யாருக்கானது பூமி? - விமர்சனம் - 3

 

நன்றி சாய் வைஷ்னவி..!!!

----‐--------------------------------------------

அமாவாசையைத் தவிர மற்ற நாட்களில் காகங்களை கவனித்திருக்கீர்களா? கோழியை தவிர வேறு பறவைகளை எப்போதாவது உற்று நோக்கியிருக்கிறீர்களா? மரத்தில் அமர்ந்து கீச்சிடும் அவற்றின் குரலுக்கு அர்த்தம் புரிந்திருக்கிறதா? சிடுக் சிடுக்கென இங்குமங்கும் தாவிப்பறந்து அவை எங்கே செல்கின்றன என சிந்தித்ததுண்டா? நாம் அறியாமல் நம் வாழ்வோடு ஒன்றியிருக்கும், நமக்கு உயிரூட்டி வாழ வைப்பது நாம் பெயர் கூட அறிந்திராத இந்த பறவைகளாகிய கடவுள்கள் தான். ஆம் மனிதனை வாழவைப்பது இயற்கை என்றால் இயற்கையை சமன்படுத்தும் இந்த பறவைகள்தான் மனிதனின் கடவுள்.
'யாருக்கானது பூமி'? _ சதீஷ் முத்து கோபால் அவர்களின் பறவைகள் மற்றும் சூழலியல் சார் கட்டுரை தொகுப்பு. பல்லுயிர், பறவைகள் மீதும் சுற்றுச்சூழல் மீதும் ஆர்வம் கொண்ட மென்பொறியாளர் இவர். ஆண்டு விழாவின் முதல் புத்தக தலைப்பு கேட்டதும் இவரின் கட்டுரை தொகுப்பே நினைவு வந்தது. என் தேர்வு நிச்சயம் என்னையும் நாலு பேரையும் நல்வழிப்படுத்தட்டும்.
வெறும் பறவைகள் பற்றிய தகவல்கள் அடங்கிய கட்டுரை என்றுதான் நினைத்தேன். உள்ளே சென்றால் ஒவ்வொரு பக்கங்களிலும் தகவல்களை கடந்து அவர் கண்ணால் கண்டும் உணர்ந்தும் வியந்த , வேதனை அடைந்த உயிர்கள் மற்றும் வனங்கள் பற்றிய அனுபவங்களை அடுக்கி அடுக்கி அதில் மனிதர்களையும் அவர்களின் ஈனச்செயல்களின் விளைவுகளையும் எரியூட்டுகிறார்.
எத்தனை பறவைகள், எத்தனை விலங்குகளை நாம் பார்த்திருக்கிறோம்? ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா போனால் சில விலங்குகளை வாய்பிளக்க அதிசயமாக பார்த்து வருகிறோம். அவ்வளவுதான். உண்மையில் இவ்வுலகில் கோடிக்கணக்கான அரியப்படாத விலங்குகளும் பறவைகளும் வாழ்கின்றன. வாழ்ந்திருக்கின்றன. இந்நூலில் அவர் பயணித்த இடங்களின் ஏராளமான பறவைகள் மற்றும் விலங்குகளின் பெயர்களை அள்ளித் தந்திருக்கிறார். அவற்றில் ஒருசில வற்றின் புகைப்படமும் இரண்டொரு பக்கங்களுக்கு ஒன்றாக வைத்திருப்பது ஏதோ காட்டுயிர்கள் பற்றிய குரும்படம் போல தோன்றுகிறது.
காட்டுத்தீ பற்றிய விழிப்புணர்வு, வனவிலங்குகள் கணக்கெடுப்பு, பறவைகளை அறியும் ஆர்வம் இவையே இவரை காடுகளை நோக்கி ஓயாமல் நடக்கவைத்திருக்கவேண்டும்.
#தமிழில் பறவைகளுக்கு வைக்கப்பட்ட பெயர்கள் வெறும் பெயர்கள் அல்ல. அது ஒரு பறவையை பற்றிய அறிவியல். இது தமிழ் மொழிக்கே உரிய சிறப்பு. நம் மக்கள் அதை முறையாக பயன்படுத்தாமல் எல்லா பறவைகளையும் 'குருவி'என்றே சொல்லப் பழகிக் கொண்டார்கள்.#
விளைநிலங்கள் தேடி வரும் மயில்களை விஷம் வைத்து கொள்கிறார்கள் என்ற தகவல் அதிர்ச்சியாக இருந்தது. உண்மையில் அவற்றின் வாழிடத்தையும் அழித்துவிட்டு உணவிற்காக ஊருக்குள் வரும் உயிரை கொல்லுதல் என்பது கொடும் வன்மம்.
#சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து இன்னும் நம்முடைய அரசியல் களம் விவாதிக்கக்கூட தொடங்கவில்லை. எந்த தேர்தல் அறிக்கையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தோ காடுகள் பாதுகாப்பு குறித்தோ பேசுவதில்லை. காடுகள் இன்றி நீர் இல்லை. நீர் இன்றி மனிதனும் இல்லை. எனில் காட்டின் பாதுகாப்பு எவ்வளவு அவசியமானது?மக்களும் இலவசங்களுக்கு அடிமையாகி தொலைநோக்கு இல்லாத அரசியலுக்கு பழகி வருவது வேதனை தருகிறது#
மனிதர்களுடைய தவறுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் காட்டுயிர்களை கடுமையாக பாதிக்கிறது.'காட்டுத்தீ எதனால் ஏற்படுகிறது. சிலர் மரங்கள் கோடைகாலத்தில் ஒன்றோடு ஒன்று உராய்வதால் ஏற்படுவதாக நம்புகின்றனர். இது முற்றிலும் தவறு.காட்டுத்தீ ஏற்படுவதற்கு முழுமுதல் காரணம் மனிதன். மலைபிரதேசங்களுக்கும் , வனங்களுக்கும் செல்லும் மனிதர்கள் புகைப்பிடிக்கும் போது தீக்குச்சியையோ ஊதித்தீர்த்த சிகரெட்டை அணைக்காமலோ அப்படியே போட்டு வருவது ஒரு விளையாட்டு. அது இறுதியில் அவனுக்கு அவனே வைத்துக் கொள்ளும் கொல்லி என்பது அவன் அறிவதில்லை. காடு தீப்பற்றி எரிந்து பல்வகை உயிரினங்களும் தீயில் சாம்பலாவதோடு உயிரோடிக்கும் விலங்குகள் பறவைகளுக்கும் உணவுத்தட்டுப்பாடு ஏற்படுத்துகிறது.
மரங்களை வெட்டி, காடுகளை அழித்து, பாறைகளை குடைந்து , நீர்நிலைகளை மாசுப்படுத்தி , கண்ட புகைகள் மூலம் பருவநிலையை மாற்றி மழை பெய்வதை தடுத்து, அணைகள் கட்டி ,மட்காத ஞெகிலிப் பைகளை கொட்டி சூழலை வதைத்து என மனிதன் செய்யும் ஒவ்வொரு நாசவேளைக்கும் இரையாவது வனவிலங்குகள்தான்.
#இயற்கையை பாதுகாக்க தவறிய நாம் அதை அழிப்பதை மட்டும் தொடர்ந்து செய்கிறோம். பழனி மலைத்தொடரில் மட்டுமே எட்டு அணைகள் கட்டப்பட்டுள்ளன. அணைகள் கட்டுவது மட்டுமே நீரின் தேவையை பூர்த்தி செய்துவிடாது. காடுகளையும் முறையாக பராமரிக்க வேண்டும்.
#அயல் தாவரங்கள் பெருகியதால் காடுகள் மழைக்காலத்தில் சேமித்து கோடைகாலத்தில் நமக்கு விடுவிக்கும் நீர்சுழற்சி பாதிப்புக்குள்ளாகிறது. சீமைக்கருவேலம், தைல மரங்கள், பைன் மரங்கள் அதிகளவில் பெருகி விட்டன. கொடைக்கானல் பகுதியில் பைன் மரக்காடு சுற்றுலா தளமாகிவிட்டது. அங்கு மக்கள் எதை ரசிக்கிறார்கள் என்பதே புரியவில்லை.
#சுற்றுலா பயணிகள் மது அருந்துவதும், குரங்குகளுக்கு உணவு தருவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. காடுகளின் மகத்துவம் தெரியாத இதுபோன்ற மனிதர்களை காடுகளுக்குள் அனுமதிப்பதே தவறு. யானைகளின் வழித்தடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு மேலும் காடுகளுக்குள்ளும் போய் அவற்றிற்கு உபத்திரவம் கொடுத்தால் அவை ஊருக்குள் வராமல் வேறு எங்கு போகும்? ஒருநாளைக்கு 150 லிட்டர் தண்ணீர் குடித்து வாழவேண்டிய இந்த யானைகள் இப்படி பல்வேறு காரணங்களால் துரத்தப்படுகின்றன.
