Nov 7, 2021

மோடியின் அறிவிப்புகள் நியாயமானதா?

COP 26 - Glascow மாநாட்டில் பிரதமர் மோடி 2070-ஆம் ஆண்டில் NET ZERO இலக்கை  இந்தியா எட்டும் என அறிவித்திருக்கிறார். மேலும் வளரும் நாடுகளுக்கு, வளர்ந்த நாடுகள் 1 Trillion $ அளவிற்கு பொருளாதார உதவிகள் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.


வளரும் நாடு என்ற பெயரில் நாம் இந்த பருவ நிலை பிறழ்விலிருந்து (Climate Change) தப்பிக்க நினைத்தால் அது இந்த தேசத்தின் தற்கொலைக்குச் சமம். United Nations Framework Convention on Climate Change ஆய்வறிக்கையின்படி புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரிக்கு மேல் போய்விடக்கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கிறது. 2050க்குள் NET ZERO என்ற இலக்கை எல்லா நாடுகளும் அடைந்ததாக வேண்டிய அவசர சூழலில் நாம் இருக்கிறோம். இப்படியான இக்கட்டான தருணத்தில் நாம் இன்னும் கால அவகாசம் கேட்பது எந்த வகையில் நியாயம்? இந்தியா போன்ற நாடுகள் மற்ற வளரும் நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டாமா? இது போல காலம் தாழ்த்துவது மற்ற நாடுகளின் செயல்பாடுகளையும் நீர்த்துப் போகச் செய்யாதா? 


மேலும் இது போன்று மிக முக்கியாமான பிரச்சனைகளை விவாதிக்கும் இடத்தில பிரதமர் ஆங்கிலத்தில் பேசியிருக்கலாமே? காலத்தை இதற்கு மேல் வீணடிப்பதில் எந்த நியாயமும் இல்லை. புதிப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு (Renewable Energy) மாற வேண்டிய அவசர நிலையில் நாம் இருக்கிறோம். புதை படிவ எரிமங்களை (Fossil Fuels) நாம் விரைந்து கைவிட வேண்டும். நம்முடைய கொண்டாட்டங்களுக்கும் கேளிக்கைகளுக்கும் சூழலை மாசுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு அரசும் உறுதுணையாக இருக்க வேண்டும். 


கரோனா பொதுமுடக்க காலத்திலும் கார்பன் வெளியேற்றத்தில் குறையேதும்மில்லை. அப்படியானால் இன்னும் வேகமாக நாம் இந்த புவியின் சூழலை அழிவை நோக்கி நகர்த்திச் செல்கிறோம். இந்த சூழ்நிலையில் நம்மிடம் இருக்கும் இயற்கை வளத்தை பாதுகாப்பதும், நீடித்த நிலைத்த வளர்ச்சியும் மட்டுமே நம் எதிர்காலத்தை பாதுகாக்கும். பிரதமர் வாயை திறந்தாலே எதிர்வினையாற்றும் எதிர் கட்சிகள் இந்த விஷயத்தில் விமர்சனம் செய்யாதிருப்பது ஏன்? பிரதமரின் பேச்சை ஆதரிக்கிறார்களா? பருவ நிலை பிறழ்வு என்பது அவர்களுக்கு முக்கியமான பிரச்னையாக இல்லையா?


இது உலகளாவிய பிரச்சனை. இந்த புவியில் இப்படி ஒரு சிக்கலை உருவாக்கி எல்லா உயிரினங்களையும் பாதிப்புக்குள்ளாகியிருப்பது நாம் தான் . இதற்கான தீர்வுகளையும் நம்மால் உருவாக்க முடியும். நிலக்கரியை கைவிடுவது பற்றி அமெரிக்காவும் சீனாவும் வெளிப்படையாக அறிவிக்காத சூழலில் இந்தியா மட்டும் ஏன் நிறுக்கிக்கொள்ள வேண்டும் என்று புத்திசாலித்தனமாக சிலர் விவாதம் செய்வதும் நடக்கிறது. இப்படியே நாம் விவாதம் செய்து கொண்டிருந்தால் அடுத்த தலைமுறைக்கு செய்யும் தீங்கு வேறு இருக்காது. 


