கடல் : திரு.சமஸ்

சங்காயம் என்ற சொல்லை முதல் முறையாக இந்த நூலில் வாசித்து தெரிந்து கொண்ட போது மிகவும் அதிர்ச்சியாகவே இருந்தது. மனிதன் தன் சுயநலத்திற்காக இயற்கையை எவ்வளவு ஆழம் சூறையாடுவான் என்பதற்கு சங்காயமே உதாரணம். சங்காயம் என்பது மீன் குஞ்சுகள். இறால் மற்றும் சுறாக்களுக்காக விரிக்கப்படும் வலைகளில் சிக்கி, யாருக்கும் பயனற்று கோழித் தீவனமாக செல்லும் இந்த மீன் குஞ்சுகள் தான் கடல் வளத்தின் எதிர்காலம். 

இப்படி தமிழகத்தின் கடல் சந்திக்கும் ஒவ்வொரு சிக்கல்களையும் விரிவாக எழுதியிருக்கிறார் சமஸ் அவர்கள். நிலமும் வனமும் சீரழிவதை நாம் தினமும் கண் முன்னே பார்க்கிறோம். ஆனால் கடல் வளம் கொள்ளையடிக்கப்படுவதும், மாசுபாடடைவதும் பெரும்பாலும் கவனம் பெறாமலேயே இருக்கிறது. இந்த நூலின் தரவுகளுக்காக சமஸ் அவர்கள் செய்த பயணங்களும் அர்ப்பணிப்பும் ஆச்சர்யம் ஊட்டுகிறது. ஒரு எழுத்தாளராக வருங்கால தலைமுறையின் மேல் அக்கறை கொண்டவராக அவர் தன் கடமையை செய்திருக்கிறார். அரசும் அதிகாரிகளும் இவற்றை கவனத்தில் கொண்டு செயல்பட்டால் மட்டுமே எதிகாலத்திலும் கடல் வளம் ஓரளவேனும் காப்பற்றப்படும். 


பருவ நிலை பிறழ்வு மூன்றாம் உலக நாடுகளில் மிகப் பெரிய சவாலாக மாறிவரும் வேளையில், அதன் சாட்சியாக நம் கண் முன்னே இருப்பதும் கடல் தான். ஆவுளியா போன்ற அறிய உயிரினங்களை பற்றியும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருப்பது சிறப்பு. பழவேற்காடு முதல் குமரி வரை எத்தனை கடலோர கிராமங்கள், ஒவ்வொரு கிராமத்திற்கும் ஊருக்கும் ஏதோவொரு சூழலியல் பிரச்சனை இருப்பதும் அதனால் முதலில் பாதிக்கப்படுவது அந்த  ஊரும் மக்களும் தான் என்றால், நம் தலைமுறையின் அலட்சியத்தை விடவும் அபாயகரமான அச்சுறுத்தல் அடுத்து வரும் தலைமுறைக்கு என்னவாக இருக்கும் ?

மீனவன் என்ற சொல்லை உடைத்து கடலோடி என அறிமுகப்படுத்துகிறார். மீனவர்களுடனான, மன்னிக்கவும், கடலோடிகளுடனான உரையாடல் மூலமாகவே அதை தெளிவுபடுத்துகிறார். ஒரு விவசாயியை எப்படி நெல்லுக்காரன் என்று சுருக்க முடியாதோ அது போல ஒரு கடலோடியை மீனவன் என சுருக்க முடியாது என்று விளக்கும் இடத்தில் கடலோடு சேர்ந்து கடலோடிகளும் பிரமிப்பை ஏற்படுத்துகிறார்கள். 

பழனியில் வளர்ந்த எனக்கு கடல் என்பது எப்போதும் அதிசயம் தான். கடல் மீதான பார்வையை, கடல் சார்ந்த மனிதர்களின் வாழ்வியல் சிக்கல்களை என பல பரிமாணங்களை உணர்த்தும் இந்த நூல் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல். 


யாருடைய எலிகள் நாம்?


Post a Comment

1 Comments

  1. விலை ரூ.180. தி இந்து வெளியீடு. அருஞ்சொல் பதிப்பகம் வழியாக வீட்டிலிருந்தபடியே வாங்கலாம். 6380153325 என்ற எண்ணுக்கு ஜிபே செய்துவிட்டு, முகவரியை அனுப்பினால் கூரியர் வழி நூலை அனுப்பிடுவார்கள்.

    ReplyDelete