Apr 27, 2022

இரண்டு புலிகளின் மரணம்

இந்தோனேசியாவில் காணப்பட்ட மூன்று வகை புலி இனங்களில் பாலி மற்றும் ஜாவன் புலிகள் முற்றிலுமாக அழிந்துவிட்ட நிலையில் தற்போது மீதமிருப்பது சுமத்ரா புலிகள் மட்டுமே. இவற்றின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே உள்ளது. 

பருவநிலை பிறழ்வு [Climate Change] காரணமாக ஏற்படும் வெள்ளம், வறட்சி, இயற்கை பேரிடர்களான சுனாமி, மனிதர்களால் ஏற்படுத்தப்படும் காட்டுத்தீ, கால்நடைகளுக்காக காடுகளை அழிப்பது என பல காரணங்களால் சுமத்ரா காடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. செம்பனை மரங்களில் பெறப்படும் எண்ணெய் [Palm Oil] அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதும் காடுகள் அழிப்புக்கு காரணமாக உள்ளது. 

இந்த நிலையில் தற்போது இரண்டு சுமத்ரா புலிகள் கொல்லப்பட்ட செய்தியை நாளிதழில் பார்த்தேன். மனிதர்களால் வைக்கப்பட்ட வளையத்தில் சிக்கி தப்பமுடியாமல் இரண்டு புலிகள் இறந்துவிட்டன.

பத்து ஆண்டுகளுக்கு முன்பாக இதே போன்ற சம்பவம் நடந்ததை என்னுடைய வலைப்பூவில் பதிவு செய்திருந்தேன். 

ஒரு புலியின் மரணம்


சிங்கப்பூர் நாளிதழில் வெளியான செய்தி 


சுமத்ரா புலிகள் பற்றி:

Apr 26, 2022

தேவாங்குகளுக்கான (Slender Loris) சரணாலயம்

காட்டுயிர் ஆர்வலர்கள் பலராலும் நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்ட தேவாங்குகளுக்கான (Slender Loris) சரணாலயம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரவலாக காணப்பட்ட விலங்குகளில் தேவங்கும் ஒன்று. மூட நம்பிக்கைகளாலும் காடுகள் அழிப்பாலும் இந்த தேவாங்கு அதிக அளவில் அழிந்துவிட்டது. அய்யலூர் பகுதியில் இவற்றின் எண்ணிக்கை ஓரளவிற்கு இருந்ததால் அந்த வனப்பகுதி தேவாங்குகளுக்கான சரணாலயமாக மாற உள்ளது. தேவாங்கு என்ற உயிரினம் தமிழ்நாட்டில் இருப்பதே பலருக்கும் தெரியாத நிலைதான் உள்ளது. மற்ற விலங்குகளில் இருந்து வேறுபட்டு காணப்படும் இந்த விலங்கை இனி பலரும் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். இந்த விலங்கு பற்றிய விபரங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு பள்ளியிலேயே மாணவர்கள் தெரிந்துகொள்ள வழி ஏற்பட வேண்டும். இந்த விழிப்புணர்வு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் காணப்படும் தேவாங்குகளை பாதுகாக்க உதவும். 
Apr 20, 2022

தூவி - நூல் விமர்சனம் - 2

நண்பர் ராஜா முகமது அவர்களின் விமர்சனம். நன்றி நண்பரே. என்னுடைய கவிதைகள் நூலாக வருவதற்கு நீங்கள் கொடுத்த உற்சாகமும் ஒரு முக்கிய காரணம்.