இயற்கை சூழல் மிகுந்த அற்புதமான காடுகள் தான் நமக்கு மழையை கொண்டு வருகின்றன. ஆனால் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமானாதால் காடு நாசமடைகிறது வாகனங்களில் வருபவர்களின் கூச்சலும் இரைச்சலும் காட்டின் அமைதியை குழைத்து உயிர்களை பயம்கொள்ள செய்கிறது. அவர்கள் உண்டு எறியும் தின்பண்டங்களும் பிளாஸ்டிக் பைகளும் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. உடைந்த மதுப்பாட்டில்கள் உயிரினங்களுக்கு ஊரு விளைவிக்கிறது.ஞெகிலிப் பைகளும், தண்ணீர் குப்பிகளும் குப்பையாக கொட்டிக்கிடக்கின்றன. இதில் இன்னும் சில ரெசார்ட்களை வேறு திறக்கப்போகிறார்களாம். சுற்றுலா பயணிகள் தரும் உணவுகளை தின்கின்றன சில பறவைகள். பழங்களையும் கொட்டைகளையும் தின்று தன் எச்சத்தின் மூலம் மரங்கள் காடுகளை உற்பத்தி செய்யும் பறவைகள் இதுபோன்ற உணவுகளை தின்பதால் சுற்றுச்சூழலில் தன் பங்கை செய்ய முடியாமல் போகிறது.
ஐரோப்பா வரை இவரின் பறவைகள் குறித்த பயணங்கள் சென்றாலும் நம் உள்ளூரில் குவிந்துள்ள இயற்கை அழகுக்கே பறவைகள் ஏராளமாக குவிந்துள்ளன.இவர் பறவைகளை தேடிப்போன, கண்டறிந்த இடங்களின் பட்டியல்,
1.பிலிகிரி ரெங்கன் பெட்டா_கர்நாடகா
2.காவேரி வனவிலங்கு சரணாலயம்
3.கொங்கூர்_பழனி
4.கோதைமங்களம்_பழனி
5.ஶ்ரீரங்கப்பட்டினம்_கர்நாடகா
6.ரங்கன திட்டு சரணாலயம்
7.ஹெப்பால் ஏரி
8.பழனி மலைத்தொடர்
9.பேரிஜம்_கொடைக்கானல்
10.பிரம்மகிரி
11.நாகர்ஹோலே
12.பரத்பூர்
13.பத்ரா வனப்பகுதி
14.சத்தியமங்கலம் வனப்பகுதி
15.சோழிங்கநல்லூர்_சென்னை
16.சுவிட்சர்லாந்து
#கடற்கரையிலும் கழிமுகங்களிலும் மணல்களில் குழிபறித்து முட்டையிடும் ஆமைகள் அவற்றை அடைகாப்பதில்லை. சரியான வெப்பநிலையில் பொறிக்கப்படும் குஞ்சுகள் தாமாகவே வெளிவந்து கடலை நோக்கி செல்கின்றன. காரணம் கடலிலிருந்து வரும் ஒளியால் அவைகள் ஈர்க்கப்படுவதுதான். ஆனால் இன்று செயற்கை வெளிச்சம் கடலைவிட அதிகமாக இருப்பதால் அவை நகரங்களை நோக்கி வந்து மனிதர்களால் பலியாகின்றன. இவற்றை தடுக்கவே ஆமைகள் காப்பகங்கள் செயல்பட்டு முட்டைகளை சேகரித்து பொரித்ததும் கடலில் விட்டுவிடுகின்றனர். இது பாராட்டத்தக்க செயல்.
கிட்டத்தட்ட இருநூறு அதற்கும் மேற்பட்ட பறவைகளின் பெயர்களையும் சில படங்களையும் பட்டியலிட்டு இருக்கிறார். அதில் கேள்வி பட்டிராத மிகச்சில பெயர்கள் இங்கே,
1.வெண்புருவக் கொண்டைக்குருவி
2.அரசவாலன்
3.செவ்வரி நாரை
5.அரிவாள் மூக்கன்
6.பவளக்கால் உள்ளான்
7.பட்டாணி உப்புக்கொத்தி
8.நீல தாழைக்கோழி
9.நத்தை குத்தி நாரை
10.கரண்டிவாயன்
சாமான்ய மனிதன் முதல் பொறுப்பில் இருப்பவர்கள் பலரிடமும் மாற்றம் வரவேண்டியது அவசியமாகும். நாம் அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறோம் என்ற பயமும் நம் அடுத்த தலைமுறைக்காக இந்த பூமியை காக்க வேண்டிய கடமையும் ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கவேண்டும் என்கிறார் ஆசிரியர்.
காடுகளுக்கு சுற்றுலா செல்லும்போதும் நம்மை சுற்றியுள்ள சூழலை முடிந்தவரை மாசுப்படுத்தாமல் இருந்தாலே உணவுச்சங்கிலி அதன் இயல்பில் இருக்கும். நம் வீட்டில் அந்நியர்கள் வந்து வீட்டை நாசப்படுத்தி நம்மையும் துன்புறுத்தினால் எப்படி உணர்வோமோ அதையேதான் மற்ற உயிரினங்களும் உணரும் என்று புரிந்துகொள்வதே அறிவு. முடிந்தவரை பாதிக்கப்பட்ட சூழலை சமன்படுத்தியும் இன்னும் மிச்சமிருக்கும் சூழலை பாதுகாத்தும் வாழ்ந்தாலே போதும். இந்த தலைப்பை கொடுத்ததற்காக குழுவினருக்கு நன்றி.
காக்கைக்கூடு பதிப்பகம்
விலை 170.
To order:



Post a Comment

0 Comments