Apr 20, 2022

தூவி - நூல் விமர்சனம் - 2

நண்பர் ராஜா முகமது அவர்களின் விமர்சனம். நன்றி நண்பரே. என்னுடைய கவிதைகள் நூலாக வருவதற்கு நீங்கள் கொடுத்த உற்சாகமும் ஒரு முக்கிய காரணம்.

========================================

நூலின் பெயர்:
வெளியீடு (பதிப்பகம்):
#தூவி” நூல் விமர்சனம்.
உலகம் தோன்றிய அன்றிலிருந்து இன்று வரை பல காலச் சூழல்கள் நடந்தேறியிருக்கின்றன.
அந்த காலச் சூழல்களில் சிக்கிக் கொண்டு, சிதறி, சின்னாப்பின்னமாகியிக்கிறது மானுடம்.
மானிடவியலை பகுத்து ஆராய்ந்த பலரும், பறவையியலை, விலங்கியலை, சூழலியலை முழுமையாக ஆராய்ந்ததில்லை. ஆராய முற்படவும் இல்லை.
நம் வீட்டுத் தோட்டத்தில் சுற்றித் திரிந்த பல சின்னஞ்சிறு பறவையினங்கள் இன்று எங்கு போனதென்றே தெரியவில்லை.
சுதந்திரமாக ஆற்றில் சுற்றித்திரியும் மீன் இனங்களை பார்த்து அதனோடு விளையாடி மகிழ்ந்த மனிதர்கள் நாம் இப்போது சின்னஞ்சிறு தொட்டிகளில் அவைகளை கண்டு அற்பமாய் குதூகளிக்கிறோம்.
அதேபோல சாதாரணமாக நம் வீட்டின் எல்லா இடங்களிலும் விளையாடி மகிழ்ந்த பறவைகள் எல்லாம் இப்போது எங்கே போனது,
விஞ்சியதில் எஞ்சியவை நம்மைக் கண்டாலே விருட்டென்று பயந்து, பறந்தோடி விடுகிறது.
இதற்கெல்லாம் காரணம் யார் என்ற கேள்விக்கு நாம் இன்னமும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டே இருக்கிறோம்.
சின்னஞ்சிறு வயதில் பிள்ளைகளுக்கு பறவை யினங்களை காட்டி அவைகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்காததின் விளைவுகள் தான் இன்றைய அவல நிலை என்ற உண்மையை பலரும் இன்னமும் விளங்கிக் கொள்ளவே இல்லை.
சுற்றுச் சூழலையும், பறவையினங்களையும், விலங்கினங்களையும் பேரன்புடன் நேசித்து அது பற்றிய விழிப்புணர்வுகளை தொடர்ந்து பேசி, எழுதி, புது நம்பிக்கையை ஏற்படுத்தி வரும் அருமைத்தோழர்
#திரு_சதீஸ்_முத்து_கோபால் அவர்கள் படைத்திருக்கும் சூழலியல் நூல்தான் இந்த “#தூவி” .
இந்த நூலில் பறவைகளை மக்களுக்கு கவிதை வடிவில் அறிமுகப்படுத்தியுள்ள பாங்கு மிகவும் போற்றத்தக்கது.
சிட்டுக்குருவி, தூக்கணாங்குருவி, குயில், காகம், மணிப்புறா, மரகதப்புறா, மாடப்புறா, நாரை, ஆந்தை, மரங்கொத்தி போன்ற நமக்குத்தெரிந்த பறவைகளுடன் நமக்குத் தெரியாத பல பறவையினங்களையும் சொல்லி அவைகளின் செயல்பாடுகளை அழகான சிலவரிக் கவிதைகளில் சொல்லியிருக்கிறார்
திரு. சதீஸ் முத்து கோபால் அவர்கள்.
கலையாத மேகங்கள், உருமாறிச் செல்வது போல்
கடலலைகள் எப்போதும்
உயர்ந்தெழுந்து
தவழ்வது போல்
ஓராயிரம் சோளக்குருவிகள்
ஒருங்கிணைந்து
ஆடும் நடனம்
இயற்கையின் அற்புதம்
இன்றுவரை அதிசயம்!
என்று சோளக்குருவியை அறிமுகப்படுத்தி, அவைகளின் குணாதிசயங்களை நமக்கு எடுத்துச் சொல்லும் கவிதை மிக
அருமையாக
இருக்கிறது.
மலைக்குன்றுகளின்
மீது படரும்
பிறை நிலவின்
கசியும் ஒளியில்
பாறை இடுக்கிலிருந்து
வெளியேறி
பட்டுப்போன
மரத்தில் அமர்ந்து
சிறகுகளை கோதியபடி
வேட்டைக்கு தயாராகும்
கொம்பனாந்தை!
என்று கொம்பன் ஆந்தையை அறிமுகப்படுத்தி, அவைகளின் குணத்தை நமக்கு எடுத்துச் சொல்லும் கவிதை அசத்தலாக இருக்கிறது.
இப்படி ஒவ்வொரு பறவையினங்களின் குணங்களை கவிதையாக எழுதி, அந்தப் பறவைகளின் படங்களையும் நமக்கு படம் பிடித்துக் காட்டியிருப்பது மிக மிகச் சிறப்பாக இருக்கிறது.
இப்படியாக இந்தத் “#தூவி” நூலில் மொத்தம் அறுபத்திரண்டு பறவைகளை நமக்கு சொல்லி, நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் தோழர் திரு. சதீஸ் முத்து கோபால் அவர்கள்.
பறவைகளின் பெயர்களை படங்களுடன் அவற்றின் சூழலியலையும், அவைகளின் குணநலங்களையும் நமக்கு குறுங்கவிதைகளாக படைத்துத் தந்திருக்கும்
திரு. சதீஸ் முத்து கோபால் அவர்களின் இந்த “#தூவி” நூல் மிகவும் பயனுள்ள பொக்கிஷமான நூலாகும்.
பாதுகாக்கப்பட வேண்டிய நூலும் ஆகும்.
அனைவரும் வாங்கிப் படித்து பறவையினங்களை நாமும் தெரிந்து கொண்டு, நம் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுப்போம்.
சுற்றுச் சூழலைப்
பாதுகாப்போம்.
உடனே வாங்கிப்
படிங்க தோழமைகளே.
என்றென்றும் பேரன்புடன்
ஆற்காடு
ராஜா முகம்மது
சென்னை.



No comments:

Post a Comment