எழுத்தாளர் ஜி.சிவக்குமார் அவர்களுக்கு நன்றியும் பேரன்பும்..!!
*****************************
கொடைக்கானல் குல்லா
பா.சதீஷ்முத்து கோபால்
சிறார் கதை
சுட்டி யானை.இயல்வாகை வெளியீடு
விலை ரூபாய் 150
சுற்றுச் சூழல் செயல்பாட்டாளரான சதீஷ்முத்து கோபால்,தொடர்ந்து தனது புத்தகங்கள் வழி, பறவைகள் ,கானுயிர் முதலான பல்லுயிர்கள் குறித்து பதிவு செய்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது வெளி வந்திருக்கும் கொடைக்கானல் குல்லா எனும் சிறார் கதை புத்தகம், கொடைக்கானல் இன்பச் சுற்றுலா சென்று திரும்பும் மூன்றாம் வகுப்புச் சிறுமியான கயலின் அனுபவங்களைப் பேசுகிறது.
பழனி கொடைக்கானல் சாலையிலுள்ள கண்காணிப்புக் கோபுரத்திலிருந்து பாலாறு பொருந்தலாறு அணையை, அதனையொட்டி உள்ள வனப் பகுதிகளை நாமும் பார்க்கிறோம். வெள்ளி அருவியின் சாரலில் நாமும் நனைகிறோம். மேகக் கூட்டங்களிடையே ஒளிந்து விளையாடும் தூண் பாறைகளை ரசிக்கிறோம். ஈரோட்டிலிருந்து தன் பெற்றோருடன் கொடைக்கானல் சென்று திரும்பும் கயலோடு,புத்தகத்தை வாசிக்கிற நாமும் இணைந்து பயணிக்கிற உணர்வை உண்டாக்குகிறது சதீஷ்முத்து கோபாலின் எழுத்து.
மறுநாள் காலையில் எழுந்ததும் நேற்று வாங்கிய பொம்மை அப்படியே இருக்கிறதா என்று உறுதிபடுத்திக் கொண்டாள் என்ற வரிகளில் குழந்தைகளின் உளவியலைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.
மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகை, அருமைகளை,அவசியத்தை, பழனி கொடைக்கானல் சாலையிலுள்ள கண்காணிப்புக் கோபுரத்தின் கீழ் உடைந்த மதுப் பாட்டில்களின் துண்டுகள் சிதறிக் கிடக்கும் அவலத்தை, குரங்குகள் போன்ற வன விலங்குகளுக்கு உணவளிக்கும் நம் செயலில் உள்ள தவறையும் பதிவு செய்திருக்கிறார்.
கொடைக்கானலில் நாம் அடிக்கும் ஒரு நாள் கூத்தில் அலட்சியமாக நாம் எறிந்து வரும் குப்பைகளை, சோலைக் குருவி என்ற அமைப்பினர் சேகரிக்கின்றனர். எத்தனையோ பேர் அறியாமையால், அலட்சியத்தால் மாசுபடுத்துகிற பூமியை, சுற்றுச் சூழலை இப்படி பிரதிபலன் எதிர்பாராமல் தங்களது சொந்த முயற்சியால்,உழைப்பால் சுத்தம் செய்யும் அவர்களை வணங்குவோம்.
சோலைக் காடுகள், சோலை மந்தி, வரையாடு, குறிஞ்சிச் செடி, கொடைக்கானல் புதர்த் தவளை,bகருந்தலை அன்றில், பழனி மலைப் பூங்குருவி இப்படி மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களின் பல்லுயிர்ப் பெருக்கத்தை அழகாகப் பதிவு செய்திருக்கிறார். கொடைக்கானல் மலையில் வரையாடு இருப்பதை நான் இப்போதுதான் அறிகிறேன்.
நம் ஆதி மரங்களை அழித்து உருவாக்கப்பட்ட அயல் மரமான பைன் மரக் காடுகளில் ஒரு பறவையோ, அணிலோ இல்லையென்பது எத்தனை வேதனையான விஷயம்.
தலைப் பகுதியில் மூன்று வண்ணத்துப் பூச்சிகள் இருக்கும் அழகிய குல்லாவை கயல்,விரும்பி வாங்கி அணிந்து கொள்கிறாள். குதிரைச் சவாரியில் கிட்டத்தட்ட அதைத் தொலைத்து மீண்டும் அடைகிறாள். இறுதியில் அந்தக் குல்லா, அவளின் பேரன்பை வெளிக்காட்டும் ஒரு அடையாளமாகிறது.
வண்ண வண்ண ஓவியங்களுடன் கண்களையும் கருத்தையும் கவர்கிறது புத்தகம். நேர்த்தியான வடிவமைப்பிற்கு நல்வாழ்த்துகள்.
0 Comments