"உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் தேவையைத்தான் இந்த பூமியால் பூர்த்தி செய்ய முடியுமே தவிர, அனைத்து மனிதர்களின் பேராசையை அல்ல" என்கிறார் மகாத்மா காந்தி. ஆனால் இந்த கருத்தை, கடந்த நூற்றாண்டிலேயே மனிதனின் போக்கை உணர்ந்து காந்தி சொன்னதுதான் ஆச்சர்யம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களுடைய தேவை என்பது மிகவும் குறைவாக இருந்தது. இன்று ஒவ்வொரு தனி மனிதனின் தேவை என்பது பல மடங்கு அதிகரித்துவிட்டது. மக்கள் தொகை பெருக்கத்தை விடவும், ஆபத்தானது தனி மனித நுகர்வு. இந்த நுகர்வு தான் கூடுதலான பொருள் உற்பத்திக்கு அடிப்படையாக இருக்கிறது. அதிகப்படியான பொருள் உற்பத்தி கார்பன் உமிழ்விற்கு காரணமாக இருக்கிறது. அது புவி வெப்பமயமாதலுக்கு துணை போகிறது.
அதனுடைய தொடர் விளைவுகளை நாம் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். பருவநிலை பிறழ்வு (Climate Change) இன்று உலகெங்கும் பேசு பொருளாக இருக்கிறது. இந்த பருவநிலை பிறழ்வால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை நாடுகளாக இருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான கோடைகாலங்களை நாம் சந்தித்து வருகிறோம். ஒவ்வொரு வருடமும் கோடை கால நாட்கள் அதிகரிக்கிறது. பருவ மழை தவறி புயலாக பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.
மிகக்குறைந்த நேரத்தில் நீரிடியாக (Cloud burst) அவை பூமியில் மழையை கொண்டுவருகிறது. இதை கணிப்பது, வானிலை ஆய்வாளர்களுக்கே பெரிய சவாலாக இருக்கிறது. சென்ற ஆண்டு வயநாட்டில் பெய்த பெருமழை மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு மட்டும் பிலிப்பைன்ஸ் ஆறு புயல்களை சந்தித்தது. பேரிடர்களை சந்திப்பதும், அதிலிருந்து மீண்டு வருவதற்குள் மற்றுமொரு பேரிடரை சந்திப்பதும் மூன்றாம் உலக நாடுகளில் அதிகமாக நடக்கிறது. அதிக வெப்பம் காட்டுத்தீக்கு வலுசேர்க்கிறது. ஆஸ்திரேலியாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட காட்டுத்தீ இங்கிலாந்தின் மொத்த நிலப்பரப்பை விட அதிகம். அமேசானில் ஏற்பட்ட காட்டுத்தீ இது வரை வரலாற்றில் நாம் அறியாதது. உலகின் நுரையீலுக்கு இந்த நிலைமை என்றால் மற்ற காடுகளின் நிலை என்ன ஆகும் என்ற விஞ்ஞானிகளின் கவலைக்கு பதில் சொன்னது, கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ.
எனவே தற்போது பூமியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் மிக அடிப்படை காரணமாக இருப்பது தனி மனித நுகர்வும், கூடுதல் கார்பன் உமிழ்வும் தான். இதற்கு காரணமாக இருக்க வேண்டிய நாடுகள், அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டு, சூழலை சமநிலைக்கு கொண்டுவர செய்யப்பட்ட முயற்சிதான் 2015-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பாரிஸ் ஒப்பந்தம். கார்பன் உமிழ்விற்கு மிக முக்கிய காரணமாக இருக்கும் அமெரிக்கா, அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும் என்ற அழுத்தத்திற்கு ஒப்புதல் தந்தார் அன்றைய அதிபராக இருந்த திரு. பாரக் ஒபாமா. United Nations Framework Convention on Climate Change ஆய்வறிக்கையின்படி புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரிக்கு அதிகமாக போய்விடக்கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கிறது. 2050க்குள் NET ZERO என்ற இலக்கை எல்லா நாடுகளும் அடைந்ததாக வேண்டிய அவசர சூழலில் நாம் இருக்கிறோம்.
