயம் அதிசயமான, அரிய உயிரினங்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.


ஆப்ரிக்க சிறுத்தைகளிலும் இது போன்ற விலங்குகள் உண்டு. அவை முற்றிலும் நிறம் மாறாமல் அவற்றின் வடிவமைப்பில் மட்டும் மாற்றம் காணப்படுவதுண்டு.






வெள்ளை சிங்கங்கள் இன்றும் ஆப்ரிக்க காடுகளில் காணப்படுகின்றன. பராமரிப்பில் வளர்க்கப்படும் வெள்ளை சிங்கங்களும் உண்டு.




வேங்கை புலியோ (Jaguar) அல்லது சிறுத்தை புலியோ (Leopard) நிறக்குறைபாடு காரணமாக முற்றிலும் கருமை நிறத்தில் காணப்படுவதுண்டு. கம்பீரமாகவும் அழகாகவும் இருக்கும் இவை மிக மிக அரிதாகவே காணப்படுகிறது. கருஞ்சிறுத்தை என்று அழைக்கப்படும் இவை இந்தியக் காடுகளில் வாழ்வதற்கான ஆதாரங்கள் உள்ளன.






பொதுவாகவே விலங்குகளும், பறவைகளும் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் இன்றைய காலகட்டத்தில், இயற்கையிலேயே அரிதாக உருவாக்கப்படும் இது போன்ற உயிரினங்களும் பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம்.




அவ்வளவு சுலபத்தில் காணக் கிடைக்காத, இந்தியா காடுகளில் இல்லை என்று நம்பப்படுகிற, மிக மிக அரிய கருஞ்சிறுத்தை தோல், சென்ற மாதம் தாராபுரத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதை வனத் துறையினர் (திரு.அருண்) கண்டுபிடித்தனர்.



Mar 30, 2011

புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..?

இந்தியாவில் கடந்த 2006 ஆம் ஆண்டு 1411 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 1706 ஆக, உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள புலிகள் காப்பகங்களிலும், தேசிய வன விலங்கு சரணாலயங்களிலும் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையின் படி புலிகளின் எண்ணிக்கை பதினைந்து சதம் உயர்ந்துள்ளது.


இதே அறிக்கை தெரிவிக்கும் மற்றொரு தகவல், தற்போதைய கணக்கெடுப்பில் 612 புலிகள் இரண்டு வயதுக்கு உட்பட்டவை. எனவே இந்த புலிகள் 2006 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் இருந்திருக்காது. எனவே புதிதாக பிறந்த இந்த 612 புலிகளை 1411 உடன் கூட்டினால் 2023 புலிகள் இருக்க வேண்டும். ஒருவேளை சில புலிகள் இயற்கையாகவே இறந்திருக்கலாம். புலியின் வயது 12 முதல் 15 க்குள் இருக்கும். எனவே கடந்த நான்கு ஆண்டுகளில் இறந்து போன எல்லா புலிகளும் 317 (2023  - 1706 ) புலிகளும் வயது முதிர்ந்து இறந்திருக்குமா என்பது சந்தகேமே. மத்திய அமைச்சர் புலிகள் வேட்டையாடப்பட்டதை ஒப்புக்கொள்கிறார். எனவே புலிகளை பாதுகாப்புக்காக மேலும் தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.



இந்த முறை புலிகள் கணக்கெடுப்புக்காக முற்றிலும் அறிவியல் முறைகள் பின்பற்றப்படவில்லை. Camera Trapping என்ற முறை கொண்டு புலிகள் ஒவ்வொன்றையும் தனித் தனியாக அடையாளம் காண முடியும். எனவே துல்லியமான கணக்கெடுப்புக்கு இந்த முறை பின்பற்றப் பட வேண்டும். பெரும்பாலான மாநிலங்களில் இன்னமும் காலடி தடத்தை வைத்தே எண்ணிக்கை கணக்கெடுக்கப்படுவதாக தெரிகிறது. மேலும், புலிகளின் கழிவுகளை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தி, புலிகளை தனித் தனியாக அடையாளம் காண முடியும்.


புலிகள் தங்களுக்கென்று ஒரு தனி எல்லையை நிர்ணயிப்ப்பதால் அவற்றின் இடப்பெயர்ச்சிக்கு இடையூறு இல்லாத வண்ணம் காடுகளை  இணைக்க வேண்டும். இரவு நேர போக்குவரத்தை வனப் பகுதிகளில் முற்றிலும் தடை செய்ய வேண்டும்.



மத்திய அரசின் சமீப கால முயற்சிகள் பாராட்டுக்குரியதே. ஆனால், இன்னும் தீவிரமான நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொண்டாக வேண்டும்.

புலிகள் வேட்டையாடப்படும் தகவல் தெரிந்தாலோ, அல்லது புலியின் தோலையோ, உறுப்புகளையோ யாராவது வியாபாரம் செய்தாலோ, கீழ்காணும் இணையதள முகவரியில் புகார் செய்யலாம்.

Report a crime:                  http://projecttiger.nic.in/reportacrime.asp

தேசமெங்கும் திரியட்டும் செம்மஞ்சள் வரிப்புலிகள்.


Mar 28, 2011

மரம் மறப்பதில்லை : சிறுகதை

திண்ணை இதழில் (இணைய) வெளியான என்னுடைய சிறுகதை  :


"இன்னைக்கு சாயந்தரத்துக்குள்ள மரத்த முழுசா வெட்டிப்புடுங்க. நாளைக்கு வெள்ளன நான் ஊருக்கு கெளம்பனும்" என்று உறுதியாக சொல்லிக் கொண்டிருந்தான் முத்து செல்வன். இரண்டு நாட்களுக்கு முன்பாக தான் சென்னையிலிருந்து தன் ஊருக்கு வந்திருந்தான். தன் பெற்றோரை இழந்த பிறகு அந்த வீட்டில் தற்போது யாரும் இல்லை. தன் உறவினர்களும் அருகில் இல்லாததால் அந்த வீடே பராமரிப்பின்றி பாழ்பட்டுக்கிடந்தது. இனி தனக்கும் இந்த ஊரில் வேலை இல்லை என்று முடிவான பிறகு, வீட்டை விற்று விடலாம் என்ற முடிவில், அந்த ஊரிலேயே ஒருவருக்கு பேசி முடித்துவிட்டான். உண்மையில் முத்து செல்வனுக்கு வீட்டின் முன்பு இருந்த மரத்தை வெட்டும் எண்ணம் இல்லை. இவனின் வருகையை தெரிந்து கொண்ட உள்ளூர் மரத் தச்சன் ஒருவன், மரத்தை விலை பேசவே, கிடைத்த வரைக்கும் லாபம் என்று வெட்டிக் கொள்ள ஒப்புக் கொடுத்தான்.



