பழனி மலை முருகன் கோவிலில் இருந்து தென் திசையில் பார்த்தால் தெரியும் அந்த பசுமையான மலைத் தொடர் தான் பழனி மலைத் தொடர். மேகங்கள் அதிகம் இல்லாத மாலை நேரங்களில் மலைத் தொடரின் மையத்தில் இருக்கும் கொடைக்கானல் நகரில் விளக்குகள் ஒளிர்வதை காணலாம். பழனி மலைத் தொடர் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி. இந்த பகுதியில் இருக்கும் பறவைகள் பற்றியும் பல்லுயிர்கள் பற்றியும் நிறைய பேசியும் எழுதியும் இருக்கிறேன். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் மிகச் சிறந்த பல்லுயிர் சூழல் மிக்க இடமாக இது இருந்தது. ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பின், கொடைக்கானல் நகரின் வளர்ச்சியும், அயல் தாவரங்களின் பெருக்கமும், சுதந்திரத்திற்குப் பிறகு போடப்பட்ட புதிய சாலைகளும், அதிகரித்த வேளாண் நிலங்களும், பெருகிய சுற்றுலா தளங்களும் எண்ணற்ற சிக்கல்களை இந்த மலைத் தொடர் முழுக்க உருவாக்கின.
மலைத் தொடரின் அடிவாரப் பகுதிகளில் ஒன்றான தேக்கந்தோட்டத்தில் பல பறவையினங்களை பார்க்க முடியும். ஆனால் அங்கும் நிறைய சிக்கல்களும் இடையூறுகளும் உள்ளன. மலைத் தொடரின் மேல் பகுதி புல்வெளி மற்றும் சோலைக் காடுகளால் ஆனது. அங்கும் நிறைய சிக்கல்கள் உள்ளன. சமீபத்தில் சிறுத்தை வாகனத்தில் அடிபட்டு இறந்தது நினைவிருக்கலாம். கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளால் ஒட்டு மொத்த மலைத் தொடரும் குப்பைமேடாகி வருகிறது. சோலைக்குருவி என்ற அமைப்பு உயிரை கொடுத்து அந்த குப்பைகளை அகற்றி வருகிறார்கள். பல்வேறு அணில் இனங்கள் வாழும் இந்த மலைத் தொடரில் தான் அவை வாழிடத்தை தொலைந்து கொண்டிருக்கின்றன. குதிரையாறு பகுதியில் காணப்பட்ட நீர் நாய்கள் இப்போது இல்லை. ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான கால கட்டத்தில் இங்கு காட்டுத்தீக்கும் குறைவில்லை.
இவ்வளவு சிக்கல்களுக்கு மத்தியில் இந்த மலைத் தொடரை காக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கும் அரசுக்கும் உண்டு. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் கேபிள் கார் திட்டம் அதிர்ச்சியளிக்கிறது. பழனியில் இருந்து கொடைக்கானல் வரை செயல்படுத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திட்டம் செய்து முடிக்கும் முன்பே காடுகளுக்கு எவ்வளவு இடையூறு ஏற்படுத்தும் என்பதை விளக்கத் தேவையில்லை. 2000 மீட்டர் உயரத்திற்கு செல்லும் இந்த கேபிள் கார் அமைக்க பல இயந்திரங்களை பயன்படுத்த வேண்டியிருக்கும். எனவே மீதமிருக்கும் காடுகளும் அழிவுக்கு உள்ளாகவே வாய்ப்புகள் அதிகம்.
மேலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் இதன் மூலம் பயணம் செய்யும் மக்கள் அனைவரையும் கொடைக்கானல் தாங்குமா என்பது பற்றி சிந்திக்க வேண்டும். கோடை காலங்களில் வாகன நெரிசலை சமாளிக்க முடியாமல் திணறும் கொடைக்கானல் நகரம் கேபிள் காரில் வரும் 24000 சுற்றுலா பயணிகளை எப்படி சமாளிக்கும் ? உள்ளூர் மக்களுக்கே தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில், முறையின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை மூடச் சொல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் கொடைக்கானல் நகரின் நிலை என்னவாகும் ?
