குறளிசைக்காவியம் - சிங்கப்பூர்

லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினி இணைந்து வழங்கிய குறளிசைக்காவியம் - எட்டாவது பாகம் சிங்கப்பூரில் வெளியானது. திருக்குறளின் பெருமையை உலகெங்கும் எடுத்துச் செல்லும் இவர்களையும், இவர்கள் குடும்பத்தையும் எவ்வளவு வாழ்த்தினாலும் தகும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடகர்கள் இணைந்து உருவாக்கும் இந்த இசைத் தொகுப்பு எல்லா தமிழர்களையும் சென்றடைய வேண்டும். இது ஒரு மிகப்பெரிய முயற்சி. தங்களுடைய பதின் பருவத்தை, திருக்குறளுக்காகவே அர்பணித்திருக்கிற இவர்களை வாழ்த்துவோம். குறளோடு அதன் பொருளும் என கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது, இந்த இசைத் தொகுப்பு. இதுவரை ஏழு நாடுகளில், ஏழு பாகங்கள் வெளியிடப்பட்டு தற்போது எட்டாவது பாகம் சிங்கப்பூரில் வெளியாகியுள்ளது. இந்த இசைத் தொகுப்பில் பல்வேறு நாடுகளில் இருந்தும் பாடகர்களை பாடச் செய்திருப்பதும் நல்ல முயற்சி. 










நிகழ்வில் திரு.ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப (ஓய்வு) அவர்கள் ஆற்றிய சிறப்புரை அருமையாக இருந்தது. அவர் பேசிய முப்பது நிமிடங்களும் அரங்கம் நிறைந்த கைத்தட்டல். திருக்குறளை தன் வாழ்வோடு தொடர்புபடுத்திப் பேசியது அருமை. திருக்குறளை தமிழில் நேரடியாக படிப்பது நாம் பெற்ற வரம் என்றார். எத்தனை உண்மை!


எழுமின் சிங்கப்பூர் அமைப்பின் தலைவர், திரு. இறை.மதியழகன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். எழுமின் சிங்கப்பூர், தேசிய நூலக வாரியம், 3 DOT Movies, 8 Point Entertainment ஆகிய அமைப்புகள் இணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. ஏற்பாடு செய்த அமைப்புகளில் ஒன்றான 3 DOT Movies நிறுவனர் மற்றும் அயலக நலவாரிய உறுப்பினர் திரு. ஜி.வி. ராம் மற்றும் 8 Point Entertainment  நிறுவனர் திரு. அருமைச்சந்திரன் இருவரும் சிறப்பு விருந்தினருக்கும், சிறப்புச் சொற்பொழிவாளருக்கும் சிறப்பு செய்தனர். லிடியன் மற்றும் அமிர்தவர்ஷினி நினைவுப் பரிசினை வழங்கினார்கள். 

சிறப்பு விருந்தினர் திரு இரா.தினகரன் அவர்கள் குறளிசைக்காவியத்தின் முதல் வெளியீட்டினைச் செய்தார்கள். வெளியீட்டின் போது சிறப்புரையாளர் திரு ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப (ஓய்வு), ஏற்பாட்டாளர்கள் நால்வர், சிங்கபூரிலிருந்து இந்த இசைத் தொகுப்பில் பாடியிருக்கும் பாடகர்கள் என  அனைவரும் மேடையில் இணைந்திருக்க இந்த வெளியீடு நடந்தது. ஏற்பாடு செய்த தேசிய நூலக வாரியத்தின் தலைவர் மற்றும் ஆதரவாளர்கள் தனித்தனியாக வெவ்வேறு பாடல் தொகுதிகளை வெளியீடு செய்தனர்.

லிடியன்-அமிர்தவர்ஷினி இணைந்து ஒரு சிறப்பான இசை நிகழ்ச்சியையும் வழங்கினர்.


நிகழ்ச்சியின் இறுதியில், லிடியன்-அமிர்தவர்ஷினி ஆகியோரின் தந்தை திரைத்துறை இசை அமைப்பாளர் திரு. வர்ஷன் சதீஷ் நன்றியுரை வழங்கினார். 




Post a Comment

0 Comments