சூழலியல் அறம் பேசியதா அயலான் ?

சூழலியல் அறம் குறித்து இதுவரை தமிழ் சினிமா உருப்படியாக ஏதுவும் பேசியதில்லை. அயலான் அதை கொஞ்சம் பேச முயற்சி செய்கிறது. ஆனால் தட்டுத் தடுமாறி எங்கெங்கோ பயணிக்கிறது. 

கதைக்களத்தில் இருக்கும் ஓட்டைகள் குறித்து நான் எதுவும் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. உயிர்கள் வாழ வேறு ஒரு கோள் இருப்பதே ஒரு மோசமான சிந்தனை தான். பூமியின் மீதான அடிப்படை அக்கறை கூட மனிதர்களுக்கு இல்லாமல் போவதற்கு, இதுபோன்ற ஆதாரமற்ற நம்பிக்கைகளும் காரணமாக இருக்கின்றது எனக்கருதுகிறேன். 


ஆனாலும் சில காட்சிகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். குழிக்குள் விழுந்து கிடக்கும் யானை குட்டியை பார்த்து, "மனுஷன் தான் போன் பாத்துட்டே போய் குழிக்குள்ள விழுகுறான், நீ ஏன் விழுந்த?" எனக் கேட்டது அருமை. மின்வேலிகளும், ஆக்கிரமிப்புளும் யானை வழித்தடத்தை பாதிக்கிறது என்று சொன்னது பாராட்டுக்குரியது. குட்டியை காப்பாற்ற ஆண் யனையும் பெண் யானையும் சேர்ந்து வந்தது தான் நெருடல். யானைகள் கூட்டமாக வாழும் விலங்கு என்றாலும், வளர்ந்த ஆண், இனப்பெருக்க காலத்தில் மட்டுமே பெண் யானையோடு சேரும். மற்ற காலங்களில் தனித்தே இருக்கும். 

கதை நடக்கும் ஊரை பூம்பாறை என்கிறார்கள். பூம்பாறை பழனிமலைத் தொடரில் இருக்கும் ஒரு அழகிய கிராமம். படத்தில் வருவது அந்த ஊர் அல்ல. நல்ல வேளையாக அங்கே சென்று படப்பிடிப்பு நடத்தி, ஊரை நாசம் செய்யவில்லை என்பது மகிழ்ச்சி தான் என்றாலும், இதை பார்த்துவிட்டு வேறு யாரேனும் அங்கு படப்பிடிப்பு நடத்த செல்லாமல் இருக்க வேண்டும். 

வழக்கம் போல ஜீவகாருண்யத்தையும் காட்டுயிர் பேணலையும் குழப்பிக் கொள்கிறார்கள். பறவைகளுக்கு உணவு கொடுத்து, கதையின் நாயகன் நல்லவராவது ஏற்றுக்கொள்ளமுடியாது. பறவைகள் அவற்றின் உணவை தானே தேடிக் கொள்ளும். 

மனிதர்களால் சமைக்கப்பட்ட உணவுகளும், நொறுக்குத் தீனிகளும் இயற்கையிலிருந்து பெற முடியாதவை. பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கையிலிருந்து தனக்குத் தேவையான இரையைப் பெற்ற இவற்றின் செரிமான உறுப்புகளால் இந்த உணவை ஏற்றுக் கொள்ள முடியாது. அதன் விளைவாக நோய்தாக்குதலுக்கு அவை உள்ளாகின்றன. நம்முடைய உணவில் சேர்க்கப்படும் உப்பும், அவற்றின் உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்துகிறது. இரை தேடி அலையும் ஆற்றலையும், அதை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய அறிவையும் அவை இழக்க நேர்கின்றன. இவ்வாறு நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் சில காட்டுயிர்கள் மற்ற உயிரினங்களுக்கும் நோய்களை கடத்துகின்றன. மேலும் படத்தில் காட்டப்படுவது இந்தியாவில் வாழும் பறவையினங்கள் அல்ல. அவை தென் அமெரிக்கவைச் சேர்ந்த கிளி இனங்கள்.

வெட்டுக்கிளிகளால் வேளாண் நிலங்கள் பாதிக்கப்படும்போது, இயற்கை வேளாண்மை செய்த நிலம் மட்டும் பாதிக்கப்படுவது போலவும், மற்ற நிலங்கள் தப்பிப்பதும் என்ன காட்டுவது எந்த வகையில் நியாயம் ? வெட்டுக்கிளிகள் இது போல பரவ, வளைகுடா நாடுகளில் பருவம் தவறி பெய்யும் மழைப்பொழிவே என்பது பற்றிய செய்தியெல்லாம் இல்லை.

பூமி மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா உயிர்களுக்குமானது என்பதை அவ்வப்போது உணர்த்திக் கொண்டே இருப்பதால், வேறு வழியே இல்லாமல் வரவேற்கலாம். ஆனால் தமிழ் சினிமா இயக்குனர்கள், காட்டுயிர் பேணல் விஷயத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக மெனக்கெட்டால் அருமையான படைப்புகளை உருவாக்க முடியும்.

Post a Comment

5 Comments

 1. Ethirparpugal poorthi adaiyattum

  ReplyDelete
 2. மிகச் சிறப்பான பதிவு சதீஸ்,
  யாருக்கானது பூமி என்ற கேள்விக்கு
  அது பல்லுயிர்களுக்கானது என்ற பதில்
  மிகச் சிறப்பனதாகும். நான் உங்கள் நூல்களைத்தான் சொன்னேன்.
  வளைகுடா நாடுகளில் பருவம் தவறி பெய்யும் மழைப்பொழிவே
  என்பது பற்றிய சிந்தனை படம் எடுப்பவர்களுக்கு வந்து விட்டால் வியாபாரம் ஆகுமா?
  ஆகையால் அதையெல்லாம் சொல்ல மாட்டார்கள்.

  பூமியை மட்டுமே மனிதன் வாழ்வதற்கு ஏதுவாக அமைத்துக் கொடுத்திருக்கிறது இயற்கை.
  இந்த உண்மை பலருக்கும் தெரியும். ஆனாலும் வாழ்வதற்கு சுயசிந்தனையை அடகு வைத்து விட்டு
  பேச வேண்டிய கட்டாயத்தில் தான் பல மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
  ஆகையால் அயலான் மட்டுமல்ல, இனி வரும் எந்தப்படத்திலும் ஆங்காங்கே
  தொட்டுத்தான் காட்டுவார்களே தவிர
  முழுமையாக எடுத்தியம்ப வாய்ப்பில்லை ராசா.

  யாருக்கானது பூமி,
  தூவி,
  பல்லுயிர்களுக்கானது பூமி
  ஆகிய இந்த நூல்களை
  முழுமையாகப் படித்துத் தெரிந்தவர்களில்
  யாராவது ஒருவர் படமெடுக்க வந்தால் தான்
  நாம் நினைப்பது சாத்தியப்படும் என்பதே
  உங்கள் அனைத்து நூல்களையும் படித்த என்னுடைய கருத்தாகும்.
  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி... இதை எழுதியது யார் என அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

   Delete
  2. தோழரே.. நான் தான்.
   உங்கள் ஆர்க்காடு
   ராஜா முகம்மது - சென்னை.

   Delete