வேடிக்கை மனிதரென வீழ்வீரோ?

சினிமாக்காரர்களுக்கு எப்பொதும மேற்கு தொடர்ச்சி மலை என்றாலே மிகவும் பிடித்துப் போய்விடுக்கிறது. எந்த ஒரு கிராமத்துக் கதைக்கும் அவர்கள் பெரும்பாலும் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தையே நம்பி இருக்கிறார்கள். சமீப காலமாக இவர்கள் சினிமா எடுக்கிறேன் என்று வனப்பகுதிகளையும், அதை ஒட்டிய நீர் நிலைகளையும் மாசுபடுத்த தொடங்கி இருக்கிறார்கள். வனப்பகுதிக்குள் படப்பிடிப்பு நடத்தினால் எந்த அளவிற்கு சுற்றுச்சூழல் மாசுபடும் என்பதை பற்றிக்கூட கவலைப்படாமல் எப்படி இவர்களுக்கு அனுமதி வழங்குகிறார்களோ தெரியவில்லை.



ஒலிப்பெருக்கி துணை இல்லாமல் படபிடிப்பு நடத்த முடியாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஒலிப்பெருக்கியை வனவிலங்குகள் வாழும் பகுதியில் பயன்படுத்தினால் அவை எப்படி அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்ற சிந்தனை கூட இவர்களுக்கு ஏன் இல்லாமல் போனது? குண்டுவெடிப்பு காட்சிகளையும், ஆடல் பாடல்களையும் வனப்பகுதிக்குள் படமெடுத்தால் வனம் எப்படி மாசுபடாமல் இருக்கும்? குறைந்தது நூறு பேராவது பணியாற்றும் போது அவர்கள் அங்கே போட்டுவிட்டு போகும் கழிவுகள் எவ்வளவு பதிப்பை ஏற்படுத்தும்?

உண்மையில் இவர்களை தடுக்க வேண்டிய பொறுப்பு அருகில் இருக்கும் கிராமத்து வாசிகளுக்கு அதிகம் இருக்கிறது. ஆனால் நமக்கு சினிமாக்காரன் என்றாலே முந்தியடித்துக்கொண்டு போய் வேடிக்கை  பார்க்கும் புத்தி தான் இருக்கிறது. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருப்போம்? இப்படியே வாழ்ந்து இறுதியில் பாரதி சொன்னது போல, வேடிக்கை மனிதரென வீழ்வீரோ?

Post a Comment

0 Comments