இரங்கல் : திரு.அய்யாச்சாமி அவர்கள்

ஏழூர் "அய்யாச்சாமி" என்ற பெயர் பலருக்கும் புதிதாக இருக்கலாம். ஆனால் நாம் சுவாசிக்கும் காற்றில் இவருடைய உழைப்பும், மூச்சும் கலந்திருப்பது பலருக்கும் தெரியாது. சத்தியமங்கலத்தில் வாழ்ந்த இந்த மாமனிதனை இது வரை எந்த தொலைக்காட்சியும் ஒளிபரப்பி பார்த்ததில்லை.

தன் வாழ்நாள் முழுவதும் 3000 மரங்களை நட்டு வளர்த்தவர். இயற்க்கைக்காகவே தன் வாழ்நாள் முழுதும் வாழ்ந்த இந்த மனிதரை நேற்று இயற்க்கை தன் உடன் அழைத்துச் சென்றது. சமூகத்தின் நன்மைக்காக வாழ்ந்த இந்த மனிதருக்காக, இந்த சமூகம் எதுவும் திருப்பி செய்ததில்லை.

இந்த மனிதனின் புகைப்படமும் அவருடைய ஒட்டிய வயிறும், நம்மில் எத்தனைபேருக்கு குற்ற உணர்ச்சியை தூண்டுகிறது?

இந்த நிமிடமும் அவர் வளர்த்த மரங்கள் காற்றில் சலசலத்துக்  கொண்டிருக்கும். அதில் தங்கி போகும் பறவைகளும், அணில்களும் இவரின் முகத்தை தேடிக்கொண்டிருக்கலாம். அவற்றின் அழு குரல்கள் நம் யாவர் காதுகளிலும் விழுவதே இல்லை.

லட்சங்களில் கடன் வாங்கி வட்டிக்கணக்கு போடுவதே நமக்கு வாய்த்த வாழ்க்கை எனில், இவருடைய உழைப்புக்கு நாம் வாழ்நாள் முழுதும் கடன்பட்டிருப்போம். இவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழிருக்கும் உரலியில் படியுங்கள்.


http://www.meenakam.com/pathivu/?p=141

இது பற்றியெல்லாம் கவலைப்படாதவர்கள் தொலைக்காட்சிக்கோ கைபேசிக்கோ அடிமையாக இருந்துவிட்டு போங்கள்.

இந்த வருடமும் மழை சரியாக பெய்யுமானால் அதற்கு இவரும் காரணமாக இருக்கலாம். உங்கள் குழந்தைகள் இன்னும் 20 வருடங்களில் குடிக்கத் தண்ணீர் இன்றி தவித்தால், அதற்கு நீங்கள் மட்டுமே காரணம் என்பதை மறந்து விடாதீர்கள்.

Post a Comment

0 Comments