Jun 30, 2011

திரு.கே.எம்.சின்னப்பா (ಕೆ.ಎಂ.ಚಿನ್ನಪ್ಪಾ)




கர்நாடக மாநிலத்தின் வன விலங்கு ஆர்வலர்கள் எல்லோருக்கும் முன்மாதிரியாக இருப்பவர் திரு.கே.எம்.சின்னப்பா. அவரை நேரில் சந்தித்து பேசினேன். பிரம்மகிரி மலைப் பகுதிகளுக்கு சென்ற போது, எங்கள் அமைப்பை சேர்ந்த அனைவரும் அவருடைய இல்லம் சென்று அவரை நேரில் சந்தித்து பேசினோம். நாகர்ஹோலே வனப் பகுதியை ஒட்டிய கிராமத்தில் வளர்ந்த இவர் சிறு வயதில் இருந்தே வனத்தின் மீதும், வன விலங்குகளின் மீதும் அதிக நேசம் கொண்டவாராக இருந்தார். அறுபதுகளில் வன அலுவலராக நாகர்ஹோலே வனப் பகுதியில் பணியில் சேர்ந்தார்.


சுமார் இருபது ஆண்டுகள் வன அதிகாரியாக பணியாற்றிய இவர், நாகர்ஹோலே வனப் பகுதியை இந்தியாவின் மிக முக்கிய பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக மாற்றியவர். இவர் பணியில் சேர்ந்த போது, மான்களை காண்பதே அரிதாக இருந்தது. இன்று இது புலிகள் சரணாலயமாக விளங்குகிறது. நேர்மையாகவும், சிரத்தையுடனும் போராடிய இவர், நிறைய சிக்கல்களையும் சந்திக்க நேர்ந்தது.


1993 ல், பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று அதன் பின்னரும் தொடர்ந்து வனப் பாதுகாப்பிற்காக பணியாற்றியவர். தன்னார்வு தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து இவர் பணியாற்றத் தொடங்கிய போது, இவருக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை பெற மறுத்து, தன்னுடைய ஓய்வூதிய பணமே போதும் என்று சொன்னவர். தன்னுடைய சொந்த நிலத்தை வனப் பாதுகாப்பிற்காக விட்டுக் கொடுத்தவர்.


ஆசிய யானைகளை பற்றி மிகச் சிறந்த அனுபவம் கொண்டவர். இன்று வரை வனப் பாதுகாப்பிற்காக தொடர்ந்து பணியாற்றுபவர். அவருடைய அனுபங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இன்றும் கர்நாடக மாநிலத்தில் புலிகள் அதிகம் இருப்பதற்கு இவரே மிக முக்கிய காரணம்.





Jun 27, 2011

ஒரு புளியமரத்தின் கதை: திரு.சுந்தர ராமசாமி




நாகர்கோவில் பகுதி மக்களின் வட்டார வழக்கு தமிழை இவ்வளவு சுவையாக எழுதி இதற்கு முன் நான் படித்ததில்லை. ஒரு புளிய மரம், அதை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் - நகரும் கதைகள். ஒரு மரம் எங்கும் நகர்ந்து போவதில்லை. ஆனால் அது வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதை சுற்றிலும் எத்தனை மாற்றங்கள் நடந்தாலும் அது அப்படியே தான் இருக்கிறது. எத்தனை மனிதர்கள் வந்து போனாலும் அதனிடம் எந்த மாற்றமும் இல்லை. அது தனக்கான வாழ்க்கையை வாழ்கிறது. வாழ்ந்து கொண்டே இருக்கிறது. இது எல்லா மரத்துக்கும் பொருந்தும் விஷயம் தான். அப்படி ஒரு புளிய மரத்தை சுற்றி நடக்கிற சம்பவங்களை எல்லாம் கோர்த்து நாவலாக்கியிருக்கிறார் திரு.சுந்தர ராமசாமி அவர்கள். 1960-களில் எழுதப்பட்ட நாவல் இன்றும் வாசிக்க வாசிக்க சுவை மிகுந்த அனுபவமாகவே இருக்கிறது.