தமிழகத்தில் உள்ள யானை வழித்தடங்களில் பழனி மலைத் தொடரும் ஒன்று. பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் இருந்து இப்போதும் மாலை நேரங்களில் யானைகளை பார்க்க முடியும். அங்கே ஒரு கண்காணிப்பு கோபுரம் இருக்கிறது. மது அருந்துபவர்கள் அங்கேயே குப்பைகளையும் பாட்டில்களையும் போட்டுவிட்டுத்தான் போவார்கள். கொடைக்கானல் செல்லும் ஆம்னி பேருந்துகளின் ஒலிப்பான்களால் காடே அதிரும். எல்லாவற்றையும் இந்த யானைகள் சகித்துக் கொள்ள வேண்டும். மலைப்பகுதியில் கீழே தான் காடுகள் அதிகம். நடுவில் உள்ள பகுதிகள் பெருமப்பாலும் தோட்டங்கள் தான். அங்கு சென்றால் யானைகள் விரட்டி அடிக்கப்படும். காட்டை விட்டு வெளியே வந்தாலும் விளை நிலங்கள் தான். அங்கேயும் மின்வேலிகள் உண்டு. நெருங்கக் கூட முடியாது. ஒரு குறுகிய காட்டுக்குள் தான் இந்த பேருயிர்கள் தங்கள் எல்லைகளை சுருக்கிக் கொண்டு வாழ வேண்டும். திரும்பிய திசையெல்லாம் மனிதர்கள். இத்தனைக்கும் மனிதர்கள் பரிணாம வளர்ச்சிக்கும் இவை முந்தியவை. இந்த காட்டை உருவாக்கிய மூதாதையர்கள் இந்த யானைகள். இந்த கேபிள் கார்கள் யானையின் தலைக்கு மேலே செல்லும். இனி யானைகளின் தலையின் நேரடியாகவே குப்பைகளை கொட்டலாம். இன்னும் இந்த யானைகள் எத்தனை துயரங்களை சகித்துக் கொள்ள வேண்டும் ?
இது மாதிரியான கேபிள் கார்கள் மற்ற நாடுகளில் செயல்படுத்தப்படுவதும் உண்மைதான். அங்கே நிலை வேறு. அந்த சூழல் வேறு. அங்கே மக்களின் மன நிலையும் வேறு. இங்கே அப்படியில்லை. ஒரு மரத்தை வெட்ட வேண்டிய இடத்தில நூறு மரங்கள் வெட்டப்படலாம். அதன் பிறகு நீதிமன்றம் செல்வதால் மரங்கள் திரும்ப வரப்போவதில்லை. மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே வாழும் சோலைமந்திகள் பழனி மலைத் தொடரில் முற்றிலும் அழிந்துவிட்டன. தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடுகள் மிக மிக மிக சொற்ப எண்ணிக்கையில் இருப்பதாக தகவல்கள் மட்டுமே உள்ளது. இருவாச்சி பறவைகளையும் காணவில்லை. பத்தாண்டுகளுக்கு முன்பாக ஒரு புலி இருப்பதாக அறியப்பட்ட போது அது விஷம் வைத்துக் கொல்லப்பட்ட செய்திதான் முதலில் வந்தது.
இதுவரை கொண்டுவந்த வளர்ச்சித்திட்டங்களால் என்ன நடந்தது என்பதை சுருக்கமாக சொல்லிவிட்டேன். இந்த திட்டம் எங்களால் தான் வந்தது என பலரும் பெருமை பேசுகிறார்கள். கேரளாவில் ஒரு யானை வெடிவைத்துக் கொல்லப்பட்ட போது சமூக ஊடகங்கள் பொங்கி எழுந்தன. ஒரு யானைக்கு தீ வைக்கப்பட்ட காணொளி பரவிய போதும் பலரும் கவலை தெரிவித்தார்கள். நாம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் பின் மறந்து போகவும் ஒவ்வொரு முறையும் இந்த யானைகள் சாக வேண்டுமா ? நீங்களே சொல்லுங்கள் யானைகளா ? கேபிள் காரா ? எது முக்கியம் ?
20 Comments
யானை முக்கியம் பூமி முக்கியம்
ReplyDeleteநன்றி
Deleteயானைகள் தான் முக்கியம்....
ReplyDeleteநன்றி
Deleteபழனி மலைத்தொடரின் சோலைக்காடுகள் தான் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் பெரும்பாலான ஆறுகளின் பிறப்பிடம். காடுகள் அழிவதால் , விலங்கினங்கள் அழிவதால் மனிதனுக்கும் பாதிப்பு என்பதை மக்கள் மட்டுமல்ல அரசும் கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை. வளர்ச்சியின் பெயரால், வனங்கள் அழிக்கப்படுவது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டியதே. கேபிள் கார் நமக்கு சுற்றுலா, கேளிக்கை. ஆனால் அங்கு வாழும் உயிர்களுக்கோ வாழ்விடப்பிரச்சனை.
ReplyDeleteஉண்மை. நன்றி.
Deleteயானைகள் தான் முக்கியம்... வளங்கள அழித்துவர முன்னேற்றம் என்றைக்குமே நமக்கு ஆபத்தை தான் தரும்
ReplyDeleteயானைகளுக்காக குரல் கொடுத்ததற்கு நன்றி.