வீட்டில் இருந்த தனக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டிருந்த போது "மகனே!" என்று குரல் கேட்டது. வீட்டின் வெளியில் இருந்து யாரோ அழைப்பதை உணர்ந்து வெளியே வந்தான். யாரையும் காணவில்லை. மீண்டும் "மகனே!" என்ற அழைப்பு. தனக்கு மிகவும் பரிட்சயமான குரல் போல தோன்றியது. கிட்டத்தட்ட தன் தந்தையின் குரல். எதுவும் புரியாமல் அங்கும் இங்கும் தேடினான்.



"மகனே! நான் தான் மரம் பேசுகிறேன்".



ஆச்சர்யத்தில் உறைந்து போனவன் சற்றே தலை நிமிர்ந்து பார்த்தான். சலனமற்று நிற்கிறது மரம்.



"மகனே ! என்னை பற்றிய நினைவுகள் உனக்கு இல்லாது இருக்கலாம். ஆனால் உன்னை பற்றிய நினைவுகள் எனக்கு இன்னும் பசுமையாக இருக்கிறது."

மரத்திடம் எப்படி பேசுவது என்றோ, எங்கே பார்த்து பேசுவது என்றோ தெரியாது குழம்பிப் போயிருந்தான். உண்மையில் அவனுக்கு என்ன பேசுவதென்றே புரியாமல் தானிருந்தது.



"மகனே! இன்று என் வாழ்வின் கடைசி நாள் என்பதை தீர்மானித்திருக்கிறாய். என் மரணத்திற்கு முன்பாக உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டுமென நினைக்கிறேன்."




மரத்தில் இருந்த குயில் கூவி முடித்த பின் மீண்டும் தொடங்குகிறது மரம். "உன்னுடைய தந்தை தன்னுடைய பதின் வயதில் என்னை இங்கே கொண்டுவந்து நட்டு வைத்தார். என்னை ஒருநாளும் கவனிக்க மறந்ததே இல்லை. ஒவ்வொரு நாளும் எனக்கு நீருற்றி வளர்த்தார். எங்கள் இருவருக்கும் பிரிக்க முடியாதபடி அன்பும் நட்பும் வேரூன்றி, நான் வளர்த்தேன்."

"உன் தந்தை பெயரில் மட்டும் மீனாட்சி சுந்தரமாக இருக்கவில்லை. உண்மையில் குணத்திலும் அவர் சுந்தரனாகவே இருந்தார். கோடை காலங்களில் ஒட்டுமொத்த கிராமமே தண்ணீருக்காக போராடிக் கொண்டிருந்தது. பத்து மைல் சைக்கிளில் சென்று தான் தண்ணீர் கொண்டு வருவார்கள். என்னுடைய தேவைக்காக உன் தந்தை எத்தனை நாள் அப்படி நீர் சுமந்தார் என்பது உனக்கு தெரியுமா? உன் தந்தைக்க்காகவே ஒரு துளி நீரையும் வீணாக்காமல் எல்லாவற்றையும் உறிஞ்சி நன்றாக வளர்ந்தேன். என் வளர்ச்சியை பார்த்து உன் தந்தை மகிழ்ச்சி அடைவதே என்னை உயிர்ப்பித்துக் கொண்டிருந்தது."



"ஒரு முறை உன் அம்மாவும் அப்பாவும் சண்டை வந்து நாள் முழுதும் பேசிக் கொள்ளவே இல்லை. அன்றைய தினம் உன் அப்பா கோபத்தில் யாரிடமும் பேசிக் கொள்ளாமல் இருந்தார். மாலையில் வீட்டை விட்டு வெளியே வந்த போது தான், அவருக்கு என்னுடைய ஞாபகம் வந்தது. அன்று எனக்கு நீர் ஊற்றாமல் போனதை எண்ணி, என்னைக் கட்டிக்கொண்டு அழத் தொடங்கினர். அன்று தான் உன் அம்மா, உன் அப்பாவை நன்கு புரிந்து கொண்டார். அதன் பிறகு இருவருக்கும் சண்டையே வந்ததில்லை."



"நீ பிறந்து வளரத் தொடங்கினாய். நீ இரவு உறங்கப் போவதற்கு முன்னால் எப்போதுமே என் மீதுதான் ஒன்றுக்குப் போவாய். எனக்கு அது ஒரு போதும் கவலை அளித்தது இல்லை. மாறாக எனக்கு அது மகிழ்ச்சியாகவே இருந்தது."

"நீ பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் என் மீது ஏறத் தொடங்கினாய். அப்போது நான் நன்கு வளர்ந்து இருந்தேன். நீ என் கிளைகளில் ஏறி அங்கிருந்து கீழே விழுந்தாய். அப்போது உன் எலும்பு விலகிப் போனது. என் அன்பு மகனே! நான் அப்போது எவ்வளவு துயர் அடைந்தேன் என்பது உனக்கு தெரியாது. தொடர்ந்து ஒரு வார காலம் மண்ணிலிருந்து நீர் உறிஞ்சுவதை நிறுத்திக் கொண்டேன். என்னை நானே மாய்த்துக்கொல்லும் முடிவுக்கே வந்து விட்டேன். உன் தந்தையால் நான் வாடிக்கொண்டிருப்பதை தாங்கமுடியவில்லை. நான் என்னை நானே வருத்திக்கொண்டது அவருக்கு நிச்சயமாக தெரிந்து விட்டது. பிறகு நீ குணமடையத் தொடங்கிய போது நானும் உயிர்ப்பிக்கத் தொடங்கினேன்."



