திரு.கே.எம்.சின்னப்பா (ಕೆ.ಎಂ.ಚಿನ್ನಪ್ಪಾ)




கர்நாடக மாநிலத்தின் வன விலங்கு ஆர்வலர்கள் எல்லோருக்கும் முன்மாதிரியாக இருப்பவர் திரு.கே.எம்.சின்னப்பா. அவரை நேரில் சந்தித்து பேசினேன். பிரம்மகிரி மலைப் பகுதிகளுக்கு சென்ற போது, எங்கள் அமைப்பை சேர்ந்த அனைவரும் அவருடைய இல்லம் சென்று அவரை நேரில் சந்தித்து பேசினோம். நாகர்ஹோலே வனப் பகுதியை ஒட்டிய கிராமத்தில் வளர்ந்த இவர் சிறு வயதில் இருந்தே வனத்தின் மீதும், வன விலங்குகளின் மீதும் அதிக நேசம் கொண்டவாராக இருந்தார். அறுபதுகளில் வன அலுவலராக நாகர்ஹோலே வனப் பகுதியில் பணியில் சேர்ந்தார்.


சுமார் இருபது ஆண்டுகள் வன அதிகாரியாக பணியாற்றிய இவர், நாகர்ஹோலே வனப் பகுதியை இந்தியாவின் மிக முக்கிய பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக மாற்றியவர். இவர் பணியில் சேர்ந்த போது, மான்களை காண்பதே அரிதாக இருந்தது. இன்று இது புலிகள் சரணாலயமாக விளங்குகிறது. நேர்மையாகவும், சிரத்தையுடனும் போராடிய இவர், நிறைய சிக்கல்களையும் சந்திக்க நேர்ந்தது.


1993 ல், பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று அதன் பின்னரும் தொடர்ந்து வனப் பாதுகாப்பிற்காக பணியாற்றியவர். தன்னார்வு தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து இவர் பணியாற்றத் தொடங்கிய போது, இவருக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை பெற மறுத்து, தன்னுடைய ஓய்வூதிய பணமே போதும் என்று சொன்னவர். தன்னுடைய சொந்த நிலத்தை வனப் பாதுகாப்பிற்காக விட்டுக் கொடுத்தவர்.


ஆசிய யானைகளை பற்றி மிகச் சிறந்த அனுபவம் கொண்டவர். இன்று வரை வனப் பாதுகாப்பிற்காக தொடர்ந்து பணியாற்றுபவர். அவருடைய அனுபங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இன்றும் கர்நாடக மாநிலத்தில் புலிகள் அதிகம் இருப்பதற்கு இவரே மிக முக்கிய காரணம்.





Post a Comment

2 Comments