உயிர்ப்புதையல் : திரு.கோவை சதாசிவம்

அரிதிலும் அரிதான ஒன்றை புதையல் என்போம். அப்படி அரிதான, மனிதர்களால் உருவாக்க முடியாத இயற்கை வளத்தை உயிர்ப்புதையல் என்று சொல்வது தானே பொருத்தமாக இருக்கும். ஒரு வகையில் இந்த நூலுமே புதையலுக்கு நிகரான மதிப்புடையது தான். திரு.சதாசிவம் அவர்களால் மிகுந்த அர்ப்பணிப்புடன் எழுதப்பட்ட இந்த நூல் சூழலில் நிகழும் பல்வேறு ஆபத்துகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 


வேங்கைப்புலி, பாறு கழுகுகள், இருவாச்சி, வரையாடு, யானைகள், பழந்தின்னி வௌவால், சோலை மந்தி போன்ற சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த காட்டுயிர்கள் பற்றிய கட்டுரைகள் கவனம் ஈர்க்கின்றன. அருகி வரும் இந்த உயிரினங்களின் வாழிடச் சூழல், அவற்றின் முக்கியத்துவம், தற்போது அந்த உயிரினங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் மற்றும் அதற்கான தீர்வுகளையும் விரிவாக பேசியிருக்கிறார் ஆசிரியர். 

இதில் குறிப்பாக பாறு கழுகுகள் (பிணந்தின்னி கழுகுகள் ) பற்றி அனைவரும் அறிந்து கொள்வது அவசியம் என நினைக்கிறேன். வீட்டுக்குள் ஒரு சுண்டெலி செத்துவிட்டால் அதன் வாடை நம்மால் தாங்கமுடியாது. அதை அப்புறப்படுத்தவே முயல்வோம். அப்படியானால் காட்டில் ஒரு யானை இறந்துவிட்டால் அந்தப் பணியை யார் செய்வார் என்ற கேள்வி மூலமே விளக்கம் அளிக்கிறார். டைக்லோபினாக் (Diclofenac) மருந்து செலுத்தப்பட்ட கால்நடைகளை, அவை இறந்த பிறகு உண்ணும் இந்த கழுகுகள் சிறுநீரக பாதிப்பால் உடனடி மரணத்தை எட்டுவதால் இதன் எண்ணிக்கை குறைந்துவிட்டதையும் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர். எனவே காடுகளுக்குள் மற்ற உயிரினங்கள் நோய்வாய்ப்படும் என்பதை விளக்கும் போது  உணவுச் சங்கிலியின் அவசியம் புரிகிறது.

கடல் சந்திக்கும் பிரச்சனைகள், சுரப்புன்னைக் காடுகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம், சோலைக்காடுகளின் முக்கியத்துவம் என பல தளங்களிலும் விரிவாக பேசுகிறது இந்த நூல். ஆற்று மணல் கொள்ளை, கனிமவளக் கொள்ளை போன்ற இயற்கையின் மீது நடத்தப்படுகிற தாக்குதல்களையும், நொய்யல் நதி மாண்டு போன வரலாறையும் பேசும் போது மனம் கனத்துப்போகிறது. 

அதிகாரத்தில் இருப்பவர்களும், அரசியல் தலைவர்களும், அவசியம் வாசிக்க வேண்டிய நூல். சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசரத்தை இந்த நூலை படிக்கும் போது உணர முடிகிறது. மரபணு மாற்று பயிர்களால் நிகழப் போகும் ஆபத்துகளையும், பருவநிலை பிறழ்வால் நிகழப் போகும் ஆபத்துகளையும் எப்படி எளிதில் கடந்துவிட முடியும் ?

காக்கைக்கூடு தளத்தில் இந்த நூலைப் பெற முடியும் : https://crownest.in/product/uyir-puthayal-kovai-sathasivam-books/


Post a Comment

0 Comments