Deleteபயன்கள்.
ReplyDeleteவாகன நெரிசல் குறையும்
ஒலிப்பான்கள் தொல்லை இல்லை
மதுபாட்டில்களும் குப்பைகளும் சாலை ஓரங்களில் விழாது..
நீங்கள் சொன்ன குறைகளை, இழப்புகளை சரி செய்ய நீதிமன்றத்தை அணுகி ஒரு குழு அமைக்க உத்திரவு பெற வேண்டும்..சுற்றுசூழலுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படாதவாறு திட்டம் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்
ஒவ்வொரு நாளும் பழனி மலைத் தொடரை தூரத்தில் இருந்து பார்த்து வளர்ந்தவன் நான். அந்த மலைத் தொடர் உருவாக்கித் தந்த தண்ணீரை பருகியே நான் வளர்ந்திருக்கிறேன். இந்த மலைத் தொடருக்கு நான் கொஞ்சம் நன்றியோடு இருக்க விரும்புகிறேன்.
Deleteஇதுவரை எத்தனையோ மரக்கன்றுகளை நட்டவர் நீங்கள். மரங்களின் அருமை உங்களுக்கு நன்றாகத் தெரியும். இந்த திட்டத்தினனால் எத்தனை மரங்களை நாம் இழப்போம் ? அவற்றையெல்லாம் ஈடு செய்ய முடியுமா ? அந்த மரங்களை நம்பியிருக்கும் உயிரினங்கள் என்னவாகும் ? கொடைக்கானலில் பெருமை இயற்கையில் பொதிந்திருக்கிறது. செயற்கையில் அல்ல. இதற்கு மேலும் மனிதன் தன் சுயலத்திற்காக மட்டும் செயற்கையை கூட்டி இயற்கையை அழித்தால் கொடைக்கானல் மீது மக்களுக்கு இருக்கும் ஈர்ப்பு முழுவதும் குறைந்து விடும். தோலை நோக்கு பார்வையுடன் செயல்படுவதே சிறப்பு.
இந்த திட்டத்தால் உள்ளதையும் இழந்துவிட மாட்டோமா? உங்களுக்கு தெரியாததா? இந்த திட்டம் முழுமையாக முடிவடையும் முன்னரே காடுகள் எவ்வளவு அழிவுகளை சந்திக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இன்று வரை மேலே வரும் வாகனங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. ஒரு மலை எவ்வளவு பேரை தாங்கும் ? குறிஞ்சி ஆண்டவர் கோவில் அருகில் ஸ்டேஷன் அமைக்கப்பட்டால் அங்கிருந்து ஏரிக்கு மக்கள் எப்படி வருவார்கள் ? எத்தனை வாகனங்கள் வரும் ? சாலைகளை விரிவுபடுத்த வேண்டி வரும். இப்போது இருக்கும் போக்குவரத்து நெரிசலையே சமாளிக்க முடியவில்லை.
அரசின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது
ReplyDeleteஅரசு புரிந்து கொள்ளும் என்று நம்புவோம்.
Deleteயானை முக்கியம் பூமி முக்கியம்
ReplyDeleteநன்றி
Deleteமனித இனத்தின் அழிவு ஆரம்பம்
ReplyDeleteகேபில் காரிலிருந்து குப்பையை கீழே போடுவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். இதனால் பல்லுயிகளுக்கு ஆபத்து. மேற்கூறியவாறு நிறைய தங்கும் விடுதிகள் மற்றும் உணவு விடுதிகள் என ஆரம்பித்து இன்னும் அதிக நிலப்பரப்புகளை சூரையாடுவார்கள் இதனால் இயற்கை அழியுமே தவிர வேறொன்றும் இல்லை.மொத்தத்தில்இது ஒரு கேடான விசயம்
கருத்துக்கு நன்றி
Deleteகேபிள் கார் அறிவிப்பு என்பது மேலோட்டமாக பார்த்தால், அது சுற்றுலாவை மேம்படுத்த கூடிய ஒரு கவர்ச்சிகமான திட்டமாக தெரிகிறது. நிச்சயம் இது சுற்று சூழலை பாதிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. இது தேவையான ஒன்றா என்பதை அரசு சிந்திக்க வேண்டும். உரிய வல்லுனர்களை கலந்தாலோசிக்க வேண்டும்.
ReplyDeleteஅரசு நிச்சயம் சிந்திக்கும் என்று நம்புவோம்.
Deleteசிந்திக்க தூண்டிய கட்டுரை. அருமை
ReplyDeleteமிக்க நன்றி
Delete