![]() |
மலை அணில் |
நீங்கள் ஒரு மலைப்பாதையில் பயணம் செய்கிறீர்கள். அப்போது வழியில் நிறைய குரங்குகள் அமர்ந்திருக்கின்றன. உங்களிடம் தேவைக்கு அதிகமாகவே உணவும், நொறுக்குத் தீனியும் இருந்தால் என்ன செய்வீர்கள். பசியோடு காத்திருக்கும் குரங்குகளுக்கு உங்கள் உணவைக் கொடுத்து மகிழ்வீர்களா? அப்படியானால் நீங்கள் தான் அந்தக் குரங்குகளுக்கு முதல் எதிரி எனப் புரிந்து கொள்ளுங்கள்.
மனிதர்களிடம் உணவைப் பெறுவதனால் மூன்று முக்கிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
காட்டுயிர்களுக்கு நோய் ஏற்படுகிறது :
மனிதர்களால் சமைக்கப்பட்ட உணவுகளும், நொறுக்குத் தீனிகளும் இயற்கையிலிருந்து பெற முடியாதவை. பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கையிலிருந்து உணவைப் பெற்ற இவற்றின் செரிமான உறுப்புகளால் இந்த உணவை ஏற்றுக் கொள்ள முடியாது. அதன் விளைவாக நோய்தாக்குதலுக்கு அவை உள்ளாகின்றன. நம்முடைய உணவில் சேர்க்கப்படும் உப்பும், அவற்றின் உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்துகிறது. உணவைத் தேடி அலையும் ஆற்றலையும், அதை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய அறிவையும் அவை இழக்க நேர்கின்றன. இவ்வாறு நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் சில காட்டுயிர்கள் மற்ற உயிரினங்களுக்கும் நோய்களை கடத்துகின்றன.
காட்டுயிர்கள் வாகனத்தில் அடிபட்டு இறக்கின்றன :
மனிதர்கள் கொடுக்கும் உணவுகளால் கவரப்படும் இந்த காட்டுயிர்கள், பல நேரங்களில் சாலைகளில் காத்திருக்கிறன்றன. குறிப்பாக மலைச் சாலைகளில் இந்த காட்டுயிர்கள் விபத்தில் சிக்கி மாண்டு போகின்றன. பகல் நேரங்களில் குரங்குகளும், இரவு நேரத்தில் போக்குவரத்து குறைந்த பிறகு மான்களும் சாலை ஓர உணவுகளை நாடி வந்து விபத்தில் சாகின்றன. சில சமயங்களில் இந்த மான்களையும், குரங்குகளையும் பின் தொடரும் சிறுத்தைகளும் இறக்க நேரிடுகிறது.
![]() |
பெருங்கணத்தான் எனும் சாம்பல் அணில் |
![]() |
சிறுத்தை |
உணவுச் சங்கிலி பாதிக்கப்படுகிறது :
காட்டுயிர்கள் தானாக காடுகளில் இரை தேடும் வரை எந்த சிக்கலும் இல்லை. அவை அவ்வாறு உணவு தேடுவதன் மூலம் காட்டை வளம் பெறச் செய்கின்றன. பறவைகளும் தாவர உண்ணிகளும், காய்களையும் பழங்களையும் உண்டு எச்சத்தின் மூலமாக விதைப்பரவல் செய்யவேண்டியவை. அந்த விதைகளுக்கு கூடுதல் முளைப்புத் திறனும் உண்டு. காடு முழுக்க அலைந்து திரியும் இந்த உயிரினங்களால் காட்டின் பல்வேறு இடங்களும் வளம் பெருகி, இயற்கை சமநிலையுடன் பாதுகாக்கப்படும். குரங்குகள் மரங்களின் உச்சியின் அமர்ந்து காய்களை உண்ணும் போது, தவறி விழும் காய்களை மான்கள் உண்கின்றன. இருவாச்சியின் எச்சத்தில் உருவாகும் அத்தி மரம் அணில்களுக்கு வாழிடம் ஆகிறது. யானையின் சாணத்தில் உப்பை உறிஞ்சும் வண்ணத்துப்பூச்சிகள் மகரந்தச் சேர்க்கை மூலம் மலை உச்சியில் இருக்கும் ஒரு மரத்தின் பூக்களை கனியாக்குகிறது. இன்னும் நாம் அறியாத, ஆயிரம் ஆயிரம் இயற்கை சுழற்சியினை, பத்து ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டையும், சோளக்கருதையும் வாங்கி உணவாகக் கொடுத்து ஜீவகாருண்யம் என்ற பெயரால் காட்டை நாசம் செய்வது எப்படி சரியாக இருக்கும் ?