May 28, 2023

சோலை இருவாச்சி [Malabar Hornbill]

தேயிலைக்கும் காஃபிக்கும் 

மலைச்சவுக்கு மரங்களுக்கும் 

தப்பித்த மலைச்சரிவில்

கூடமைக்கும் இருவாச்சி, 

மரப்பொந்தின் இருளுக்குள்

ஒளித்துவைக்கிறது 

ஒரு சோலைக்காட்டை.



May 25, 2023

காட்டுப்பக்கி [Jungle Nightjar]

காய்ந்த இலைகள் 

குவிந்தது போலிருக்கும் 

காட்டுப்பக்கியை 

காட்சிப்பிழையென கடந்துவிடும் 

உங்கள் கண்கள்,

அதை கண்டறிந்த இடத்திலேயே 

தவறவிட்டுத் தேடுவதில் தெரிகிறது 

கூடுதல் பதற்றம்.

Thanks to Karthik Hari for the picture

Thanks to Mahesh for the picture


May 23, 2023

இசைப்புயலும் வைகைப்புயலும் - இது யானைகளுக்காக

 யானைகளின் மீது மோதும் ரயிலில் நாம் தானே பயணிக்கிறோம்? காடுகளுக்குள் பாவப்படும் புதிய சாலைகள் நமக்காகத் தானே... மின் வேலிக்குள் பயிரிடப்படும் வேளான் விளைபொருட்களை நாம் தானே உண்கிறோம்.. 

யானை மரணங்களில் நமக்கும் பங்கு உண்டு. நாம் மௌனமாக இருப்பது நமக்கு வசதியாக இருக்கிறது.

ஐபில் அட்டவணையில் யார் எப்படி முந்திச் செல்வார்கள் என மணிக்கணக்கில் பேசும் நண்பர்கள், ஒரு ஐந்து நிமிடம் யானை மரணங்களை பற்றியும் பேசுங்கள்.

Brilliant work  Mohammed Zakkiria A

The video is brilliantly edited.


May 16, 2023

சிவிங்கப்புலிகள் - ஒரு விரிவான பார்வை

இந்தியா என்ற பெரும் நிலப்பரப்பின் சமவெளிகளில் சுற்றித் திரிந்த உயிரினம் ஆசிய சிவிங்கப்புலி [Asiatic Cheetah]. இந்தியா மட்டுமல்லாது ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற இடங்களிலும் இவை இருந்தன. தமிழ் நாட்டின் சத்தியமங்கலம் வரை இருந்ததாக கூறப்படுகிறது. 1948-ஆம் ஆண்டு இந்தியாவின் கடைசியாக வாழ்ந்த மூன்று சிவிங்கப்புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டன. இன்றும் ஈரானில் மிக சொற்ப எண்ணிக்கையில் இவை மிச்சம் இருக்கின்றன. 


அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதி மட்டுமே நமக்கு காடாக தெரிகிறது. மாறாக புல்வெளிகள் நிறைந்த சமவெளிப்பகுதிகளையும் காடாக கருதி அங்கிருக்கும் உயிர்ச் சூழலுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சிங்கம் [Asiatic Lion], வேங்கைப்புலி [Bengal Tiger], சிறுத்தைப்புலி [Indian Leopard], பனிச்சசிறுத்தை [Snow Leopard] என பூனை இனத்தின் பல உயிரினங்களை கொண்டிருந்த நம் தேசம் சிவிங்கப்புலிகளை இழந்து 70ஆண்டுகளுக்கு மேலாகிறது. இந்தியாவில் வாழ்ந்த சிவிங்கப்புலி  ஒன்றை சுவிட்சர்லாந்து அருங்காட்சியகம், கண்ணாடி பெட்டிக்குள் பத்திரமாக வைத்து பாதுகாக்கிறது. இந்திய விடுதலைக்கு முன்பாக இவை ஒரு சில மன்னர்களால் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டன.


திரு.ஜெய்ராம் ரமேஷ் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தபோது ஆப்ரிக்க சிவிங்கப்புலிகளை இந்தியாவிற்கு கொண்டு வர சில முயற்சிகளை செய்தார். தற்போதைய மத்திய அரசு அதை செய்து காட்டியிருக்கிறது. நமீபியாவில் இருந்து இந்தியாவிற்கு சிவிங்கப்புலிகள்  சில மாதங்களுக்கு முன்பாக கொண்டுவரப்பட்டன. ஆனால் இவை இந்தியாவில் வாழ்ந்த ஆசிய சிவிங்கப்புலி இனம் அல்ல. இவை ஆப்ரிக்க சிவிங்கப்புலிகள் [African Cheetah]

இந்த வேறுபாட்டை தெளிவாகக் கூற வேண்டிய ஊடகங்கள், பல நேரங்களில் இந்தியாவில் தற்போதும் வாழ்ந்து வரும் சிறுத்தைகளின் படங்களை இந்த செய்திகளோடு வெளியிட்டு மேலும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. எளிய உதாரணம் மூலம் சொல்ல வேண்டுமென்றால் வால்பாறையில் தென்படும் சிறுத்தைகள் உயரமான மரங்களில் எளிதாக ஏறும். சிவிங்கப்புலிகளால் அது முடியாது. சிறுத்தைகளுக்கு உடலில் கரு வளையங்களின் நடுவே புள்ளிகள் இருக்கும். சிவிங்கப்புலிகள் வெறும் புள்ளிகளோடு இருக்கும்.

