அமைதி..!! அமைதி..!! அமைதி..!!


தொழிற்சாலை கழிவுகள், ஞெகிழிக் கழிவுகள், வாகனப் புகை, மருந்துக் கழிவுகள், பூச்சிக்கொல்லிரசாயன கழிவுகள் போல நம் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் பல்வேறு மாசுகளுக்கு சற்றும் குறைவில்லாத மற்றுமொரு மிகப்பெரிய சூழல் சீர்கேடு Noise Pollution எனப்படும் ஒலி மாசு.
நம் ஒவ்வொருவரும் சந்திக்கும் அன்றாட பிரச்சனைகளில் முக்கியமானதாக மாறி வருகிறது ஒலி மாசு. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இந்த அனுபவம் இருக்கும். இருப்பினும் சத்தம் இல்லாமல் கடந்து விடுகிறோம் இந்த சத்தங்களை. நீங்கள் சிக்னலில் காத்துக் கொண்டிருபீர்கள். உங்களுக்கு பின்னால் நிற்கும் வாகனம் முப்பது வினாடிகள் மீதம் இருக்கும் போதே ஹாரன் ஒலியை எழுப்புவார்கள். எரிச்சலூட்டும் இந்த ஒலியை நாம் ஒவ்வொரு நாளும் அனுபவிக்கிறோம். தேவையற்ற நேரங்களில் எழுப்பப்படும் இந்த ஒலி ஒரு வித மனச் சோர்வை ஏற்படுத்துகிறது.

நீங்கள் இரு சக்கர வாகனத்தில் செல்பவராக இருந்தால் உங்களை அச்சமூட்டும் படி செல்லும் பேருந்துகளை நிச்சயம் எதிர் கொள்ள வேண்டியதாக இருக்கும். ஒலி எழுப்பியபடியே உங்கள் அருகில் உரசிச் செல்லும் லாரிகளும் பேருந்துகளும் ஒவ்வொரு நாளும் சாலைகளில் உங்களை நிலை குலைய வைக்கும் நோக்கில் ஓட்டப்படுகின்றன.
கோவில் திருவிழாக்களில் எழுப்பப்படும் ஒலி அந்த பகுதியில் வாழும் மொத்த மக்களையும் துன்புறுத்துகிறது. சாலைகளில் காட்டப்படும் ஒலிப் பெருக்கிகள் நம் காதுகளை கிழிக்கிறது. ஆடி மாதத்தில் இந்த நீங்கள் நிச்சயம் அனுபவித்திருப்பீர்கள். 


குடியிருப்பு பகுதிகளில் அமைந்திருக்கும் தொழிற்சாலைகளும் ஒலி மாசுக்கு முக்கிய காரணம். விழா காலங்களிலும் தீபாவளி பண்டிகையின் போதும் பயன்படுத்தப்படும் பட்டாசுகளும் வரைமுறைகளை மீறியே இருக்கின்றன.


மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் ஒலி மாசுபடுவதற்கு  நிறைய காரணங்கள் இருக்கின்றன. நம் கலாசாரத்தோடு கலந்துவிட்ட சில காரணங்கள் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. சாலை விதிகளை முறையாக பின்பற்றாத சமூகமாக இருப்பதும் முக்கிய காரணம். ஒருவருட காலம் நான் சுவிட்சர்லாந்தில் இருந்திருக்கிறேன். மூன்று முறை மட்டுமே வாகனங்களின்  ஒலிப்பான் பயன்படுத்தி நான் கேட்டிருக்கிறேன். சாலை விதிகளை எல்லோரும் முறையாக பின்பற்றும் போது ஒலி எழுப்புவது அவசியமற்றதாகிறது. வாகனம் ஓட்டுபவர்களுக்கும் பயணம் செய்பவர்களுக்கும் இது அலுப்பை ஏற்படுத்துவதில்லை. மாறாக உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. சுவிட்சர்லாந்தில் ஜூரிச் நகர மக்கள் ஒன்று சேர்ந்து எழுப்பிய குரலின் விளைவாக அங்கு இரவு நேரங்களில் விமானம் இயக்கப்படுவதில்லை. உலகம் முழுவதும் அமைதி ஒரே வடிவத்தில் தான் இருக்கிறது. அதை தக்கவைக்கிறோமா அல்லது சீர்குலைக்கிறோமா என்பது நம் கையில் தான் உள்ளது.


இது போன்ற பல்வேறு காரணங்களால் நம் சமூகம் அமைதியை இழந்து அல்லல்படுகிறது. கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். எந்த விதமான ஒலி மாசும் இல்லாத சென்னை நகரம் எவ்வளவு அற்புதமாக இருக்கும். ஒலிப்பெருக்கிகள் இல்லாத, ஒலிப்பான்கள் இல்லாத சாலையில் பயணம் செய்யும் போது எவ்வளவு உற்சாகமாக இருக்கும்? ஒலி மாசை தடுக்க நம்மிடேயே சட்டங்கள் உள்ள போதும் வழக்கம் போல அது பின்பற்றப்படுவதில்லை.


சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஒலி மாசுக்கான பல்வேறு காரணிகளை ஆராய்ந்து மத்திய அரசு அவற்றை கட்டுக்குள் கொண்டு வர சட்டங்கள் இயற்றியுள்ளது.