========================================

நூலின் பெயர்:
வெளியீடு (பதிப்பகம்):
#தூவி” நூல் விமர்சனம்.
உலகம் தோன்றிய அன்றிலிருந்து இன்று வரை பல காலச் சூழல்கள் நடந்தேறியிருக்கின்றன.
அந்த காலச் சூழல்களில் சிக்கிக் கொண்டு, சிதறி, சின்னாப்பின்னமாகியிக்கிறது மானுடம்.
மானிடவியலை பகுத்து ஆராய்ந்த பலரும், பறவையியலை, விலங்கியலை, சூழலியலை முழுமையாக ஆராய்ந்ததில்லை. ஆராய முற்படவும் இல்லை.
நம் வீட்டுத் தோட்டத்தில் சுற்றித் திரிந்த பல சின்னஞ்சிறு பறவையினங்கள் இன்று எங்கு போனதென்றே தெரியவில்லை.
சுதந்திரமாக ஆற்றில் சுற்றித்திரியும் மீன் இனங்களை பார்த்து அதனோடு விளையாடி மகிழ்ந்த மனிதர்கள் நாம் இப்போது சின்னஞ்சிறு தொட்டிகளில் அவைகளை கண்டு அற்பமாய் குதூகளிக்கிறோம்.
அதேபோல சாதாரணமாக நம் வீட்டின் எல்லா இடங்களிலும் விளையாடி மகிழ்ந்த பறவைகள் எல்லாம் இப்போது எங்கே போனது,
விஞ்சியதில் எஞ்சியவை நம்மைக் கண்டாலே விருட்டென்று பயந்து, பறந்தோடி விடுகிறது.
இதற்கெல்லாம் காரணம் யார் என்ற கேள்விக்கு நாம் இன்னமும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டே இருக்கிறோம்.
சின்னஞ்சிறு வயதில் பிள்ளைகளுக்கு பறவை யினங்களை காட்டி அவைகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்காததின் விளைவுகள் தான் இன்றைய அவல நிலை என்ற உண்மையை பலரும் இன்னமும் விளங்கிக் கொள்ளவே இல்லை.
சுற்றுச் சூழலையும், பறவையினங்களையும், விலங்கினங்களையும் பேரன்புடன் நேசித்து அது பற்றிய விழிப்புணர்வுகளை தொடர்ந்து பேசி, எழுதி, புது நம்பிக்கையை ஏற்படுத்தி வரும் அருமைத்தோழர்
#திரு_சதீஸ்_முத்து_கோபால் அவர்கள் படைத்திருக்கும் சூழலியல் நூல்தான் இந்த “#தூவி” .
இந்த நூலில் பறவைகளை மக்களுக்கு கவிதை வடிவில் அறிமுகப்படுத்தியுள்ள பாங்கு மிகவும் போற்றத்தக்கது.
சிட்டுக்குருவி, தூக்கணாங்குருவி, குயில், காகம், மணிப்புறா, மரகதப்புறா, மாடப்புறா, நாரை, ஆந்தை, மரங்கொத்தி போன்ற நமக்குத்தெரிந்த பறவைகளுடன் நமக்குத் தெரியாத பல பறவையினங்களையும் சொல்லி அவைகளின் செயல்பாடுகளை அழகான சிலவரிக் கவிதைகளில் சொல்லியிருக்கிறார்
திரு. சதீஸ் முத்து கோபால் அவர்கள்.
கலையாத மேகங்கள், உருமாறிச் செல்வது போல்
கடலலைகள் எப்போதும்
உயர்ந்தெழுந்து
தவழ்வது போல்
ஓராயிரம் சோளக்குருவிகள்
ஒருங்கிணைந்து
ஆடும் நடனம்
இயற்கையின் அற்புதம்
இன்றுவரை அதிசயம்!
என்று சோளக்குருவியை அறிமுகப்படுத்தி, அவைகளின் குணாதிசயங்களை நமக்கு எடுத்துச் சொல்லும் கவிதை மிக
அருமையாக
இருக்கிறது.
மலைக்குன்றுகளின்
மீது படரும்
பிறை நிலவின்
கசியும் ஒளியில்
பாறை இடுக்கிலிருந்து
வெளியேறி
பட்டுப்போன
மரத்தில் அமர்ந்து
சிறகுகளை கோதியபடி
வேட்டைக்கு தயாராகும்
கொம்பனாந்தை!
என்று கொம்பன் ஆந்தையை அறிமுகப்படுத்தி, அவைகளின் குணத்தை நமக்கு எடுத்துச் சொல்லும் கவிதை அசத்தலாக இருக்கிறது.
இப்படி ஒவ்வொரு பறவையினங்களின் குணங்களை கவிதையாக எழுதி, அந்தப் பறவைகளின் படங்களையும் நமக்கு படம் பிடித்துக் காட்டியிருப்பது மிக மிகச் சிறப்பாக இருக்கிறது.
இப்படியாக இந்தத் “#தூவி” நூலில் மொத்தம் அறுபத்திரண்டு பறவைகளை நமக்கு சொல்லி, நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் தோழர் திரு. சதீஸ் முத்து கோபால் அவர்கள்.
பறவைகளின் பெயர்களை படங்களுடன் அவற்றின் சூழலியலையும், அவைகளின் குணநலங்களையும் நமக்கு குறுங்கவிதைகளாக படைத்துத் தந்திருக்கும்
திரு. சதீஸ் முத்து கோபால் அவர்களின் இந்த “#தூவி” நூல் மிகவும் பயனுள்ள பொக்கிஷமான நூலாகும்.
பாதுகாக்கப்பட வேண்டிய நூலும் ஆகும்.
அனைவரும் வாங்கிப் படித்து பறவையினங்களை நாமும் தெரிந்து கொண்டு, நம் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுப்போம்.
சுற்றுச் சூழலைப்
பாதுகாப்போம்.
உடனே வாங்கிப்
படிங்க தோழமைகளே.
என்றென்றும் பேரன்புடன்
ஆற்காடு
ராஜா முகம்மது
சென்னை.Apr 17, 2022

