Apr 10, 2023

உள்ளங்கை நதிகள் : திரு.ராஜா முகமது

நண்பர் ராஜா முகமது இந்த கவிதை நூலை கொண்டுவருவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். ராஜாவின் கவிதைகளை கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வாசித்தும் கேட்டும் இருக்கிறேன். பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும் கவியரங்கத்தில் இவர் கவிதை வாசிப்புகளை கேட்டு ரசித்திருக்கிறேன்.அவருடைய எழுத்தில் இருக்கும் அதே சிறப்பை அவர் மேடையில் பேசும் பொழுதும் கேட்கலாம். அவருடைய மொழிடை நிதானமானது. மிகச் சிறந்த உச்சரிப்புடன் பேசக் கூடியவர். தமிழை மிகவும் நேசிக்கக் கூடியவர். நட்பான உரையாடலில் கூட ஆங்கிலக் கலப்பில்லாமல் பேசுபவர். அனைவரிடமும் நட்பு பாராட்டுபவர். அவருடைய கவிதைகளை உணர்ச்சி பொங்கும் வார்த்தைகளால் அலங்கரிப்பதில் எப்போதும் ஆர்வம் காட்டுவார். தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய இவரது கவிதைகள் நூல் வடிவில் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடைய தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளை கவனியுங்கள். 



கல்லும் முள்ளும் பாதையில் இருக்கும் 
கடப்பது ஒன்றே கால்களின் வேலை 
முள்ளை மலராய் உள்ளம் நினைத்தால் 
இருளை ஒளியாய் இதயம் காட்டும். 

முதல் இரண்டு வரிகளை மட்டும் படிப்பவர்கள் "அறிவுரை சொல்வது எளிது. வாழ்ந்து பார்ப்பதே கடினம்" என்பார்கள். அவர்களுக்கான பதிலை அடுத்த இரண்டு வரிகளில் கொடுத்துவிடுகிறார். ராஜா தன் எழுத்துக்களுக்காக இலக்கணத்தை சமரசம் செய்து கொள்ளமாட்டார். அவர் தன் மனதின் ஆழத்திலிருந்து வார்த்தைகளை தேடிக் கண்டுபிடித்து பயன்படுத்துவரேயன்றி ஒரு கவிதையை கிடைத்த வார்த்தைகளை கொண்டு நிரப்பிக் கொள்ளமாட்டார். அவரது கவிதைகளை வாசிக்கும் பொழுது இதனை உணர முடிகிறது. 

மோகமுற்றுத் தோகைமயில் முன்வந்து கூத்தாட 
காகங்கள் களிப்பெய்திக் காற்றேரிக் கரந்தழைக்க 
கடலரசன் கூடலிலே கருவடைந்த வானமகள் 
உடல்முழுதும் கருப்பானாள் உயிர் மழையை பிரசவித்தாள்..!

எவ்வளவு அற்புதமான கற்பனை பாருங்கள். மழைக்கான இது போன்ற அறிமுகத்தை எத்தனை பேரால் சிந்தித்துப் பார்க்க முடியும். ராஜாவின் வார்த்தைகளால் தமிழ் இன்னும் கூடுதல் அழகாகிறது. ஒரு எழுத்தாளனின் கடமையும் அது தானே. தன் மொழியை வளப்படுத்த நினைக்கிற எழுத்தாளர்கள் எல்லா மொழிகளுக்கும் வாய்ப்பதில்லை. ஆனால் அது தமிழுக்கு கிடைத்திருக்கிறது. அதில் ராஜாவும் ஒருவர். இயல்பாகவே எப்போதும் மற்றவர்கள் நலனில் அக்கறை காட்டும் ராஜாவிடம் இருந்து இப்படி ஒரு கவிதை வந்ததில் ஆச்சர்யம் ஏதுமிலை. தமிழைப் போலவே நலமுடன் இரு என அவர் சொல்லும் இந்த அறிவுரை இதுவரை எங்கும் கேட்டிராதது. 

நலமா என்று யாரும் கேட்டால் 
நல்ல நலமென்று நறுக்காய்ச் சொல்வார் 
தலையைத் தான் நோக்கார் தலையைச் சொரியார் 
தமிழைப் போலே தலை நிமிர்ந்திருப்பார்..! 

அறம் சார்ந்த வாழ்வே சிறந்தது என திருக்குறள் சொல்கிறது. காந்தியும் அதேயே சொன்னார். அதுவே மகிழ்ச்சிக்கான பாதை என ராஜாவும் சொல்வதில் கூடுதல் பொலிவடைகிறது இந்த கவிதை தொகுப்பு.

இருபதிலே மகிழ் பவருக்கு 
அறுபதில் வருத்தம் உண்டு 
அறுபதிலே மகிழ்வதற்கு உன் 
இருபதிலேயே ஒழுக்கம் வேண்டும்..!

நண்பர் ராஜா மேலும் நிறைய எழுத வேண்டும் என அவரை வாழ்த்துகிறேன்.

1 comment:

  1. சிறப்பான வாழ்த்துரை
    வழங்கிய உங்களுக்கு
    மனம் நிறைந்த நன்றிகள்
    நண்பரே.

    ReplyDelete