பல்லுயிர்களுக்கானது பூமி - விமர்சனம் 3

சுற்றுலா என்ற பெயரில் கொடைக்கானல் மற்றும் வனப்பகுதிகளில் குப்பைகளை வீசி செல்லும் பொறுப்பற்ற மனிதர்கள் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம். பூமி நமக்கானது அல்ல அனைத்து உயிர்களுக்குமானது. மனிதனை தவிர எந்த உயிரினமும் இயற்கைக்கு தீங்கு விளைவிப்பதில்லை. 

பக்கத்துக்கு பக்கம் அறியாத பல தகவல்கள், நம்மால் அழிந்து போன உயிரினங்கள், அருகிவரும் உயிரினங்களை காக்க நாம் செய்ய வேண்டியது, என்ன செய்ய போகிறோம் என்கிற கேள்விகள்‌ புத்தகம் முழுவதும் நிரம்பி இருக்கிறது. மாணவர்கள், இளம் தலைமுறையினர், சூழலியல் ஆர்வலர்கள், wildlife photographers, வனத்துறையினர், ஊடகங்கள், அரசு அதிகாரிகள், சுற்றுலா செல்பவர்கள், வாகன ஓட்டிகள், அக்கறையுள்ள பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். 

வனத்தில் குடித்து விட்டு எறியும் மது பாட்டில்கள், சாப்பிட்டு விட்டு எறியும் நெகிழி (பிளாஸ்டிக்) பைகள் உறைகள் நம் வீட்டு கிணற்றிலோ குடிநீர் தொட்டியிலோ தேங்கி கிடந்தால் எப்படி இருக்கும்‌ என்பதை வீசுவதற்கு முன் ஒரு நொடி கற்பனை செய்தாலே போதும். அதையும் மீறி அசுத்தம் செய்பவன்‌ மனிதனே அல்ல.

மேற்குத்தொடர்ச்சி மலைகள் நமக்கான வரம். நம்மை காக்கும் அரண். அதன் முக்கியத்துவம் தெரியாமலே கிட்டத்தட்ட 85% காடுகள் அழிய காரணமாகி விட்டோம். 

 *புத்தகத்தில் இருந்த சில முக்கியமான கேள்விகள்:* (கடிவாளம் கட்டிய மனிதர்களிடம் அல்ல நம் குழந்தைகளிடம் கேட்க வேண்டிய கேள்விகள்) 

"இந்த காட்டை உருவாக்கிய மூதாதையர்கள் இந்த யானைகள். இந்த கேபிள் கார்கள் யானையின் தலைக்கு மேலே செல்லும். இனி யானைகளின் தலையில் நேரடியாகவே குப்பைகளைக் கொட்டலாம். இன்னும் இந்த யானைகள் எத்தனை துயரங்களை சகித்துக் கொள்ள வேண்டும்? *யானைகளா? கேபிள் காரா?* எது முக்கியம்? "

"நுகர்வு கலாச்சாரத்தின் மூலமாக ஒரு தேசத்தின் பொருளாதாரம் மேன்படுமானால் அது எப்படி நம் தலைமுறைகளுக்கு பாதுகாப்பானதாக இருக்க முடியும்? "

"இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு அணைகளை கட்டிய போது, அது தண்ணீர் பிரச்சினையின் நிரந்தரத் தீர்வாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்று நடப்பது என்ன? அணைகள் எல்லாம் என்வாகின? ஏன் அவை நமக்குப் போதுமானதாக இல்லை?"

"காடுகளை அழித்து நதிகளை இணைத்து என்ன பயன் பெறப்போகிறோம்? காடுகள் அழிந்தால் மழை குறையும், மழை குறைந்தால் ஆறுகளில் நீர் வரத்து குறையும். இணைத்த நதிகளை பிறகு எங்கே தேடுவது? "

"நதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள முடியாத நம்மால், குளங்களையும் ஏரிகளையும் பாதுகாக்க முடியாத நம்மால் நதிகளை இணைத்து சாதித்து விட முடியுமா? "

"கங்கையில் ஆயிரம் ஆயிரம் கோடி செலவு செய்து தூய்மைப்படுத்தி என்ன பயன்? குப்பை கொட்டுவதை இந்த அரசால் தடுக்க முடியாதா? "

மனிதனை விட பேராசையும் சுயநலமும் கொண்ட மிருகம் வேறேதும் இங்கு இல்லை. தன்னுடைய வருங்கால சந்ததிகளுக்காக பணமும் பொருளும் சேர்க்க கண்மூடித்தனமாக எதை வேண்டுமானாலும் செய்யும் மனிதர்களுக்கு எப்படி புரிய வைப்பது இயற்கையை அழிப்பது தனக்கு தானே தலையில் தீ வைப்பதை போன்றது.

2070ல் 50 ட்ரில்லியன் பொருளாதாரம் மற்றும் net zero இலக்கை அடைவதற்குள் விரைவில் அழிந்து வரும் (அல்லது) அழிய போகும் உயிரினங்களின் பட்டியலில் மனித இனமும் சேர்ந்து விடும்.  

"எதிர்காலத் தலைமுறை அனுபவிக்க வேண்டிய வளங்களையும் நாமே அனுபவித்துக் கொண்டிருப்பது அநீதி என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒரே ஒரு பூமி, அது பல்லுயிர்களுக்குமானது என்பதைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்போம்"

புத்தகத்தை படித்துவிட்டு என் குழந்தை ஹீதா விடம் கலந்துரையாடினேன். இந்த புத்தகம் சூழல் பாதுகாப்புக்காக ஏதாவது முடிந்ததை செய்ய தூண்டியது. நன்றி @⁨Satheesh⁩ 🙏

---

மிக்க நன்றிங்க Zakkiria..!! 

வாசித்ததோடு அல்லாமல், கூடுதல் நேரமெடுத்து நீங்கள் எழுதிய விமர்சனத்திற்கு மிக்க நன்றி..!!

உங்கள் ஊக்கம் தொடர்ந்து எழுதச்செய்யும். தொடர்ந்து பயணிப்போம்..!!


Post a Comment

0 Comments