திருமதி. ச.மோகனப்பிரியா அவர்களின் "ததும்புதலின் பெருங்கணம்" என்ற கவிதை தொகுப்பை வாசித்தேன். இவருடைய முந்தைய தொகுப்பான "ஞாபகப் பெருங்களிறு" சிங்கப்பூரின் வாழ்வியலையும், இந்தியாவின் நினைவலைகளையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது. இந்த தொகுப்பும் அப்படிப்பட்ட ஒன்று தான் எனினும், என்னை அதிகம் கவர்ந்தது, இந்த நூலில் உள்ள சூழலியலுக்கு ஆதரவான இவரது சில கவிதைகள். கவிதைகளின் வழியே சூழலுக்கு நிகழும் பேராபத்துகளை மக்களின் மனதில் பதியவைக்க முடியும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அந்த வகையில் இந்த தொகுப்பு சில அதிர்வலைகளை ஏற்படுத்தியதில் ஆச்சர்யமில்லை.
"அதிர்வுகள்" என்ற கவிதை மிக முக்கியமானது. ஒலி மாசு (Noise Pollution) குறித்த விழிப்புணர்வற்ற ஒரு தமிழ் சமூகத்துக்கு இந்த கவிதை அவசியமானது. காடெங்கும் அதிரும் அந்த ஒலியால் உயிர்கள் எப்படி தவிக்கின்றன என்பதை உணர்த்தும் இந்த கவிதையில் உள்ள இரண்டு வரிகள் அபாரமானவை.
முடியும் மட்டும் சிறகை விரித்து
காட்டையே அணைக்கும் தாய்ப்பறவை
"பறவை குஞ்சின் இறக்கைகள் அழுகின்றன" என்ற கவிதை போரின் காரணமாக பறவைகள் எவ்வளவு இன்னல்களை சந்திக்கின்றன என்பதை அழுத்தத்தோடு பதிவு செய்கிறது.
போரின் வன்காற்றில்
அதன் குட்டி இறக்கைகள்
வலிக்க வலிக்க பறக்கிறது
என்ற வரிகள் நமக்குள்ளும் வலியை கடத்துகிறது.
பல புகைப்பட கலைஞர்கள், பறவைகளைப் படம் எடுக்கும் போதும், இயற்கையின் பல்வேறு கூறுகளை படம் எடுக்கும் போதும், பல நேரங்களில் இயற்கையை அனுபவிக்க தவறி, படம் எடுப்பதிலேயே கவனம் செலுத்துவதை நான் கவனித்து இருக்கிறேன். அப்படி படம் எடுக்கும்போது அந்த கணத்தை தவற விடுகிறவர்கள் பற்றிய ஒரு கவிதை மிகச் சிறப்பாக இருக்கிறது.
"அக்கணத்தில் இருத்தல்" என்ற அந்த கவிதையில்,
அக்கணத்தின் சாட்சியாய்
படம் பிடிப்போர் தன் காலத்தினை
கைநழுவ விடுகிறார்கள்
என்ற வரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஒரு உடும்பு சாலையோரமாக நடந்து வருகிறவர்களின் வரிசையை, இரண்டாக பிரிக்கும் என்பதை அதன் பிளவுண்ட நாவின் வழியாக சொன்னது சிறப்பு.
"வெட்டப்பட்ட மரங்களின் குரல்" என்ற கவிதையில் ஒரு வெட்டப்பட்ட மரத்தின் கிளையில் இருந்த இலைகள் தெருவெல்லாம் விழுந்து கிடந்ததை நத்தை கூடுகளில் வாழும் வறியோர் என்று உவமைப்படுத்துகிறார்.
"ஞானத்தின் இனிமை" என்ற கவிதையில் அவர் பயன்படுத்தியிருந்த பொடிப்பூக்கள் என்ற வார்த்தை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இயற்கையின் பிரம்மாண்டங்களை ரசித்து பழகிய நமக்கு, இயற்கையின் சின்னச் சின்ன கூறுகளையும் ரசிக்க சொல்லித் தரக்கூடிய இந்தக் கவிதை ஞானத்தின் இனிமேதான். மழைக்கு தன் நிறத்தை பரிசளிக்கும் இந்த சின்னஞ்சிறு பூக்கள் அற்புதம்.
தூரத்து மரக்கிளையில்
அமர்ந்திருக்கும் மாங்குயில்
மீண்டும் பறக்க
எது வேண்டுமாயிருக்கும் ?
என்ற கவிதை நமக்குள்ளும் நம்பிக்கையை விதைக்கிறது.
அகத்தின் நிலையை புறத்தால் பேசுகிற கவிதை அருமை.
தவளையாய் அடிக்கடி
தலைக்குள் வந்து போகும்
இந்த தட்டான்கள்தான்
என்ற கவிதை வரிகளில் அகம் புறத்தால் நிரம்பி இருக்கிறது.
இப்படியாக இந்த கவிதை நூல் முழுக்க இயற்கை நிறைந்து இருக்கிறது. கவிதைகளில் பறவைகளும் பூச்சிகளும் சுற்றித் திரிவதை வாசிக்க இனிமையாக இருக்கிறது. அதே சமயம் சூழலின் சிதைவுகள் பற்றிய வலிகளும் ஆங்காங்கே விரவிக் கிடைக்கிறது. பெருங்கணம் ததும்பும் காலம் உணர்த்தும் கவிதைகளை அவசியம் வாசித்துப்பாருங்கள்.


0 Comments