நம்முடைய நுகர்வு எவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்பதை Earth Overshoot Day என்ற கணக்கீடு, நாம் புரிந்து கொள்ள வழிவகுக்கிறது. அதாவது, ஒரு ஆண்டுக்கு இந்த பூமி நமக்கு தருகிற இயற்கை வளத்தை, நாம் ஓராண்டு முழுக்க பயன்படுத்தாமல், எவ்வளவு சீக்கிரமாக பய்னபடுத்தி தீர்க்கிறோம் என்பதை இந்த நாள் நமக்கு உணர்த்துகிறது. அதன் அடிப்படையில் பார்த்தால், 2023-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் இரண்டாம் தேதியே நாம் இலக்கை அடைந்துவிட்டோம். அதற்கு பிறகான அந்த ஆண்டினுடைய நுகர்வு, நம் அடுத்த தலைமுறைகளுக்கானது. அந்த ஆய்வு சொல்லுகிற மற்றுமொரு அதிர்ச்சிகரமான தகவல், அமெரிக்காவின் நுகர்வைப் போலவே இந்த பூமியில் இருக்கும் எல்லோரும், பொருட்களை வாங்கிக் குவித்தால், நமக்கு இன்னும் 5.1 பூமி தேவைப்படும் என்கிறது. அமெரிக்கர்களின் நுகர்வு மற்ற நாடுகளை காட்டிலும் அதிகமாக இருப்பதே இதற்கு காரணம்.
தற்போது அதிபராக பொறுப்பேற்றுள்ள திரு. டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா பாரிஸ் ஒப்பந்தந்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் என்றாலும், இதன் விளைவுகள் எப்படி இருக்கப்போகிறது என்பது கவலை ஏற்படுத்துகிறது. அவர் பதவி ஏற்றவுடன் நெகிழி உறிஞ்சிகுழல்களை (Plastic Straw) மீண்டும் அறிமுகப்படுத்தி இருக்கிறார். இதற்கு முன்பு அதிபராக இருந்த திரு. பைடன் நெகிழி உறிஞ்சிகுழல்கள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகக் கூறி காகிதத்தால் ஆன, உறிஞ்சிகுழல்களை சந்தைக்கு கொண்டுவந்தார். ஒரு நாளைக்கு சுமார் இருபத்தைந்து கோடிக்கும் அதிகமான உறிஞ்சிகுழல்களை அமெரிக்க மக்கள் பயன்படுத்துவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.
2024-ஆம் ஆண்டு அதிக வெப்பமான ஆண்டாக கணக்கிடப்பட்டுள்ளது. இது அறிவிக்கப்பட்ட சில தினங்களிலேயே, திரு. ட்ரம்ப், புதைமடிம எரிபொருட்களின் பயன்பாடுகளை தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார். 195 நாடுகள் இணைந்து உருவாக்கிய பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவது, அந்த நாட்டின் மீதான நம்பகத் தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. அதே நேரம், புதைமடிம எரிபொருட்களை அதிகம் எரிக்கும் போது, கூடுதலான கரியமிலவாயு வெளியேறும். இது, மற்ற அணைத்து நாடுகளும் இணைந்து செய்யும் கூட்டு முயற்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
மேலும், திரு. ஒபாமா இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டபோது அமெரிக்கா சுமார் மூன்று பில்லியன் டாலர்களை Green Climate Fund-க்கு தருவதாக ஒப்புதல் அளித்தது. அந்த நிதியானது வளரும் நாடுகளில், பருவநிலை பிறழ்வுகளால் உண்டாகும் பாதிப்புகளை சரி செய்ய உதவும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவதற்கு, வளரும் நாடுகளை ஊக்கப்படுத்த உதவும் வகையில் இருந்தது.
சிங்கப்பூர் போன்ற பரப்பளவில் சிறிய நாடுகள் கூட, பசுமையில்ல வாயுக்களை குறைத்துக் கொள்ள தீவிரம் காட்டும் நிலையில், அமெரிக்கா இந்த பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவது, உலகின் சராசரி வெப்பநிலையை குறைத்துக் கொள்வதில், பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். சூழலியல் ஆர்வலர்களின் கருத்துகளுக்கு, இடம் கொடுக்காமல் தொடர்ந்து பசுமையில்ல வாயுக்களை வெளியிடுவது புவியின் வெப்பநிலையை அதிகரிக்கவே செய்யும். அதிகரிக்கும் வெப்பநிலை அதிக புயல்களை உருவாக்கலாம். மூன்றாம் உலக நாடுகள் இதை உணர்ந்து தங்களை தயார் நிலையில் வைத்திருப்பதும், ஒவ்வொரு புதிய திட்டங்களை வகுக்கும் போதும் பருவநிலை பிறழ்வுகளின் தாக்கத்தை கவனத்தில் கொள்வதும் மிகவும் அவசியம்.
*தி சிராங்கூன் டைம்ஸ் இதழில் வெளியான கட்டுரை
0 Comments