Jan 28, 2024

சூழலியல் அறம் பேசியதா அயலான் ?

சூழலியல் அறம் குறித்து இதுவரை தமிழ் சினிமா உருப்படியாக ஏதுவும் பேசியதில்லை. அயலான் அதை கொஞ்சம் பேச முயற்சி செய்கிறது. ஆனால் தட்டுத் தடுமாறி எங்கெங்கோ பயணிக்கிறது. 

கதைக்களத்தில் இருக்கும் ஓட்டைகள் குறித்து நான் எதுவும் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. உயிர்கள் வாழ வேறு ஒரு கோள் இருப்பதே ஒரு மோசமான சிந்தனை தான். பூமியின் மீதான அடிப்படை அக்கறை கூட மனிதர்களுக்கு இல்லாமல் போவதற்கு, இதுபோன்ற ஆதாரமற்ற நம்பிக்கைகளும் காரணமாக இருக்கின்றது எனக்கருதுகிறேன். 


ஆனாலும் சில காட்சிகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். குழிக்குள் விழுந்து கிடக்கும் யானை குட்டியை பார்த்து, "மனுஷன் தான் போன் பாத்துட்டே போய் குழிக்குள்ள விழுகுறான், நீ ஏன் விழுந்த?" எனக் கேட்டது அருமை. மின்வேலிகளும், ஆக்கிரமிப்புளும் யானை வழித்தடத்தை பாதிக்கிறது என்று சொன்னது பாராட்டுக்குரியது. குட்டியை காப்பாற்ற ஆண் யனையும் பெண் யானையும் சேர்ந்து வந்தது தான் நெருடல். யானைகள் கூட்டமாக வாழும் விலங்கு என்றாலும், வளர்ந்த ஆண், இனப்பெருக்க காலத்தில் மட்டுமே பெண் யானையோடு சேரும். மற்ற காலங்களில் தனித்தே இருக்கும். 

கதை நடக்கும் ஊரை பூம்பாறை என்கிறார்கள். பூம்பாறை பழனிமலைத் தொடரில் இருக்கும் ஒரு அழகிய கிராமம். படத்தில் வருவது அந்த ஊர் அல்ல. நல்ல வேளையாக அங்கே சென்று படப்பிடிப்பு நடத்தி, ஊரை நாசம் செய்யவில்லை என்பது மகிழ்ச்சி தான் என்றாலும், இதை பார்த்துவிட்டு வேறு யாரேனும் அங்கு படப்பிடிப்பு நடத்த செல்லாமல் இருக்க வேண்டும். 

வழக்கம் போல ஜீவகாருண்யத்தையும் காட்டுயிர் பேணலையும் குழப்பிக் கொள்கிறார்கள். பறவைகளுக்கு உணவு கொடுத்து, கதையின் நாயகன் நல்லவராவது ஏற்றுக்கொள்ளமுடியாது. பறவைகள் அவற்றின் உணவை தானே தேடிக் கொள்ளும். 

மனிதர்களால் சமைக்கப்பட்ட உணவுகளும், நொறுக்குத் தீனிகளும் இயற்கையிலிருந்து பெற முடியாதவை. பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கையிலிருந்து தனக்குத் தேவையான இரையைப் பெற்ற இவற்றின் செரிமான உறுப்புகளால் இந்த உணவை ஏற்றுக் கொள்ள முடியாது. அதன் விளைவாக நோய்தாக்குதலுக்கு அவை உள்ளாகின்றன. நம்முடைய உணவில் சேர்க்கப்படும் உப்பும், அவற்றின் உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்துகிறது. இரை தேடி அலையும் ஆற்றலையும், அதை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய அறிவையும் அவை இழக்க நேர்கின்றன. இவ்வாறு நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் சில காட்டுயிர்கள் மற்ற உயிரினங்களுக்கும் நோய்களை கடத்துகின்றன. மேலும் படத்தில் காட்டப்படுவது இந்தியாவில் வாழும் பறவையினங்கள் அல்ல. அவை தென் அமெரிக்கவைச் சேர்ந்த கிளி இனங்கள்.

வெட்டுக்கிளிகளால் வேளாண் நிலங்கள் பாதிக்கப்படும்போது, இயற்கை வேளாண்மை செய்த நிலம் மட்டும் பாதிக்கப்படுவது போலவும், மற்ற நிலங்கள் தப்பிப்பதும் என்ன காட்டுவது எந்த வகையில் நியாயம் ? வெட்டுக்கிளிகள் இது போல பரவ, வளைகுடா நாடுகளில் பருவம் தவறி பெய்யும் மழைப்பொழிவே என்பது பற்றிய செய்தியெல்லாம் இல்லை.

