பூச்சிகளின் தேசம் : திரு. கோவை சதாசிவம்

ஒரு காட்டுப்பயணத்தில் நடைபெறும் ஆரோக்கியமான உரையாடல்கள் மூலமாக பூச்சிகளின் உலகை மிக  எளிமையாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர் திரு.கோவை சதாசிவம் அவர்கள். உலகில் உள்ள மொத்த மனிதர்களின் எடையை  காட்டிலும் பூச்சிகளின் எடை அதிகம். 


இருப்பினும் சூழலில் பூச்சிகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் பற்றி அதிகம் பேசப்படாத நிலையில் இந்த புத்தகம் அதிகம் கவனிக்கப்படவேண்டியது. எறும்பு, கரையான், நத்தை, தும்பி, மின்மினிப்பூச்சி, அட்டை, வண்ணத்துப்பூச்சி, கரப்பான், சிலந்தி, தேனீ என நாம் அறிந்த பலவற்றையும் அறிவியல் செய்திகளோடு கொடுத்திருக்கிறார் ஆசிரியர். 

ஆசிரியரே முன்னுரையில் சொல்லியிருப்பது போல, பல கேள்விகளுக்கான பதில்கள் இந்த புத்தகத்தில் உண்டு. ஈசலின் வாழ்வு ஒருநாள் தானா? நத்தைக்கு முதுகில் ஓடு எதற்கு?  எறும்புகள் வரிசையாக போவது ஏன்? மின்மினிகள் ஏன் ஒளிர்கிறது? அட்டைகள் ஏன் இரத்தம் குடிக்கிறது? சிலந்திகள் பூச்சியினமா? என பல கேள்விகளுக்கும் இந்த நூலில் விடை தருகிறார்.

தேன் ஏன் கெடுவதில்லை? தேனீக்கள் நடனமாடுவது எதனால்? தேனீக்கள் வாழ்வு முறை, இந்தியாவில் காணப்படும் தேனீ இனங்கள் என பல அறிவியல் தகவல்களை எல்லோரும் புரிந்து கொள்ளும்படி மிக எளிமையாக கொடுத்திருக்கிறார். நொடிக்கு நானூறு முறை இறகுகளை துடிக்கும் இந்த தேனீக்கள் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னதையும் மேற்கோள் காட்டியிருப்பது சிறப்பு. 

"உலகில் தேனீக்கள் மறைந்துவிட்டால் மனித குலத்தின் ஆயுட்காலம் வெறும் நான்கு ஆண்டுகளில் முடிந்துவிடும். தேனீக்கள் மறைந்தால் மகரந்த சேர்க்கை மறையும், செடி கொடிகள் மறையும், மனிதனும் மறைந்துவிடுவான்".

பள்ளி மாணவர்களால் நிச்சயம் வாசிக்கப்படவேண்டிய நூல். 

புத்தகத்தை பெற : https://crownest.in/poochikalin-desam-by-kovai-sadhasivam/

Post a Comment

0 Comments