ஒரு குளத்தின் நடுவில் வளரும் புளிய மரம் தான் இறக்கும் போது நகரின் மையத்துக்கு வந்து விடுகிறது. மரத்தை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் அப்படி. மற்றபடி மரம் நகரவில்லை. புளிய மரம் மரணிக்கும் போது கூட, அது பூ பூப்பதை போலவும் காய் காய்ப்பதை போலவும் இயல்பாக மரணிக்கிறது. மரணத்தை வெகு இயல்பாக ஏற்றுக் கொள்கிறது.


இந்த நாவல் ஒரு மரத்தை பற்றி மட்டுமல்ல. மரத்தை அடிப்படையாக வைத்து, சுதந்திர இந்தியா அறுபதுகளில் எப்படி இருந்தது என்பதையும் அழகாக எடுத்துச் செல்கிறது. காதர், தாமு, செல்லப்பன், கடலை தாத்தா, இசக்கி இவர்களுக்கு இடையிலான அரசியல் இன்றும் நிஜ வாழ்க்கையில் மாறாமல் இருப்பது வருத்தமாகத் தான் இருக்கிறது.


தாமோதர ஆசான் என்ற கதாபாத்திரம் யதார்த்தத்தின் உச்சம் என்றே சொல்லலாம். இன்று அது போன்ற மனிதர்களை காண்பதே அரிதாகிவிட்டது. தன் அனுபவங்களை வண்டு சிண்டுகளிடம் சொல்லி மகிழும் தாதாக்களை காண்பதே அரிதாகிவிட்டது. எல்லாவற்றையும் இன்று தொலைகாட்சிகள் தின்று விட்டன.

புளிய மரத்தின் அருகிலிருந்த காற்றாடி மரத் தோப்பை வெட்டி சாய்த்து அங்கே ஒரு பூங்காவை அமைக்க அரசாங்கம் முன்வருகிறது. மரங்கள் வெட்டப்படுவதை கூட்டமாக நின்று மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு முதியவர்க்கும் ஒரு இளைஞனுக்கும் இடையேயான உரையாடல் இந்த நாவலின் தேன் சொட்டு:

"தம்பி எதுக்குடேய் மரத்தே வெட்டிச் சாய்க்கிறாங்க?"

"செடி வெக்கப் போறாங்க"

"எதுக்குடேய் செடி வெக்கப் போறாங்க?"

"காத்துக்கு"

"மரத்தெக் காட்டிலும் செடியாடேய் கூடுதல் காத்துக் தரும்?"

"அளகுக்கு"

"செடி தான் அளகாட்டு இருக்குமோ?"

"உம்"

"செடி மரமாயுடாதொவ்?"

இளைஞன் கிழவர் முகத்தை பார்த்தான். பொறுமையிழந்து "மரமாட்டு வளராத செடிதான் வைப்பாங்க. இல்லை, வெட்டிவெட்டி விடுவாங்க" என்றான்.

"வெட்டி வெட்டி விடுவாங்கள?"

"ஆமா"

"அட பயித்தாரப் பயக்களா!"



Jun 23, 2011

மயில்களை கொல்ல வேண்டாம்




மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் அவ்வப்போது நடக்கும் முரண்பாடுகளால், பலமுறை யானைகள், காட்டெருமைகள், மான்கள், காட்டுப் பன்றிகள் என ஏராளமான உயிரினங்கள் மடிந்துள்ளன. பல சமயங்களில் தங்கள் மாடுகளை கொன்று விடுவதாக கூறி புலிகளுக்கும் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்ததுண்டு. தற்போது, அந்த பட்டியலில் மயிலும் சேர்ந்துள்ளது. பெருந்துறையில் இருபது மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன.


விளை நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி விடுவதாக கூறி தற்போது விவசாயிகள் போராட்டத்திலும் இறங்கி உள்ளனர். மயில்கள் பயிர்களை நாசம் செய்வதாக சொல்பவர்கள் சில விஷயங்களை மறந்து விடுகின்றனர். வேளான் நிலங்களில் பாம்புகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருப்பது மயில்கள். பயிர்களை தாக்கும் பல பூச்சி இனங்களை உண்டு அவற்றின் பெருக்கத்தையும்  கட்டுக்குள் வைத்திருப்பது மயில்கள் தான்.