தற்போது மத்திய பிரதேசத்தில் குனோ பல்பூர் காடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆப்ரிக்க சிவிங்கப்புலிகள் இந்திய காடுகளுக்கு பொருத்தமாக இருக்குமா என்ற விவாதமும் இன்னும் மிச்சம் இருக்கிறது. அவை இதுவரை சந்திக்காத நில அமைப்பையும் இரை விலங்குகளையும் சந்திக்கிறது. ஆப்ரிக்காவில் இம்பாலா [Impala] என்ற மானை வேட்டையாடி பழகிய இவை  இந்தியாவில் இருக்கும் வெளிமான்களை [Blackbuck] எப்படி வேட்டையாடும் ? இருந்தாலும் சிவிங்கப்புலியின் பெயரால் இந்தியாவில் இருக்கும் சில புல்வெளிக் காடுகள் காப்பாற்றப்படுமானால் இவற்றை இந்திய காடுகளில் அறிமுகப்படுத்தலாம் என்ற விவாதமும் இருந்தது. காரணம் ஒரு உயிரினத்தை பாதுகாப்பது என்பது அவற்றை மட்டுமே பாதுகாப்பது அல்ல. அதன் மூலமாக ஒரு வாழிடத்தையும், அந்த வாழிடத்தின் பல்லுயிர்ச்சூழலையும் பாதுகாக்க முடியும் என்பது தான். வேங்கைப்புலிகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைக்கும் அதுவே காரணம்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த ஆசிய சிங்கங்கள் (Asian Lion) தற்போது குஜராத் மாநிலத்தில் மட்டும் வாழ்ந்து வருகிறது. அவற்றில் சிலவற்றை வேறு மாநிலங்களுக்கு இடம் மாற்ற தற்போது வரை குஜராத் அரசு மறுக்கிறது. ஆசிய சிங்கங்களும் அவை ஏற்கனவே வாழ்ந்த நிலப்பரப்பில் தனியாக பிரித்து பாதுகாக்கப்படுவது அவசியம். ஏதேனும் நோய் தாக்குதல் ஏற்பட்டாலும் ஆசிய சிங்கங்களை அழியாமல் காப்பாற்ற முடியும். குஜராத்தில் மட்டுமே காணப்படும் ஆசிய சிங்கங்கள் உலகின் வேறு எங்குமே இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

இந்தியாவில் வாழ்ந்து வந்த ஆசிய சிவிங்கப்புலிகளை, இவ்வளவு பெரிய நாட்டில் காப்பாற்ற முடியாமல் ஆப்ரிக்க சிவிங்கப்புலிகளை  கொண்டுவருவது எப்படி பெருமைக்குரிய செயல்பாடாக இருக்கும் ? சிவிங்கப்புலிகள் மீது இருக்கும் அக்கறையை ஆசிய சிங்கங்களை காப்பாற்றுவதிலும் இருக்க வேண்டாமா? இந்தியாவில் மட்டுமே காணப்படும் கானமயில் [Great Indian Bustard], வரகுக் கோழி [Lesser Floricon] போன்ற பறவையினங்களில் எண்ணிக்கை மிகவும் சுருங்கி அவை அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படும் வரையாடு [Nilgiri Tahr], இந்தியக் கடலோரங்களில் காணப்படும் ஆவுளியா [Dugong] என பல உயிரினங்கள் அருகி வரும் நிலையில் அவற்றை பாதுகாப்பது இன்னும் அவசியமானது. 

இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சிவிங்கப்புலிகளில் மூன்று இறந்துவிட்டன. அதே நேரம் ஒரு சிவிங்கப்புலி நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது. இது வரை அவை சந்திக்காத நிலப்பரப்பில் புள்ளி மான்களை வேட்டையாடி தன்னை நிலைநிறுத்திக் கொள்ளுமா என்பது வரும் காலங்களில் தான் தெரியும். ஆப்ரிக்க சிவிங்கப்புலிகளுக்கு பதிலாக ஈரானிடம் ஆசிய சிவிங்கப்புலிகளைப் பெற்று மாற்றாக ஆசிய சிங்கங்களை ஈரானிடம் கொடுத்து இரண்டு உயிரினங்களையும் அதன் பூர்விக நிலப்பரப்புக்களில் பாதுகாக்க முனைந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். காட்டுயிர் பாதுகாப்பில் மற்ற நாடுகளுக்கும் இது முன்னுதாரணமாக இருந்திருக்கும். அடிப்படையில் ஒரு உயிரினத்தை பாதுகாப்பதன் மூலம் அது வாழும் நிலப்பரப்பையும், பல்லுயிர்ச் சூழலையும் பாதுகாக்க முடியும் என்ற புரிதல் மக்களுக்கும், அக்கறை அரசுக்கும் இருக்க வேண்டும். 

*புதிய தலைமுறையில் வெளியான கட்டுரை