"உன்னுடைய வெளியூர் பயணம், உன் தந்தையின் மரணம் என தொடர்ந்து எனக்கு துயரமான சம்பவங்களே நடந்த போதிலும் என்னை நம்பி வந்த உயிர்களுக்காக நானும் தொடர்ந்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் எத்தனையோ பறவைகளுக்கு வாழ்விடமாக மாறிப் போயிருக்கிறேன். எப்போதும் என் மீது அணில்கள் விளையாடிக்கொண்டிருக்கின்றன. எனவே, என்னுடைய வேண்டுகோள் ஒன்றை நிறைவேற்றி வைப்பாயா மகனே?" என மௌனம் காத்தது மரம்.



"என்ன?" என்பதை தவிர்த்து வேறு எதுவும் பேசுவதற்கு முத்து செல்வனுக்கு வார்த்தை வரவில்லை.



"என் கிளைகளில் ஒன்றில் சிட்டுக் குருவிகள் கூடு கட்டி இருக்கிறது. அவை தற்போதுதான் முட்டையிட்டிருக்கிறது. இன்று மாலை கூடு திரும்பும் குருவிகள் தன் கூட்டை காணாது போனால் அவை எப்படி துடிதுடிக்கும் என்பதை நான் நன்கு அறிவேன். என்னை நம்பி வந்த பறவைகளுக்கு என்னால் துரோகம் செய்ய முடியாது. எனவே அந்த கூட்டை அப்படியே எடுத்து உன் வீட்டிற்கு வெளியே இருக்கும் கூரை இடுக்கில் வைத்து விடு. அவை எப்படியும் கூட்டை கண்டுபிடித்து விடும். எனக்காக இதை செய்வாயா?"

"செய்கிறேன்" என்று சொல்லி ஆமோதித்துவிட்டு தொடர்ந்து மரம் பேசுவதை கேட்க மனமின்றி அங்கிருந்து மெல்ல நகர்ந்தான்.



சற்று தூரம் நடந்த போது "மகனே!" என மீண்டும் அழைத்தது. திரும்பி பார்த்த போது தன் இலைகள் ஒவ்வொன்றையும் தானாகவே உதிர்க்கத் தொடங்கியது மரம். இலைகள் உதிர்வதை பார்க்கும் போது குற்ற உணர்ச்சி மேலிடத் தொடங்கியது. சிறிது நேரத்தில் எல்லா இலைகளும் உதிர்ந்து நிர்வாணமாய் நின்று கொண்டிருந்தது மரம். கண் கொண்டு பார்க்க முடியாமல் தலையை தாழ்த்திக்கொண்டான்.



"என் அன்பு மகனே! எனக்கு இருக்கும் கடைசி ஆசை ஒன்றையும் நிறைவேற்றி வைப்பாயா?"



பதிலுக்கு காத்திருக்கவில்லை மரம். தொடர்ந்து பேசியது.



"நான் கடந்த ஐந்து ஆண்டு காலமாக கிளைகளின் வழியாகவே உன் வீட்டில் மாட்டியிருக்கும் உன் தந்தையின் படத்தை பார்த்துக்கொண்டிருக்கிறேன். நீ உன் தந்தையின் படத்திற்கு தகரத்தில் சட்டம் செய்து மாட்டி வைத்திருக்கிறாய். என்னை வெட்டிய பிறகு என்னை வைத்தே ஒரு சட்டம் செய்து, உன் அப்பாவின் புகைப்படத்திற்கு மாட்டிவிடு. நான் தொடர்ந்து உன் தந்தையோடு இருக்க விரும்புகிறேன். என் மரணத்திற்கு பிறகும்!"



மரத்தின் அருகே வந்த முத்து செல்வன், மரத்தின் முன் மண்டியிட்டு தலை தாழ்த்திக் குமுறிக்குமுறி அழத் தொடங்கினான். நீண்ட நேரம் ஆகியும் அவன் தலை நிமிரவே இல்லை.



Mar 27, 2011

ஒலி மாசு

தொழிற்சாலை கழிவுகள், நெகிழிக் கழிவுகள், வாகனப் புகை, மருந்துக் கழிவுகள், பூச்சிக்கொல்லி, ரசாயன கழிவுகள் போன்ற நம் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் பல்வேறு மாசுகளுக்கு சற்றும் குறைவில்லாத மற்றுமொரு மிகப்பெரிய சூழல் சீர்கேடு ஒலி மாசு - Noise Pollution
சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஒலி மாசுக்கான பல்வேறு காரணிகளை ஆராய்ந்து மத்திய அரசு அவற்றை கட்டுக்குள் கொண்டு வர சட்டங்கள் இயற்றியுள்ளது.

ஒலி மாசுக்கான முக்கிய காரணிகளான ஜெனரேட்டர், பட்டாசு மற்றும் வாகனங்கள் ஆகியவற்றின் ஒலி அளவு கட்டுக்குள் இருப்பதற்கான வரம்பு வகுக்கப்பட்டுள்ளது. தொழிற்ச்சாலைகளின் ஒலி வரம்பு கட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும் இந்த சட்டம் வலியுறுத்துகிறது. பொதுவாக வாகனகளின் ஒலி வரம்பு 91 டெசிபல் என்ற அளவை தாண்டாது இருக்க வேண்டும். இரு சக்கர வாகனங்களின் ஒலி வரும்பு 82 டெசிபலை தாண்டக்கூடாது.


மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் ஒலி மாசுபடுவதற்க்கு  நிறைய காரணங்கள் இருக்கின்றன. நம் கலச்சரதொடு கலந்துவிட்ட சில காரணங்கள் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்கும் பழக்குமும், கோவில் திருவிழக்களில் ஒலிப் பெருக்கி பயன்படுத்தும் பழக்கும் உள்ளது.

