அதோ அந்தப் பறவை போல : திரு.முகமது அலி

தமிழில் எழுதப்படும் பசுமை இலக்கிய நூல்களின் மகுடத்தில் மற்றுமொரு இறகு இந்த நூல். "அதோ அந்தப் பறவை போல" என்ற தலைப்பு சினிமா பாடல் வரியாக இருந்தாலும், இது பறவையியல் பற்றிய முழுமையான அறிவியல் புத்தகம். அது எல்லோரையும் ஈர்க்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு தலைப்பு வைக்கப்பட்டிருக்கலாம். 


பறவையியல் சார்ந்து புதிய தமிழ் சொற்களை இந்த நூலில் காண முடிந்தது இந்த நூலின் தனிச் சிறப்பு. கூடொட்டிப்பிழைத்தல், முன் முதிர் குஞ்சுகள், பின் முதிர் குஞ்சுகள் என புதிய சொற்களின் மூலம் பறவையியலை  எல்லோருக்கும் புரியும்படி எளிமை படுத்துயிருக்கிறார் ஆசிரியர். 

பறவைகளின் உடல் அமைப்பை தனித்தனியாக விவரித்து வேறுபடுத்திக் காட்டியிருப்பது சிறப்பு. சிறிய கோட்டோவியங்களின் மூலம் பறவைகளின் பறத்தல் முறைகள், அவற்றின் அலகு, கால்கள், நகங்கள் என தனித்தனியாக விவரித்திருப்பது எல்லோருக்கும் புரியும்படியாக இருக்கிறது. முன் முதிர் குஞ்சுகள் பரிணாம வளர்ச்சியில் இயல்பிலேயே உருமறைத் தோற்றம் கொண்ட முட்டைகளை பெற்றிருப்பதும், அவற்றின் மஞ்சள் கரு பின்  முதிர் குஞ்சுகளை விடவும் அதிகமாக இருப்பதும் என வியப்புக்குரிய, அதே நேரம் நம்பகத்தகுந்த எளிய உதாரணங்கள் மூலம் விளக்கியிருக்கிறார் ஆசிரியர். 

பறவைகளின் வலசை பற்றிய கட்டுரைகள் இந்த நூலில் முக்கியமானவை. பறவை என்றால் என்ன, அவற்றுக்கான வரைமுறைகள், இனப்பெருக்கம், அவற்றுக்கான காலங்கள் அதற்கான காரணங்கள் என விரிவாக பேசுகிறது இந்த நூல். பல்வேறு பறவை இனங்களின் வேறுபட்ட கூடு கட்டும் முறை மற்றும் அதற்கான காரணங்கள், அது பரிணாம வளர்ச்சியோடு எப்படி தொடர்புபடுத்திப் பார்ப்பது என பல பரிணாமங்களில் பறவைகளின் அறிவியலை அலசுகிறார் ஆசிரியர். 

சிறப்புத் தகவல்கள் என்ற தலைப்பில் கொடுத்திருக்கும் செய்திகள் அனைத்தும் அத்தனை ஆச்சர்யங்கள் நிறைந்ததாகவும், சில நேரங்களில் அழிந்து வரும் பறவைகளை பற்றிய செய்திகள் கவலை தருவதாகவும் இருக்கிறது. பறவைகள் இல்லாத உலகில் மனிதர்களால் ஏன் வாழ முடியாது என்பதற்கான விடையை இந்த நூலை வாசித்து முடிக்கும்போது எல்லோராலும் உணர முடியும். 


இணையத்தில் வாங்க : https://crownest.in/product/adho-antha-paravaikla-pola-by-muhammad-ali/



Post a Comment

5 Comments