விவசாயிகளுக்கு ஒரு வகையில் மயில்கள் நன்மையே உண்டாக்குகின்றன. மயில்கள் நம் தேசத்தின் பொக்கிஷம். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு இல்லாத பெருமை மயில்களால் இந்தியாவிற்கு உண்டு. இவை விஷம் வைத்துக் கொல்லப்படுவதை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கான தீர்வாக மயில்களுக்கு என்று புதிய சரணாலயங்கள் அமைக்கப்பட வேண்டும்.


வேளான் நிலங்களுக்கு இடையே பயிர் செய்ய  முடியாமல் வெறும் குன்றுகளாக, சிறிய மலைகளாக இருக்கும் பயன்படாத இடங்களை மயில்களுக்கான இடமாக மாற்ற வேண்டும். அவற்றின் உணவிற்கான தேவையும் அந்த இடங்களில் உறுதி செய்யப்பட வேண்டும். மயில்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். மயில்களால் பயிர்கள் சேதம் அடைந்தால் அதற்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். எனவே மயில்களை கொல்ல வேண்டும் என்ற அவசியம் ஏற்படாது.



Jun 22, 2011

தெற்காசிய ஆவுளியா

ஆவுளியா







இந்தியா, இலங்கை, வங்க தேசம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கடல் பகுதிகளில் காணப்படும் ஆவுளியாக்களை அழிவில் இருந்து காப்பாற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்த நான்கு நாடுகளும் கலந்து கொண்ட தெற்காசியாவின் ஆவுளியாக்களை காப்பாற்றும் வழிமுறைகள் குறித்த பயிலரங்கம் தூத்துக்குடியில் நடைபெற்றது.


இந்திய துணை கண்டத்தின், கட்ச் வளைகுடா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி ஆகிய பகுதிகளில் அதிகம் வாழ்கின்றன ஆவுளியாக்கள். வேட்டையாடுதல், இயந்திரங்களை கொண்டு மீன் பிடித்தல், பவளப் பாறைகளை அழித்தல் மற்றும் கடற்கரை புல் வெளிப் பகுதிகளை அழிக்கப்படுதல் போன்றவற்றின் காரணமாக இவை அதிக அழவில் உயிரிழக்க நேரிடுகிறது. வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் படி இவற்றை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், IUCN அறிவிப்புப்படி அருகி வரும் உயிரினமாகவே இது கருதப்படுகிறது.


முதல் முறையாக இந்தியா தொடங்கி வைத்திருக்கும் இந்த மாநாடு,ஆவுளியாக்களை பாதுகாப்பற்கான ஒத்துழைப்பை தெற்காசிய நாடுகள் இணைந்து செயல்பட வழி வகுத்துள்ளது.

Jun 21, 2011

சிறகடிக்கட்டும் சிட்டுக்குருவிகள்


சிட்டுக் குருவிகளின் மறுமலர்ச்சிக்கான செயல்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாக மேலும் சில பணிகளை செய்ய வேண்டியுள்ளது.



  • பழனி, ஒட்டன்சத்திரம், பூம்பாறை மற்றும் கொடைக்கானல் நகரங்களில் சிட்டுக் குருவிகள் அதிகம் உள்ள இடங்கள் பதிவு செய்யப்படும்.

  • மேலும் தன்னார்வலர்களின் எண்ணிக்கை பொருத்து, மற்ற மாவட்டங்களிலும் இந்த வழிமுறைகள் பின்பற்றப்படும்.

  • புவியிடங்காட்டி (Global Positioning System : GPS) மூலம் இந்த இடங்கள் பதிவு செய்யப்படும்.

  • மேலும் சில கூடு பெட்டிகள் வழங்கப்படும். பெற முடியாதவர்கள் மண் கலயங்களை பயன்படுத்தலாம்.

  • ஒவ்வொரு இடத்தில் பொருத்தப்படும் கூடு பேட்டிகள் மற்றும் மண் கலயங்களுக்கு ஒரு "எண்" வழங்கப்படும்.

  • கூடு பேட்டிகள் மற்றும் மண் கலயங்கள் பொருத்தப்படும் வீட்டின் உரிமையாளர்களிடம் தொடர்ந்து தானியங்கள் வைக்கவும் தண்ணீர் வைக்கவும் வலியுறுத்தப்படும்.

  • சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை கண்காணித்து பதிவு செய்வதற்காக "பதிவுத் தாள்" (Data Sheet) வழங்கப்படும்.

  • வாரம் ஒரு முறை தன்னார்வலர்கள், கூடு பெட்டிகள் மற்றும் மண் கலயங்கள் பொருத்தப்பட்டிருக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று பதிவு செய்ய வேண்டும்.  

  • மாதம் ஒரு முறை இதற்கான கலந்தாய்வு நடைபெறும்.  

  • இந்த தொடர் நடவடிக்கைகள் மூலம் அவற்றின் எண்ணிக்கை பெருகுவது கண்காணிக்கப்படும்.

மேலும் இதை நடைமுறைபடுத்த தன்னர்வலர்களும் தேவைப்படுகிறார்கள்.


உங்கள் ஊரில் இருந்தபடியே, உங்கள் வீட்டில் இருந்தபடியே இதை செய்ய முடியும். தேவை உங்கள் பங்களிப்பு மட்டுமே.





தொடர்புக்கு: +91-9742128975
satheesh.balu.m@gmail.com









Jun 20, 2011

அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்




திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் சிறுகதை தொகுப்பு. அவரின் இயல்பான நடையில், காற்றில் அடித்துச் செல்லப்படும் இறகை போல, இந்த நூலை வாசிக்கும்போது பறக்கத் தொடங்கி விடுவீர்கள். பல்வேறு தளங்களில் எழுதப்பட்டிருக்கும் இந்த சிறுகதை தொகுப்பில் மிகச் சிறந்த கதையாக நான் விரும்புவது, "குதிரைகள் பேச மறுக்கின்றன".



பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் கணவன் மனைவியின் வாழ்க்கையில், நின்று நிதானிக்க நேரம் இல்லை. ஊரில் இருந்து வரும் அவனின் அப்பா வீட்டில் வளரும் நாயை வெளியே கூட்டிச் செல்கிறார். திரும்பி வரும் பொது அது குதிரையாக இருக்கிறது. நாய் குதிரையாக மாறி விட்டதாக சொல்லி விட்டு, எதுவும் நடக்காதது போல அமைதியாகிவிடுகிறார். அதை தொடர்ந்து நகரும் இந்த கதை நடைமுறை வாழ்க்கையில் நாம் தொலைந்து போன பொறுமையை, அமைதியை எடுத்துக் காட்டுகிறது.


குதிரை என்ன தின்னும் என்பதை இணயத்தில் தேடுவது, ஏரிக்கு அருகில் வந்ததும் கேமிரா எடுத்துவரவில்லை என்று யோசிப்பது, குதிரை ஏறத் தெரியாமல் அதை பிடித்துக் கொண்டு நடந்து செல்வதை அவமானமாக நினைப்பது, தன்னுடைய குதிரை என்று சொல்ல கூச்சப்படுவது என இயல்பான மனிதனின் பிரதிபலிப்புகளை அழகாக எடுத்துக் காட்டுகிறது.


நாய் குதிரையாக மாறியதை ஏற்றுக் கொள்ளாத மகனுக்கும் எதையும் அலட்டிக் கொள்ளாமல் செய்தித்தாள் படிக்கும் தந்தைக்கும் இடையிலான உரையாடல்களில் இருக்கும் குசும்புகள் அசத்தல் ரகம்.


எஸ்.ரா அவர்களின் இணையத்தில் இந்த கதையை படிக்கலாம்.

பதினெட்டாம் நூற்றாண்டின் மழை

அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது

இந்திய வானம்

காண் என்றது இயற்கை



Jun 18, 2011

கரடிகள் வாழுமிடம் இந்தியா


பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கமும் பன்னாட்டு கரடிகள் அமைப்பும் இணைந்து நடத்தும் மாநாடு 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டெல்லியில் நடக்கிறது. இதற்கான ஒப்புதலை மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வன அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


கரடிகளை அழிவில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் இந்த மாநாட்டில் எடுக்கப்படும். உலகில் வாழும் எட்டு வகையான கரடிகளில் இந்தியாவில் மட்டுமே நான்கு வகை கரடிகள் வாழ்கின்றன. அப்படியானால் இந்தியாவின் நிலப்பரப்பு எவ்வளவு அற்புதமானது..!!




இந்திய முழுவதும் பரவி இருக்கும் கரடிகள் சமீப ஆண்டுகாலக சந்திக்கும் பிரச்சனைகள் :

அதனுடைய அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது
உணவு பற்றாக்குறை
அவற்றில் உடல் பாகங்களை சட்ட விரோதமாக வணிகம் செய்வது
மனிதர்கள் மற்றும் கரடிகள் இடையேயான வாழ்வாதார முரண்பாடுகள் போன்றவைதான்.



உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் முந்நூறுக்கும் மேற்பட்டு கரடிகளின் வாழ்வாதார பிரச்சனைகளை ஆராய்ச்சி செய்யும் நிபுணர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். கரடிகளின் உடல் பாகங்களை முறைகேடாக சந்தையில் விற்கப்படுவதை தடை செய்யவும் கண்காணிக்கவும் இந்த மாநாட்டில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மனிதர்களுக்கு கரடிகளுக்கும் இடையே எழும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் முயற்சி மேற்கொள்ளப்படும்.
 
 

Jun 13, 2011

வீரத் துறவி விவேகானந்தர் : திரு.பசுமை குமார்



விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய "வீரத் துறவி விவேகானந்தர்" என்ற நூலை படித்தேன். விவேகானந்தரின் வாழ்க்கை குறிப்புகளோடு, அவர் போதித்த தத்துவங்களையும் ஆங்காங்கே சிதறவிட்டிருக்கிறது இந்த நூல்.


உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று இந்தியாவை பற்றிய புதிய பிம்பத்தை ஏற்படுத்திய விவேகானந்தர், இந்தியாவின் முக்கிய தேவை மதம் அல்ல. கல்வியே என்று வலியுறுத்துகிறார். ஏழைகளுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கு செய்யும் சேவை என்பதை எல்லா சமயங்களிலும் உறுதிபடச் சொன்னவர்.


சிகாகோ சர்வ சமய மாநாட்டிற்கு சென்ற போதும் கூட, பலருடைய உதவியினால் தான் சென்றிருக்கிறார். அதன் பிறகு இந்தியா திரும்பியதும், பின் ஒவ்வொரு ஊராக சென்ற மக்களை சந்தித்து, சொற்பொழிவாற்றி பலரையும் கிளர்ந்தெழச் செய்தவர் விவேகானந்தர்.


 கன்னியாகுமரி வந்த போது, கடலின் நடுவே இருக்கும் பாறையில் தவம் செய்ய விரும்பி, படகோட்டிகளை உதவிக்கு அழைத்த போது, கையில் பணம் இல்லாததால் யாரும்  அவரை கொண்டுபோய் விட முன்வரவில்லை. பின் நீந்தியே பாறையை அடைந்தார். இன்று அந்த பாறைக்கு செல்வதற்கு, மக்கள் கட்டணம் கட்டி வரிசையில் காத்திருக்கிறார்கள்.




Jun 10, 2011

விஞ்ஞானியின் கவிதை



சென்ற வார ஆனந்த விகடனில் திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் கவிதை ஒன்றினை வாசிக்க நேர்ந்தது.