இது போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படும் ஒலி மனிதர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்துகிறது. கேட்கும் திறம் குறைய வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம் உருவாகவும் வழி வகுக்கிறது. மனிதர்களுக்கு மட்டும்  அல்லது பறவைகளுக்கும் இது மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது. பறவைகள் இனப்பெருக்க காலங்களில் ஒலி எழுப்பி தன்னுடைய இருப்பை தெரியப்படுத்தும்.

மேலும் விலங்குகள் வேட்டைகளின் போது ஒலி எழுப்பி தகவல்களை பரிமாறிக்கொள்ளும்.அதிகப்படியான ஒலி, இவற்றின் தகவல் பரிமாற்றத்தில் இடையூறை ஏற்ப்படுத்துவதால் அவை அழிவதற்கு வாய்ப்பு ஏற்ப்படுகிறது. மேலும் பட்டாசு வெடிப்பதன் மூலமாகவும், வாகனங்களில் ஒலிப்பான்களை அதிக அளவில் பயன்படுத்துவதன் மூலமாகவும் பறவைகளும், விலங்குகளும் அதிக அதிர்ச்சிக்கு உள்ளாகின்றன. வயதானவர்கள், குழந்தைகள் இதனால் பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

மிகவும் சுலபமான வழிமுறைகளை கொண்டு ஒலி மாசுபாட்டை குறைக்க முடியும். பட்டாசு வாங்கும் போது, அவை சட்ட நடைமுறைக்கு உட்பட்டதா என தெரிந்து வாங்க வேண்டும்.

கோவில் திருவிழக்களில் தேவைக்கு ஏற்ப ஒலிப் பெருக்கியை பயன்படுத்தலாம்.


வாகனகளில் ஒலிப்பான்களை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளலாம். சாலை சந்திப்புகளில் சிக்னலுக்கு காத்திருக்கும்போது மூன்று நொடிகள் மிச்சமிருக்கும் போது நூறு வாகனங்கள் ஒரே நேரத்தில் ஒலி எழுப்புவதை கேட்டிருப்பீர்கள். இது முற்றிலும் தேவையற்றது.
முடிந்தவரை ஒவ்வொருவரும் ஒலி மாசு படமால் இருக்க சின்ன சின்ன பங்களிப்பை செய்தாலே சுற்றுச் சூழலை பெரிய அளவில் மாசுபடாமல் காப்பாற்ற முடியும். முக்கியமாக பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமையும். அடுத்த முறை சிக்னலில் நிற்கும் போது நினைவில் கொள்ளுங்கள்.

Mar 26, 2011

நிறம் மாறுமா பெங்களூரு?

மிக்சியா க்ரைண்டரா என தெரியமால் தமிழ் நாட்டு மக்கள் ஏக்கத்துடன் காத்திருக்கும் போது, கர்நாடக அரசின் வனத்துறை அற்புதமான திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

 
ஒவ்வொரு பள்ளி குழந்தைக்கும் இலவசமாக மரக் கன்றுகளை வழங்குகிறது. மரம் வளர்ப்பின் முக்கியத்துவதை குழந்தைகள் உணர இது மிகப் பெரிய வாய்ப்பாக அமையும். மேலும் ஒவ்வொரு பள்ளியிலும் வனம் உருவாக்கப்படும். இப்படி உருவாக்கப்படும் சிறிய மாதிரி வனம், மாணவர்களுக்கு இயற்கையின் மீதான ஒரு ஈடுபாட்டை உருவாக்கும்.

சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படும். ஏராளமான பறவைகளின் வாழ்வாதரத்திற்க்கு துணை புரியும். ஒரு புறம் வனங்கள் அழிந்து வரும் சூழ்நிலையில், இப்படி உருவாகும் வனங்கள் சூழலை சமநிலையில் வைத்திருக்கும். இதே மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்து வெளியேறும் போது, இயல்பாகவே அவர்களுக்குள் வனத்தின் முக்கியத்துவம் புரிந்திருக்கும். 

மேலும் பெங்களூரை சுற்றிலும், லால் பாக் மாதிரியான மேலும் நான்கு மிகப்பெரிய பூங்காக்களை அமைக்கவும் முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் நடைமுறைபடுத்தப்பட்டால் பெங்களூர் மீண்டும் பசுமை நகரமாக வாய்ப்புகள் உண்டு. மென்பொருள் என்ற அடையாளத்தை தாண்டி மீண்டும் இந்தியாவின் பூங்கா நகரமாக மாறக்கூடும்.




யார் எப்படி மாறினால் என்ன? நமக்குத்தான் கிரைண்டர் கிடைக்க இருக்கிறதே....

Mar 25, 2011

ஊர்ப்புறத்துப் பறவைகள் : திரு.கோவை சதாசிவம்





திரு.கோவை சதாசிவம் எழுதிய "ஊர்ப்புறத்துப் பறவைகள்" வாசித்தேன்.

நாகணவாய் (common Myna ),
பைங்கிளி (Rose ringed parakeet),
பனங்காடை (Indian Roller),
கருங்கரிச்சான் (Black Trongo),
நாட்டு உழவாரன் (House Swift),
கருங்குயில் (Asian Koel),
குருட்டுக் கொக்கு (Indian Pond Heron),
சிறிய நீர்க்காகம் (Little Cormorant),
உண்ணிக் கொக்கு (Cattle Egret),
கொண்டலாத்தி (Common Hoopoe),
செண்பகம் (Greater Coucal),
செம்மூக்கு ஆள்காட்டி (Red wattled lapwing),
புள்ளி ஆந்தை (Spotted Owlet),
மாடப் புறா (Rock Pigeon),
ஊர்ப் பருந்து (Black Kite),
ஊதாத் தேன்சிட்டு (Purple Sun Bird),
புள்ளிச் சில்லை (Spotted munia),
சின்னான் (Red vented Bul Bul),
வெந்தலைச் சிலம்பன் (White headed Babbler),
வெண்மார்பு மீன்கொத்தி (White Preasted King fisher),
பொன் முதுகு மரங்கொத்தி (Black rumped flame Pack),
காக்கை (House crow),
சிட்டுக்குருவி (House sparrow)
போன்ற நம் வீட்டை சுற்றிலும் பறந்து திரியும் பறவைகளை பற்றி, சிறிய குழந்தைகளுக்கும் புரியும் வகையில் அற்புதமாக எழுதியிருக்கிறார்.

