Jun 19, 2020

Cuban Macaw - கியூபாவின் இழப்பு [Cuba]


பரிணாம வளர்ச்சி பெரும்பாலான உயிர்களுக்கு ஒரு எச்சரிக்கை உணர்வை கொடுத்தே இருக்கிறது. உதாரணமாக "கானாங்கோழி" (White Breasted Water hen). மனிதன் கண்ணில் பட்டவுடன் சட்டென ஓடி புதரில் மறைந்து கொள்ளும். அரிதாக சில உயிரினங்கள் அத்தகைய எச்சரிக்கை  உணர்வுகள் ஏதுமற்று இருப்பது ஆச்சர்யம். அப்படியான ஒரு உயிரினம் தான் Cuban Macaw (Ara tricolor). 19-ஆம் நூற்றாண்டின் அற்றுப் போன (Extint) உயிரினம் இந்த Cuban Macaw. அதிகப்படியான வேட்டையே இந்த பறவை இனம் முற்றிலும் அழிய காரணமாக அமைந்திருக்கிறது. மிகவும் அழகான வண்ணங்களால் ஆன இந்த பறவை அதிகளவில் பிடிக்கப்பட்டு  சந்தைகளில் விற்கப்பட்டுள்ளது. 

Taxidermy Specimen of Cuban Macaw at Berlin Natural History Museum


James W. Wiley மற்றும் Guy M. Kirwan ஆகியோரது ஆராய்ச்சி முடிவுகள் இந்த பறவை குறித்த சில தகவல்களை தெரிவிக்கிறது. இந்த பறவையை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திய போதும் அதன் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பறவை பறந்து செல்லாமல் வீழ்ந்த பறவையை உற்று நோக்கி அங்கேயே அமர்ந்திருக்குமாம். இந்த குணம் தான் இந்த பறவையை எளிதில் பிடிக்கவும் கொல்லவும் மனிதர்களுக்கு எளிதாக அமைந்தது. தரையில் விழுந்திருக்கும் பழங்களை உண்ண வரும் இந்த பறவையை சுற்றி வளைத்தபோதும், அது பறக்க முற்படாமல் தன் கால்களாலும் அலகாலும் மனிதர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள போராடும் குணம் கொண்டதாக இருந்திருக்கிறது. 


எனவே மனிதர்களால் இவற்றை எளிதில் பிடித்து விற்பனை செய்ய முடிந்திருக்கிறது. மனிதர்கள் நுழைவதற்கு முன்பாகவே பல்லாயிரம் ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சி பெற்ற பறவை, இறக்கைகள் பெற்றிருந்தும் எச்சரிக்கை உணர்வுகளற்று இருந்ததன் காரணம் புரியவில்லை. மனிதர்கள் குச்சியால் தாக்கவரும் போதும் பறந்து போகாமல்  நினைத்தது அதிகப்படியான தன்னம்பிக்கையின் அடையாளமா அல்லது முட்டாள் தனத்தின் அடையாளமா? மனிதர்களுக்கு முன்பாக இந்த பறவையை இரையாக்கி கொல்லும் உயிர்கள் இருந்தனவா எனது தெரியவில்லை. மிகவும் அழகான இந்த பறவை முற்றிலும் அழிந்து போனது கியூபாவின் பேரிழப்பு.








2 comments: