மைசூருக்குள் புகுந்த யானைகள்


மைசூர் நகருக்குள் யானை புகுந்த செய்தியை நேற்று முழுவதும் பல்வேறு கன்னட ஊடகங்கள் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தன. ஏ டி எம் காவலாளி ஒருவரை யானை மிதித்துக் கொன்ற காட்சியை ஒளிபரப்பியது, செய்தி ஊடகங்கள். ஒரு பசு மாடு யானையால் முட்டிக் கொல்லபட்ட காட்சியையும் தொடர்ந்து ஒளிபரப்பியது. யானையை ஒரு கொடூர விலங்கு போல சித்தரித்துக் காட்டியது. யானையால்  சேதமடைந்த வாகனங்களையும், பொது மக்கள் ஓடுவதையும், தொடர்ந்து காட்டி யானைகளின் மீது வெறுப்பு ஏற்படும் படி செய்ய தன்னால் ஆன முயற்சிகளை செய்தது. யானை ஊருக்குள் வந்தது செய்தியாக்கப்பட்டதே தவிர, அது ஏன் வந்தது என சொல்லப்படவில்லை.

ஒரு நாள் யானை ஊருக்குள் புகுந்து செய்த நாசங்களை இவ்வளவு தெளிவாக காட்டும் ஊடகங்கள், மனிதர்கள் காட்டிற்குள் சென்று செய்யும் அக்கிரமங்களை காட்டியதில்லை.

மாடுகளின் மேய்ச்சலுக்காக வனங்கள் தீ வைக்கப்படுகின்றன. அவை கட்டுக்கடங்காது பரவி பல சமயங்களில் ஏராளமான வனப் பகுதிகள் தீக்கிரையாகின்றன.

வனப் பகுதிகளில் சாலைகள் போடப்படுகின்றன.

வனப் பகுதிகளில் ரயில் பாதைகள் அமைக்கப்படுகின்றன. அவற்றால் பல யானைகள் உயிரிழந்தன.

வாகனங்கள் பயன்படுத்தும் அதிக டெசிபல் ஒலிப்பான்களால் வன விலங்குகள் அச்சமடைந்து வேறு பகுதிக்குள் நுழைகின்றன.

ஞெகிழிக் கழிவுகள் வனங்களில் போடப்பட்டு, அவற்றை உண்டு ஏராளமான உயிர்கள் மடிகின்றன.

வெட்டப்படும் மரங்களால் உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது. இன்று வனங்களில் விலங்குகளுக்கு போதுமான தண்ணீர் கூட இல்லாத சூழல் நிலவுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுகின்றன.

இவை எல்லாவற்றையும் என்றைக்காவது, தொடர்ந்து ஆறு மணி நேரம் எந்த ஊடகமாவது செய்தி ஒளிபரப்பியதுண்டா? எல்லா தீமைகளையும் செய்யும் மனிதர்கள் பற்றி எதுவும் சொல்வதில்லை. ஒரு நாள் யானை ஊருக்குள் வந்தால் தாம் தூம் என குதிக்கின்றன ஊடகங்கள்.






Post a Comment

0 Comments