நாம் ஓவ்வொரு நாளும் கடந்து போகிற பறவைகளின் பெயர்களை கூட சரியாக அறிந்து கொள்ளமால் இருப்பது எவ்வளவு பெரிய தவறு. ஒவ்வொரு குழந்தையும் பத்து வயதை கடப்பதற்கு முன்னதாகவே இந்த புத்தகத்தை படித்திருக்கு வேண்டும் என்று தோன்றுகிறது.

ஒவ்வொரு பறவையில் இயல்பையும், அதன் உடல் அமைப்பு, நிறம், குணம் போன்றவற்றை தெளிவாக எழுதியிருக்கிறார். எத்தனை முட்டைகள் வரை இடுகிறது, எப்படி முட்டைகளை பாதுகாக்கிறது, அதன் உணவு முறை என்ன என்பதையும் அழகாக எடுத்துரைக்கிறார்.

இன்றைய சூழ்நிலையும் பறவைகள் சந்திக்கிற நெருக்கடி, அவற்றின் வாழ்க்கை எப்படி பாதிக்கிறது, இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்க பறவைகள் படும் சிரமம் என இவர் எழுதியிருக்கும் பாங்கு, பறவைகளின் மேல் இவர் எவ்வளவு அன்பு கொண்டவர் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

பறவைகளை பார்க்கும் போது கிடைக்கும் புத்துணர்ச்சி அற்புதமானது. அதை யாரும் இழந்து விடாதீர்கள். எல்லா பறவை இனங்களும் நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. வாழ்வதற்கே போராடுகிறது.

பறவைகளை வேடிக்கை பாருங்கள்.
பறவைகளுக்காக சிந்தியுங்கள்.
பறவைகளுக்காக பேசுங்கள்.
பறவைகளுக்கும் இடம் கொடுங்கள்.

பறவையியல் அறிஞர் திரு.சலீம் அலி சொன்னதை, திரு சதா சிவம் ஞாபகபடுத்துகிறார் :

"மனிதர்கள் இன்றி பறவைகளால் வாழ முடியும். பறவைகள் இன்றி மனிதர்களால் வாழ முடியாது."

புத்தகம் கிடைக்கும் இடம்:
வெளிச்சம் வெளியீட்டகம்,
1447 , அவினாசி சாலை,
பீளமேடு,
கோவை : 641004
0422-4370945, 98947-77291
Price: Rs.50

காக்கைக்கூடு இணையதளத்தில் வாங்கலாம் :

Mar 24, 2011

கர்ஜனை

தென் ஆப்ரிக்காவில் வாழ்ந்து வரும் 34 வயதான கெவின் ரிச்சர்ட்சன், சிங்கங்களை அழிவில் இருந்து காப்பதற்காக போராடி வருகிறார். ஜோஹன்னஸ்பார்க்கிலிருந்து 50 மைல் தொலைவில் வெள்ளை சிங்கங்களின் ராஜ்ஜியம் என்ற 2000 ஏக்கர் பரப்பளவு கொண்ட பூங்காவை நடத்தி வருகிறார்.


 இங்கு இவருடைய பராமரிப்பில் மொத்தம் 39 சிங்கங்களை வளர்த்து வருகிறார்.  சிங்கங்கள் மட்டுமல்லாது சிறுத்தை புலி மற்றும் கழுதை புலி போன்றவற்றுடனும் நெருக்கமாக பழகும் மனிதராக இருக்கிறார். சிங்கங்களின் பொதுவான குணங்களை விடவும், அவற்றை அதன் உள்ளுணர்வு மூலமாக புரிந்து கொண்டு பழகும் கெவின், சிங்ககளின் லேசான தாக்குதலுக்கும் உள்ளாகி இருக்கிறார்.


 பெரும்பாலான சிங்கங்களை குட்டியில் இருந்தே வளர்க்கத் தொடங்கும் கெவின், அவற்றோடு நெருங்கி பழகிவிடுகிறார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் 350000 ஆக இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை தற்போது 25000 ஆக குறைந்து விட்டது. சிங்கங்களை வேட்டையாடுபவர்களை பெரும்பாலான அரசுகள் கண்டு கொள்வதில்லை.


 சிங்கங்களின் பாதுகப்பிற்க்காக ஆவண படங்களையும் கெவின்  இயக்கி வருகிறார். சமீபத்தில் White Lion என்ற திரைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இயற்கையின் மொழியை புரிந்து கொள்கிற மனிதர்கள் எப்போதும் அதிசயம் தானே?

Mar 22, 2011

வீட்டை சுற்றும் பறவைகள்

 நம் ஒவ்வொருவரின் வீட்டை சுற்றிலும் எவ்வளவோ பறவைகள் வாழ்கின்றன. பழனியில் இருக்கும் என்னுடைய வீட்டை சுற்றிலும் இருந்த பறவைகளை கொஞ்சம் கண்காணித்தேன். கடைசி மூன்று படங்களை பெங்களூரில் எடுத்தேன்




















Mar 21, 2011

சிட்டுக்குருவிகள் தினம்

சிட்டுக்குருவிகள் தினம் நல்ல படியாக நடந்து முடிந்தது. வெற்றிகரமாக முடிந்ததா என்பது, எத்தனை பேர் தொடர்ந்து சிட்டுக் குருவிகளின் பாதுகப்பிற்க்காக முயற்சி செய்கிறார்கள் என்பதை பொறுத்தே உள்ளது.  மொத்தம் 120 பேர் பங்கேற்றனர். கல்லூரி மாணவர்களை விடவும் பள்ளி மாணவர்களே அதிகம் பங்கேற்றனர். பல முறை விவசாயிகளை வற்புறுத்தியும் யாரும் அக்கறை காட்டவில்லை.

