தேசிய நூலக வாரியமும், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமும் இணைந்து நிகழ்த்திய கலந்துரையாடல் நிகழ்ச்சி சிங்கப்பூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குத் தூண்டுதலாக இருந்தவர் அயலக நலவாரியத்தின் ஆசிய பசிபிக் வட்டாரப் பொறுப்பாளரான சிங்கப்பூர் ஜி.வி.ராம் அவர்கள்.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் முயற்சியில் உருவாகிவரும் தமிழ் அறிவு வளாகம் பற்றிய விரிவான உரையை நூலகத்தின் இயக்குனர் திரு. சுந்தர் கணேசன் அவர்களும், நூலகத்தின் சிந்துவெளி ஆய்வு மைய ஆலோசகர் திரு. ஆர். பாலகிருஷ்ணன் அவர்களும் சிங்கப்பூரில் நிகழ்த்தினர். இந்த நூலகத்தின் முழு வரலாற்றையும், சந்தித்த சவால்களையும் அருமையாக விளக்கினார், திரு. சுந்தர் அவர்கள். அடுத்து பேசிய திரு. பாலகிருஷ்ணன் அவர்கள், நூலகத்தின் பெருமைகளையும், தமிழ் அறிவு வளாகம் ஏன் அவசியம் என்பதையும், அந்த பெயர் ஏன் பொருத்தமுடையதாக இருக்கிறது என்பதையும் விரிவாக எடுத்துரைத்தார். அதற்கு பிறகு கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கு இருவரும் பதில் அளித்தனர். நிகழ்ச்சியை திரு. இறை.மதியழகன் ஏற்பாடு செய்திருந்தார். திரு. அருண் மகிழ்நன் அவர்களும், திரு. அழகிய பாண்டியன் அவர்களும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துடன் அவர்களுடைய தொடர்பு பற்றி பேசினர்.
தமிழ் அறிவு வளாகத்தின் கட்டுமானப் பணிகள், உள்கட்டமைப்பு உட்பட ஒரு சதுர அடிக்குத் தோராயமாக ரூ.5000 செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பங்களிக்க பலரும் முன்வந்தனர். உலகில் உள்ள தமிழர்களின் கூட்டு முயற்சியால் இது உருவாக வேண்டும் என ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் விரும்புகிறது. அவர்களின் இந்தப் பணி மகத்தானது. ஒவ்வொரு நூலையும் அவர்கள் பாதுகாக்க விரும்புகிறார்கள். பாதுகாப்பது என்றால் அடுக்கி வைப்பதல்ல. நுண்படம் எடுக்கும் தொழில்நுட்ப முறையில் பாதுகாத்தல் (microfilming), அதிநவீன எண்ணிமப்படுத்தல் (Digitization) என தொழிநுட்ப ரீதியில் ஆவணப்படுத்த விருப்புகிறார்கள். செய்துகொண்டும் இருக்கிறார்கள்.
இந்த முயற்சிக்கு யாவரும் உதவலாம். வரலாற்றில் ஒரு சதுர அடி என்ற பெயரில் நடைபெறும் இந்த முயற்சிக்கு, ஒரு சதுர அடிக்கு ரூ.5000 வீதம் எத்தனை சதுர அடிகள் வேண்டுமானாலும் பங்களிக்கலாம்.
![]() |
| நூலகத்தின் இயக்குனர் திரு. சுந்தர் கணேசன் |
![]() |
| சிந்துவெளி ஆய்வு மைய ஆலோசகர் திரு. ஆர். பாலகிருஷ்ணன் |
இரண்டாயிரம் ஆண்டுகளாக எத்தனை பேரின் முயற்சிக்குப் பிறகு, திருக்குறள் இன்று நம் கைகளுக்கு வந்து சேர்ந்திருக்கிறது என்று நிகழ்ச்சியில் பேசும் போது பாலகிருஷ்ணன் அவர்கள் குறிப்பிட்டார். இன்று அந்த பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. ஐந்து லட்சத்துக்கும் மேலான நூல்களை பாதுகாக்கும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்கு நாம் உறுதுணையக இருப்பது, கடமை. பெருமை. திரு. ஜி.வி.ராம் அவர்கள் ரூ. பத்து இலட்சம் நன்கொடை வழங்க இருப்பதாகவும், அரங்கில் கலந்து கொண்ட பலரும் இணைந்து ரூ. 2 இலட்சம் அளவில் நன்கொடை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஏற்பாட்டில் உடன் நின்று நெறியாள்கை செய்திருந்த எழுமின் சிங்கப்பூர் அமைப்பின் தலைவர் இறை.மதியழகன், எழுமின் சிங்கப்பூர் அமைப்பின் உறுப்பினர்களான சிங்கப்பூர் தொழில்முனைவர்கள் இணைந்து சுமார் ரூ. 11 இலட்சம் நன்கொடை வழங்க இருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் தகவல்கள் பெற : ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்




0 Comments