Nov 22, 2015

இதுவே கடைசி வாய்ப்பாகவும் இருக்கலாம்..!!

எல்லோரும் மழை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். மழை நீர் ஆற்றில் வீணாக கலப்பதாக பலரும் கவலை கொள்கிறார்கள். மழை நீரை சேமிக்காதது மனிதனின் தவறு என்றும், ஏரி குளங்களை ஆக்கிரமித்ததின் விளைவே இது என்றும் பலர் ஒப்புக் கொள்கிறார்கள். சிலர் அரசாங்கம் சரி இல்லை என்று குரல் எழுப்புகிறார்கள். சில அரசியல்வாதிகள் முந்தைய அரசாங்கத்தை குற்றம் சாட்டுகிறார்கள். சிலர் மழையை குற்றம் என்கிறார்கள். எல்லோரும் நிறைய பேசுகிறார்கள். ஆனால் இன்னும் முழுமையான புரிதல் இருக்கிறதா என்பது சந்தேகமே.

தேர்தல் அறிக்கை வெளியிடும் அரசியல் கட்சிகளிடம் மக்கள் எவரும் ஏன் உங்கள் அறிக்கையில் இயற்கையை காப்பது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என கேள்வி எழுப்பியதுண்டா? இயற்கையை காப்பதற்கான எந்த முயற்சிகளையும் அரசு செய்யாதபோது கண்டும் காணதது போல இருந்தவர்கள் யார்? அரசு, அதிகாரிகள், மக்கள் என மாறி மாறி நாம் விரல் நீட்டிக் கொண்டே இருக்கிறோம். இப்படியே போனால் இந்த நிலை இன்னும் மோசமாகும். அரசியல் மாற்றங்களுக்கு தமிழ் நாடு எப்போதும் முன்னோடி மாநிலம் தான். யார் ஆளக்கூடாது என்பதை தீர்மானிக்கும் மக்கள் உள்ள மாநிலம். நாம் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டுமானால், தமிழ் நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாத்து அதன் நன்மைகளை நாம் அனுபவிக்க வேண்டுமானால் இங்கே "சூழல் அரசியல்" பேசியாக வேண்டும். இயற்கையை காப்பது குறித்து அரசியல் மேடைகளில் விவாதிக்க வேண்டும். அதற்கான காலத்தை நாம் எப்போதோ அடைந்துவிட்டோம்.கிரானைட், தாதுமணல், ஆற்றுமணல், ஏரிகள், குளங்கள், ஆறுகள், மேற்கு தொடர்ச்சி மலை, காடுகள் பற்றி எறிவது, விலங்குகள் ஊருக்குள் வருவது, கடுமையான வெயில், வறட்சி மற்றும் வெள்ளம் என இயற்கை சார்ந்த நேரடியான அல்லது மறைமுகமான செய்திகளே ஒவ்வொரு நாளும் தலைப்புச் செய்திகளாக மாறி இருக்கும் சூழ்நிலையில் இயற்கை பாதிக்கப்படுவதற்கு மனிதனே காரணம் என்பதை ஒப்புக் கொண்டு செயல் திட்டங்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைபடுத்த வேண்டும்.

தென்னிந்தியாவை பொறுத்தவரை ஆறுகள் பெரும்பாலும் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்தே உருவாகிறது. இந்த ஆறுகள் எப்படி உருவாகிறது என்ற புரிதல் நமக்கு மிகவும் அவசியம். எங்கோ மலையில் பெய்யும் நீர் அப்படியே ஓடி வருவதில்லை. மேற்கு தொடர்ச்சி மலையின் உச்சியில் உள்ள சோலைக்காடுகள், அங்கே உள்ள புல்வெளிகளில் வருடம் முழுவதும் பெய்யும் மழையை ஒரு பஞ்சை போல தன்னுள்ளே தக்க வைத்துக்கொள்கிறது. இது மெல்ல மெல்ல நீரை வெளியிடுவதால் ஆற்றில் எப்போதும் நீர் ஓடிக்கொண்டே இருக்கும். அது கடலில் சென்று சேர்வதில் எந்த தவறும் இல்லை. ஆற்று நீர் கடலில் கலப்பது சூழல் சுழற்சியில் ஒரு பகுதியே.


ஆனால் மனிதர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? சோலைக் காடுகளை சுற்றுலாத் தலங்களாக்கி அங்கே சாலைகள் போட்டார்கள். யூக்கலிப்டஸ் மரங்களை நட்டார்கள். தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினார்கள். சோலைக் காடுகளை மாற்றி அமைத்தார்கள். ஆறுகளின் குறுக்கே அணைகளை கட்டினார்கள். ஏரி குளங்களை மூடினார்கள். பிளாஸ்டிக் குப்பைகளை டன் கணக்கில் பெருக்கி பூமியை நாசம் செய்தார்கள். இயற்கையில் எல்லா விதிகளையும் மாற்றி எழுதினார்கள். இயற்கை தன் விதியை எப்போதும் மாற்றிக் கொள்வதில்லை. அதை மனிதர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் மழை நீரை சேமித்திருந்தால் நிலத்தடி நீரை காப்பாற்றி இருக்கலாம். காவிரியில் தண்ணீர் வேண்டும் என அரசியல் பேசும் எவரும் காவிரியில் கலக்கும் பவானி, அமராவதி மற்றும் நொய்யல் நதிகளை பற்றி பேசுவதில்லை. இயற்கை வளங்களை வியாபார பொருளாக அரசியல்வாதிகளும் மக்களும் பார்க்கத் தொடங்கியதன் விளைவால் நாம் சில தண்டனைகளை அனுபவிக்கத் தொடங்கி இருக்கிறோம். இந்த எண்ணத்தை இப்போதே மாற்றிக் கொள்ள வேண்டும். இயற்கையை வியாபாரப் பொருளாக பார்க்காமல், நம் செல்வமாக பார்க்க வேண்டும். தன் வீட்டுக் குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால் போராடும் மக்கள், மரங்களை வெட்டும் போதே வந்து போராட வேண்டும். மக்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், மாணவர்கள் என எல்லோரிடம் மாற்றம் வேண்டும். இனி தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் பேராபத்தில் முடியும். இல்லையென்றால் தன் நிலத்தில் யார் வாழ வேண்டும் என்பதை இயற்கை நிச்சயம் தீர்மானித்துக் கொள்ளும் (கொல்லும்).2 comments:

  1. 2015 நவம்பரில் எழுதிய கட்டுரை.

    ReplyDelete
  2. True true 💯 It’s sad. If people do not wake up this is going to be the end. Good article for awareness. 👏🏻👏🏻

    ReplyDelete

Would you like to follow ?