ஆபத்தில் அணில் இனங்கள்

எப்போது பழனி மலைத் தொடரில் பயணித்தாலும் பறவைகளோடு சேர்த்து நான் தவறவிடாமல் பார்ப்பது அணில்களைத் தான். "Malabar Giant Squirrel" என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மலை அணிகளை மேல் மலைப் பகுதிகளிலும், "Grizzled Giant Squirrel" என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சாம்பல் அணில்களை கீழ் மலைப் பகுதிகளிலும் காணலாம். ஒரு சில இடங்களில் பறக்கும் அணில்களும் (Indian Giant Flying Squirrel) பதிவு செய்யப்பட்டுள்ளன.

Malabar Giant Squirrel

Indian Giant Flying Squirrel.
Photographer: Raveendran Natarajan


Grizzled Giant Squirrel

காட்டுத்தீ மற்றும் சுற்றுலா வளர்ச்சி ஆகிய காரணங்களால் இவற்றின் வாழிடம் சுருங்கி வருகின்றது. தெரு நாய்களாலும் இந்த அணில் இனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. விரிவடைந்து வரும் கொடைக்கானல் நகரமும் பெருகி வரும் தெரு நாய்களின் எண்ணிக்கையும் காட்டுயிர்களுக்கு ஆபத்தானது. சில நேரங்களில் சாலை விபத்துகளின் மூலமாக அணில்கள் இறப்பதும் நடக்கிறது. 

Grizzled Giant Squirrel - Road Kill

Indian Palm Squirrel - Road Kill


Malabar Giant Squirrel hunted by Street Dog in Kodaikanal.
Photographer : Pringly

இப்படியான சூழ்நிலையில் பழனி மலைத் தொடரின் ஒரு பகுதியில் அழிய வாய்ப்புள்ள இனமாக கருதப்படும் நீலகிரி அணில்களை "Nilgiri Stiped Squirrel" பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு மாலை நேரத்தில் அவை இரை தேடிக் கொண்டிருந்தன. ஆனால் அந்த இடம் சாலை ஓரம் மது அருந்துபவர்களின் விருப்பமான இடமாக இருந்தது. நெகிழி குப்பைகளுக்கு இடையே இந்த அணிலை கண்டேன். 

Nilgiri Striped Squirrel

Nilgiri Striped Squirrel

வனப் பகுதிக்குள் செல்லும் போது சாலை ஓரங்களில் அமர்ந்து உணவருந்துவதும், மது அருந்துவதும் தவறென்று வனத்துறை பல்வேறு இடங்களில் பலகை வைத்திருந்தாலும் அதை யாரும் மதிப்பதாக தெரியவில்லை. தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் முறையான அபராதம் வசூலித்தல் போன்ற நடவடிக்கைகள் மூலமாக மட்டுமே இந்த அணில்களின் வாழிடத்தை பாதுகாக்க முடியும். 

Apr 12, 2022

படைச்சிறுத்தை - தைவானில் இழப்பு [Clouded Leopard - Taiwan]

தமிழ்நாட்டில் காணப்படாத உயிரினங்களுக்கு இருக்கும் தமிழ் பெயர்கள் சற்றே வித்தியாசமானவை. வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி, நீர் யானை என நீளும் இந்தப் பட்டியலில் ஓரளவிற்கு பொருத்தமாக இருக்கும் இந்தப் பெயரை விக்கிப்பீடியாவில் பார்த்தேன். ஆங்கிலத்தில் "Clouded Leopard" என்றழைக்கப்படும் இந்த விலங்கின் பெயரை அப்படியே மொழி பெயர்க்காமல் படைச்சிறுத்தை எனக் குறிப்பிட்டிருப்பது சரியாகவே தோன்றுகிறது. 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் இந்த விலங்கு தைவானில் இருந்து முற்றிலும் அழிந்துவிட்டது. இதன் தோலுக்காக இவை வேட்டையாடப்பட்டதால் இவற்றின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டது. 

Taxidermy Specimen of Clouded Leopard at Berlin Natural History Museum

ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திற்கு பனிச்சிறுத்தை மாநில விலங்காக இருப்பது போல மேகாலயா மாநிலத்திற்கு இந்த படைச்சிறுத்தை மாநில விலங்காக இருக்கிறது. 

Apr 11, 2022

Birds of Palani Hills - Video