கொடைக்கானல் குல்லா - வாசிப்பனுபவம் 9 - திருமதி. பூங்கொடி பாலமுருகன்

எவ்வளவு ஆழமான வாசிப்பு. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. மென்பொருள் துறையில் பணியாற்றிக் கொண்டே எழுதுவது மிகப்பெரிய சவால். நான் எழுதுவதற்கு எவ்வளவு மெனக்கெடுகிறேன் என்பதை வெளிப்படுத்துவதில்லை. ஆனால் இது போன்ற வாசிப்பனுபவங்களை பார்க்கும் போது இன்னும் கூடுதலாக எழுதத் தோன்றுகிறது. 


திருமதி. பூங்கொடி பாலமுருகன் அவர்களுக்கு மிக்க நன்றி..🙏

********************************

#நாளொன்று_நூலொன்று_2025

#நாள்_14

நூல் :- கொடைக்கானல் குல்லா 

ஆசிரியர் : சதீஷ் முத்து கோபால்

பதிப்பகம் : சுட்டி யானை

விலை :- ₹150.00


       நம் குழந்தைப் பருவத்தில் , விடுமுறை என்றால் பாட்டி - தாத்தா, சித்தப்பா - சித்தி என்று உறவினர்கள் வீட்டுக்குச் சென்று ஒன்றாய் இருந்து மகிழ்ந்து இருப்போம். 

   ஆனால் இன்றைய காலகட்டத்தில் பள்ளி விடுமுறை நாட்களில் குழந்தைகளை, சுற்றுலாத் தளங்களுக்கு அழைத்துச் செல்கிறோம். அதனால் கோடை வாழிடங்கலில் கடுமையான ஜன நெருக்கடி ஏற்படுகிறது. சமவெளி மக்களால் அந்த மலைபகுதியே அமைதி இழந்து நிற்கிறது. அங்கு வாழும் பல்லுயிர்களும் பாதிப்பிற்கு உள்ளாகிறது. 

      அதனால் சுற்றுலா செல்லாமல் தவிர்த்து விடலாமா? அதுவும் இயலாது. ஏனென்றால் அதை நம்பி அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம் இருக்கிறது. 

         அதனால் சுற்றுலாத் தளத்தை எப்படி அணுக வேண்டும்? என்பதை அனைவருக்கும் அறிந்து கொள்ள வேண்டும். அதுவும் அடுத்தத் தலைமுறை கண்டிப்பாக இதை அறிந்து பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், சூழலியல் செயல்பாட்டாளர் மற்றும் சூழலியல் எழுத்தாளர் பா.சதீஸ் முத்து கோபால் அவர்கள் எழுதிய முதல் சிறார் நாவல்தான் கொடைக்கானல் குல்லா.


          கயல் என்ற சிறுமி தன் பெற்றோர்களுடன், முதல் முறையாக ஈரோட்டில் இருந்து கொடைக்கானலுக்குச் சுற்றுலா செல்கிறாள். கயலுடன் சேர்ந்து வாசிக்கிறவர்களின் மனதும் சேர்ந்து கொடைக்கானலை நோக்கிப் பயணிக்கும். 

           கொடைக்கானலில் இரண்டு நாட்கள் பெற்றோருடன் தங்கி, படகு சவாரி, குதிரை சவாரி செய்வதோடு , தூண் பாறை, பசுமை பள்ளத்தாக்கு, கோக்கர்ஸ் வாக், அருங்காட்சியகம், வெள்ளி அருவி, போன்ற இடங்களை எல்லாம் சுற்றி சுற்றிப் பார்த்து மகிழ்கிறாள். வெள்ளி அருவியை பார்த்துவிட்டு ஒரு இனிமையான நட்பைப் பெற்று, அருமையாய் முடிகிறது. அவளது கொடைக்கானல் சுற்றுலா பயணம். பெரியவர்களுக்கு இருக்கும் பயண கட்டுரைகளை போல, குழந்தைகளுக்கான பயணக் கதை என்று இந்த நூலை சொல்லலாம். 

     இந்த நூலின் மற்றொரு சிறப்பம்சம் மிகச் சிறப்பான வண்ண ஓவியங்கள். பார்த்தவுடன் குழந்தைகளைக் கவரும். 

           ஒரு நிறைவான பயண அனுபவத்தைத் தருவதோடு குழந்தைகளுக்கு, சிறப்பான சூழலியல் சிந்தனைகளையும், கேள்விகளையும் இந்த நூல் தோற்றுவிக்கும். ஏனென்றால் குழந்தைகள் சதா கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அந்தக் கேள்விகளுக்கு உண்மையாகவும் , நேர்மையாகவும் நாம் பதிலளித்தால், குழந்தைகள் அதைப் புரிந்து கொள்வார்கள். 

