தக்காளி, அரிசி, அடுத்து ?

இந்தியா அரிசி ஏற்றுமதியை தடை செய்ததும், வெளிநாடுகளில் அரிசிக்கு  கடுமையான பற்றாக்குறையும், விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது. சமீபத்திய தக்காளி உயர்வு கட்டுக்குள் வராத நிலையில், அரிசியும் விலை உயர்ந்துள்ளது. பூமியின் வெப்பநிலை ஒரு டிகிரி உயர்வதால் என்ன நிகழ்ந்துவிடப்போகிறது என கேட்டவர்களுக்கு இது தான் பதில். சமீப ஆண்டுகளில் புவியின் வெப்பநிலை அதிகரித்து வருவதும், ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை, மூன்றே மணி நேரத்தில் பெய்வதும் உலகம் முழுக்க வேளாண்மையை கடுமையாக பாதிக்கிறது. நூற்றாண்டு பழமையான மரமே இந்த மழைக்கு விழுகும் போது நெற்பயிரும், தக்காளிச் செடியும் எப்படி தாங்கும் ? ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் வெப்பநிலையை சமாளிக்க நாம் குளிரூட்டப்பட்ட அறைக்குள் சென்று தப்பித்துக் கொள்கிறோம். பல்லாயிரம் ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சி பெற்ற செடியும் மரமும் அதிகரிக்கும் வெப்பத்தை எப்படித் தாங்கும் ? இந்தத் தடைகளை எல்லாம் மீறி வரும் வேளாண் விளைபொருட்களை பாதுகாக்கவும் தவறிவிடுகிறோம். அது மழையால் நனைந்து வீணாகிறது. 


வளிமண்டலத்துக்கு திரும்பிச் செல்லாமல் பூமியிலேயே அதிக வெப்பம் தங்கியிருப்பதற்கு, கார்பன் உமிழ்வே முக்கிய காரணமாக இருக்கிறது. தொடர்ந்து புதை படிவ எரிமங்களை எரித்து, கார்பன் அளவை அதிகரித்துக் கொண்டே இருந்தால் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். சமீபத்தில் வட இந்தியாவில் கொட்டிய மழை வரலாறு காணாதது. இந்த ஆண்டு உலகம் முழுக்க பதிவாகி வரும் வெப்ப நிலையும் வரலாறு காணாதது. இந்த கூடுதல் வெப்பம் எல் நினோ காலங்களில் இன்னும் அதிகரித்து, கடுமையான மழைப் பொழிவை கொண்டுவரும் எனக் கூறுகிறார்கள் சூழலியல் அறிஞர்கள். வரும் காலங்களில் இந்த சவால் அதிகரிக்கும் என்றால் வேளாண்மை செய்வது எப்படி ? அடுத்த தலைமுறைக்கான உணவின் தேவையை எப்படி பூர்த்தி செய்யப்படும் ?

உலகின் இன்றைய மிக முக்கிய பிரச்னையாக பருவநிலை பிறழ்வு [Climate Change] மாறியுள்ளது. இதை ஏற்றுக் கொள்வதிலும் விவாதிப்பதிலும் உலகம் முழுக்க அரசுகளுக்கே தயக்கம் இருக்கிறது. 2050க்குள் NET ZERO என்ற இலக்கை எல்லா நாடுகளும் அடைந்ததாக வேண்டிய அவசர சூழலில் நாம் இருக்கிறோம். சுருக்கமாக எல்லாவற்றையும் "இயற்கை பேரிடர்" என இயற்கையின் பக்கமே திருப்பிவிட்டு தப்பித்துக் கொண்டிருந்தால், இதை தடுக்கவே முடியாது. அரசின் பொருளாதாரம் என்பது நிவாரணம் கொடுக்கவும், சேதங்களை சரி செய்யவும் மட்டுமே என்ற நிலை வந்துவிடும். கூடுதல் நிதிக்கு மக்களின் வரிப்பணமே தேவைப்படும். விலைவாசி இன்னும் அதிகமாகும். தக்காளிக்கும், அரிசிக்கும் வந்த நிலை, வேறு ஒரு பொருளுக்கும் வரலாம். எல்லா பொருட்களுக்கும் ஒரே நேரத்திலும் வரலாம்.

Post a Comment

2 Comments

  1. இத்தகைய சூழல் நிச்சயம் உணவுப் பஞ்சம் குறித்த
    அச்சத்தை ஏற்படுத்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆம். தண்ணீருக்கும் இந்த நிலை வரலாம்.

      Delete