அந்த கவிதை:



நவீன இந்தியாவின் விஞ்ஞானிகளில் முக்கியமான ஒருவர், தாய் மொழிவழிக் கல்வி பற்றி எழுதியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ் வழி கல்வி என்பதை நம் மக்கள் அவமானதாக கருதும் இன்றைய சூழலில், கோவையில் நடந்த சம்பவத்தை அடுத்து, சரியான நேரத்தில், இந்த கவிதை எழுதியிருக்கிறார். "நாங்க தான் தமிழ்ல படிச்சோம் எங்க பிள்ளைகளாவது இங்கிலீஷ் மீடியத்துல படிக்கட்டுமே" என்பது தான் பலரது வாதமாக இருக்கிறது.

ஆங்கில வழி கல்வி என்றாலே மேலானது என்ற தவறான  மனோபாவம் நம் சமூகத்தில் விரவிக் கிடக்கிறது. எந்த மொழியில் நம் மூளை சிந்திக்குமோ அந்த மொழியில் படிப்பதே சிறந்தது. தமிழ் வழி கல்வியில் பயின்றால் ஆங்கிலம் பேச முடியாமல் போய்விடுமோ என்ற அச்சமும் நம் மக்களிடையே உண்டு. ஆங்கிலம் என்பது மொழி மட்டுமே என்பதை உணரவேண்டும்.

திரு.மயில்சாமி அவர்களின் கவிதையை ஆயிரம் தமிழ் அறிஞர்களின் கருத்துக்கு இணையாக எடுத்துக் கொள்ளலாம். தமிழில் படித்து இவ்வளவு பெரிய உயரத்தை அடைய முடியுமென்பதற்கு அவர் உதாரணமாக திகழ்கிறார். அதே நேரம் கல்வித் திட்டத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டுவந்து, தரமான கல்வியை அளிக்கவும் அரசு முன்வர வேண்டும்.

இந்த கவிதையை எழுதிய திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கும், அதை வெளியிட்ட ஆனந்த விகடனுக்கும் நன்றிகள்.



Jun 9, 2011

மைசூருக்குள் புகுந்த யானைகள்


மைசூர் நகருக்குள் யானை புகுந்த செய்தியை நேற்று முழுவதும் பல்வேறு கன்னட ஊடகங்கள் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தன. ஏ டி எம் காவலாளி ஒருவரை யானை மிதித்துக் கொன்ற காட்சியை ஒளிபரப்பியது, செய்தி ஊடகங்கள். ஒரு பசு மாடு யானையால் முட்டிக் கொல்லபட்ட காட்சியையும் தொடர்ந்து ஒளிபரப்பியது. யானையை ஒரு கொடூர விலங்கு போல சித்தரித்துக் காட்டியது. யானையால்  சேதமடைந்த வாகனங்களையும், பொது மக்கள் ஓடுவதையும், தொடர்ந்து காட்டி யானைகளின் மீது வெறுப்பு ஏற்படும் படி செய்ய தன்னால் ஆன முயற்சிகளை செய்தது. யானை ஊருக்குள் வந்தது செய்தியாக்கப்பட்டதே தவிர, அது ஏன் வந்தது என சொல்லப்படவில்லை.

ஒரு நாள் யானை ஊருக்குள் புகுந்து செய்த நாசங்களை இவ்வளவு தெளிவாக காட்டும் ஊடகங்கள், மனிதர்கள் காட்டிற்குள் சென்று செய்யும் அக்கிரமங்களை காட்டியதில்லை.

மாடுகளின் மேய்ச்சலுக்காக வனங்கள் தீ வைக்கப்படுகின்றன. அவை கட்டுக்கடங்காது பரவி பல சமயங்களில் ஏராளமான வனப் பகுதிகள் தீக்கிரையாகின்றன.

வனப் பகுதிகளில் சாலைகள் போடப்படுகின்றன.

வனப் பகுதிகளில் ரயில் பாதைகள் அமைக்கப்படுகின்றன. அவற்றால் பல யானைகள் உயிரிழந்தன.

வாகனங்கள் பயன்படுத்தும் அதிக டெசிபல் ஒலிப்பான்களால் வன விலங்குகள் அச்சமடைந்து வேறு பகுதிக்குள் நுழைகின்றன.

