ஓட்டுக்கு பணம் வாங்குபவர்களே.....

தேர்தல் நேரம் நெருங்கி விட்டால் வழக்கமாக பிரசாரம் சூடுபிடிக்கும். ஆனால் இந்த முறை அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்திற்கு முன்பாக ஓட்டுக்கு பணம் வாங்கிவிட வேண்டாம் என்ற பிரச்சாரம் பல இளைஞர்களால் முன்னிறுத்தப்படுவது ஆரோக்யமான விஷயம்.

சமூக வலைத்தளங்கள் உண்மையான ஜனநாயகத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கு தொடங்கியிருக்கிறது. ஆனால் இதன் மூலமாக மட்டுமே ஒட்டு மொத்த சமூகத்திற்கும் நாம் இந்த அறிவுரையை வழங்கி விட முடியாது.

எனவே ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என்ற சிந்தனையை ஒவ்வொரு தனி மனிதனும், அவர்கள் குடும்பத்தில் விதைக்க வேண்டும். பெற்றோர்களையும், உடன் பிறந்தவர்களையும் ஜனநாயாக ரீதியில் ஓட்டளிக்க தூண்டுகோலாக இருங்கள். உங்கள் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் ஓட்டுக்காக பணம் வாங்க வேண்டாம் என்று வலியுறுத்துங்கள். அதையும் மீறி ஓட்டுக்காக பணம் வாங்குபவர்களின் உறவுகளையும், நட்பையும் துண்டித்துக் கொள்ளுங்கள்.

ஓட்டுக்காக பணம் வாங்குபவர்கள் உணர வேண்டியது:


ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு நீங்களும் ஒரு காரணம்.

தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டால் அல்லது கொல்லப்பட்டதற்கு நீங்களும் ஒரு காரணம்.

ஒரு கிரவுண்டு நிலத்தில் விலை இன்னும் ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடிக்கு, நடுத்தர நகரங்களில் விற்கப்படுமானால் அதற்கும் நீங்களே காரணம். (அப்படி எல்லாம் உயராது என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்)

அடிப்படை கல்விக்கு லட்சக்கணக்கில் பணம் செலவுசெய்ய வேண்டியது வந்தால் அதற்கும் நீங்களே காரணம்.

தனியார் மருத்துவமனைகளிடம் உங்கள் ஒட்டுமொத்த வாழ்நாள் வருமானத்தையும் இழக்க நேர்ந்தால் அதற்கு நீங்கள் மட்டுமே காரணம்.

உங்கள் அடுத்த தலைமுறையும் மது குடித்து ரோட்டில் விழுந்து கிடந்தால் நீங்கள் தான் காரணம்.

இன்னும் சில ஏரிகள் மூடப்பட்டு வீட்டு மனைகள் விற்கப்படுமானால் அதற்கும் நீங்கள் தான் காரணம்.

அடிப்படை தேவைகள் எதுவும் நிறைவேறாமல், கிரைண்டரோ அல்லது மிக்ஸியோ வாங்கிக்கொண்டு இந்த சமூகம் இன்னும் பின்னுக்கு தள்ளப்படுமானால் அதற்கு நீங்கள் தான் காரணம்.



இது எதை பற்றியும் கவலைப்படாமல், ஓட்டுக்கு பணம் வாங்கினால் உங்கள் சுயமரியாதையை நீங்கள் இழந்துவிட்டீர்கள் என்று தான் அர்த்தம். நீங்கள் இந்த உலகத்தில் வாழும் தகுதியை இழந்து ஒரு நடை பிணமாக வாழத் தயார் என்று அர்த்தம். நீங்கள் அப்படியும் வாழத் தயாராக இருக்கலாம். ஆனால் இந்த தேசம் தொடர்ந்து அரிக்கப்பட்டு, வறுமையில் வாடி, எதியோபியாவின் சிறுவர்களைப் போல, உங்கள் பிள்ளைகளின் வாழ்கையும் மாறிப்போனால் அதற்கு நீங்கள் மட்டுமே காரணம்.

Post a Comment

0 Comments