சில ஆண்டுகளுக்கு முன்பு  குழந்தைகளுடன் உரையாற்றிய பிரதமர் பருவ நிலை மாற்றம் என்ற ஒன்றே இல்லை என்றார். பருவ நிலை  மாறவில்லை. நாம் தான் மாறியிருக்கிறோம் என்றார். தற்போது பிரதமரின் பேச்சில் மாற்றம் தெரிகிறது. அவர் பருவநிலை பிறழ்வை ஏற்றுக்கொண்டுவிட்டார் அல்லது  அந்த சூழலுக்கு உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக வந்து சேர்ந்திருக்கிறார். இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டுமென்றால் வளர்ச்சி திட்டங்கள் தரமுள்ளதாக இருக்க வேண்டும். ஒரு சாலை அமைக்க மீண்டும் மீண்டும் மலைகளை உடைக்க முடியாது. ஊழல் இல்லாத தரமான சாலைகளை அமைத்தால் நாம் மீண்டும் மீண்டும் இயற்கையை அச்சுறுத்த வேண்டியதில்லை. 


நுகர்வு கலாச்சாரத்திலிருந்து மக்களை விடுவிக்கும் நீடித்து நிலைக்கும் (Sustainable Development) வாழ்க்கை தரத்திற்கு மக்களை கொண்டு செல்ல அரசுகள் முன்வர வேண்டும். நெகிழி பைகளை தடை செய்யவே தயங்கும் அரசுகளை வைத்துக் கொண்டு எப்படி பருவ நிலை பிறழ்வை நாம் சமாளிக்க போகிறோம்? ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் புயலும், மேகவெடிப்பும், நிலச்சரிவுகளும், வெள்ளமும் வறட்சியும் நமக்கு நிறைய செய்திகளை சொல்லிக்கொண்டே வருகிறது. நாம் வீடியோக்களை ஷேர் செய்துவிட்டு கடந்துகொண்டே இருப்பது நல்லதல்ல. இந்த பூமி தோன்றி 24 மணி நேரம் ஆனதாக கணக்கில்கொண்டால், மனித இனம் தோன்றி வெறும் ஒரு நொடி மட்டுமே ஆகிறது. இந்த பூமி மனித இனத்திற்கு மட்டுமே சொந்தமானது அல்ல என்பது இயற்கைக்கு தெரியும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.


9 comments:

  1. மிக முக்கிய கட்டுரை. இந்த பூமி மனித இனத்திற்கு மட்டுமே சொந்தமானது அல்ல என்பது இயற்கைக்கு தெரியும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என்ற வரி நம் மனிதில் என்றும் கொண்டு இருக்க வேண்டியது.

    ReplyDelete
  2. உண்மை... ஆனால் இதை நாம் புரிந்து கொள்ளும் போது நிலமை நம் கை மீறி போய்விடும்... தயங்காமல் செயல்படுத்த வேண்டும்...

    ReplyDelete
  3. உண்மை... ஆனால் இதை நாம் புரிந்து கொள்ளும் போது நிலமை நம் கை மீறி போய்விடும்... தயங்காமல் செயல்படுத்த வேண்டும்...

    ReplyDelete
  4. இயற்கை மனிதனின் நுகர்வுக்காகத்தான் என்ற எண்ணம் என்று மாறுமோ😔?

    ReplyDelete
  5. இது உலகளாவிய பிரச்சனை. இந்த புவியில் இப்படி ஒரு சிக்கலை உருவாக்கி எல்லா உயிரினங்களையும் பாதிப்புக்குள்ளாகியிருப்பது நாம் தான் .//

    அதே சகோ. மனிதர்கள் நாம் சுயநலமியாக இருப்பது வரை இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது மிகவும் கஷ்டம். நாட்டை விடுங்கள் தலைவர்களை விடுங்கள். மக்களுக்கும் சுய விழிப்புணர்வு மிக முக்கியம். எல்லாவற்றிகும் சட்டம் போட்டால்தான் செய்வோம் என்றிருந்தால், அந்தச் சட்டத்தையும் மீறுபவர்களாக நாம் இருந்தால்,மிகவும் கடினம். வனச்சரங்களில் குப்பை ப்ளாஸ்டிக் போடக் கூடாது அது பல உயிர்களுக்கும் ஆபத்து என்று சொன்னாலும் எத்தனை வாட்டார் பாட்டில்கள் வீசப்படுகின்றன? மக்கள் பொறுப்புடன் விழிப்புணர்வுடன் செயல்படவும் வேண்டும்.

    நல்ல கட்டுரை

    கீதா

    ReplyDelete