பூமி மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா உயிர்களுக்குமானது என்பதை அவ்வப்போது உணர்த்திக் கொண்டே இருப்பதால், வேறு வழியே இல்லாமல் வரவேற்கலாம். ஆனால் தமிழ் சினிமா இயக்குனர்கள், காட்டுயிர் பேணல் விஷயத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக மெனக்கெட்டால் அருமையான படைப்புகளை உருவாக்க முடியும்.

Jan 27, 2024

கௌதாரி [Grey Francolin]

அதிக தூரம் பறக்காத 

கௌதாரிகள் 

கூண்டிலிருப்பதால் 

குறையொருமில்லை எனச் சொன்ன 

நண்பரிடம் கேட்கிறேன்,

உங்களுக்கும் 

பறக்கத் தெரியாது தானே..!!
Jan 25, 2024

பல்லுயிர்களுக்கானது பூமி - முதல் விமர்சனம்

எழுதுகிறவனுக்கு மகிழ்ச்சியே, பிறர் அதை வாசிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் போது தான். அதுவும் இப்படி ஆழ்ந்து வாசித்து, ஒருவர் மதிப்பரை எழுதினால் இறகுகள் முளைக்கத்தானே செய்யும். எழுதியது ஒரு எழுத்தாளர் என்றால் சிறகுகள் படபடக்கும் தானே. 

மிக்க நன்றி சிவக்குமார் சார். Sivakumar Ganesan 

நான் பறந்து கொண்டிருக்கிறேன். 

******************************************

பல்லுயிர்களுக்கானது பூமி 

கட்டுரைகள் 

பா.சதீஸ் முத்து கோபால் 

காக்கைக்கூடு பதிப்பக வெளியீடு 

பக்கங்கள் 124 

விலை ரூபாய் 140


பழனி மலைத் தொடரும் பறவைகளும், பறவைகளோடு வாழ்ந்திருத்தல், யானைகள் வாழும் பூமி, காட்டுயிர்களின் மறு அறிமுகம் இப்படி 15 தலைப்புகளிலான சுற்றுச்சூழல் கட்டுரைகளின் தொகுப்பு.

சுற்றுச் சூழல் ஆர்வலரும்,செயற்பாட்டாளருமான பா.சதீஸ் முத்து கோபால் அவர்களின்

யாருக்கானது பூமி? கட்டுரை தொகுப்புக்குப் பின்னான இரண்டாவது தொகுப்பு இது.

ஒவ்வொரு தேசத்திலும் அழிந்துபோன பறவை இனங்களை, விலங்குகளைக் குறித்த கட்டுரை, ஆழ்ந்த வருத்தத்தை உண்டாக்குகிறது. குறிப்பாக, கியூபாவின் cuban macaw என்கிற பறவை அருகிலிருந்த பறவையை, துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திய போதும் பறந்து செல்லாமல் வீழ்ந்த பறவையை உற்று நோக்கி அமர்ந்திருக்கும் குணம் தான் இந்த பறவையை எளிதாக பிடிக்கவும், கொல்லவும் முடிந்திருக்கிறது என்கிற வரிகளின் துயரத்தைப் பாருங்கள்.

கேரளாவில் உள்ள தட்டக்காடு பகுதியில், இரவாடி விலங்கான தேவாங்கின் மேல் ஏராளமான ஒளியைப் பாய்ச்சி படம் எடுப்பதில் எந்த அறமும் இல்லை என்று வழிகாட்டியிடம் சொன்னதோடு மட்டுமல்லாமல், தனது புகைப்படக் கருவியும் மூடி வைத்த சதீஸ் பாராட்டுக்குரியவர். படம் எடுக்கையில், பறவைகளும், குஞ்சுகளும் பாதிக்கப்படக் கூடும் என்பதால், பறவைக் கூடுகளைப் படம் எடுக்க மாட்டேன் என்கிற அவரது உறுதியும் பாராட்டத்தக்கது.

பழனி கொடைக்கானல் இடையே செயல்படுத்தப்படப் போவதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் கேபிள் கார் திட்டத்தின் கருப்புப் பக்கங்கள், சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் கொல்லப்படும் கானுயிர்கள், அவர்கள் கொட்டிச் செல்லும் குப்பைகள், காட்டுத்தீயில் கருகும் சோலை காடுகள், இவற்றைப் பற்றி விரிவாக பேசுகிற பழனி மலை தொடர்ச்சியின் சிக்கல்கள் என்ற கட்டுரையை, இந்த தொகுப்பின் மிக முக்கியமானதாக நான் கருதுகிறேன்.

அழிந்து வரும் இனமாக கான மயில்கள் குறித்த கட்டுரையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

அழிந்து போன கானுயிர்களை மறு அறிமுகம் செய்வதில் உள்ள பிரச்சனைகளையும், நன்மைகளையும் விரிவாகப் பேசுகிறது காட்டுயிர்களின் மறு அறிமுகம் கட்டுரை.