நான் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி சொல்வது இதைத்தான்:

தானியங்களை உணவாக கொண்டுங்கள்

அவற்றின் இருப்பிடதிற்க்காக சிறிய கூடுகளை கட்டிக் கொடுங்கள்.

தண்ணீர் வையுங்கள்.

பாரம்பரிய செடிகளை வளர்ப்பதன் மூலம் அவற்றில் இருக்கும் புழு பூச்சிகளை சிட்டுக் குருவிகளுக்கு உணவாக்கிக் கொள்ள வழி செய்யுங்கள்.

பூச்சிகொல்லி மற்றும் ரசாயன உரங்களை தவிர்த்திடுங்கள்.




இந்த நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற உதவியாக இருந்த அக்ஷ்யா பள்ளியின் (பழனி) முதல்வர் திரு.சந்திர சேகரன் அவர்களுக்கு, என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.



 தொடர்ந்து செயல்படுவோம் இணைந்திருங்கள்....!!!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=209759


Mar 14, 2011

சிட்டுக்குருவிகள் தினம் : பிரசுரம்

சிட்டுக்குருவிகள் தினம்: 20.03.2011

சிட்டுக்குருவிகள் தினத்தன்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்யவேண்டிய பிரசுரத்தை இணைத்துள்ளேன். விருப்பமுள்ளவர்கள் இதன் நகலை உங்கள் ஊரில் இருக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விநியோகிக்கலாம்.

தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் இதை தயாரித்துள்ளோம். உங்கள் தேவைக்கேற்ப நகல் எடுத்து பொது மக்களுக்கும், கிராம மக்களுக்கும் வழங்குங்கள்.







Mar 13, 2011

அருகிவிட்ட உயிரினங்களின் பட்டியல் (Critically Endangered)

இந்தியாவில் மிகவும் அருகிவிட்ட உயிரினங்களின் பட்டியலை (Critically Endangered) மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆராய்ச்சி மற்றும் கணக்கெடுப்புகளின் முடிவில் சுற்றுச் சூழல் அமைச்சகம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

பறவைகள் :


Jerdon’s Courser (Rhinoptilus bitorquatus)
Forest Owlet (Heteroglaux blewitti)
White-bellied Heron (Ardea insignis)
White-backed Vulture
Slender-billed Vulture
Long-billed Vulture
Red- headed Vulture
Bengal Florican (Houbaropsis bengalensis)
The Himalayan Quail (Ophrysia superciliosa)
Pink- headed Duck (Rhodonessa caryophyllacea)
Sociable Lapwing (Vanellus gregarious)
Spoon Billed Sandpiper (Eurynorhynchus pygmeus)
Siberian Crane (Grus leucogeranus)

பாலூட்டிகள்:

Pygmy Hog (Porcula salvania)
Andaman White-toothed Shrew (Crocidura andamanensis)
Jenkin’s Andaman Spiny Shrew (Crocidura jenkinsi)
Nicobar White-tailed Shrew (Crocidura nicobarica)
Kondana Rat (Millardia kondana)
Large Rock Rat or Elvira Rat (Cremnomys elvira)
Namdapha Flying Squirrel (Biswamoyopterus biswasi)
Malabar Civet (Viverra civettina)
Sumatran Rhinoceros (Dicerorhinus sumatrensis)


ஊர்வன:

Gharial (Gavialis gangeticus)
Hawksbill Turtle (Eretmochelys imbricata)
Leatherback Turtle (Dermochelys coriacea)
Four-toed River Terrapin or River Terrapin (Batagur baska)
Red-crowned Roofed Turtle or the Bengal Roof Turtle (Batagur kachuga)
Sispara day gecko (Cnemaspis sisparensis)



இருவாழ்விகள்:

Anamalai Flying Frog (Rhacophorus pseudomalabaricus)
Gundia Indian Frog (Indirana gundia)
Kerala Indian Frog (Indirana phrynoderma)
Charles Darwin’s Frog (Ingerana charlesdarwini)
Kottigehar Bubble-nest Frog (Micrixalus kottigeharensis)
Amboli Bush Frog (Pseudophilautus amboli)
Chalazodes Bubble-Nest Frog (Raorchestes chalazodes)
Small Bush Frog (Raorchestes chotta)
Green-eyed Bush Frog (Raorchestes chlorosomma)
Griet Bush Frog (Raorchestes griet)
Kaikatt’s Bush Frog (Raorchestes kaikatti)
Mark’s Bush Frog (Raorchestes marki)
Munnar Bush Frog (Raorchestes munnarensis)
Large Ponmudi Bush Frog (Raorchestes ponmudi)
Resplendent Shrub Frog (Raorchestes resplendens)
Sacred Grove Bush frog (Raorchestes sanctisilvaticus)
Sushil’s Bush Frog (Raorchestes sushili)
Shillong Bubble-nest Frog (Raorchestes shillongensis)
The Tiger toad (Xanthophryne tigerinus)

மீன் இனங்கள்:


The Pondicherry Shark (Carcharhinus hemiodon)
The Ganges Shark (Glyphis gangeticus)
The Knife-tooth Sawfish (Anoxypristis cuspidata)
Large-tooth Sawfish (Pristis microdon)
Long-comb Sawfish or Narrow-snout Sawfish (Pristis zijsron)

சிலந்திகள் :

The Rameshwaram Ornamental or Rameshwaram Parachute Spider (Poecilotheria hanumavilasumica)
The Gooty Tarantula, Metallic Tarantula or Peacock Tarantula (Poecilotheria metallica)

பவளப் பாறைகள்:

Fire corals (Millepora boschmai)

இந்த பட்டியலில் உள்ள உயிரினங்களின் தமிழ் பெயர்களை அறிந்தவர்கள் மின்னஞ்சல் அனுப்பவும்.

Mar 12, 2011

இயற்கை கொஞ்சம் புரண்டு படுத்தது

நேற்று மீண்டும் ஒரு முறை இயற்கை புரண்டு படுத்திருக்கிறது. இயற்கையில் எப்போதும் நடக்கிற மாற்றம் தான் இது என்று நாம் சாதரணமாக எடுத்துக்கொள்கிற மனநிலையில் இல்லை. உண்மையில் இது சாதாரண மாற்றம் தான்.