       பயணத்தின் போது ஒரு காகித தொழிற்சாலையின் கழிவு ஆற்றில் கலப்பதைப் பார்க்கிறாள். அவளுக்குள் கேள்வி பிறக்கிறது. மனிதர்களின் தவறுகளால் ஒட்டுமொத்தச் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது என்ற பதில் அவளுக்குக் கிடைக்கிறது. எது சரி ? எது தவறு? என்று அறிந்த குழந்தை தவறு செய்ய பெரும்பாலும் பின்னாட்களில் யோசிக்கும். 

           மேற்குத் தொடர்ச்சி மலையை பற்றி பெற்றோர்கள் சொல்லும் பொழுது, இந்த மலையும் இங்கு உற்பத்தியாகும் ஆறுகளும் இல்லை என்றால் நாம் இங்கு இருக்கவே முடியாது என்ற உண்மை புரியும். இயற்கையைக் காத்தால்தான், மனிதன் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என்ற அடிப்படை உண்மை அங்கு விதைக்கப்படும். 

       பெரும்பாலும் பெற்றோர்கள் அறிவுரை சொல்வதை விட, செய்து காட்டினால் குழந்தைகள் எளிதாக கற்றுக் கொள்வார்கள். ஏனென்றால் குழந்தைகள் போலச் செய்பவர்கள். கயலின் அம்மா, நொறுக்கு தீனியின் நெகிழிக் காகிதங்களைக் கீழே தூக்கி எறியாமல் காருக்குள் கொண்டு வைப்பதாக, ஒரு இடத்தில் வரும். தொடர்ந்து இதுபோன்ற செயலை பார்க்கும் குழந்தை அதைக் கடைப்பிடிக்கத் தொடங்கிவிடும். 

          காட்டுயிர்களின் இயல்பே, தனக்கான உணவைத் தானே தேடிக் கொள்வது தான். ஆனால் நாம் ஆர்வ மிகுதியால் காட்டு உயிர்களுக்கு உணவைத் தருவது தவறு என்பதும் இந்த நூலை வாசிக்கும் போது, குழந்தைகளுக்குப் புரியும். 

         சோலைக் காடுகள் மற்றும் புல்வெளிகள் மற்றும் அதன் பலன்களை அறிந்த குழந்தையால் அயல் மரங்களை வியப்போடு உற்று நோக்க முடியாது. 

           சுற்றுலாத்தளங்கள் செல்லும் நம்மைப் போன்றவர்கள் அங்கே எறிந்து விட்டு வரும், நெகிழிக் குப்பைகளைச் சேகரித்து, சோலைக் காடுகளைக் காப்பதற்காக, சோலைக் குருவி என்ற அமைப்பு செயல்பட்டு கொண்டு வருகிறது என்ற தகவல் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, நமக்கும் புதியது. அந்த அமைப்பினரை மனதார பாராட்ட வேண்டியிருக்கிறது. 

             சூழலியல் சீர்கேடுகளை மட்டுமல்லாமல், மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் ஓரிட வாழ்விகள், கருந்தலை அன்றில், முக்களிப்பான் சோலைப்புறா போன்ற பறவைகள், குறிஞ்சி செடி, உண்ணிச் செடி போன்ற மரங்களின் பெயர்கள், சாம்பல் மந்தி, வரையாடு, மலை அணில் போன்ற விலங்குகளின் பெயர்களையும் குழந்தைகள் அறிந்து கொள்வார்கள்.

           மொத்தத்தில் குழந்தைகளுக்கு சூழலியல் விழிப்புணர்வை தோற்றுவிக்கும் ஒரு நூல். அதைத் தொடர்ந்த தேடல்களையும் அவர்களுக்கு தோற்றுவிக்கும். 

        இந்தப் பிரபஞ்சம் என்பது மனிதர்களுக்கானது மட்டுமல்ல; இங்கு வசிக்கக்கூடிய பறவைகள், விலங்குகள், மரங்கள், செடிகள், கொடிகள், பூச்சிகள், ஊர்வன அவர்களோடு சேர்த்து மனிதர்களுக்கானது என்ற உண்மையை குழந்தைகள் மனதில் பதிய வைக்க இது போன்ற நூல்களை குழந்தைகளை வாசிக்க வையுங்கள்.

Post a Comment

0 Comments