வெள்ளத்தில் அடித்துச் செல்லட்டும் நம் மறதியும்....

சென்னையில் கொஞ்சமேனும் நீர் நிலைகள் மிச்சம் இருக்கின்றன. ஒரு வேலை அவைகளும் மூடப்பட்டிருந்தால் சென்னையின் நிலை என்னவாகியிருக்கும் என சிந்தித்துக் கூட பார்க்க முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளாக நீர் நிலைகளை பாதுகாக்க போராடியவர்களை நிச்சயம் நினைத்துப் பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என கூக்குரலிட்ட பலரையும் யாரும் கண்டுகொள்ளவே இல்லை. அதிகாரிகளோ அரசாங்கமோ அவர்கள் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ஊடகங்கள் யாவும் நீர் நிலைகள் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து செய்தி வெளியிட்டதில்லை. இந்த மழை வெள்ளம் நல்ல பாடத்தை கற்றுக் கொடுத்திருக்கிறது. ஆனால் இது விலை மதிப்பிலாத பாடம். இத்தனை உயிர்களையும் உடமைகளையும் பறிகொடுத்து நாம் இந்த பாடத்தை கற்கும்படி ஆகிவிட்டது.இனியும் நீர் நிலைகளை பாதுகாக்க தவறினால் அதன் விளைவுகளை எதிர்காலம் சந்திக்க முடியாது போய்விடும். இந்த மழை வெள்ளம் நம் எல்லோரையும் கை கோர்க்க வைத்திருக்கிறது. இணைந்த கைகள் இன்னும் கூடுதலாக இறுக பற்றிக் கொள்ளட்டும். நீர் நிலைகளை பாதுகாக்கும் முயற்சியில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நீர் நிலைகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த சூழலும் சிறப்பாக பாதுகாக்கப்பட வேண்டும். இயற்கையை தொலைத்துவிட்டு முன்னேறுவது சாத்தியமில்லாதது. மீண்டும் சறுக்கி வீழ்வதை யாராலும் தடுக்க முடியாது. எல்லா சூழல் மாற்றங்களும் ஏழைகளை கடுமையாக பாதிக்கின்றன. சொந்த நாட்டில் அவர்களை அகதிகளாக மாற்றுகின்றன. இயற்கையை பாதுகாக்கும் முயற்சியை அரசியல் கட்சிகள் முன்னெடுக்கும் என்பதில் எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை. எனவே அழுத்தம் கொடுக்க வேண்டியவர்கள் மக்களே. இதுவரை எந்த அரசியல் கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில், நீர் நிலைகளை பாதுகாப்போம் என்றோ, இயற்கையை பாதுகாப்போம் என்றோ உறுதி அளித்ததும் இல்லை. நிறைவேற்றியதும் இல்லை.அழிவு ஏற்படும் போது மக்களை கையேந்தும் நிலையில் தான் எப்போதும் அரசு வைத்திருக்கிறது. இன்னும் நடிகர்களின் உதவியை எதிபார்ப்பது கேலிக் கூத்தாக இருக்கிறது.  எந்த நடிகர் எவ்வளவு பணம் கொடுத்தார் என்பது விவாதமாக இருக்கிறது. இந்த மனோபாவம் தான் நடிகர்களை தலைவர்களாக்கி மக்களை பிசைக்காரர்களாக்கிவிடுகிறது. நடிகர்கள் வேலை நடிப்பது, அதற்கான கூலியை அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள். சினிமா பார்ப்பது நம் காலச்சாரத்தில் கலந்துவிட்ட ஒரு விஷம். நூறு ரூபாய் கொடுத்து படம் பார்க்கிறோம் என்பதற்காக எந்த நடிகனும் சேவை செய்ய வர வேண்டியதில்லை. நடிகர்களுக்கு கொடுக்கும் அழுத்தத்தை அரசுக்கு கொடுக்கலாம். ஆயிரம் கோடிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் வீணாய் போவது நம் கண் முன்னே நடக்கிறது. நடிகர்கள் சேவை செய்வது அவரவர் சொந்த விருப்பம். நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் பேசுவதற்குக் கூட சினிமா தான் முக்கிய பொருளாக இருக்கிறது. இனியாவது சூழல் குறித்து பேசுவோம். விவாதிப்போம். இயற்கையை மீட்டெடுப்போம்.இன்னும் நம்மிடையே மனிதாபினம் இருக்கிறது. ஒற்றுமை இருக்கிறது. எங்கோ கேட்கும் அழு குரலுக்காக கண்ணீர் விடும் மனது இருக்கிறது. நான்கு நாட்களுக்கு தூக்கம் இல்லாமல் எந்த எதிபார்ப்பும் இல்லாமல் ஓடி ஓடி உதவி செய்யும் எண்ணமும் வலிமையும் இருக்கிறது. ஆனால் நம்மிடம் இருக்கும் மிகப்பெரிய பலவீனம் தவறு செய்யும் ஆட்சியளார்களை மன்னிப்பதும் மறந்து போவதும். மன்னிப்பதை விடவும் மறந்து போவது மிகப்பெரிய பலவீனம். அதுவே தவறு செய்பவர்களுக்கு மிகப்பெரிய பலம். இந்த வெள்ளத்தில் நம் மறதியும் அடித்துக் கொண்டு போகட்டும்.Post a Comment

0 Comments