தமிழ் ஒரு சூழலியல் மொழி : திரு.நக்கீரன்

தமிழின் பெருமைகளைக் கூற ஆயிரம் நூல்கள் உண்டு. அதுபோல இயற்கையை பற்றியும் சூழலியல் பற்றியும் பேச பல மொழிகளிலும் நூல்கள் உண்டு. இந்த இரண்டு துறைகளையும் ஒரே புள்ளியில் இணைத்துப்பார்ப்பது எளிது. ஏனென்றால் இயற்கையில் அது இணைந்தே இருக்கிறது. ஆனால் எல்லோருக்கும் புரியும்படியாக எளிமையாக்கித் தருவது சுலபமல்ல. அந்த சவாலான பணியைத் தான் இந்த நூலில் செய்து காட்டியிருக்கிறார் ஆசிரியர் திரு.நக்கீரன் அவர்கள். "தமிழ் ஒரு சூழலியல் மொழி" என்ற நான்கு வார்த்தைகளுக்குள் இருக்கும் ஆழமான பொருளை எளிமையாக உணர்ந்து கொள்ள உதவுகிறது இந்த நூல். 


"ஒரு மொழியின் இயற்கை பாதிக்கப்படாமல் இருக்கும் வரையே அது சூழலியல் மொழி" என்ற பார்வையில் இந்த நூலை தொடங்கும் போதே, தமிழ் மொழி சூழலியலை தன்னுள்ளே வளர்த்துக்கொண்டது என்பதையும், இன்று நாம் எப்படி அந்த மொழியின் வளத்தை இழந்திருக்கிறோம் என்பதையும் பேசத் தொடங்கிவிடுகிறது. 

ஆசிரியருக்கு தமிழ் மொழியின் மீது பற்று இருந்தாலும், அறிவியலை, சூழலியலை, பரிணாம வளர்ச்சியை எங்கேயும் மறுக்கவில்லை. "தமிழ் உலகின் முதல் மொழி" எனப் பேசி கைதட்டு வாங்குபவர்களுக்கு மத்தியில், அது உண்மையில்லை என்பதை தயக்கமின்றி கூறுகிறார். அந்த உண்மையும் நேர்மையும் தானே அறம். அது தானே ஒரு மொழிக்கு வளம் சேர்க்கும். தொல்காப்பியத்தின் துணையோடு, இயற்கையையும் செயற்கையையும் பிரித்துக் காட்டுவதோடு, தமிழ் ஏன் இயற்கையோடு இணைந்த மொழி என்பதையும் விளக்கிக் கூறுகிறார்.

தமிழ் மொழி ஒரு சூழலியல் மொழி என்பதை விளக்கிக்கூறும் அதே நேரத்தில், தமிழ் மன்னர்கள் எல்லோரும் இயற்கையை காப்பற்றியவர்கள் இல்லை என்பதைக் கூறவும் தயங்கவில்லை. சங்க இலக்கியங்களில், ஒரு சூழ்நிலையை விளக்கும் பாடலில், கூடுதலாக பல தகவல்கள் இடம் பெற்றிருப்பதை நாம் அறிவோம். குறிப்பாக மரம், பூக்கள், பருவ காலம், பறவைகள் என பல்வேறு தகவல்கள் குவிந்திருக்கும். இவ்வளவு விளக்கம் ஒரு பாடலுக்கு அவசியமா எனக் கேட்பவர்களுக்காகவே, "நாராய்  நாராய்" பாடலை உதாரணமாகக் காட்டி, செங்கால் நாரைகள் வலசைப் பறவை என்பதையும், அந்த பாடலில் குறிப்பிடப்பட்டது "White Stork" எனப்படும் செங்கால் நாரைகள் தான் என்பதையும் விளக்குகிறார்.

தமிழ் ஏன் மண்ணின் மொழி என்பதோடு, தமிழ் எந்த மொழிக்கும் எதிரியில்லை என்பதையும் கூறுகிற ஆசிரியர், தமிழ் மொழி மீது தாக்குதல் நடத்தப்பட்டபோதெல்லாம் தமிழ் காப்பற்றப்பட்டது அது ஒரு சூழலியல் மொழி என்பதாலேயே என்பதை விளக்கும் இடத்தில், நாம் பேசிக்கொண்டிருக்கும் மொழியின் மீதான ஈர்ப்பு கூடுவதில் ஆச்சர்யமேதுமில்லை. கலைச்சொற்கள் எவ்வாறு பிறக்கிறது என்பதையும், அதில் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் ஆராய்கிறார் ஆசிரியர். 

ஒரு கட்டுரையில் ஆசிரியர் குறிப்பிடுகிறார். இந்த நூலை வாசிக்க வேண்டியதன் அவசியத்தை நீங்கள் அதில் உணர முடியும். 

"ஓர் உயிரினத்தைக் குறிக்கப் பல சொற்களை வைத்திருக்கும் ஒரு மொழியை, அந்த உயிரினத்தையே அறியாத ஒரு வேற்று மொழிச் சொல் அடித்து வீழ்த்தும் காட்சியைக் கொஞ்சம் கற்பனை செய்வோம். ஓர் இரைகொல்லி விலங்கு தன் இரை விலங்கை அடித்து வீழ்த்தும் காட்சிக்கு ஒப்பானது அது. தமிழ் அவ்வாறு இரையாகத் தரப்பட வேண்டிய ஒரு மொழியில்லை."                                                       


Post a Comment

2 Comments

  1. படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது .

    ReplyDelete