எத்தனையோ வரலாற்று நிகழ்வுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது, சமீப காலங்களில் ஏற்படும் இயற்க்கை மாற்றங்கள் (இயற்க்கை சீரழிவுகள் என்று சொல்ல  விரும்பவில்லை) மிகப்பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்துவதற்க்கு இயற்கையை நாம் அதிகமாக ஆக்கிரமித்து விட்டதே காரணம். புற்றீசல் போல கட்டிடங்களை அருகருகே கட்டி நகரங்களை நெருக்கி பிழிகிறோம். பின் இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் மிகபெரிய அழிவை நமக்கு ஏற்படுத்துகிறது.



இயற்கையில் இருந்து நாம் விலகி விட்டதன் காரணமாக இயற்கையை நாம் உணர வாய்ப்பில்லாமல் போனது. இயற்கையில் அதிர்வுகளை நாம் அறிந்து கொள்வதில்லை. ஆனால் இயற்கையோடு எப்போதும், ஒட்டிகொண்டிருக்கும் பறவைகளும் விலங்குகளும் நடக்க போகும் ஆபத்தை உணர்ந்து கொள்கிறது. எனவே அவை எதுவும் பாதிப்புக்கு உள்ளாவதில்லை.  பறவைகளை போல நம்மால் இனி வாழ முடியாது.

கொஞ்சம் கசப்பான உண்மை என்னவென்றால், நில நடுக்கம் எப்போதுமே யாரையும் பாதிப்பதில்லை. நிலத்தில் நாம் கட்டியிருக்கும் கட்டிடங்கள் தான் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

Mar 11, 2011

ஓட்டுக்கு பணம் வாங்குபவர்களே.....

தேர்தல் நேரம் நெருங்கி விட்டால் வழக்கமாக பிரசாரம் சூடுபிடிக்கும். ஆனால் இந்த முறை அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்திற்கு முன்பாக ஓட்டுக்கு பணம் வாங்கிவிட வேண்டாம் என்ற பிரச்சாரம் பல இளைஞர்களால் முன்னிறுத்தப்படுவது ஆரோக்யமான விஷயம்.

சமூக வலைத்தளங்கள் உண்மையான ஜனநாயகத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கு தொடங்கியிருக்கிறது. ஆனால் இதன் மூலமாக மட்டுமே ஒட்டு மொத்த சமூகத்திற்கும் நாம் இந்த அறிவுரையை வழங்கி விட முடியாது.

எனவே ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்ற சிந்தனையை ஒவ்வொரு தனி மனிதனும், அவர்கள் குடும்பத்தில் விதைக்க வேண்டும். பெற்றோர்களையும், உடன் பிறந்தவர்களையும் ஜனநாயாக ரீதியில் ஓட்டளிக்க தூண்டுகோலாக இருங்கள். உங்கள் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் ஓட்டுக்காக பணம் வாங்க வேண்டாம் என்று வலியுறுத்துங்கள். அதையும் மீறி ஓட்டுக்காக பணம் வாங்குபவர்களின் உறவுகளையும், நட்பையும் துண்டித்துக் கொள்ளுங்கள்.

ஓட்டுக்காக பணம் வாங்குபவர்கள் உணர வேண்டியது:


ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு நீங்களும் ஒரு காரணம்.

தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டால் அல்லது கொல்லப்பட்டதற்கு நீங்களும் ஒரு காரணம்.

ஒரு கிரவுண்டு நிலத்தில் விலை இன்னும் ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடிக்கு, நடுத்தர நகரங்களில் விற்கப்படுமானால் அதற்கும் நீங்களே காரணம். (அப்படி எல்லாம் உயராது என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்)

அடிப்படை கல்விக்கு லட்சக்கணக்கில் பணம் செலவுசெய்ய வேண்டியது வந்தால் அதற்கும் நீங்களே காரணம்.

தனியார் மருத்துவமனைகளிடம் உங்கள் ஒட்டுமொத்த வாழ்நாள் வருமானத்தையும் இழக்க நேர்ந்தால் அதற்கு நீங்கள் மட்டுமே காரணம்.

உங்கள் அடுத்த தலைமுறையும் மது குடித்து ரோட்டில் விழுந்து கிடந்தால் நீங்கள் தான் காரணம்.

இன்னும் சில ஏரிகள் மூடப்பட்டு வீட்டு மனைகள் விற்கப்படுமானால் அதற்கும் நீங்கள் தான் காரணம்.

அடிப்படை தேவைகள் எதுவும் நிறைவேறாமல், கிரைண்டரோ அல்லது மிக்ஸியோ வாங்கிக்கொண்டு இந்த சமூகம் இன்னும் பின்னுக்கு தள்ளப்படுமானால் அதற்கு நீங்கள் தான் காரணம்.



இது எதை பற்றியும் கவலைப்படாமல், ஓட்டுக்கு பணம் வாங்கினால் உங்கள் சுயமரியாதையை நீங்கள் இழந்துவிட்டீர்கள் என்று தான் அர்த்தம். நீங்கள் இந்த உலகத்தில் வாழும் தகுதியை இழந்து ஒரு நடை பிணமாக வாழத் தயார் என்று அர்த்தம். நீங்கள் அப்படியும் வாழத் தயாராக இருக்கலாம். ஆனால் இந்த தேசம் தொடர்ந்து அரிக்கப்பட்டு, வறுமையில் வாடி, எதியோபியாவின் சிறுவர்களைப் போல, உங்கள் பிள்ளைகளின் வாழ்கையும் மாறிப்போனால் அதற்கு நீங்கள் மட்டுமே காரணம்.

Mar 10, 2011

வேடிக்கை மனிதரென வீழ்வீரோ?