ஒலி மாசுக்கான முக்கிய காரணிகளான ஜெனரேட்டர், பட்டாசு மற்றும் வாகனங்கள் ஆகியவற்றின் ஒலி அளவு கட்டுக்குள் இருப்பதற்கான வரம்பு வகுக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களின் ஒலி 80 டெசிபலுக்கு மேல் இருக்கக்கூடாது. அதே போல கனரக வாகனங்களின் ஒலிப்பான்கள் 91 டெசிபலுக்கு மேல் இருக்கக்கூடாது. மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் நீதிமன்றங்கள் இருக்கும் இடங்களில் 100 மீ தூரத்திற்கு ஒலிப்பான்கள் பயன்படுத்துவதும், ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதும், பட்டாசு வெடிப்பதும் தடை செய்யப்பட்டுள்ள போதிலும் நடைமுறையில் பின்பற்றப்படுவதில்லை. தேவையற்ற நேரங்களிலும் ஒலிப்பான்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அதுவும் வரம்பு மீறிய அளவிலேயே பயன்படுத்தப்படுகிறது.


தொழிற்சாலை இருக்கும் பகுதிகளில் பகல் நேரங்களில் 75 டெசிபல் அளவுக்கு அதிகமாகவும், இரவு நேரங்களில் 70 டெசிபலுக்கு அதிகமாகவும் இருக்ககூடாது. திறந்த வெளிகளில் இரவு 9 மணிக்கு மேல் காலை 6 மணி வரை ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது என்று சுற்றுச் சூழல் அமைச்சகம் அறிவித்திருக்கிறது.


ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதற்கு விதிகளை வகுத்துள்ளது போலவே பட்டாசுகளுக்கும் விதிமுறைகளை வகுத்துள்ளது மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம். ஒரு பட்டாசு வெடிக்கும் போது அது வெடிக்கும் இடத்தில் இருந்து 5 மீட்டர் தூரத்துக்கு மேல் உள்ள இடங்களில் கேட்கும் ஒலியானது 90 டெசிபலுக்கும் குறைவானதாக இருக்க வேண்டும். 90 டெசிபலுக்கும் அதிகமான ஒலி எழுப்பும் பட்டாசுகளை தயாரிக்கவும் வெடிக்கவும் அரசு தடை விதிக்கிறது. இரவு 9 மணிக்கு மேல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சர வெடிகள் வெடிக்கவும் தடைவிதித்துள்ளது அரசு. ஆனால் நடைமுறையில் இவை யாவும் பின்பற்றப்படுவதில்லை.


ஒலி மாசை கட்டுப்படுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மும்பையில் அவாஜ் (Awaaz) என்ற அமைப்பு செயல்படுகிறது. தீபாவளிப் பண்டிகையின் போது பட்டாசுகளின் ஒலியையும், விநாயகர் சதூர்த்தி ஊர்வலங்களின் போது ஒலிப்பெருக்கிகளின் ஒலியையும் அளவிட்டு அறிக்கை தயாரித்திருக்கிறது இந்த அமைப்பு. தமிழ் நாட்டிலும் இது போன்ற தன்னார்வு அமைப்புகள் மக்களிடேயே விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வர வேண்டும். போக்குவரத்து காவல் துறையும் ஏற்கனவே இருக்கும் சட்டங்களை முறையாக நடை முறைபடுத்த வேண்டும். இன்ஜின் ஒலியை மாற்றி அமைத்து உறுமும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது. சாலைகளில் செல்லும் எல்லோரையும் அச்சுறுத்தும் இது போன்ற செயல்களுக்கு விரைவில் அரசு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். காடுகளுக்குள் பயணம் செய்யும் வாகனங்களில் கூட பாடல்களை அலற விட்டபடி செல்லும் போக்கை என்னவென்று சொல்வது?


இது போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படும் ஒலி மனிதர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. கேட்கும் திறம் குறைய வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம் உருவாகவும் வழி வகுக்கிறது. மனிதர்களுக்கு மட்டும்  அல்லது பறவைகளுக்கும் இது மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது. பறவைகள் இனப்பெருக்க காலங்களில் ஒலி எழுப்பி தன்னுடைய இருப்பை தெரியப்படுத்தும். மேலும் விலங்குகள் வேட்டைகளின் போது ஒலி எழுப்பி தகவல்களை பரிமாறிக்கொள்ளும். அதிகப்படியான ஒலி, இவற்றின் தகவல் பரிமாற்றத்தில் இடையூறை ஏற்ப்படுத்துவதால் அவை அழிவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் பட்டாசு வெடிப்பதன் மூலமாகவும், வாகனங்களில் ஒலிப்பான்களை அதிக அளவில் பயன்படுத்துவதன் மூலமாகவும் பறவைகளும், விலங்குகளும் அதிக அதிர்ச்சிக்கு உள்ளாகின்றன. வயதானவர்கள், குழந்தைகள் இதனால் பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றனர்.


முடிந்தவரை ஒவ்வொருவரும் ஒலி மாசுபடாமல் இருக்க சின்ன சின்ன பங்களிப்பை செய்தாலே சுற்றுச் சூழலை பெரிய அளவில் மாசுபடாமல் காப்பாற்ற முடியும். முக்கியமாக பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமையும். அதிமாகி வரும் இரைச்சலால் சிட்டுக் குருவிகளின் கீச்சொலிகள் கூட நம் காதுகளில் விழுவதில்லை. பறவைகள் வாழ தகுதியற்ற நகரங்களை உருவாக்கி என்ன சாதிக்க போகிறோம்? குருவிகள் நிராகரித்த நகரங்களில், நாம் வாழ்வதில் நமக்கு என்ன பெருமை இருக்கப் போகிறது? இரைச்சலை சகித்துக் கொண்டு துன்புறுவதை விட, இரைச்சல் ஏற்படுத்துவதை தவிர்த்து அமைதிக்கு வழிவகுப்போம்.


Post a Comment

2 Comments

  1. Excellent writeup! Absolutely informative and everyone should go through this and accolades to your efforts and dedication 🤗🔥🔥👏🏽👏🏽👏🏽👏🏽

    ReplyDelete