சிங்கப்பூரின் இயற்கை வளம் கட்டுரையை வாசிக்கையில், நமது நாட்டின் நிலையை நினைத்து ஒரு வெப்பப் பெருமூச்சு வழிகிறது.

கடும் குளிரில், காடுகளில் அட்டைப்பூச்சிகளுக்கு நடுவே காட்டு மாடுகளின் வாழ்விடங்களில் பெரும் சிரமங்களுக்கு இடையே கொடைக்கானல் நகரைச் சுற்றியுள்ள குப்பைகளை அகற்றுகிற சோலை குருவி என்கிற அமைப்பின் இளைஞர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

இந்தியாவில் 101 யானை வழித்தடங்கள் காணப்படுகின்றன. அவற்றில் 71 வழித்தடங்களின் அகலம் ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவாக உள்ளதற்குக் காரணம் ஆக்கிரமிப்புகள். எவ்வளவு பெரிய கொடுமையிது. பிறகு யானைகள் அட்டகாசம்(?) செய்யாமல் என்ன செய்யும்?

யானைகளை இழப்பது இயற்கை இழப்பது போல் இல்லையா? என்கிற கேள்வியை வெகு நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

இந்தியாவின் தேசிய பறவையாக முதலில் கானமயில் தேர்ந்தெடுக்கப்பட்டது. பழனி அருகில் உள்ள குதிரையாறு அணையில் நீர் நாய்கள் இருந்தன. வேடந்தாங்கலில் கூடு கட்டும் பறவைகள் வெளிநாட்டுப் பறவைகள் அல்ல. இப்படி ஏராளமான ஆச்சரியமான தகவல்கள் நிறைந்துள்ளன.

கானுயிர்கள் குறித்தும், சுற்றுச் சூழல் குறித்தும் வெறுமனே எழுதுபவராக,பேசுபவராக இல்லாமல் தீவிரமாக செயல்படுபவராகவும் இருப்பவர் என்பதை அறிந்திருக்கிறோம்.

அதைத்தான் அணிந்துரை தந்திருக்கிற ஆளுமைகளான தியோடர் பாஸ்கரன் அவர்களும், கோவை.சதாசிவம் அவர்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள். 

பொருத்தமான புகைப்படங்களைத் தந்திருப்பது பாராட்டத்தக்கது.

அட்டைப் படத்திற்கும் வாழ்த்துகள்.

ஒலி மாசு, நதிநீர் இணைப்பின் குறைபாடுகள், காட்டுயிர்களின் சிக்கல்கள் இன்னும் பல தலைப்புகளில் உள்ள கட்டுரைகளும் கவனத்துக்குரியவை.

மனிதர்களின்அறியாமையால்,சுயநலத்தால், அலட்சியத்தால் கானுயிர்கள், சுற்றுச்சூழல் அழிந்து வருவது குறித்த காரணங்களையும், கவலைகளையும், தீர்வுகளையும் பேசுகிற புத்தகம்.


Jan 21, 2024

அண்டங்காக்கை [Large-billed Crow]

கூகையின் குணமறிந்து 

குஞ்சுகளை காப்பாற்ற,

அவசரமாய் கூடிவரும் 

அண்டங்காக்கைகள்

சீண்டினாலும் துரத்தினாலும்,

காத்திருக்கும் கூகைக்கும் தெரியும் 

காக்கையின் குணம்.Jan 20, 2024

சாம்பல் நாரை [Gray Heron]

சிற்றோடையில் நீந்தும்

சில நூறு மீன்களில்,

தேர்ந்தெடுத்த மீனொன்றை

அசைவின்றி காத்திருந்து

கைப்பற்றும் சாம்பல் நாரை,

பசி அடங்கியபின்

காத்திருப்பதுமில்லை.

குறிவைப்பதுமில்லை.


Jan 18, 2024

சுண்டாங்கோழி [Painted Spurfowl]

நெருப்பின் வண்ணம் கொண்டு 

பறவையை வரைகிறேன்.

செம்மஞ்சள் நெருப்பள்ளி உடலும் 

அடர் சிவப்பால் சிறகுகளும் 

கரிய புகை கொண்டு வாலும் 

வரைந்தாயிற்று.

கொஞ்சம் பனிமழையைத் 

தூவியபின்,

சுண்டாங்கோழியை போலிருக்கிறது.
Jan 5, 2024

சென்னை புத்தக கண்காட்சி

சென்னை புத்தக கண்காட்சியில் என்னுடைய நூல்கள் கிடைக்கும்.

அரங்கு எண் 598 D.