சினிமாக்காரர்களுக்கு எப்பொதும மேற்கு தொடர்ச்சி மலை என்றாலே மிகவும் பிடித்துப் போய்விடுக்கிறது. எந்த ஒரு கிராமத்துக் கதைக்கும் அவர்கள் பெரும்பாலும் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தையே நம்பி இருக்கிறார்கள். சமீப காலமாக இவர்கள் சினிமா எடுக்கிறேன் என்று வனப்பகுதிகளையும், அதை ஒட்டிய நீர் நிலைகளையும் மாசுபடுத்த தொடங்கி இருக்கிறார்கள். வனப்பகுதிக்குள் படப்பிடிப்பு நடத்தினால் எந்த அளவிற்கு சுற்றுச்சூழல் மாசுபடும் என்பதை பற்றிக்கூட கவலைப்படாமல் எப்படி இவர்களுக்கு அனுமதி வழங்குகிறார்களோ தெரியவில்லை.



ஒலிப்பெருக்கி துணை இல்லாமல் படபிடிப்பு நடத்த முடியாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஒலிப்பெருக்கியை வனவிலங்குகள் வாழும் பகுதியில் பயன்படுத்தினால் அவை எப்படி அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்ற சிந்தனை கூட இவர்களுக்கு ஏன் இல்லாமல் போனது? குண்டுவெடிப்பு காட்சிகளையும், ஆடல் பாடல்களையும் வனப்பகுதிக்குள் படமெடுத்தால் வனம் எப்படி மாசுபடாமல் இருக்கும்? குறைந்தது நூறு பேராவது பணியாற்றும் போது அவர்கள் அங்கே போட்டுவிட்டு போகும் கழிவுகள் எவ்வளவு பதிப்பை ஏற்படுத்தும்?

உண்மையில் இவர்களை தடுக்க வேண்டிய பொறுப்பு அருகில் இருக்கும் கிராமத்து வாசிகளுக்கு அதிகம் இருக்கிறது. ஆனால் நமக்கு சினிமாக்காரன் என்றாலே முந்தியடித்துக்கொண்டு போய் வேடிக்கை  பார்க்கும் புத்தி தான் இருக்கிறது. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருப்போம்? இப்படியே வாழ்ந்து இறுதியில் பாரதி சொன்னது போல, வேடிக்கை மனிதரென வீழ்வீரோ?

Mar 9, 2011

உள்ளங்கையின் ஒரு கடல் : திரு. பிரபஞ்சன்

நிகழ்காலத்துக் கதை கொண்ட நாவல்.

திரு.பிரபஞ்சன் அவர்களின் எழுத்துக்கள் கொஞ்சமும் கடினம் இல்லாமல் இனிமையாக நகர்கிறது. பத்திரிக்கையில் புலனாய்வு செய்யும் ஒரு பெண் நிருபர், காணாமல் போன வெற்றிப்பட இயக்குனரை தேடிக் கண்டுபிடிக்கிறார்.

இயக்குனருக்கும் நடிகைக்கும் இடையேயான காதல், உதவி இயக்குனர்கள் படும் அல்லல்கள், சினிமாவில் இயங்கும் அலட்டல் பேர்வழிகள், மக்களின் மாறாத ரசனை என்று பல்வேறு இயல்பு நிலைகளையும் புகுத்தி இருக்கிறார் ஆசிரியர்.

உள்ளங்கையில் அள்ளினாலும் கடலின் குணம் மாறுவதில்லை. திரு. பிரபஞ்சன் என்ற கடலில், இந்த நாவலும் ஒரு உள்ளங்கை அளவே.

Mar 8, 2011

இரங்கல் : திரு.அய்யாச்சாமி அவர்கள்

ஏழூர் "அய்யாச்சாமி" என்ற பெயர் பலருக்கும் புதிதாக இருக்கலாம். ஆனால் நாம் சுவாசிக்கும் காற்றில் இவருடைய உழைப்பும், மூச்சும் கலந்திருப்பது பலருக்கும் தெரியாது. சத்தியமங்கலத்தில் வாழ்ந்த இந்த மாமனிதனை இது வரை எந்த தொலைக்காட்சியும் ஒளிபரப்பி பார்த்ததில்லை.

தன் வாழ்நாள் முழுவதும் 3000 மரங்களை நட்டு வளர்த்தவர். இயற்க்கைக்காகவே தன் வாழ்நாள் முழுதும் வாழ்ந்த இந்த மனிதரை நேற்று இயற்க்கை தன் உடன் அழைத்துச் சென்றது. சமூகத்தின் நன்மைக்காக வாழ்ந்த இந்த மனிதருக்காக, இந்த சமூகம் எதுவும் திருப்பி செய்ததில்லை.

இந்த மனிதனின் புகைப்படமும் அவருடைய ஒட்டிய வயிறும், நம்மில் எத்தனைபேருக்கு குற்ற உணர்ச்சியை தூண்டுகிறது?





இந்த நிமிடமும் அவர் வளர்த்த மரங்கள் காற்றில் சலசலத்துக்  கொண்டிருக்கும். அதில் தங்கி போகும் பறவைகளும், அணில்களும் இவரின் முகத்தை தேடிக்கொண்டிருக்கலாம். அவற்றின் அழு குரல்கள் நம் யாவர் காதுகளிலும் விழுவதே இல்லை.

லட்சங்களில் கடன் வாங்கி வட்டிக்கணக்கு போடுவதே நமக்கு வாய்த்த வாழ்க்கை எனில், இவருடைய உழைப்புக்கு நாம் வாழ்நாள் முழுதும் கடன்பட்டிருப்போம். இவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழிருக்கும் உரலியில் படியுங்கள்.


http://www.meenakam.com/pathivu/?p=141

இது பற்றியெல்லாம் கவலைப்படாதவர்கள் தொலைக்காட்சிக்கோ கைபேசிக்கோ அடிமையாக இருந்துவிட்டு போங்கள்.

இந்த வருடமும் மழை சரியாக பெய்யுமானால் அதற்கு இவரும் காரணமாக இருக்கலாம். உங்கள் குழந்தைகள் இன்னும் 20 வருடங்களில் குடிக்கத் தண்ணீர் இன்றி தவித்தால், அதற்கு நீங்கள் மட்டுமே காரணம் என்பதை மறந்து விடாதீர்கள்.