ஞெகிழிக் கழிவுகள் வனங்களில் போடப்பட்டு, அவற்றை உண்டு ஏராளமான உயிர்கள் மடிகின்றன.

வெட்டப்படும் மரங்களால் உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது. இன்று வனங்களில் விலங்குகளுக்கு போதுமான தண்ணீர் கூட இல்லாத சூழல் நிலவுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுகின்றன.

இவை எல்லாவற்றையும் என்றைக்காவது, தொடர்ந்து ஆறு மணி நேரம் எந்த ஊடகமாவது செய்தி ஒளிபரப்பியதுண்டா? எல்லா தீமைகளையும் செய்யும் மனிதர்கள் பற்றி எதுவும் சொல்வதில்லை. ஒரு நாள் யானை ஊருக்குள் வந்தால் தாம் தூம் என குதிக்கின்றன ஊடகங்கள்.






Jun 6, 2011

மஹாபாரதம் :திரு. ராஜாஜி




ராஜாஜி எழுதிய "மஹாபாரதம்" வாசித்தேன். குருக்ஷேத்திர போரில் நடந்த யுத்த முறைகள் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. ஒரு புத்தகம் எழுதப்பட்டு அரை நூற்றாண்டுகளை கடந்த பின்னரும் அதன் சுவாரஸ்யம் குறையாமல் இருப்பது, ஒரு எழுத்தாளரின் மிகச் சிறந்த திறமையின் வெளிப்பாடாகவே இருக்கும்.


மஹாபாரதத்தின் எண்ணற்ற கதாப்பதிரங்களின் வழியாக சொல்லப்படும் கிளைக்கதைகள் யாவும் எளிதில் புரிந்துகொள்ளும் படியாக எழுதப்பட்டிருக்கிறது. பாண்டவர்கள் வனவாசத்தின் கடைசி வருடத்தை வேடமிட்டு, விராட ராஜனிடம் வேலைசெய்து காலம் நகர்த்தும் போது, விராடனின் சேனாதிபதி கீசகன், பாஞ்சாலியை அடைய நினைத்து பின் பீமனால் கொல்லப்பட்டான். இந்த கீசகன் தான் பழனி அருகே இருக்கும் கீரனூரை ஆண்டான் என்பது பற்றி செய்தி இல்லை. தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தவும்.


சிகண்டி பீஷ்மரின் மேல் தொடுத்த அம்புகள் தொடங்கி இறுதியாக பீமன் துரியோதனனின் தொடையை கிழித்தது வரை எதுவும் யுத்த தர்ம முறைகளின்படி நடக்கவில்லை. கர்ணன் தேர் சக்கரத்தில் மாட்டிக்கொண்ட போது வீழ்த்தப்பட்டான். ஜகத்ரஜன் அர்ச்சுனனால் கொல்லப்பட்ட போது கண்ணன் இருளை உண்டாக்கி ஏமாற்றினான். பூரிசிரவசு கை வெட்டப்பட்டதும், சாத்யகி பூரிசிரவசை கொன்றதும், யுதிஷ்டிரன் துரோணரை கொன்றதும், அதற்காக அசுவத்தாமன் இறந்துவிட்டதாக சொன்ன பொய் யாவும் யுத்த விதிகளுக்கு முரணானதே.


துரியோதனனும் சகுனியும், யுதிஷ்டிரனை அழைத்து பகடையாடி தோற்கடித்து, வனவாசம் அனுப்பி, செய்த அத்தனை துரோகங்களுக்கும் பழி தீர்க்கப்பட்ட யுத்தத்தில், தருமம் தவறுதல் பிழை இல்லையா? அந்த பிழை தான் போரின் வெற்றிக்குப் பிறகும் யுதிஷ்டிரனை நிம்மதி இழக்கச் செய்கிறது. குற்ற உணர்ச்சியற்ற வாழ்க்கையே மேலானது என்பதை தான் மகாபாரதமும் உணர்த்துகிறது என நினைக்கிறேன்.